'பயணம் ஏதோ ஒரு வகையில் என் வளர்ச்சிக்கு உதவுகிறது': நடிகை டாப்சியின் பயண அனுபவங்கள்!

  27th Jun 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  நடிகை மற்றும் தொழில்முனைவரான டாப்சி பன்னு ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு புதிய இடத்திற்குப் பயணிக்கிறார். டாப்சி இவ்வாறு பயணம் மேற்கொள்வது பணியிலிருந்து ஓய்வெடுப்பதற்காகவோ புதிய இடங்களைக் கண்டு களிக்கவோ அல்ல. நிஜ உலகுடன் தொடர்பில் இருக்கும் நோக்கத்துடனேயே பயணிக்கிறார்.

  தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிற்காக வெளிநாடு சென்றிருந்தவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டேன்.

  image


  டாப்சிக்கு மிகவும் விருப்பமான இடங்கள், எதற்காக பயணம் மேற்கொள்கிறார் போன்றவற்றையும் சுவாரஸ்யமான பயண அனுபவம் மற்றும் பயணக் குறிப்புகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டார். 

  சரியான முடிவெடுத்தல்

  ”பயணம் என்பது நிஜ உலகுடன் தொடர்பில் இருப்பது என்பது என் கருத்து. நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கையில் பலரது கவனமும் உங்கள் மீது இருக்கும். ஊடகங்கள் பார்வை உங்கள் மீதே இருக்கும். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடத்தப்படவேண்டும் என்று சிந்திக்கத் துவங்குவீர்கள். நீங்கள் குடியேற்றம் பெறுவதற்கான வரிசை, செக்யூரிட்டி செக், உணவகம் போன்ற பகுதிகளில் வரிசையில் நிற்கும்போது உண்மையான சூழல் உங்களுக்குக் கிடைக்கும்."

  எனவே பயணம் என்பது நீங்கள் சரியான முடிவெடுக்கவும், நிஜ உலகுடன் தொடர்பில் இருக்கவும், சாமாணியர் என்கிற உணர்வைப் பெறவும் உதவுகிறது.

  image


  அது மட்டுமல்லாது அவர் திரைத்துறையிலிருந்தும் வழக்கமாக அவரைச் சுற்றியிருக்கும் மக்களிடமிருந்தும் சற்றே விலகி இருக்க பயணம் உதவுகிறது. 

  “பயணம் ஏதோ ஒரு வகையில் என் வளர்ச்சிக்கு உதவுகிறது,” என்றார்.

  கடல் பிரதேசங்கள் மீது ஆர்வம்

  தண்ணீரின் மீது டாப்சியின் பார்வை பட்டதும் ஒரு நிம்மதியான உணர்வு அவருள் ஏற்படுகிறது.

  ஐரோப்பா செல்வதை அவர் விரும்பினாலும் அவருக்கு எப்போதும் பிடித்த இடம் மாலத்தீவு. ஏனெனில் அவருக்கு கடற்கரை மிகவும் பிடிக்கும். ”அதுதான் சொர்க்கம். என்னுடைய முதல் படம் வெளியானதும் அங்கு சில நாட்கள் செலவிட்டது இன்றும் என் நினைவில் உள்ளது. ஸ்கூபா டைவிங் உரிமம் பெற்றுள்ளேன். நீருக்கடியில் முற்றிலும் ஒரு புதிய உலகைக் கண்டறிந்தேன். நான் கடலை ஒட்டியுள்ள வில்லாவில் வசித்ததால் அங்கிருந்து கடலைக் காணும் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது,” என்றார்.

  அவரது பயணங்களிலேயே மாலத்தீவிற்குச் சென்றதுதான் மறக்கமுடியாத பயணமாகும். அந்த சமயத்தில் அவரது சகோதரியின் பிறந்தநாள். பெண்கள் ஒன்றிணைந்து ஒரு தனித்தீவில் இரவு உணவை ரசித்தனர். ”அந்தச் சூழலே ரம்மியமாக இருந்தது. ஒரு சமையல்காரர் எங்களுக்கு உணவு பரிமாறினார். ஒரு கிச்சனும் ஒரு க்ரில்லும் இருந்தது,” என்று நினைவுகூர்ந்தார். “அந்த அமைப்பு பிரமாதமாக இருந்தது. அந்தக் காட்சி என் கண்களை விட்டு எப்போதும் விலகாது.”

  விடுமுறையின்போது மேற்கொள்ளப்படும் பயணத்தையும் பணி சார்ந்த பயணத்தையும் ஒப்பிடமுடியாது எனும் அவர், 

  “விடுமுறையின்போது அலாரம் இல்லை, சரியான நேரத்தில் எங்கும் சென்றடையவேண்டிய அழுத்தம் இல்லை, யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அடையவேண்டிய இலக்கு எதுவும் இல்லை. ஆனால் பணி சார்ந்த பயணம் என்பது விடுமுறை நாட்களின் பயணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது,” என்றார்.
  image


  விருப்பப்பட்டியல்

  டாப்சி டெல்லியில் வளர்ந்திருந்தாலும் தனக்கு குளிர்காலம் அவ்வளவாக பிடிக்காது என்கிறார். “குளிர்காலம் என்னுடைய மூளையை உறைய வைத்துவிடும்,” என்றார். விடுமுறைக்கான பயணத்திற்கு அவர் திட்டமிடுகையில் இடத்தைத் தேர்வு செய்வதில் வானிலையை முக்கிய காரணியாகக் கொண்டே தீர்மானிக்கிறார். அவரது விருப்பப் பட்டியலில் அடுத்து இடம்பெற்றிருப்பது நியூசிலாந்து. பணியிடையே போதுமான அவகாசம் கிடைத்தால் இந்த ஆண்டு இந்தியாவின் குளிரில் இருந்து தப்பிக்க நேரடியாக நியூசிலாந்து சென்றுவிட விரும்புகிறார்.

  “நமக்கு குளிர்காலம் இருக்கும்போது நியூசிலாந்தில் கோடைக்காலம். அந்த சமயத்தில் மட்டுமே நான் அங்கே செல்லமுடியும்,” என்றார்.

  ஒப்பீட்டளவில் அதிகம் பிரபலமாகாத பகுதிகளுக்கு அவர் மேற்கொள்ளும் பயணங்களில் சமீபத்தில் அவர் சென்றது செவில்லி. இந்தப் பகுதி ஃப்ளெமெங்கோ நடனத்திற்குப் புகழ்பெற்றது. இது தெற்கு ஸ்பெயினின் அந்தாலூசியா பகுதியின் தலைநகராகும்.

  ”பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பார்சிலோனா, வாலென்சியா, மாட்ரிட் போன்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர். செவில்லி அதிகம் பயணிக்கப்படாத பகுதி.” செவில்லி சென்ற தனது அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொள்கையில், 

  “நீங்கள் அங்கு சென்றால் விசித்திரக் கதைகளில் வரும் நகரில் இருப்பது போன்று உணர்வீர்கள். கற்களால் ஆன சாலைகளும் ஒற்றை மாடியுடன் காணப்படும் வீடுகளும் அழகாக காட்சியளிக்கும்."

  இந்தியாவில் வட கிழக்குப் பகுதிகளுக்கு அவர் இன்னும் செல்லவில்லை. ஆனால் அவர் பயணித்த வரை கேரளாவின் சூழல் அவரைப் பெரிதும் ஈர்த்துள்ளது. “கடற்கரை, கடல் மற்றும் அதன் அழகு எனக்கு மிகவும் பிடித்தமானது,” என்றார் டாப்சி.

  சிறந்த துணை

  image


  டாப்சி தனியாக பயணிப்பது குறித்து வருந்துவதில்லை என்றாலும் அவரது சகோதரி ஷகுன் பன்னு அவருக்கு சிறந்த துணையாவார். ஷகுன், டாப்சி மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் திருமண ஏற்பாடுகளை திட்டமிடும் ஸ்டார்ட் அப்பான ’தி வெடிங் ஃபேக்டரி’ நிறுவனத்தின் இணை நிறுவனர்கள். ஷகுன் சொந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் டாப்சியுடன் பயணிப்பது சாத்தியமாகிறது.

  டாப்சியின் பயணக் குறிப்புகள்

  நான் எப்போதும் ஒரே உணவகத்திற்கு இரண்டாவது முறை செல்வதில்லை. இதற்காக சில கிலோமீட்டர் நடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஒரே இடத்தில் இரண்டாவது முறை சாப்பிடுவதில்லை.

  ”பல உணவு வகைகளை சோதனை செய்வேன். புதிய இடங்களுக்குச் செல்வேன். நான் ஒரு ஹோட்டலில் தங்கினாலும் அங்கும் ஒரு முறைக்கு மேல் சாப்பிடுவதில்லை,” என்றார்.

  ஒரு நகரை சிறப்பாக சுற்றிவர உள்ளூர் போக்குவரத்தே சிறந்தது என்கிறார் டாப்சி. ”முடிந்தவரை நடந்து செல்வதே சிறந்தது. நான் டாக்சியில் செல்வது அரிது. என்னால் முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது கால்களில் காயமிருந்தாலோ மட்டுமே டாக்சியில் செல்வேன். உள்ளூர் போக்குவரத்து எனக்கு மிகவும் பிடிக்கும். 

  ரயில், ட்ராம் போன்றவற்றில் பயணம் செய்வேன். அப்போதுதான் என்னால் நகரை முழுமையாக பார்க்கமுடியும்,” என்றார். இவ்வாறு பயணத்தை எளிதாக மேற்கொள்ள அனைத்து தருணங்களிலும் சௌகரியமான ஷூக்களை அணிந்து நடந்து செல்லவேண்டிய அவசியமில்லை. ரயிலிலோ மெட்ரோக்களிலோ பயணிக்கலாம் என பரிந்துரைத்தார்.

  image


  ஏர்பிஎன்பி, பொடிக் ஹோட்டல், ஆடம்பரமான வில்லா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது அமைந்திருக்கும் இடம் மிகவும் முக்கியமானது. நீங்கள் தொடர்பில் இருக்கவேண்டும். எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவேண்டும். எளிதாக இணைந்திருக்கவேண்டும். இதை சாத்தியப்படுத்த உதவும் வகையில் அந்த இடம் நகரின் மையப்பகுதியில் இருக்கவேண்டியது அவசியம்.

  பெரும்பாலும் அனைத்து பயணங்களையும் திட்டமிடுகிறார். பயணத்தை கண்காணிக்கவும் நேரத்தை சிறப்பாக திட்டமிடவும் பயணம் சார்ந்த செயலிகளைப் பயன்படுத்துகிறார்.

  டாப்சியும் அவரது சகோதரியும் அருங்காட்சியகங்களுக்குச் செல்வதில்லை. “நாங்கள் அருங்காட்சியகங்களுக்குச் செல்வதில்லை. அங்கு நேரம் செலவிடுவதற்கு பதிலாக நினைவுச்சின்னங்களை பார்வையிட விரும்புவோம்,” என்றார்.

  பயணம் முடிந்து திரும்புகையில் கொண்டு வரும் பொருட்கள் குறித்தும் ஷாப்பிங் செய்வது குறித்தும் அவர் ஆலோசனை வழங்குகையில்,

  ”அந்த நாட்டின் தனித்துவமான பொருட்களை தேர்ந்தெடுங்கள். ஷூக்கள், ஆடைகள், நினைவுப்பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை சில்லறை வர்த்தக கடைகளுக்குச் சென்று வாங்கவேண்டாம். உள்ளூர் சந்தைகளுக்குச் செல்லலாம். அங்கு கிடைக்கும் பொருட்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை,” என்றார்.

  ஒரு குறிப்பிட்ட பகுதியை நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையில் என்ன வாங்கி வருவார் என கேட்டதற்கு, “ஃப்ரிட்ஜ் மேக்னட். நான் பயணிக்கும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும், மாநிலத்திலிருந்தும், நாட்டிலிருந்தும் ஒரு ஃப்ரிட்ஜ் மேக்னட் வாங்கி வருவேன்,” என்றார்.

  ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே | தமிழில் : ஸ்ரீவித்யா

 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • WhatsApp Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • WhatsApp Icon
 • Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags