பதிப்புகளில்

வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஏறறிஞர் விருது!

YS TEAM TAMIL
12th Dec 2017
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் சார்பில் வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஏறறிஞர் விருதை குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு சென்னையில் வழங்கினார். 

 

பட உதவி: CareerGuide.com

பட உதவி: CareerGuide.com


விழாவில் உரையாற்றிய வெங்கையா நாயுடு, நம் நாட்டின் மாபெரும் விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் தன்னிகரற்ற சாதனையை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்கள் வாழும் வரலாறு. தனது தனித்துவம் மிக்க தொலைநோக்குப் பார்வை, உறுதிப்பாடு மற்றும் நடைமுறை காரணமாக நாட்டை பெருமையடையச்செய்தவர். 

”வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது உணவு பாதுகாப்பை அளிக்காது. ஆனால் உள்நாட்டில் பயிரிட்டு பெற்ற உணவு பாதுகாப்புக்கு மதிப்பிட முடியாத பங்களிப்பினை வழங்கியதற்காக பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு நாட்டு மக்களின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.

இன்றைக்கு உணவு பாதுகாப்பு மட்டுமல்ல ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு உற்பத்தி செய்கிறோம். அதற்கு எம்.எஸ். சுவாமிநாதனின் தொலைநோக்குப் பார்வை முக்கியக் காரணம். அதற்காக நான் நன்றி கூறுகிறேன். விவசாய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் நீங்கள் எல்லாம் எப்படி உணவு உற்பத்தியை பெருக்குவது விரிவாக்குவது என்று கவனம் செலுத்த வேண்டும். எப்படி மதிப்பு கூட்டலை மேம்படுத்த வேண்டும் என்று கவனம் செலுத்த வேண்டும். 

வேளாண்மைக்கு உதவும் வகையில் எப்படி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதை கவனம் செலுத்த வேண்டும். வேளாண் விளை பொருளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளை சுரண்டுவது நிறுத்தப்படும்.

நான்கு நிறுவனங்கள் ஒன்றிணைந்து வேளாண் ஆராய்ச்சியின் சின்னமாக திகழும் அவருக்கு இந்த ஏறறிஞர் விருது வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது. ஆராய்ச்சி விளைநிலங்களை சென்றடைவது எப்படி, விவசாயிகள் வாழ்வை மாற்றி அமைக்கும் என்பதை உலகுக்குக்காட்டிய உண்மையான சாதனையாளர். ஆராய்ச்சி விளை நிலங்களை சென்றடைவதை அவர் உறுதி செய்தார்.

image


நாட்டின் வளர்ச்சி மீது ஆழமான அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தவர். இந்திய வேளாண்மையில் நிலவிய பிரச்சினை குறித்து கவனம் செலுத்த ஏராளமான விஞ்ஞானிகளுக்கு தூண்டுகோலாக விளங்கி மாற்றம் ஏற்படுத்தியவர். அவர் எடுத்த காரியங்களில் எல்லாம் சிறந்து விளங்கினார் என்பதில் வியப்பு ஏதும் இல்லை.

அவர் நம் தாய்நாட்டிற்காக சேவை புரிவதற்கு உறுதி பூண்டிருந்தார் என்பதும் வியப்பிற்குரியது அல்ல. காரணம் அவர் தேசபக்தி நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். இந்தியாவை முதலிடத்தில் முன்னிறுத்த பாடுபட்டக் குடும்பம் அவரது குடும்பம். அவருடைய தந்தையாரால் அவர் மிகவும் தீவிரமாக தூண்டப்பட்டார். சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான அவர் தந்தை திரு. எம்.கே. சாம்பசிவம் மிகப்பெரிய சமூக சீர்திருத்த வாதியும் கூட. மகாத்மாக காந்தியின் தொண்டரான அவர் அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் கும்பகோணத்தில் முன்னின்று போராடியவர். 

கும்பகோணத்தில் யானைக்கால் வியாதியை ஒழிக்க பாடுபட்டது மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் செல்ல போராடியவர். இந்தியர்கள் அனைவரும் ஒன்று. சாதி மதபாகுபாடின்றி அவர்கள் அனைவரும் ஒருவர் என்பதை அன்றே அவர் செய்து காட்டினார். அவருடைய சேவை மனப்பான்மை டாக்டர் சுவாமிநாதன் இதயத்தில் இளம் வயதிலேயே செதுக்கப்பட்டது.

1943ல் வங்காள பஞ்சம் அவரை வேளாண்மை பக்கம் திருப்புவதற்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த சவாலை எதிர்கொள்ள தன் வாழ்நாளை அர்ப்பணிக்க அவர் முடிவு செய்தார். கோவையில் இப்போது தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் சென்னை வேளாண் கல்லூரியில் வேளாண் கல்வியை மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். 

வெளிநாட்டில் முழு நேர வேலை கிடைத்தும் அதை தவிர்த்து தாய்நாட்டிற்கு சேவைபுரிய வந்தார். தாய் நாட்டின் மீது அவர் கொண்டிருந்த அன்பை இது காட்டுகிறது. தான் பெற்ற நுட்பத்தை தன் நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்த விரும்பினார். 

மாணவர்களே நீங்களும் நன்றாக படியுங்கள். இங்கே ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பினால் செல்லுங்கள், படியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள். சம்பாதியுங்கள் நாட்டிற்கு திரும்புங்கள். தாய் நாட்டில் சேவை புரிய நாடு திரும்புங்கள்.

1960-களில் பசுமைப் புரட்சி ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக திகழ்ந்தார். அவர் ஏராளமான ஆராய்ச்சிப் பிரிவுகளை உருவாக்கினார். 70 கவுரவ டாக்டர் பட்டங்களை உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்துபெற்றவர். வேளாண் சமுதாயத்திற்காக அவர் கொண்டிருந்த அன்பை நான் எப்போதுமே பாராட்டியுள்ளேன். 

இந்திய வேளாண் சமுதாயத்தின் வறுமை நீக்கவும், அவர்கள் வாழ்க்கை சிறக்கவும் தன் வாழ்நாளை தியாகம் செய்த இந்த மாபெரும் விஞ்ஞானிக்கு விருது வழங்குவது அவரது சேவைக்கு அங்கீகாரம் அல்ல. இந்த நிறுவனங்களுக்கு டாக்டர் சுவாமிநாதன் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவே நான் நம்புகிறேன், என்றார் வெங்கையா நாயுடு.

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags