பதிப்புகளில்

ஃபேஸ்புக் - அனல்டிகா சர்ச்சை; ஒரே நாளில் 6.06 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்த மார்க் ஜக்கர்பர்க்!

22nd Mar 2018
Add to
Shares
73
Comments
Share This
Add to
Shares
73
Comments
Share

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் இரண்டாவது முறையாக மிகப்பெரிய நஷ்டம் அடைந்துள்ளார். ஒரே நாளிள் ஃபேஸ்புக் 35 பில்லியன் டாலர் பணத்தை இந்த திங்கள் அன்று இழந்தது. இவையெல்லாம், கேம்பிரிட்ஜ் அனல்டிகா சர்ச்சை எழுந்ததன் விளைவாகும். கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சுமார் 50 மில்லியன் பயனர்களின் தரவுகளை 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தவறாக பயன்படுத்தியதே இந்த சர்ச்சையாகும். 

மார்க், இந்த சர்ச்சையின் காரணமாக 6.06 பில்லியன் டாலரை ஒரே நாளில் இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இன்றளவும் உலகின் நான்காவது பணக்காரர் என ப்ளூம்பர்க் பில்லினியர் பட்டியல் குறிப்பிட்டுள்ளது. 
image


அதென்ன ஃபேஸ்புக்-அனல்டிகா சர்ச்சை?

ஃபேஸ்புக் பயனாளிகளை பொருத்தவரை அதிக லைக்குகளை அள்ளுவதும், பதிவுகளை வைரலாக்குவதுமே இதுவரை முக்கிய விஷயங்களாக இருந்து வந்திருக்கிறது. மற்றபடி ஃபேஸ்ப்புக்கில் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்றெல்லாம் பெரும்பாலானோர் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், அண்மையில் வெடித்துள்ள ஃபேஸ்புக் அனல்டிகா சர்ச்சை காரணமாக பலருக்கும் இப்போது தங்கள் தகவல்களும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது எனும் உண்மை புரிந்திருக்கிறது.

ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தரவுகளாக திரட்டப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக தனியுரிமை காவலர்கள் நீண்ட காலமாகவே எச்சரித்துக்கொண்டிருக்கின்றனர். பயனாளிகளின் தகவல்கள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படுவது தெரிந்த செய்தி தான். ஒருவர் வெளியிடும் பதிவுகள், லைக் செய்யும் விஷயங்கள், தெரிவிக்கும் கருத்துக்கள் ஆகியவற்றை நுணுக்கமாக கவனித்து அவர்களுக்கான சித்திரத்தை உருவாக்கி அதற்கேற்ற விளம்பரங்களையும், செய்திகளையும் இடம்பெற வைத்து ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வருவாயை அள்ளிக்குவித்து வருகின்றன. இந்த சேவைகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான விலை இது என பலரும் சமாதானம் அடைந்தனரேத்தவிர இதனால் பெரிய விபரீதம் வரும் என்றெல்லாம் நினைத்தாக தெரியவில்லை.

ஆனால் ஃபேஸ்புக்கின் விஸ்வரூப வளர்ச்சி இணைய உலகிற்கு புதிய கவலைகளையும், புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பயனாளிகள் ரசனைக்கேற்ற விளம்பரங்களை இன்னும் கூர் தீட்டியிருப்பதோடு, அவர்கள் எந்த வகையான செய்திகளை பார்க்கின்றனர் என்பதிலும் தாக்கம் செலுத்தத்துவங்கியிருக்கிறது. 

சமூக ஊடக சேவைகளுக்கு பழகிய பலரும் ஃபேஸ்புக்கிலேயே செய்திகளை தெரிந்து கொள்ள முற்படும் நிலையில், ஃபேஸ்புக் தனது நியூஸ்பீட் சேவை மூலம் பயனாளிகளுக்கான செய்திகளை முன் வைக்கிறது.

நியூஸ்பீட் வசதியால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பயனாளிகளின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் ஃபேஸ்புக் அல்கோரிதம் செய்திகளை தேர்வு செய்து சமர்பிப்பது பலவிதமான சார்புக்கு வித்திடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 

சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீட் வசதியில் சிறிய மாற்றத்தை செய்த போது ஊடகங்களுக்கு அது ஏற்படுத்திய அதிர்வுகள் ஃபேஸ்புக்கின் ஆதிக்கத்தை தெளிவாகவே உணர்த்தியது.

இந்நிலையில் தான் ஃபேஸ்புக் அனல்டிகா சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆய்வு நோக்கில் திரட்டப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனம் பயனாளிகள் அனுமதி இல்லாமல் தவறாக பயன்படுத்தியது என்பது இந்த பிரச்சனையின் மையம். அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பிரெக்சிட் வாக்கெடுப்பில், இந்த தகவல்களை கொண்டு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவான ஆன்லைன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க், தரவுகள் தவறாக கையாளப்பட்டிருப்பது நம்பிக்கை மீறல் என்று ஒப்புக்கொண்டிருப்பதோடு, எதிர்காலத்தில் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

இதனிடையே பலரும் ஃபேஸ்புக்கை டெலிட் செய்வோம் எனும் கோரிக்கையை வைத்து #DeleteFacebook ஹாஷ்டேகை டிவிட்டரில் பிரபலமாக்கி வருகின்றனர்.

இந்த பின்னணியில் சாதாரண ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு தங்கள் தரவுகள் குறித்த அச்சம் ஏற்படுவது இயல்பானது தான். 

உங்களுக்கும் இத்தகைய அச்சம் இருந்தால், ஃபேஸ்புக்கில் நீங்கள் பகிரும் தகவல்களை மற்றவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்:

ஃபேஸ்புக் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்த முயற்சிப்பதற்கு முன் ஃபேஸ்புக்கின் பிரைவசி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் பயன்பாட்டில் நிறுவனம் வைத்தது தான் சட்டம் என்றாலும், பயனாளிகள் தங்கள் தரவுகள் பகிர்வு பற்றி தீர்மானிக்க அது பலவித வாய்ப்புகளை அளிக்கவே செய்கிறது. இதற்கு முதலில் ஃபேஸ்புக் பிரைவசி செட்டிங்கை புரிந்து கொள்ள வேண்டும்.

ஃபேஸ்புக்கின் முகப்பு பக்கத்தில் மேல் பகுதியில் தோன்றும் நீல நிற பட்டையை கவனித்தால் கடைசியாக தலை கீழ் முக்கோணத்தை காணலாம். அதை கிளிக் செய்தால் வரும் பட்டியலில் செட்டிங்க்ஸ் (Settings) அல்லது அமைப்புகள் எனும் பகுதியை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். இந்த பகுதியில் ஃபேஸ்புக்கில் கணக்கு துவக்கிய போது சமர்பித்த விவரங்கள் எல்லாம் வரும். அவற்றோடு, இதுவரை நாம் கொடுத்த அனுமதிகள் எல்லாம் வரும். எல்லாவற்றையும் பொறுமையாக கவனிக்க வேண்டும்.

image


பிரைவசி:

முதலில் உள்ள பிரைவசி அல்லது தனியுரிமை பகுதியை தேர்வு செய்தால் நம்முடைய பதிவுகளை யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தீர்மானிக்கலாம். யார் எல்லாம் நட்பு அழைப்புகளை அனுப்பலாம், நண்பர்கள் பட்டியலை யார் பார்வையிடலாம், நீங்கள் சமர்பித்த மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்களை யார் எல்லாம் பயன்படுத்தலாம் போன்றவற்றை நீங்கள் மாற்றி அமைக்கலாம். இந்த பகுதியை பார்த்தாலே உங்கள் தகவல்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இவற்றை இயன்றவரை தனியுரிமை சார்ந்ததாக மாற்றிக்கொள்வது நல்லது.

அடுத்தாக உங்கள் டைம்லைன் தொடர்பான வாய்ப்புகளை பார்க்கலாம். உங்கள் டைம்லைனில் யார் எல்லாம் இடுகை இட முடியும், அவற்றை யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை எல்லாம் மாற்றி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன. லைக் செய்வதை யார் எல்லாம் பார்க்க முடியும் என்பதையும் மாற்றி அமைக்கலாம்.

தடை செய்!

ஃபேஸ்புக்கில் விரும்பாதவர்களை பிளாக் செய்யலாம் என்பது நீங்கள் அறிந்தது தான். இதே போல குறிப்பிட்ட நண்பர்களிடம் இருந்து செயலி அழைப்புகள் மற்றும் விளையாட்டு அழைப்புகளையும் தடை செய்யலாம். செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகளையும் தடை செய்வதன் மூலம் மெசஞ்சர் மூலம் அவற்றை தொடர்பு கொள்ள முடியாமல் செய்யலாம். ஒருவரிடமிருந்து பயன்பாட்டு அழைப்புகளை முடக்கும் போது அந்த பயணரிடம் இருந்து வரும் எதிர்கால பயன்பாட்டு அழைப்புகளையும் முடக்கலாம். நிகழ் அழைப்புகளையும், பக்கங்களையும் தடுக்கலாம்.

முகமறிதல்

ஃபேஸ்புக்கின் சுவாரஸ்யமான சேவைகளில் ஒன்றாக பேசியல் ரிகக்னைஷன் எனப்படும் முகமறிதல் அமைகிறது. இதன் மூலம் ஃபேஸ்புக், பயனாளிகளின் படத்தை மற்ற படங்கள் மற்றும் வீடியோக்களுடன் ஒப்பிடுகிறது. இதன் மூலம் ஒருவர் இடம்பெற்றுள்ள படங்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்கிறது. மற்ற படங்களில் இருக்கும் போதும் தெரிவிக்கப்படும். இது சுவாரஸ்யமான சேவை மட்டும் அல்ல சர்ச்சைக்குறிதும் தான். ஒருவர் பகிர விரும்பாத படங்களில் அவர் அடையாளம் காட்டப்படும் வாய்ப்பு இதில் இருக்கிறது. இதை தவிர்க்க விரும்பினால் இந்த சேவைக்கான அனுமதியை மறுக்கலாம்.

செயலிகள் உஷார்

நீங்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவது இருக்கட்டும், வேறு எந்த சேவைகள் மற்றும் செயலிகள் எல்லாம் உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொண்டால் உங்களுகே திகைப்பாக இருக்கும். செட்டிங் பகுதியில் உள்ள ஆப்ஸ் (பயன்பாடு) பகுதிக்கு சென்று பார்த்தால், எந்த செயலிகள் எல்லாம் உங்கள் தகவல்களை பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்ளலாம். இவை எல்லாமே அநேகமாக நீங்கள் அனுமதி அளித்தவையாக தான் இருக்கும். புதிய சேவைகளில் உறுப்பினராக சேரும் போது, ஃபேஸ்புக் வழி நுழைவை பயன்படுத்தும் வாய்ப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டது மூலம் அந்த செயலிகளுக்கு உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை திறந்து விட்டிருக்கிறீர்கள். 

இவற்றில் பல செயலிகளை நீங்கள் அதன் பின் பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். ஆனால் அவை தொடர்ந்து ஃபேஸ்புக் மூலம் உங்கள் தரவுகளை அறுவடை செய்து கொண்டிருக்கலாம். கேம்களும் இந்த பட்டியலில் இருக்கலாம்.

எனவே எந்த செயலிகள் எல்லாம் தகவல்களை அணுக அனுமதி பெற்றுள்ளன என்று பார்த்து தேவையில்லாதவற்றை நீக்கலாம். ஆனால் அப்போது கூட இதுவரை அவை திரட்டிய தகவல்களை ஒன்றும் செய்ய முடியாது.

விளம்பரங்கள்

இந்த பகுதிக்கு சென்று பார்த்தால் ஃபேஸ்புக் விளம்பர நிறுவனங்களுக்காக உங்களை எப்படி வகைப்படுத்தியுள்ளது என தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தெரிவித்த விருப்பங்கள், தொடர்பு கொண்டு நிறுவனங்கள் அடிப்படையில் உங்களுக்கான விளம்பரங்கள் அளிக்கப்பட்டாலும், இவற்றிலும் நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

இதை எல்லாம் செய்த பிறகு உங்கள் தனியுரிமை அமைப்பு எப்படி இருக்கிறது என சோதித்து பார்த்துக்கொள்ளலாம். முதலில் கிளிக் செய்த தலைகீழ் முக்கோணத்தின் இடது பக்கத்தில் உள்ள கேள்விக்குறி பகுதியை கிளிக் செய்து தனியுரிமை வாய்ப்பை தேர்வு செய்தால், உங்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்து கொள்ளலாம்.
image


உங்கள் தரவுகளின் பாதுகாப்பை இயன்ற அளவு உறுதி செய்து கொள்ள விரும்பினால், இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். அதற்கு முன் ஃபேஸ்புக்கின் தனியுரிமை கொள்கை நிபந்தனைகள் ஒரு முறை பொறுமையாக படித்துப்பார்த்து உங்களுக்கு எந்த அளவு உரிமை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Add to
Shares
73
Comments
Share This
Add to
Shares
73
Comments
Share
Report an issue
Authors

Related Tags