தொடங்கிய இரண்டே ஆண்டில் ரூ.3 கோடி முதலீடு பெற்ற ‘நுட்பம்’ நிறுவனம்!
இந்திய தொழில்நுட்ப சந்தையின் புதிய வரவான விர்ச்சுவல் ரியாலிட்டியை ஸ்டார்ட் அப்பாக தொடங்கி இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முதலீடை பெற்று விரிவாக்கம் செய்ய உள்ளது சென்னை ’நுட்பம்’ நிறுவனம்.
“காத்திருக்கும் வரை நம் பெயர் காற்றென்றே இருக்கட்டும் புறப்படும் போது புயல் என்று புரிய வைப்போம்...”
நிதானத்தையும் வேகத்தையும் ஒரு சேர உணர்த்தும் இந்த வரிகள் முதல் தலைமுறை இளம் ஸ்டார்ட் அப் தொழில்முனைவர் செந்தில் சர்குருவின் முகநூல் பக்கத்தில் பளிச்சிடும் வாசகம்.
நடுத்தர வர்க்க உழைப்பாளிகளின் மகனான செந்தில், தான் தொடங்கிய ஸ்டார்ட் அப்பில் இரண்டே ஆண்டில் வெளிநாட்டு நிறுவனத்தின் நம்பிக்கையை பெற்று, அந்த நிறுவனம் தானே முன்வந்து முதலீடு அளிக்கும் வகையில் விடாமுயற்சியோடு செயல்பட்டுள்ளார். தனது தொழில்முனைவு கனவில் பாதிக் கிணற்றை தாண்டி இருக்கிறார் செந்தில்.
உலகின் பல முன்னணி நிறுவனங்களும், தொழிலதிபர்களும் பார்த்து வியக்கக் கூடிய அளவில் அசத்திக் கொண்டிருக்கின்றன இளைஞர்களின் ஸ்டார்ட் அப் ஐடியாக்கள். இந்திய சந்தையிலேயே அதிக அளவில் அறியப்படாத விர்ச்சுவல் ரியாலிட்டியை 2016ல் ஸ்டார்ட் அப்பாக தொடங்கி 2 ஆண்டில் கோடிக்கணக்கில் நிதியையும் திரட்டியுள்ளார் அதன் நிறுவனரும் சிஇஓவுமான செந்தில்.
‘நுட்பம்’ நிறுவனத்தில் கடின உழைப்பை முதலீடாக போட்டதன் விளைவாக நிதி திரட்டியது குறித்து அதன் நிறுவனர் செந்திலின் தொழில்முனைவு அனுபவத்தை கேட்டறிந்தது தமிழ் யுவர் ஸ்டோரி:
ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியேறும் என்ஜினியரிங் மாணவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் செந்தில் மெகானிக்கல் என்ஜினியரிங் முடித்த கையோடு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
“என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம், அப்பா, அம்மா கைத்தறி நெசவாளர்கள். ராஜபாளையத்தில் தான் பள்ளிப்படிப்பு முழுவதையும் படித்தேன். 2008ம் ஆண்டு கல்லூரியில் சேர்வதற்காக சென்னை வந்தேன்.”
சென்னையில் தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்த கையோடு எம்என்சி ஒன்றில் 2012ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் செந்தில். ஆட்டோமொபைல் துறையில் டிசைன் என்ஜினியராக 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஸ்டார்ட் அப் தொடங்குபவர்கள் சொல்வது போல எம்என்சி வேலை வேண்டாம் என்ற நினைக்கவில்லை. தொழில்நுட்பம் மீது எப்போதுமே எனக்கு தீராக் காதல் இருந்தது எனவே 2016ம் ஆண்டில் சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறுகிறார் செந்தில்.
முதலில் நானும் என்னுடைய கல்லூரி நண்பரும் இணைந்து ‘நுட்பம்’ என்ற நிறுவனத்தை தொடங்கினோம். 2016ல் நான் மட்டுமே செயல்பட்டு வந்தேன். தற்போது 12 பேர் என்ற அளவில் நுட்பம் விரிவடைந்துள்ளது.
”நுட்பம் நிறுவனத்தில் உள்ள அனைவருமே பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் இருந்தவர்கள் தான், ஒரு தொழிலை எப்படி நஷ்டமின்றி செய்ய வேண்டும், என்னென்ன திட்டமிடல்கள் தேவை, கார்ப்பரேட் நிறுவனம் எவ்வாறு செயல்படும் என்பன உள்ளிட்ட பல விஷயங்களை அங்கிருந்து தான் கற்றுக் கொண்டோம்,” என்கிறார் செந்தில்.
தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் இருக்கும் இடத்திலேயே ஒருவர் விரும்பும் இடத்திற்கு சென்று வந்த அனுபவத்தைத் தர உதவுவது தான் விர்ச்சுவல் ரியாலிட்டி. பெருகி வரும் விஆர் வளர்ச்சியை பார்த்து அதனை கையில் எடுத்தோம். எடுத்த எடுப்பில் மேஜிக் போட்டு ப்ராஜெக்டை செய்து விட முடியாது, கற்பனைத் திறனோடு தொழில்நுட்பம் பற்றிய அறிவும் தேவை. எனவே முதல் 3 மாதங்கள் தொழில்நுட்பத்தை முழுவதுமாக கற்றுக் கொண்டோம்.
ஆன்லைன் மற்றும் சில தொழில்நுட்பங்களைப் படித்து விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றி தெரிந்து கொண்டோம்.
கல்வியில் முதலில் விஆரை கொண்டு வர வேண்டும் என்று விரும்பினோம். பக்கம் பக்கமாக நாம் படித்து தெரிந்து கொள்வதை விட விர்ச்சுவல் கண்ணாடி அணிந்து கொண்டால் எந்த பாடம் படிக்கிறோமோ அதனை நேரிலேயே கண்முன் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பதே விர்ச்சுவல் ரியாலிட்டியின் சிறப்பு.
டென்மார்க்கை சேர்ந்த ஒரு நிறுவனம் எங்களின் இந்த ஐடியா போலவே அனாடமி, விண்வெளியில் உள்ள பூமி, கோள்கள் உள்ளிட்டவற்றை அருகிலேயே பார்ப்பது போன்ற ப்ரோகிராம் செய்திருந்தனர். அந்த சமயத்தில் இந்தியாவில் கல்வியில் விர்ச்சுவல் ரியாலிட்டி செய்து கொடுப்பவர்களும் மிகக் குறைவாகவே இருந்ததால் அதில் கவனம் செலுத்தத் தொடங்கினோம்.
எடுத்த எடுப்பிலேயே விர்ச்சுவல் ரியாலிட்டி ப்ராஜெக்டை செய்ய போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தால் காட்சிகளை 360 டிகிரியில் படம்பிடித்துக் காட்டுவது என்ற முதல் அடியை எடுத்து வைத்தோம். கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களும் 360 டிகிரி கான்செப்ட்டை கையில் எடுத்திருந்ததால் சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் என்பதை புரிந்து கொண்டதாகக் கூறுகிறார் செந்தில்.
தனியார் தொலைக்காட்சிகள், எல் & டி நிறுவனம் உள்ளிட்டவற்றிற்கு 360 டிகிரி கான்செப்ட்டில் ப்ராஜெக்ட்டுகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். வேலைக்காரன் படத்தின் காட்சிகளையும் கூட 360 டிகிரியில் வடிவமைத்து கொடுத்திருந்தோம். 360 டிகிரி திட்டம் போய்க்கொண்டிருந்த சமயத்திலேயே காது கேளாதோர் பள்ளி, லிட்டில் மவுன்ட் பள்ளி என்று வேறு சில பள்ளிகளுக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் விதமான ப்ராஜெக்ட்டுகளையும் செய்து கொண்டே வந்தோம் என்கிறார் செந்தில்.
முழு அளவில் விர்ச்சுவல் ரியாலிட்டியை ஒரு தொழிலாக செய்யலாம் என்று முடிவெடுத்து களமிறங்கிய நேரத்தில் முகமது சதக் க்ரூப் ஆஃப் கல்லூரியின் நிறுவனத்திற்கு விஆர் பற்றி பயிற்சி அளிக்க எங்களை அணுகியது. ஏற்கனவே இது தொடர்பான படிப்புகளை படித்திருந்ததால் அவர்களுக்கு விஆர், ஏஆர் பற்றிய பயிற்சிகளை அளித்தோம். அதே சமயத்தில் கல்வியில் விஆரை புகுத்தும் திட்டங்களை உருவாக்க தேவைப்பட்ட நிதியை என்ஜிஓக்கள் மூலமும் திரட்டிக் கொண்டிருந்தோம் என்று நுட்பம் வளர்ந்த விவரத்தை கூறுகிறார் செந்தில்.
விர்ச்சுவல் ரியாலிட்டியை கல்விக்குள் கொண்டு வரும் அளவிற்கு நம் நாட்டில் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. சென்னை, தமிழ்நாடு, இந்தியா முழுவதும் எங்களது திட்டங்களை கொண்டு சென்றோம், ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் ஓவர்சீஸ் நாடுகளுக்கு பிரபலப்படுத்தியதாகக் கூறுகிறார் செந்தில்.
“நாங்கள் உருவாக்கிய திட்டம் உலகில் யாரேனும் ஒருவருக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து செயல்பட்டதன் விளைவாக பிரேசில் நாட்டில் இருந்து முதல் கிளையன்ட் கிடைத்தார். எங்களின் விர்ச்சுவல் ரியாலிட்டி அனாடமி ப்ராஜெக்ட் அந்த நாட்டின் முன்னணி கல்வி நிலையத்தில் தற்போது பயன்படுத்தப்படுகிறது,” என்று பெருமகிழ்ச்சியோடு கூறுகிறார் செந்தில்.
பிரேசிலைத் தொடர்ந்து கனடா, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலும் ‘நுட்பம்’ பரவி வேர் வேரூன்றியுள்ளது. வாடிக்கையாளராக வந்த ஆஸ்திரேலிய நிறுவனம் எங்களின் ப்ரொஜெக்ட்டுகள் பிடித்துப் போனதால் நுட்பத்தின் எதிர்கால திட்டங்களுக்காக முதலீடு செய்ய தாமே முன்வந்தனர். இதனால் கடந்த மாதம் அரை மில்லியன் அமெரிக்க டாலரை நுட்பம் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார் செந்தில். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 3 கோடியே 34 லட்சம் ரூபாய் ஆகும்.
விர்ச்சுவல் ரியாலிட்டி நிறுவனம் தொடங்க சுமார் 10 லட்சம் வரை நண்பர்கள் மற்றும் தன்னிடம் இருந்த சேமிப்பை முதலீடாக போட்டும், 2 ஆண்டில் விடா முயற்சி, கடின உழைப்பு, திறமை ஆகியவற்றை மூலதனமாக போட்டு வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து நிதியைப் பெற்றுள்ளார் செந்தில்.
சொந்தமாக தொழில் தொடங்கப் போவதாக தெரிவித்த போது செந்திலின் பெற்றோர் சிறிது தயங்கியே உள்ளனர். “நான் படித்து முடிக்கும் வரை குடும்பத்தில் ஏற்பட்ட கடன்கள் சிலவற்றை அப்போது தான் முடித்திருந்தோம், வேறு இரண்டு வேலைவாய்ப்புகளும் அதிக சம்பளத்துடன் காத்திருந்த சமயத்தில் இப்படி ஒரு முடிவை எடுக்கிறேனே என்று பெற்றோர் தயக்கம் காட்டினர். எனினும் எனது விருப்பம் இது தான் என்பதை புரியவைத்து 2016ல் முதல் அடியை எடுத்து வைத்ததாகக் கூறுகிறார் செந்தில்.
ஸ்டார்ட் அப் தொடங்கலாம் என்று எடுத்து வைத்த முதல் அடி பெரிய லாபத்தை பெற்றுத் தரவில்லை என்றாலும் தொடர்ந்து இயங்க கிடைத்த லாபத்தை மறுமுதலீடு செய்தே ஓராண்டு காலத்தை நகர்த்தினோம்.
“எந்த காரணத்திற்காகவும் இந்த ஸ்டார்ட் அப்பை கைவிட்டு விடக் கூடாது என்பதில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன். ஏனெனில் தொழில்நுட்பத்தை தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாது,” என்கிறார் செந்தில்.
விடாப்பிடியாக செந்தில் இருந்ததன் பலனை 2 ஆண்டுகளில் பெற்றுள்ளார். 2016ல் என்னுடைய ஸ்டார்ட் அப் நல்ல எதிர்காலத்தை கொடுக்குமா என்று பெற்றோர் அச்சப்பட்டனர். ஆனால் எங்களின் வளர்ச்சியை பார்த்து அவர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அதோடு விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றி பலரும் சொல்வதை கேட்டு அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றதாகக் கூறுகிறார் செந்தில்.
அயல்நாடுகளைப் போல இந்தியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டி மார்க்கெட் அதிகரிக்கவில்லை என்பதால் ஓவர்சீஸ் ப்ராஜெக்ட்டுகளை எடுத்து செய்து வந்தோம், இனி வரும் காலங்களில் இந்திய சந்தையை குறி வைத்தே எங்களின் அடுத்தத்த ப்ராஜெக்ட்டுகள் இருக்கும் என்கிறார் செந்தில்.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் விஆரை கொண்டு வர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதே போன்று விர்ச்சுவல் ரியாலிட்டியின் அடுத்தடுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பார்வையாளருக்கு கூடுதல் காட்சித் தெளிவையும், தொடுஉணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
நாங்கள் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் என்று தயங்க வேண்டாம் தரமான ப்ராஜெக்ட்டை வெளிக்கொண்டு வர முடியும் என்று அளித்த உறுதியே நுட்பம் வளர்ச்சியடைந்ததற்கு காரணம் என்கிறார். ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கிய பின்னர் அதில் தோல்வி வந்துவிட்டால் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
நுட்பம் மூலம் முதல் திட்டம் மற்றுமே வெற்றியை பெற்றேன், அதனைத் தொடர்ந்து அடுத்த 7 திட்டங்களும் தோல்வியில் முடிய எட்டாவது முயற்சியில் தான் ஒரு வெளிச்சம் கிடைத்தது என்கிறார் செந்தில்.
அலுவலகம் சென்று அலுத்துவிட்டது என்று ஸ்டார்ட் அப் தொடங்கினால் அது தோல்வியில் தான் முடியும். ஒரு பெட்டிக் கடை தொடங்குவது என்றாலும் கூட முழு நேரமும் கடையில் அமர்ந்திருந்தால் தான் வெற்றியை பெற முடியும், இந்த உண்மை புரியாமல் பலர் அவசர கதியில் நிறுவனம் தொடங்குவதால் தான் தோல்வியை சந்திக்க நேரிடுவதாக செந்தில் கூறுகிறார்.
முயற்சி, முயற்சி, முயற்சி அதோடு தெரிந்த விஷயத்தில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டாலே நினைத்த இலக்கை அடைந்து விடலாம் என்பதே செந்தில் ஸ்டார்ட் அப் தொடங்குபவர்களுக்கு கூறும் அட்வைஸ்.