பதிப்புகளில்

2016ல் எவ்வளவு செழிப்பாக இருக்கப் போகிறீர்கள்?

11th Jan 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

நிச்சயமாக, இது ஒரு குழப்பமான கேள்வி தான். என் குடும்பத்தினர், குறிப்பாக என் பாட்டி என்னைப் பார்க்க வரும் போதெல்லாம், எல்லோர்க்கும் கேட்கும்படி சத்தமாக, உன் வயதையொத்த மற்ற பெண்களை போல எப்போது குழந்தை பெற திட்டமிட்டிருக்கிறாய் எனக் கேட்பார்.

அதற்கெல்லாம், பல பரிசோதனைகள் செய்யது கொள்ளலாம் எனவும் சொல்வார். எனக்கு கோபம் வரும், பின் ஓர் பெரிய வாக்குவாதம் நடக்கும். பெண்மை, நவீனம், வேலை, திருமணம், இதற்கு இடையில் வரும் காரியங்கள் என அனைத்தைப் பற்றியும் விவாதிப்போம். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் நீ ‘வளமாக’ இல்லையென்றால், அதைப் பற்றி அவமானப் பட வேண்டாம், இன்று, அதைப் போன்ற சிக்கல்களை எல்லாம் தீர்க்க மருத்துவமனை இருக்கின்றன என முடிப்பார்.

நான் எதற்காகவும் அவமானப்படவில்லை, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால், என்னை ஒரு பரிதாபப் பார்வை பார்ப்பார். மறுமுறை நாங்கள் சந்திக்கும் போதும், இந்த நாடகம் தொடரும்...

இந்த ஒருக் கேள்வியின் போது, என் குடும்பத்தினர் ஒற்றுமையாகி விடுகின்றனர். இந்த விஷயம் ஏதோ தேசிய அளவில் கௌரவம் அளிக்கும், ‘குடும்பத்தினர் தெரிந்துக் கொள்ள நினைக்கும்’ மிகப் பெரிய விஷயம் போலவும் இருக்கிறது.

image


ஆனால், நான் இன்று, நம் சிலரின் குடும்பத்தினர் சொல்லும் ‘வளமையை’ பற்றி அல்லாமல், நான் தினந்தினம் சிந்திக்க வேண்டிய ஒரு வளமையை பற்றிப் பேசப் போகிறேன். அதற்கு முன், இன்னொரு கதை, சகித்துக் கொள்ளவும்!

இதைப் படித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு, 2015, யுவர்ஸ்டோரிக்கு ஒரு அபூர்வமான வருடம் எனத் தெரிந்திருக்கலாம். ஏழு வருடம் இத்துறையில் நிலைத்திருந்த பிறகு, ஒரு நிதி திரட்டும் தொடர் எழுப்பினோம், 23000 கதைகள் எழுதியிருக்கிறோம், தற்போது பன்னிரண்டு மொழிகளில் வியாபித்திருக்கிறோம், 65 உறுப்பினர்கள் கொண்ட வலிமையான குழுவாய் விரிவடைந்திருக்கிறோம், புது தயாரிப்புகளில் பணி புரியத் தொடங்கியிருக்கிறோம், பல புதிய பிராண்டுகளுடனும், அரசு அமைப்புகளுடனும் கை கோர்த்திருக்கிறோம். ஒரே வருடத்தில் பல மைல்கற்களை எட்டியிருக்கிறோம். ஒருக் கட்டதில், இத்தனை வருடம் அலைந்து திரிந்ததற்கான பதில்கள் இப்போது தான் கிடைக்கிறது என உணர்ந்தேன்.

ஒவ்வொரு மைல்கல்லை அடையும் போதும், எனக்குள்ளே பயங்கர வலியையும், தனிமையையும் உணர்வேன். எனக்கு மிகக் கடினமாக இருந்தது, தொழில்முனைவுச் சூழலியல் கொண்டாடும், ‘நிதி எழுப்புதல்’ தான். ஒரே இரவில் நண்பர்கள், உறவினர்களின் குணங்கள் மாறின, பலரின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் எனக்கிது கவலையாக இருந்த வேளையில், பிறரைக் காயப்படுத்திவிட்டு அதைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து செல்லும் இளம் தொழில் முனைவர்களைப் பற்றிய தேசிய விவாதங்களும், அவர்களை வழிபடுவதும் என்னை உருக்குலைப்பதாக இருந்தது. ‘இவ்வளவு ரணப்படுத்தும், கடுமையான உலகில் நிலைத்திருக்க என்னால் முடியுமா? நான் இங்குப் பொருந்திப் போகிறேனா?’ என்றெல்லாம் சிந்திக்கும் நிலைக்கு என்னை அது தள்ளியது.

ஆனாலும், பின் தங்காமல் முன்னே செல்ல வேண்டும் என்ற நோக்கோடு, 2015 முழுக்க நிற்காமல் ஓடினேன். 64 நிகழ்வுகளில் பேசியிருக்கிறேன், பெரும்பாலும் வாரக்கடைசிகளில் தான். என் மேசையின் மீது இருக்கும் விசிட்டிங் கார்டுகளின் அடுக்கு மூலம், ஏறத்தாழ 6000 நபர்களை நேரில் சந்தித்திருப்பதை அறிகிறேன். 6000 மெயில்களுக்கு பதிலளித்திருக்கிறேன். 10000 மெயில்களுக்கு பதிலளிக்காமல் இருந்திருக்கிறேன். நான் பதிலளிக்காத மெயில்களும், மறுமொழி அளிக்காத அழைப்புகளையும் நினைத்து கவலையும் கொள்கிறேன். கிட்டத்தட்ட, ஒரு ஜாம்பியை போல மாறிவிட்டேன். பலரின் தேவைகளுக்கு செவி சாய்த்து, வேறு பலரை வருத்தமும், கோபமும் கொள்ள வைத்திருக்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால், நான் எவ்வளவு அதிகம் கொடுத்தேனோ, அவ்வளவு அதிகம் பேர் அதிருப்திக் அடைந்திருக்கிறார்கள். முன்னரைப் போல, நான் வேகமாக பதிலளிக்கவில்லை என்றார்கள். விலகினார்கள், அது எனக்குள் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது.

பல வருடங்களுக்குப் பிறகு, நான் ஆதரவின்றி உனர்ந்தேன். சில குழு உறுப்பினர்களும், பல குடும்ப நபர்களும், அவர்களோடு நான் இல்லை என நினைத்தார்கள். என் மனமும், அந்த சமிக்ஞைகளை எல்லாம் சேகரித்துக் கொண்டே இருந்தது. அவர்களுக்கு போதுமானதாக இல்லை, அவ்வளவு தான்.

இறுதியாக ஒருநாள், ஒரு வெற்றிகரமான சந்திப்புக் கூட்டத்தை முடித்து, பெரிய ஒப்பந்தம் ஒன்றை செய்து முடித்த போது, வெறுமையாகவும், சக்தி மொத்தத்தையும் இழந்தது போலவும் உணர்ந்தேன்.

திடீரென என்னமோ தோன்ற, அழத் தொடங்கினேன். நிறைய நேரம் அழுதேன். என்ன நடக்கிறது? என் 2015 கதை இப்படியா எழுதப்பட வேண்டும்? என்னைச் சுற்றி இருப்பவைகளுக்கு பதிலளிக்கிறேனா... அல்லது என் கதையின் ஹீரோ நானே தானா? வருடம் முழுவதும் இருபத்து நான்கு மணி நேரமும் ஓடி உழைத்தது பெருமையா அல்லது அதை விடச் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியுமா?

வருடத்தின் முடிவில், நவம்பர் மாதத்தில், அதைப் போன்ற சூழல்கள், நபர்களிடம் இருந்து என்னை விலக்கிக் கொண்டு என்னில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். எனக்குள் வாழத் தொடங்கினேன், எனக்குள் இருக்கும் உரையாடலை கவனித்தேன். நான் தேடிக் கொண்டிருந்த பதில்களையும், சமாதானத்தையும் பெற்றது அங்கே தான்.

இந்த பிரதிபலிப்பு இடத்தில், பதினைந்து வருடங்களுக்கு முன், என் கல்லூரியில் நான் சந்தித்த ஓர் மனோதத்துவ நிபுணரை நினைவு கூர்ந்தேன். கல்லூரியிலும், இதைப் போன்ற ஒரு காலக் கட்டத்தை கடக்க நான் சிரமப்பட்டிருக்கிறேன். அப்போது மிக எளிமையான உண்மையைக் கொண்டு எனக்கு உதவியிருக்கிறார்.

இந்தியாவின் வடக்கு சமவெளிகளில் தான், உலகிலேயே வளமான, செழிப்பான நிலங்கள் இருக்கிறது. கனிமங்கள் அதிகளவில் இருப்பதால், அங்கிருக்கும் வண்டல் நிலமும், செழிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும், நிலம் குணமாக சில காலம் எதுவுமே பயிரிடாமல் விடப்படுகிறது. அதற்கான நேரத்தை வழங்காமல், உடனடியாக பயிரிடத் தொடங்கினால், நிலம் தரிசாக மாறும் அல்லது களைகளும், நச்சுச் செடிகளும் வளரும். இதே போலத் தான் மனிதர்களும். உங்களுக்குள் இருக்கும், மனமும், உணர்வும் சார்ந்த நிலத்தை பராமரிக்காவிட்டால், மகிழ்ச்சி குன்றி, வெறுமையை உணர்வீர்கள். இதையையே வெகு காலம் தொடர்ந்தால், நீங்களும் கசப்பானவராகவும், விஷமாகவும் கூட மாற வாய்ப்புண்டு. எனவே, நிதானமாக, உங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு, கொஞ்சம் சுயநலமாக செயல்பட்டு, உங்களை நேசியுங்கள், உங்களையே மெச்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே கவனம் செலுத்தாத போது, பிறருக்கு எப்படி கவனம் செலுத்துவீர்கள்? உங்களை நீங்களே அன்பாக பார்க்காத போது, பிறரை எப்படி நேசிப்பீர்கள்? உங்கள் குற்றம், குறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளாத போது, பிறரின் குறைகளை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?

நான் செய்ய மறந்தது, இதைத் தான். நான் வெறுமையை உணர்ந்ததும், என்னில் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கப் போனதற்கும் இது தான் காரணம். எனவே, இந்த டிசம்பர் முழுக்க, நான் என்னை முழுதாக ஏற்றுக் கொண்டு, எனக்கு செவி சாய்த்து, என்னை நேசித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு சுலபமாக இல்லை தான். ஆனால், அது சுலபமானதாகத் தானே இருந்திருக்க வேண்டும்?!

புத்தத் துறவி, திக் நட் ஹன் எழுதி, மோபி ஹோவால் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட ‘மனக்கவனத்தின் அற்புதங்கள்’ என்ற புத்தகத்தை படித்தப் பிறகு, சிறு குறிப்புகள் அடங்கிய தாள் ஒன்றை எப்போதும் என் கையில் வைத்திருக்கிறேன். பல நேரங்களில் ஃபோனை அணைத்து வைக்கிறேன். சில அழைப்புகளை ஏற்காவிட்டால், உலகம் இருண்டுப் போய் விடாது என்பதை உணர்ந்திருக்கிறேன். நிகழ்வுகளை தவற விடுவது பற்றிய பயம் என் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது. மேலும், தனியாக அமர்ந்து தேநீர் அருந்துவதில் இருக்கும் அற்புதத்தை கண்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம், நான் தினமும், என் செல்ல நாய்க்குட்டிகள் விளையாடித் திரிவதைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்துகிறேன். மன கவனத்திற்குள் மெல்ல எட்டு வைக்கிறேன்.

நான் தொழில்முனைவர்களுக்கு சொல்ல நினைப்பது இது தான்... நாம் அனைவரும் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டிருக்கிறோம், நான் உருவாக்க வேண்டிய தாக்கத்தைப் பற்றி சிந்திக்கிறோம், பிறருக்கு உதவுகிறோம், பெரிய பெரிய காரியங்களை செய்கிறோம்- இவற்றுக்கிடையில், நாம் நம்மை நேசிப்பதையும், நம்மை மெச்சிக் கொள்வதையும் மறந்து விடுகிறோம். நம்மை பராமரித்து, நம் இயங்கு பொருளை வளர்க்க மறந்து விடுகிறோம். எனவே, இந்த வருடம் வெற்றியை கைப்பற்றுதல் பற்றியெல்லம் சிந்திக்கும் போது, ‘நம்மை’ மறந்து, நாம் தரிசாக மாற உள்ள வாய்ப்புகளை மறக்க வேண்டாம். உங்களை நீங்கள் பராமரிக்காவிட்டால், வெகு எளிதாக தரிசு நிலம் போல மாறிவிடுவீர்கள். உங்களை செழிப்பாக, வளமாக வைத்திருப்பது, மிகப் பெரிய ஆற்றல். உங்கள் கதையில் நீங்கள் தான் ஹீரோ, எனவே, வேறு யாராவது வந்து மந்திரம் செய்து காப்பாற்றுவார்கள் என காத்திருக்காமல், 2016 ல் உங்களுடைய செழிப்பை நீங்களே உருவாக்குங்கள். உங்களை பராமரித்துக் கொள்ளுங்கள்...

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags