பதிப்புகளில்

'கிராம வளர்ச்சிக்கு மக்களே கண்ட புது வழி'- ஒன்று கூடி உழைக்கும் புதுக்கோட்டை 'மண்ணின் மைந்தர்கள்'

8th Aug 2016
Add to
Shares
54
Comments
Share This
Add to
Shares
54
Comments
Share

நாட்டின் குக்கிராமங்களில் வசிக்கும் ஒரு சிலருக்கே கல்வி வசதி வாய்ப்பு கிடைக்கிறது. அப்படிக் கிடைத்தவர்களில் பாதி இளைஞர்கள் மட்டுமே பட்டபடிப்பு முடிப்பர். அதிலும் மிகக் குறைந்தோர்க்கே நல்ல சம்பளத்துடன் வேலை கிட்டும். அவர்களும் வெளிநகரங்களில் அல்லது வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து விடுவர். மற்றவர்கள் பிழைப்புக்காக, சின்ன சின்ன வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலான கிராமங்கள் இந்த சுழற்சியில் பெரிதாக மாற்றமும் காண்பதில்லை, முன்னேற்றமும் அடைவதில்லை.

image


ஆனால் இந்த வரிசையில் இருந்து புதுக்கோட்டையில் உள்ள காரனாப்பட்டி கிராமம் மாறுபட்டு இருக்க முன்வந்துள்ளது. அக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, தற்போது வெளிநகரங்களில் பணிபுரியும் சிலர் ஒன்று கூடி அவர்கள் கிராமத்திற்கு நற்பணிகள் செய்ய தொடங்கியுள்ளனர். அதற்கு 'மண்ணின் மைந்தர்கள்' என்று நற்பணி இயக்கம் ஒன்றும் தொடங்கியுள்ளனர். அவர்கள் சேவை குறித்து, இவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் பகிர்ந்து கொண்ட, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அவர்களது செயல்களின் சுவாரசிய தொடக்க கதை இதோ!

காரனாப்பட்டி கிராமம் :

புதுகோட்டையில் உள்ள காரனாப்பட்டி கிராமத்தில் மொத்தமே சராசரியாக 250 குடும்பங்கள் தான் வசிக்கின்றன. அங்கு ஒரே ஒரு தொடக்கப் பள்ளி மட்டும் உள்ளது. ஆறாவது வகுப்பிலிருந்து பக்கத்து ஊரில் உள்ள உயர்நிலை பள்ளியில் தான் பயில வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன், அவர்களில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே வெளியூருக்கு சென்று பட்டப்படிப்பு படிப்பர். பெரும்பாலானவர்கள் வெளியூர்களுக்கு 10,000 முதல் 15,000 வரையிலான ஊதியம் கிடைக்கும் வேலை தேட சென்று விடுவர். பட்டபடிப்பு முடித்தவர்கள் வாய்ப்பு கிடைத்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விடுவர்.

வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்தாலும், முதன்முதலில் விமான நிலையத்திற்கு செல்லும் போது, அங்கு கேட்கும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லத் தெரியாமல், ஆங்கிலம் புரியாமல் திணறுபவர்களே அதிகம். போதிய கல்வி அறிவின்மையும் அறியாமையும் அவர்களை ஆளும், என்கிறார் ராஜேஷ்.

கிராமங்களில் உள்ள மக்கள்; வங்கி, தாலுகா செல்ல வேண்டுமானாலும் பிறரை சார்ந்தே இருக்கின்றனர். அதனால் அவர்கள் ஏமாற்றப்பட்டாலும் அதில் ஆச்சரியம் இல்லை. விவசாய தொழிலும் குடும்ப தேவைக்காக செய்து வரப்படுகிறது. வெளியுலகத்தைப் பற்றி தெரியாமலே கிராமத்தினர் இருக்கின்றனர்; தெரிந்து கொள்ளாமலும் இருக்கின்றனர். இந்த நிலை இனியும் தொடரக் கூடாதென்று, சமீபத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர்கள் இணைந்து, மாற்றம் கொண்டு வர முயற்சிகள் எடுத்துள்ளனர்.

image


திருவிழாவான அறிவிப்பு விழா

அறியாமையினால் ஒரு இயலாமை ஏற்படுகிறது; அந்த இயலாமை பொறாமையாய் மாறி விடுகிறது. இதுவே சமூகம் முன்னேற்றம் காணாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றார், ராஜேஷ்.

எங்கள் உழைப்புக்கு ஒத்துழைக்க, கிராம மக்களுக்கு முதலில் எங்கள் மேல் ஒரு வலுவான நம்பிக்கையை நாங்கள் உருவாக்க விரும்பினோம். நற்பணி இயக்கம் தொடங்க உள்ளோம் என அவர்களுக்கு தெரிவிக்க, விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

கடந்த ஜூலை 24-ந்தேதி மாலை வேளையில் விழா தொடங்கியது. விழா இடத்தை சுற்றி சுத்தம் செய்ய, பெண்களுக்கு கோல போட்டிகள் வைத்தோம். கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசளித்தோம். 25 மரக்கன்றுகள் நட்டோம்.

பழமை வாய்ந்த பொது கழிப்பறை கட்டிடம் மற்றும் ஒரு கிராமத்தினரின் வீட்டுச்சுவர்களில், 'அப்துல்கலாம், நம்மாழ்வார் மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட எங்கள் கிராமத்தவர் 'காசி' ஆகிய தலைவர்களின் வரைபடங்களை வர்ணம் தீட்டிருந்தோம். மேலும் தண்ணீரை சேமிக்கும் முறைகளையும் வரைந்திருந்தோம்.

அந்த நாள் முழுக்க நம்மாழ்வாரின் சொற்பொழிவை ஒலிப்பெட்டியில் ஓடவிட்டோம். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தற்போதிய ஊர் தலைவர், முந்தய ஊர் தலைவர், கிராம தலைவர், ஊர் காவல் துணை ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பும் பாராட்டும் கிட்டியது.

image


'மண்ணின் மைந்தர்கள்'- நோக்கமும், சவால்களும்

"அறியாமை போக்கும் கல்வி அமைத்தல், வேளாண்மை அல்லது அருகாமை வேலை வாய்ப்புகள் குறித்த சிந்தனை தூண்டல், இதனால் கிராம பொருளாதாரத்தில் வளர்ச்சி காணல்", இதுவே மண்ணின் மைந்தர்கள் நோக்கமாகும் என்று ராஜேஷ் கூறினார்.

முதலில் மக்கள் எங்களிடம், "உங்களுக்கு எப்படி நிதி கிடைத்தது? புதிதாக அரசியல் கட்சி தொடங்குகிறீர்களா? இதனால் உங்களுக்கு என்ன இலாபம்?" என்ற பல கேள்விகள் எழுப்பினர்.

இப்பணிகள் செய்ய நிதி அனைத்தும் நாங்கள் சேர்த்து கொடுத்தது. இந்த விழா செலவு 50,000 ரூபாயை தாண்டவில்லை.

தனது பெயர் இடம்பெற்று, பேசப்படவேண்டும் எனும் ஒரே காரணத்திற்காக திருவிழாவிற்கு 20,000 ரூபாய் கூட கொடுக்கப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு புத்தங்கள் வாங்க 500 ரூபாய் தர யாரும் முன்வருவதில்லை. 

இதுவே அறியாமையின் எடுத்துக்காட்டு என்று வருத்தத்துடன் கூறினார், ராஜேஷ்.

நாங்கள் வெளியூர், வெளிநாடுகளில் இருப்பதால், எங்களால் கிராமத்திலிருந்து பணிகள் செய்ய முடியாது. அங்கிருக்கும் சிலர் தான் அவற்றை பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் தான் நட்ட செடிகளைப் பராமரிக்க வேண்டும். எண்ணங்கள் மாறினால் தான் நல்ல மாற்றம் பிறக்கும். எண்ணங்களை மாற்றுவது, மிக பெரிய சவாலாகும்.

எதிர்கால சேவைகளுக்கு தயாராகும் குழு

ஒத்த கருத்துள்ள 15 பேர் தான் இவர்களின் இப்போதிய குழு. இவர்கள் அனைவரும், பணி முடிந்தபின், மாலை ஏழு மணியிலிருந்து எட்டு மணிவரையில் தினமும் இவர்களது வாட்ஸ்அப் குழுவில் கிராம நற்பணிகள் குறித்து கலந்துரையாடுகின்றனர்.

முறையாக மன்றம் பதிவு செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. வரும் தை ஒன்றாம் தேதி தான், இந்த மண்ணின் மைந்தர்கள் நற்பணி இயக்கம், கிராம இளைஞர்கள் பலரை சேர்த்துத் தொடங்க உள்ளது.

image


தொடக்கத்தில் நாங்கள் எண்ணியதை விட அதிக கூட்டமும் பாராட்டும் கிடைத்தது. அருகிலுள்ள மற்ற கிராமத்தவர்கள் எங்கள் கிராமத்தைப் பார்த்து, எங்களுக்கு புகழாரம் சூட்டுவது, எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது; கிராம மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது, என்றார் ராஜேஷ்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகாளாக, கிராம பள்ளியில் ஒரு கணினியும், வேலை தேடும் ஒரு இளைஞரை மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியராக நியமிக்கவும் உள்ளனர். கிராம தெரு மின்கம்பங்களில் ஒலிப்பெட்டிகள் வைத்து, ஒலிப்பெருக்கி மூலம் முக்கிய அறிவிப்புகளை மக்களுக்கு தெரிவிப்பதுபோல அமைக்க உள்ளனர். கிராமத்தில் இப்பணிகள் மேற்கொள்ளும் இருவருக்கு 3000 முதல் 5000 வரையில் ஊதியம் கொடுப்பது போல், வேலை வாய்ப்பு அமைக்கவும் திட்டம்தீட்டி உள்ளனர் என்பது ராஜேஷ் பகிர்ந்து கொண்டவை. 

பிறந்த மண்ணுக்கு நற்பணிகள் செய்து தங்கள் கிராமத்தை முன்னேற்ற நினைக்கும் இந்த இளைஞர்களின் சேவை மேலும் தொடர தமிழ் யுவர்ஸ்டோரி-இன் வாழ்த்துக்கள்.

Add to
Shares
54
Comments
Share This
Add to
Shares
54
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக