பதிப்புகளில்

அமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்?

cyber simman
7th May 2018
Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏதாவது ஒன்றை சொல்கிறார் என்றால் அதை காது கொடுத்து கேட்டாக வேண்டும். அதிலும் நிர்வாக விஷயமாக பெசோஸ் சொல்வதை நிச்சயம் கவனித்தாக வேண்டும். அதனால் தான், பவர்பாயிண்ட் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக பெசோஸ் தெரிவித்த கருத்து பரவலாக கவனத்தை ஈர்த்து விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

image


பவர்பாயின்ட் மென்பொருள் பயன்பாட்டிற்கு அமேசான் நிறுவனத்தில் அனுமதி இல்லை என்பது தான் பெசோஸ் கூறிய கருத்தின் சாரம்சம். இதற்கான காரணங்களையும் அவர் விளக்கிக் கூறியிருக்கிறார். பவர்பாயிண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மென்பொருள் என்பதும், பிரண்டேஷன் எனப்படும் காட்சி விளக்கத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படும் பிரபல மென்பொருள் என்பதும் தெரிந்த விஷயம் தான். வகுப்பறைகள் முதல் அலுவலக கூட்டங்கள், மாநாட்டு அறைகள் என எல்லா இடங்களிலும் பவர்பாயிண்ட் பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம்.

அதிலும் குறிப்பாக வர்த்தக உலகில் பவர்பாயிண்ட் பயன்பாடு வெகு பிரசித்தம். இளம் மேலாளர்கள் முதல் நிறுவன சி.இ.ஓ-க்கள் வரை பெரும்பாலானோர் ஆலோசனை கூட்டங்களில் அதிகம் பயன்படுத்துவது இந்த மென்பொருளை தான். எனவே தான், நம்பர் ஒன் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் பவர்பாயிண்ட் மென்பொருளை பயன்படுத்த அனுமதி இல்லை எனும் தகவல் கவனத்தை ஈர்க்கிறது.

பல இணையதளங்களும், அமேசானில் பவர்பாயிண்டிற்கு தடை என்பது போன்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளன. தடை என்பது கொஞ்சம் அதிகப்படியான வார்த்தை தான். அமேசான் நிறுவன கூட்டங்களில் பவர்பாயிண்ட் மென்பொருள் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். அரசியலில் உள்கட்சி விவகாரம் என்று சொல்வது போல, இதுவும் உள் நிறுவன விவகாரம் தான். அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ், தனது நிறுவன ஊழியர்கள் பவர்பாயிண்டை பயன்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார், அவ்வளவு தான். இது அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும், பேசோஸ் பவர்பாயிண்ட்டை ஏன் வேண்டாம் என்கிறார் என்பதும், இதற்கு அவர் முன்வைக்கும் மாற்றுவழியும் முக்கியமாக இருக்கின்றன.

இங்கு ஒரு விஷயத்தை கவனித்தில் கொள்ள வேண்டும். காட்சி விளக்கங்களுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருளான பவர்பாயிண்ட், அதிகம் விமர்சிக்கப்படும் மென்பொருளாவும் இருக்கிறது. அதற்கு ஆதரவாளர்கள் இருப்பது போல, கணிசமான எதிர்ப்பாளர்களும் இருக்கின்றனர். 

பவர்பாயிண்ட் காட்சி விளக்கங்களை எளிதாக்கியிருக்கிறது என்பது ஒரு தரப்பின் வாதம் என்றால், பவர்பாயிண்ட் காட்சி விளக்கங்களை மிகவும் மலினப்படுத்திவிட்டது என்பது எதிர்தரப்பு விமர்சனமாக இருக்கிறது. இரு தரப்பு வாதத்திலும் உண்மை இல்லாமல் இல்லை.

புல்லட் புள்ளிகளை தாங்கிய ஸ்லைடுகள் வடிவில் காட்சி விளக்கங்களை மேற்கொள்ள வழி செய்யும் பவர்பாயிண்ட் மூலம் யார் வேண்டுமானாலும் காட்சி விளக்கங்களை தயார் செய்துவிடலாம். இந்த எளிமை காரணமாக பவர்பாயிண்ட் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உரை அல்லது பாடங்களை சின்ன சின்ன குறிப்புகளாக்கி, இடையே புகைப்படங்களையும் சேர்த்துக்கொண்டால் பக்கவான பிரசண்டேஷனாக தயார் செய்துவிடலாம். அதன் பிறகு திரையில் ஸ்லைடுகளை ஓட விட்டு, கெத்தாக உரை நிகழ்த்தலாம் அல்லது விளக்கம் அளிக்கலாம்.

இன்னொரு பக்கத்தில் பார்த்தால் பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை பார்த்தாலே கொட்டாவி வருகிறது என சொல்பவர்களும் இருக்கின்றனர். இந்த முறை அலுப்பூட்டும் வகையில் தட்டையாக இருக்கிறது என்பது அவர்களின் கருத்து. தவிர, இதில் உள்ளட்டக்கத்தைவிட மேற்பூச்சுகளே அதிகம் என்றும் எதிர் தரப்பினரின் பொது கருத்தாக இருக்கிறது. 

பவர்பாயிண்ட்டை விமர்சிக்கும் வயர்ட் இதழின் பழைய கட்டுரை ஒன்று, இதை சோவியத் பிரச்சார யுத்தியுடன் ஒப்பிட்டிக்கிறது. பார்வையாளர்கள் மீது உரை நிகழ்த்துவர் ஆதிக்கம் செலுத்த இது வழி செய்வதாகவும் அந்த கட்டுரை குற்றம் சாட்டுகிறது.

இப்படி பல காரணங்களினால் பவர்பாயிண்ட் மென்பொருள் பயன்பாட்டை எதிர்ப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். அமேசான் நிறுவனர் ஜெப் பேசோசும் இதில் ஒருவர். இந்த தகவல் கூட கொஞ்சம் பழைய செய்தி தான். சில ஆண்டுகளுக்கு முன்னரே அமேசான் நிறுவன பழைய ஊழியர் ஒருவர், பெசோசுக்கு பவர்பாயிண்ட் பிடிக்காது என்றும் நிறுவன கூட்டங்களில் அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அமேசான் மூத்த ஊழியர்கள் குழுவுக்கு பெசோஸ் 2004 ல் அனுப்பிய இமெயிலை நகலையும் அவர் வெளியிட்டிருந்தார்.

image


இந்நிலையில், நிறுவன ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஜெப் பெசோஸ் அண்மையில் எழுதிய கடிதத்தில் தனது நிர்வாக பார்வை மற்றும் அணுகுமுறை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இந்த கடிதத்தில் தான் அவர், அமேசான் கூட்டங்களில் பவர்பாயிண்டிற்கு அனுமதி இல்லை என்பதை குறிப்பிட்டு அதற்கான காரணங்களையும் விளக்கி இருந்தார். வேறு ஒரு விவாத அரங்கிலும் இதே கருத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

ஆலோசனை கூட்டங்கள் என்றாலே பவர்பாயிண்ட் பாணி ஸ்லைடுகளுக்கு பழகியவர்கள் அமேசானில் வேலைக்கு சேர்ந்து, முதல் முறையாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் போது கொஞ்சம் கலாச்சார அதிர்ச்சியாக தான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆக, மற்ற நிறுவனங்கள் போல அமேசானில் ஆலோசனை அல்லது விவாத கூட்டங்களில் படம் காட்டுவது எல்லாம் கிடையாது. அதற்கு மாறாக, கூட்டம் துவங்குவதற்கு முன், ஊழியர்களுக்கு கூட்டத்தின் நோக்கத்தை விவரிக்கும் ஆறு பக்க குறிப்பு காகிதங்கள் வழங்கப்படும். அதில் கதை சொல்வது போல, விஷயங்கள் ஒருவித தொடர்ச்சிடன் விவரிக்கப்பட்டிருக்கும். 

உண்மையான வாசகங்கள், பொருத்தமான பத்திகள், வினைச்சொற்கள், பெயர் சொற்கள் ஆகியவற்றை இந்த குறிப்பு உள்ளடக்கியிருக்கும் என்றும் பெசோஸ் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் அனைவரும் அந்த குறிப்புகளை பொறுமையாக படித்து முடித்த பிறகே ஆலோசனை ஆரம்பமாகும்.

கூட்டங்களுக்கான ஆறு பக்க குறிப்பை தயாரிக்கவும் ஊழியர்கள் மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும். கருத்துக்கள் தெளிவாக புரியும் வகையில் அடித்து திருத்தி எழுதி செம்மைப்படுத்தி அதன் பிறகே இறுதி வடிவம் தயாராகும் என்கிறார் பெசோஸ்.

இத்தகைய விரிவாக குறிப்பை அடிப்படையாக கொண்டு விவாதிக்கும் போது அதிக பலன் இருக்கும் என்பதும் பெசோஸ் நம்பிக்கையாக அமைகிறது. மிகவும் தெளிவாக யோசித்து, ஒன்றைவிட இன்னொன்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, விஷயங்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை உணரவும் இது வழிவகுப்பதாக பெசோஸ் நம்புகிறார். 

மாறாக, பவர்பாயிண்ட் பாணி விளக்கங்களில் எண்ணங்களை விட பளபளப்பிற்கே ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும், விஷயங்களின் முக்கியத்துவம் மற்றும் தொடர்புகளை புரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போவதாகவும் அவர் ஏற்கனவே விளக்கி இருக்கிறார்.

பெசோஸ் அளிக்கும் இந்த விளக்கத்தை தான் பல இணையதளங்கள் பவர்பாயிண்டிற்கு பெசோஸ் சொல்லும் அருமையான மாற்றுவழி என வர்ணித்துள்ளன. நிர்வாக நோக்கில் நிச்சயம், இது கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து தான். பவர்பாயிண்ட் என்றில்லை பொதுவாக ஸ்லைடு பாணியிலான காட்சி விளக்க உத்தி மீதான விமர்சனமாக இதை கருதலாம். ஸ்லைடுகளை விட, உரையாடலை மையமாகக் கொண்ட கதை சொல்லும் பாணியிலான உத்தி இதற்கான மாற்றுவழியாக முன்வைக்கப்படுகிறது.

மாற்று வழி தேவை என நினைப்பவர்கள் பெசோஸ் சொல்லும் உத்தியை பரிசீலித்துப் பார்க்கலாம். இல்லை எனில், நோ தேங்க்ஸ் என பவர்பாயிண்டிலேயே ஒரு ஸ்லைடு போட்டுவிட்டு வேலையை பார்க்கலாம்.

ஜெப் பெசோஸ் விளக்கம்: http://www.bushcenter.org/takeover/sessions/forum-leadership/bezos-closing-conversation.html

Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share
Report an issue
Authors

Related Tags