பதிப்புகளில்

ஐடி பணியை உதறிவிட்டு விளையாட்டு வீரராகி வென்ற தங்கமகன் விக்னேஷ்!

சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்த விக்னேஷ் ஹரிஹரன், தன் விருப்பமான விளையாட்டுத் துறையில் சாதிக்க, பணியை விட்டு  இந்தியாவில் அதிகம் அறியப்படாத கெட்டில்பெல் விளையாட்டை  தேர்வு செய்து ஆசிய சாம்பியன்ஷிப் 2018ல் தங்கம் வென்றுள்ளார்.

Gajalakshmi
21st Aug 2018
Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share

கஷ்டப்பட்டு பெற்றோர் படிக்க வைப்பதன் பலனாக படித்து முடித்ததும் பணியில் சேர்ந்து அவர்கள் பட்ட கடனை அடைக்க வேண்டும், அதன் பின்னர் தன்னுடைய திருமண வாழ்க்கை குடும்பத்திற்காக எஞ்சிய காலம் ஓட வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கை இந்த சுழற்சியில் இருந்து மாறுபடுவது என்பது அரிதான விஷயம், அத்தகைய மாறுபட்ட இளைஞர் தான் விக்னேஷ் ஹரிஹரன்.

image


கெட்டில்பெல் ஆசிய சாம்பியன்ஷிப் 2018 இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்றது. தைவான், சீனா, மலேசியா, இந்தோனேஷியா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் 8 வீரர்கள் பங்கேற்றனர், இவர்களில் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் ஹரிஹரனும் ஒருவர். ஆனால் 8 பேரில் விக்னேஷ் மட்டும் வெளிஉலகில் பிரபலமடையக் காரணம் கெட்டில்பெல் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றதே.

சென்னை இளைஞர் தங்கப் பதக்கம் வென்றுள்ள கெட்டில்பெல் விளையாட்டு தமிழகத்தில் அதிகம் அறியப்படாத விளையாட்டாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? பளூதூக்குதல் போலத் தான் இந்த விளையாட்டும். ஆனால் சற்று வித்தியாசமாக இரும்பு குண்டு மேல் இருக்கும் கைப்பிடியை பிடித்து தூக்கி 10 நிமிடங்கள் மேலே நிறுத்த வேண்டும். எத்தனை முறை கெட்டில்பெல்லை மேலே தூக்குகிறோம், எவ்வளவு நிமிடங்கள் அதனை மேலே நிறுத்துகிறோம் என்பவை கணக்கில் கொள்ளப்படும். இது ஒருவகையில் பொறுமையை சோதிக்கும் விளையாட்டு என்றும் கூட சொல்லாம்.

தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட விக்னேஷ் ஹரிஹரன், பிறந்து வளர்ந்தது எல்லாமே தலைநகர் சென்னையில் தான். பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் பொறியியல் படித்துவிட்டு சுமார் ஏழரை ஆண்டுகள் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்துள்ளார். 

“சிறுவயது முதலே விளையாட்டின் மீது எனக்கு அதிக ஆர்வம், முதலில் கிரிக்கெட் விளையாட்டுக்கான பயிற்சி எடுத்த போதும் அதில் நிறைவு கிடைக்கவில்லை. ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னெஸ் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் எதேச்சையாக கெட்டில்பெல் விளையாட்டு குறித்த பயிலரங்கம் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற பின்னர் இந்த விளையாட்டில் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது,” என்கிறார் விக்னேஷ்.

ஃபிட்னெஸ் மீது காதல் கொண்டிருந்த விக்னேஷ் ஐடி பணியை துறந்து தன்னுடைய சுய முயற்சியில் வங்கிக் கடன் வாங்கி முதன்முதலில் கொளத்தூர் பகுதியில் ‘தி ஹம்மர்ஸ் ஃபிட்னெஸ்’ ஜிம் ஒன்றை நிறுவியுள்ளார். அதிக சம்பளம், சவுகர்யமான வாழ்க்கையை விட்டுவிட்டு வருமானம் ஈட்ட முடியாத ஃபிட்னெஸ் துறையை நான் தேர்வு செய்ததை என்னுடைய பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகவே இருந்தது. ஆனால் எல்லோரையும் போல பிறந்தோம், வளர்ந்தோம் என்று இல்லாமல், சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக இருந்தது. 

இன்றைய தலைமுறையை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமானவர்களாகவும், மருந்துகள் பயன்படுத்தாத சந்ததியாகவும் உருவாக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படத் தொடங்கினேன் என்கிறார் விக்னேஷ்.
image


குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அந்த கடினமான காலத்தை கடந்து வர வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டுள்ளார் விக்னேஷ். ஜிம் என்றாலே உடல் எடை குறைக்கும் இடமாகவும், எடை கூட்டுதல் மற்றும் குறைப்பிற்காக அதிக மருந்துகள் பயன்படுத்துபவையாகவும் மட்டுமே மக்களால் அறியப்படுகிறது. ஆனால் ஒரு விளையாட்டின் மூலம் மருந்துகள் எதுவும் பயன்படுத்தாமல் பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை பிரபலப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் தான் செயல்படத் தொடங்கியதாகக் கூறுகிறார் விக்னேஷ். சராசரி மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உடற்பயிற்சி என்ன என்பதை அவர்களுக்கேற்ப பயிற்றுவிக்க வேண்டும் என்று நினைத்தேன். 

வயது சார்ந்த ஆரோக்ய பிரச்னைகளான சர்க்கரை வியாதி, வாதம், அதிக தூரம் பைக் ஓட்டுவதால் முதுகுவலிப் பிரச்னை என்று இளம் வயது முதலே பலர் மருந்து மாத்திரைகளின் பின்னால் ஓட வேண்டிய நிலமையில் இருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என நினைத்தேன்.

1700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கெட்டில்பெல் விளையாட்டு பழக்கத்தில் இருந்தாலும் இந்தியாவில் 8 ஆண்டுகளாகவே விளையாடப்படுகிறது, குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கெட்டில்பெல் விளையாடுபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணி விடும் அளவில் தான் இருக்கிறது. கெட்டில்பெல் விளையாட்டின் சிறப்புகள் என்னவென்று ஒவ்வொரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் விக்னேஷ் அவற்றை பட்டியலிடுகிறார்.

• எந்த வயதினரும் கெட்டில்பெல் விளையாடலாம். கெட்டில்பெல் விளையாட்டில் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை, இது பொறுமைக்கான விளையாட்டாக இருப்பதால் வாழ்நாள் முழுவதும் தேவையானது.

• டீன்ஏஜ்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை கெட்டில்பெல் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். வயது உச்சவரம்பின்றி முக்கியமான போட்டியில் கூட இவர்கள் பங்கேற்க முடியும். கெட்டில்பெல் விளையாட முறையான பயிற்சியை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

• புஷ்டியான தசைகள் கொண்டவர் மட்டுமே விளையாட முடியும் என்று கருத வேண்டியதில்லை. உடல் எடைக்காக ஊக்கமருந்துகள் பயன்படுத்த அவசியமற்ற ஒரு விளையாட்டு.

• ஆரோக்கிய ரீதியாக பார்த்தால் கெட்டில்பெல் விளையாடுபவர்களுக்கு வாதம் (arthritis), தசை மற்றும் எலும்பு மூட்டு பிரச்னை இருக்காது. உடலின் உட்புற பாகங்களில் இருந்தே செயல்படுவதால் உடலினை உறுதியாக வைத்துக் கொள்ள கெட்டில்பெல் உதவும்.

உடலில் ஏற்படும் வலிகளுக்கு மருந்துகள் தற்காலிக நிவாரணியாக இருக்கும் ஆனால் நிரந்தர நிவாரணம் மருந்துகள் இல்லா வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும் என்பதையே இலக்காக நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார் விக்னேஷ். தமிழகத்தை பொறுத்தவரை கெட்டில்பெல் விளையாட்டை கற்றுத்தருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஒரே ஒரு அமைப்பு அவ்வபோது கெட்டில்பெல் பற்றிய பயிலரங்கங்களை நடத்தி வருகின்றன. எனினும் எண்ணிலடங்கா நல்ல ஆரோக்கிய பலன்களைக் கொண்ட கெட்டில்பெல் விளையாட்டை தான் கற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய ஜிம் மூலம் சுமார் 50 பேருக்கு கற்றுக் கொடுத்து வருகிறார் விக்னேஷ்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பானது கிடைக்கும். கட்டணம் ஏதும் இன்றி தன்னுடைய கொளத்தூர், மாதவரம் தி ஹம்மர்ஸ் ஃபிட்னெஸ் ஹெல்த் ஸ்டுடியோவில் கெட்டில்பெல் விளையாட பயிற்சி அளித்து வருகிறார் விக்னேஷ். கெட்டில்பெல் விளையாட்டை கற்றுத்தருவதோடு, பயிற்றுநர்களுக்கும் பயிற்றுவித்து இதனை பிரபலப்படுத்தி வருகிறார் விக்னேஷ்.

விளையாட்டை என்னுடைய பேஷனாக தேர்வு செய்த பின்னர் அமெரிக்காவில் சில பயிற்சிகளை பெற்று சான்றிதழ் பெற்றுள்ளேன். இதே போன்று இந்தியாவிலும் சில பயிற்சிகளை முடித்துள்ளேன். இதனால் எந்த நபருக்கு எந்த மாதிரியாக பயிற்சி தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்ப பயிற்சி அளித்து வருகிறேன். 

முதலில் கெட்டில் பெல் விளையாட்டால் என்னென்ன பயன்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இலவசமாக கற்றுத் தருகிறேன் என்கிறார் விக்னேஷ்.

இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான கெட்டில்பெல் விளையாட்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது, அதில் குறைந்தபட்சம் 6 பேரை பங்கெடுக்க வைப்பதற்காக தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார் விக்னேஷ். தமிழகத்தில் சுமார் 40 நபர்களுக்குள்ளாகவே இந்த விளையாட்டை விளையாடுகின்றனர். இதில் லெவல் 1 விளையாட்டை எளிதில் விளையாடிவிடலாம், ஆனால் மிகவும் கடினமான லெவல் 2 போட்டியில் தங்கம் வென்ற பெருமைக்குரியவர் விக்னேஷ் ஹரிஹரன்.

விளையாட்டை என்னுடைய வாழ்க்கையில் நான் தேர்வு செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் என்னுடைய அப்பா. அப்பா வாலிபால், ஓட்டப்பந்தயம் என விளையாடி வந்தார். அவரைப் பார்த்தே விளையாட்டை நான் என்னுடைய வாழ்க்கைப் பாதையாக தேர்வு செய்தேன் என்றும் கூட சொல்லாம். 

எனினும் இது வருமானம் ஈட்டும் தொழில் அல்ல என்பதால் அப்பாவிற்கு வருத்தம் இருந்தாலும் கடமைக்காக வேலை செய்யாமல் பிடித்ததை செய்கிறேன் என்பதை அவர் தற்போது புரிந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார் விக்னேஷ்.
image


ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனினும் என்னுடைய அடுத்த இலக்கு ரஷ்யாவின் தேசிய விளையாட்டான கெட்டில்பெல்லை அந்த நாட்டில் நடக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற விரும்புகிறேன். இதற்கு கடுமையான பயிற்சி தேவை 2 அல்லது 3 ஆண்டில் இதனை அடைவேன் என்று நினைக்கிறேன்.

என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்பது வலிகள் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். பைக் ஓட்டினாலே முதுகுவலி, கழுத்துவலி வந்துவிடுகிறது, ஒரு தண்ணீர் கேனை தூக்க முடியவில்லை, படியேறினாலே மூச்சு வாங்குகிறது என்று கூறும் நிலையில் தான் இளைஞர்கள் இன்று இருக்கிறார்கள். நானும் 10 ஆண்டுகளாக பைக் ஓட்டுகிறேன் ஒரு நாளும் எனக்கு வலி ஏற்பட்டதில்லை. ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்ய மனிதர்கள் படைக்கப்படவில்லை, தங்களுக்கான வேலைகளைக் கூட இப்போது செய்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்காகவே ஃபிட்னெஸ் குறித்த விழிப்புணர்வை கெட்டில்பெல் விளையாட்டின் மூலம் பிரபலப்படுத்த விரும்புவதாகக் கூறுகிறார் விக்னேஷ்.

ஐடி பணியை விட்டுவிட்டு விளையாட்டுத் துறையை தேர்வு செய்துவிட்டோமே என்று எப்போதுமே நான் சோர்ந்து போனதில்லை. ஏனெனில் ஐடி பணிக்கு சென்ற போது நிறைய கற்றுக் கொண்டாலும் ஐயோ திங்கட்கிழமை வந்துவிட்டதே என்று தான் இருந்தது. அதைவிட்டு எப்போது வெளியே வருவோம் என்று தான் இருந்தது. தற்போது நான் குறைவான வருமானமே ஈட்டினாலும் எனக்கு பிடித்ததை செய்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது. 

வாரத்தின் எல்லா நாட்களிலும் பயிற்சி செய்தாலும் எனக்கு சோர்வு ஏற்படுவதில்லை, சொல்லப்போனால் இன்று என்ன கிழமை என்ற நினைப்பே வந்ததில்லை என்று புன்னகைக்கிறார் விக்னேஷ்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் ஐடி பணியை விட்டுவிட்டு வந்த பிறகு இது சரிவருமா என்ற பயம் இருந்தது. ஆனால் இப்போது விளையாட்டு தான் என்னுடைய எதிர்காலம் என்பதை உறுதி செய்தவிட்டேன். நல்ல பயிற்றுநராக, விளையாட்டு வீரராக, சரியான உடற்பயிற்சி மூலம் இளைஞர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்வை வாழ வைப்பவராகவே தான் இருக்க விரும்புவதாக பெருமையோடு கூறுகிறார் விக்னேஷ்.

Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share
Report an issue
Authors

Related Tags