பதிப்புகளில்

என்று தணியும் இந்த செல்பீ மோகம்...!

posted on 4th November 2018
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கிக் கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட்டனர். சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு முன் செல்பீ எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் செல்போனை அவர் அன்னிச்சையாக தட்டி விட்டதால் இந்த மீம்கள் தாக்குதல். அதன் பிறகு சிவகுமாரே இறங்கிவந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டாலும், மீம் வழி கேலிகளும், கலாய்ப்புகளும் தொடர்ந்தன. பலர் சிவகுமாருக்கு பொது இடத்தில் நடந்து கொள்வது எப்படி என வகுப்பெடுக்கத் துவங்கிவிட்டனர்.

பிரபலங்கள் ஒரு அடி தவறாக எடுத்து வைத்தாலும் நெட்டிசன்கள் அவர்களை விமர்சனங்களால், கிண்டலும் கேலியுமாக விளாசித்துதள்ளிவிடும், சமூக ஊடக யுகத்து நீதிக்கான இன்னொரு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்திருப்பதாக கருதலாம்.

image


சிவகுமாரை கலாய்த்த மீம்களையும், அவரை சட்டையை பிடித்து கேள்வி கேட்ட பதிவுகளையும் மறந்துவிட்டு கொஞ்சம் நிதானமாக யோசித்தால், சிவகுமாரின் செயல் ஒரு இயல்பான எதிர்வினை என்று சொல்ல வாய்ப்பிருப்பதும் புரியும். சிவகுமாருடையை தன்னை மறந்த ஒரு நொடியின் கோபம் அல்ல நெட்டிசன்களே, அது நம் காலத்தில் கலாச்சாரத்து எதிரான ஆவேசம்.

ஆம், நடிகர் சிவகுமார், எங்கும் பரவி வரும் செல்பீ கலாச்சாரத்திற்கு எதிராக பொங்கியிருக்கிறார். சிவகுமார் மட்டும் அல்ல, நானும் கூட செல்பீக்கு எதிரானவன் அல்ல: ஆனால் செல்பீ பழக்கம் வரம்பு மீறும் போது சிக்கலாகிறது என்பதே பிரச்சனை. 

எந்த இடத்திலும் தன்னை மறந்து செல்பீ எடுப்பதில் ஈடுபடுவது தேவை தானா? எனும் கேள்வியை சத்தமாகவே கேட்க வேண்டியிருக்கிறது.

சிவகுமார் எனும் தனிமனிதரின் அந்தரங்கம் மீதான தாக்குதலுக்கான எதிர்வினையாக மட்டும் இதை பார்க்க வேண்டியதில்லை. செல்பீ கலாச்சாரத்திற்கு எதிரான பொதுவான எதிர்வினையாகவே இதை கருத வேண்டியிருக்கிறது. இந்த தலைமுறையை புரிந்து கொள்ள முடியாத முந்தைய தலைமுறையின் கோபமாக இதை பார்ப்பதைவிட, நவீன வாழ்க்கையின் தவிர்க்க இயலாத அம்சமாகிவிட்ட ஒரு போக்கின் மீதான எச்சரிக்கையாக இதை பார்ப்பதே சரியாக இருக்கும்.

சிவகுமார் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டாலும், உண்மையில் அவர் செல்பீ மோகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன். அவர் இதை இன்னும் சற்று மென்மையாக செய்திருக்கலாம் தான். ஆனால் அவர் அத்தனை ஆவேசமாக நடந்து கொண்டதால் தான் இந்த விஷயம் சர்ச்சைக்குள்ளாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அப்படி என்றால், சிவகுமார் நடந்து கொண்ட விதம் சரியா? என கேட்காதீர்கள். இங்கே விவாதிக்கும் பிரச்சனை அதுவல்ல. செல்பீ எடுக்கும் பழக்கம் எல்லை மீறுவது சரியா என்பதே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

யோசோமைட்டில் மீனாட்சி, விஸ்வநாத்<br>

யோசோமைட்டில் மீனாட்சி, விஸ்வநாத்


இந்த கேள்வியின் தேவையும், தீவிரமும் புரிய வேண்டும் எனில்,

“நம்முடைய வாழ்க்கையின் மதிப்பு ஒரு புகைப்படம் தானா?’ எனும் கேள்வியோடு இதை தொடர்பு படுத்திக்கொள்ளுங்கள், நெஞ்சை உலுக்கி விடும்...”

இந்த கேள்வியை கேட்டவர் இப்போது உயிருடன் இல்லை என்பது தான் பெருஞ்சோகம்! ஆனால் அவர் நமக்கான பாடத்தை விட்டுச்சென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் யோசோமைட் தேசிய சரணாலயத்தில் 1,000 அடி பள்ளத்தில் விழுந்து பலியான இந்திய தம்பதிகளில் ஒருவரான மீனாட்சி மூர்த்தி தான் அவர்.

மீனாட்சி மூர்த்தியும் அவரது கணவர் விஷ்ணு விஸ்வநாத்தும் இந்தியாவை சேர்ந்தவர்கள். கேரளாவில் சந்தித்துக்கொண்ட போது நெருக்கமான இந்த ஜோடி அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. அங்கு விஷ்ணு மென்பொருள் துறையில் பங்காற்றிய நிலையில், பணி புரிய அனுமதிக்கப்படாத மீனாட்சி அவர் வலைப்பதிவு செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

அண்மையில் இந்த ஜோடி, புதிததாக வலைப்பதிவு மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவக்கி தங்கள் விடுமுறை அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வந்தனர். விஸ்வநாத் அருமையாக படங்கள் எடுப்பார். மீனாட்சி தங்கள் அனுபவங்களை துடிப்புடன் விவரிப்பார். இந்த பதிவுகளுக்கு இன்ஸ்டாகிராமில் நல்ல வரவேற்பும் இருந்தது. கார்டியன் தளத்தின் கட்டுரை இது பற்றி அழகாக விவரிக்கிறது.

ஆனால், இந்த வண்ணமயமான வாழ்க்கை யாரும் எதிர்பாராத வகையில் 1,000 அடி பள்ளத்தில் முடிந்திருக்கிறது. இந்த ஜோடி உற்சாகமாக விடுமுறையை கழிக்கச்சென்றிருந்த யோசோமைட் சரணாலய பகுதியில், அவர்களின் காமிரா கேட்பாரற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நடந்த தேடலில் பள்ளத்தில் இவர்கள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மலைப்பகுதியின் விளிம்பில் செல்பீ எடுக்க முயன்ற போது, இவர்கள் பள்ளத்தில் விழுந்து பலியானதாக கருதப்படுகிறது. எத்தனை பெரிய சோகம் இது.

மீனாட்சியும், அவரது கணவரும் செல்பீ எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்தனர் என்பது உறுதி செய்யப்படாத தகவல் தான். மீனாட்சியின் சகோதரர் முதலில் அளித்த பேட்டியின் அடிப்படையில் தான் இவ்வாறு கருதப்பட்டது. ஆனால் அவரே இதை மறுத்திருக்கிறார். ஆனால், வேறு ஒரு பயணி தற்செயலாக எடுத்த புகைப்படத்தில் இந்த தம்பதி இடம்பெற்றிருப்பதாகவும், வேறு எவரையும் விட இவர்கள் இருவரே மலை விளிம்பிற்கு அருகே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவு<br>

மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவு


செல்பீ எடுக்க முயன்ற போது தான் மீனாட்சி – விஸ்வநாத் ஜோடி பலியானார்களா என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் கூட, விஷயம் என்னவெனில் செல்பீ பழக்கம் உயிரை பறிக்கும் அபாயம் இருப்பது தான். சாதாரண செல்பீக்களால் எந்த பிரச்சனையும் இல்லை. அதாவது நெட்டிசன்கள் மொக்கை படங்கள் என்று அலட்சியம் செய்யக்கூடிய படங்கள். ஆனால் பலரது கவத்தை ஈர்க்க முயன்று வித்தியாசமாக அல்லது சாகச நோக்கில் படம் எடுக்க முயற்சிக்கும் போது தான் சில நேரங்களில் விபரீதம் ஏற்படுகிறது.

ஓடும் ரெயிலில் தொங்கிய படி படம் எடுப்பது, தண்டவாளத்தில் நின்றபடி செல்பீ எடுப்பது, மலை உச்சியில் அல்லது உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று படம் எடுப்பது போன்ற சாசக செல்பீகள் தான் இந்த பட்டியலில் வருகின்றன. இப்படி படம் எடுக்கும் பழக்கம் பலருக்கு இருப்பதும், இந்த பழக்கத்தால் அவ்வப்போது யாரேனும் பலியாகி வருவதும் தான் வேதனையானது. சமூக ஊடக லைக்குக்களுக்கு இதைச் செய்வது தான் இன்னும் வேதனையானது.

ஆபத்தான செல்பீ பழக்கத்தால் ஏற்படும் விபரீதம் பற்றி இந்தியரான டாக்டர். அகம் பன்சால் நடத்திய ஆய்வு 2011 முதல் 2017 வரை 259 பேர் செல்பீயால் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

நீர்விழுச்சியின் விளிம்பில் ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்பீ எடுத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டால் ஆயிரக்கணக்கில் லைக் கிடைக்கலாம். ஆனால் இது தேவையா?

இந்த இடத்தில் தான், மீனாட்சி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து கொண்டே மேலே குறிப்பிட்ட கேள்வியை பொருத்தி பார்க்க வேண்டியிருக்கிறது. மலை முகட்டின் விளம்பில் அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்துடன் அவர் ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் பகிர்வுக்கான படம் எடுப்பதை விவரித்திருந்தவர், நம்மில் பலர் மலை முகட்டில், அடுக்குமாடி கட்டிடங்களில் நின்றுக்கொண்டு சாகச படம் எடுக்கும் விருப்பம் கொண்டிருக்கிறோம். ஆனால் வேகமாக வீசும் காற்று ஆபத்தானது தெரியுமா? இப்படி விவரித்திருந்தவர், “நம்முடைய வாழ்க்கையின் மதிப்பு ஒரு புகைப்படம் தானா? என்றும் கேட்டிருந்தார்.

இந்த பழக்கம் தனக்கும் இருப்பதை ஒப்புக்கொண்ட மீனாட்சி நாம் பொறுப்பான டிஜிட்டல் குடிமக்களாகவும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மீனாட்சி இன்று இல்லை. ஆனால் அவர் நமக்கெல்லாம் சொல்ல விரும்பிய விஷயம், நம் வாழ்க்கையின் மதிப்பு ஒரு புகைப்படம் அல்ல என்பது தான். 

செல்பீ எடுங்கள், ஆனால் ஆபத்தான முறையில் அல்ல: முதலில் சூழலை பார்த்துக்கொண்டு, பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு படம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியே சுற்றியுள்ளவர்கள் பிரைவசி பற்றியும் கொஞ்சம் அக்கரை கொள்ளுங்கள். நடிகர் சிவகுமார் இதைத் தான் சொல்ல விரும்பியிருப்பார் என நினைக்கிறேன்!

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக