பதிப்புகளில்

இணையத்தில் படித்தால் மட்டும் போதுமா? கொஞ்சம் ஆய்வும் தேவை நண்பர்களே!

20th Feb 2016
Add to
Shares
42
Comments
Share This
Add to
Shares
42
Comments
Share

இணையம் தகவல் சுரங்கம் தான் சந்தேகமேயில்லை. எந்த தகவலும் இணையத்தில் எளிதாக கிடைத்துவிடுகிறது. ஆனால் அந்த தகவல்களை படித்தால் மட்டுமே போதாது. சில நேரங்களில் கொஞ்சம் ஆய்வும் செய்வது அவசியம். ஏன் என்று பார்ப்பதற்கு முன்னர் சுவாரஸ்யமான இணைய கதை ஒன்றை தெரிந்து கொள்வோம்.

அந்த கதையின் நாயகன் பெரிய தெரியாத ரஷ்ய புரோகிராமர் ஒருவர். அவரது பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு புரோகிராமிங் புலி. அதோடு கொஞ்சம் புத்திசாலி சோம்பேரியும் கூட.

image


அதாவது தனது வாழ்க்கையில் 90 விநாடிகளுக்கு மேல் தேவைப்படும் எந்த வேலையாக இருந்தாலும் சரி அவர் அந்த வேலையை தான் செய்யமட்டார். மாறாக அந்த வேலை தானாக செய்யப்படும் வகையில் அதற்காக என்று ஒரு நிரலை (புரோகிராம்) எழுதிவிடுவார்.

இப்படி அவர் எழுதிய சில புரோகிராம்களில் ஒன்று, அவர் அலுவலகத்தில் இருந்து வேலை முடித்து வீட்டுக்குச்செல்ல தாமதமாகும் என்றால், அவரது சார்பில் மனைவிக்கு செய்தி அனுப்பி வைப்பதற்கானதாகும். இரவு 9 மணிக்கு மேல் அவரது அலுவலக கம்ப்யூட்டர் சர்வர் இயக்கத்தில் இருந்தால் அந்த புரோகிராம் புரிந்து கொண்டு, ”இன்று வருவதற்கு நேரமாகும்” என்பது போன்ற செய்தியை அவரது மனைவிக்கு அனுப்பிவிடும். இதற்கான காரணங்களையும் அவர் முன்கூட்டியே உருவாக்கி பட்டியலிட்டிருந்தார்.

மற்றொரு புரோகிராம், தொல்லை பிடித்த வாடிக்கையாளர் ஒருவரின் இமெயில்களுக்கு பதில் அளிப்பதற்கானது. குறிப்பிட்ட பெயரிலான அந்த வாடிக்கையாளரிடம் இருந்து வரும் மெயில்களில், தொழில்நுட்ப கோளாறு தொடர்பான சொற்கள் இடம்பெற்றிருந்தால், ”ஒன்றும் கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும்” என்ற பதில் வாசகம் அனுப்பி வைக்கப்படும். அதற்கு முன்னதாக அவரது டேட்டாபேஸில் பேக்கப் சரி செய்யப்பட்டுவிடும். இந்த சிக்கலை புகாராக தெரிவித்து தான் அந்த மெயில் வந்திருக்கும் என்பதால் இப்படி பதில் அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். ஒரே விதமான பிரச்சனை ஏற்படும் போது அதை புரிந்து கொள்ள முடியாத முட்டாள் வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு முறையும் தானே பதில் அளிப்பதை தவிர்ப்பதற்காக அவர் இவ்வாறு செய்திருந்தார்.

அவர் உருவாக்கிய மூன்றாவது புரோகிராம், அலுவலக காபி மெஷினுக்கு கட்டளை பிறப்பித்து, அடுத்த 17 விநாடிகளில் காபி தயார் செய்து கோப்பையில் ஊற்றி வைப்பதற்கானது. 17 விநாடி என்பது அவரது இருக்கையில் இருந்து காபி மிஷினுக்கு செல்வதற்கான நேரம். ஆக தனக்கு காபி வேண்டும் எனும் போது அவர் போய் நின்றால் காபி தயாராக இருக்கும்.

இவை தவிர அலுவலகத்திற்கு செல்ல விருப்பம் இல்லாத நாட்களில், விடுப்பிற்காக ஏதாவது ஒரு காரணத்தை அனுப்பி வைப்பதற்காகவும் அவர் ஒரு புரோகிராமை உருவாக்கியிருந்தார்.

ஆக, மனிதர் தனது வாழ்க்கையின் அலுப்பூட்டக்கூடிய பகுதிகளை புரோகிராம்களிடம் ஒப்படைத்துவிட்டு உற்சாகமாக இருந்திருக்கிறார். இந்த ரகசியம் யாருக்குமே தெரியாமல் இருந்திருக்கிறது. அவர் வேலையை விட்டு வெளியேறிய பிறகு தான் இந்த விஷயங்கள் தெரிய வந்தது.

ரஷ்ய இணைய விவாத தளம் ஒன்றில் பகிரப்பட்ட இந்த கதையை நிஷாத் அபாசோ (Nihad Abbasov) என்பவர் சாப்ட்வேர் திட்டங்களை பகிர்ந்து கொள்வதற்கான இணைய மேடையான கித்ஹப் தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

உண்மை கதையின் அடிப்படையில் எனும் குறிப்பிடன் புரோகிராமர் கதையையும், அவர் உருவாக்கிய புரோகிராம் குறிப்புகளையும் வெளியிட்டிருந்தார்.

புரோகிராம் ஆற்றலை பயன்படுத்தி தனக்கான பணிகளை தானியங்கி மயமாக்கி இருந்த தன்மை இதை படித்தவர்களை எல்லாம் கவர்ந்தது. முன்னணி இணையதளங்களில் இது செய்தியாகவும் வெளிவந்து கவனத்தை ஈர்த்தது. ஒரு இணையதளம் அவருக்கு சோம்பேரி புரோகிராமர் என்றும் அடைமொழி கொடுத்து கொண்டாடியிருந்தது.

image


சுவாரஸ்யமான கதை தான் அல்லவா?

புரோகிராமிங் பற்றி அறியாதவர்களுக்கு இதெல்லாம் சாத்தியமா? என்று நம்பமுடியாத அளவுக்கு வியப்பாகக் கூட இருக்கலாம்.

இது போல, தினசரி வாழ்க்கை பணிகளை, அதிலும் குறிப்பாக தொடர் தன்மை உள்ளவற்றை நிறைவேற்ற புரோகிராம்கள் அல்லது பாட்களை உருவாக்குவது சாத்தியமே. இதற்கு பல உதாரணங்களை இணையத்தில் பார்க்கலாம். சமீபத்தில் அமெரிக்கர் ஒருவர் இணைய சேவை நிறுவனமான கேம்காஸ்ட்டின் மோசமான இணைய சேவையால் வெறுத்துப்போய், இணைய இணைப்பின் வேகம் குறிப்பிட்ட அளவுக்கு கீழே வரும் போதெல்லாம் அது பற்றி நிறுவனத்திற்கு டிவிட்டர் மூலம் புகார் செய்வதற்காக என்றே ஒரு டிவிட்டர் பாட்டை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், டிவிட்டரில் பருவநிலை மாற்றம் தொடர்பான தவறான கருத்துக்கள் வெளியாகும் போதெல்லாம் அதை பகிர்ந்தவருடன் வாதிடும் குறும்பதிவுகளை வெளியிடுவதற்காக என்றோ ஒரு டிவிட்டர் பாட்டை உருவாக்கியிருந்தார்.

எனவே இந்த கதையில் வருவது போல வாழ்க்கை பணிகளை தானியங்கிமயமாக்குவது சாத்தியமே. – இப்படி எந்த செயல்களை எல்லாம் தானியங்கி மயமாக்கலாம், அதனால் ஏற்படக்கூடிய சாதகங்கள் என்ன என்று பலவிதங்களில் யோசிக்கலாம்.

ஆனால் இந்த கதையில் ஒரே ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. அது இந்த கதையின் நம்பகத்தன்மை. அந்த புரோகிராமிங் நாயகன் யார் என்பதை அறிய முயன்று இணைய தேடலில் ஈடுபடும் போது இந்த சிக்கலை உணரலாம்.

இந்த தகவல் தொடர்பான ரெட்டிட் மற்றும் எஸ்கேபிஸ்ட் மேகசைன் தளத்தின் விவாத சரடுகளில், இந்த செய்தியே ஒரு பொய்க்கதை அல்லவா? எனும் கேள்வி கேட்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. நம்பகம் இல்லாத ரஷ்ய இணையதளம் ஒன்றில் வெளியான அடிப்படை இல்லாத தகவல் என்றும், இந்த கதையே புரோகிராமர் ஒருவர் கற்பனையில் உருவானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரு நிஜமான புரோகிராமரின் சாகசம் என்று பார்த்தால் இது கற்பனை விளையாட்டு தானா எனும் தகவல் ஏமாற்றத்தை அளிக்கலாம்.

இதை பகிர்ந்து கொண்டவரின் இணைய பக்கத்தில் இதற்கான விளக்கத்தை பார்க்க முடியவில்லை.

இந்த கதை உண்மையா? பொய்யா? எனும் விவாதம் இங்கு முக்கியமல்ல. இணையத்தில் நீங்கள் அடிக்கடி பொய்களில் தடுக்கிவிழ வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்த்தும் உதாரணமாக இது இருக்கிறது எனும் அளவிலேயே இதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதனால் தான் இணையத்தில் காணும் செய்திகளையும், தகவல்களையும் படித்தாம் மட்டும் போதுமா? என கேட்கத்தோன்றுகிறது. படித்த பின் கொஞ்சம் ஆய்வு செய்தால் நல்லது என எச்சரிக்கை தோன்றுகிறது.

நிற்க, எல்லா செய்திகளுக்கும் இத்தகைய ஆய்வு தேவையில்லை. ஒரு செய்தி கொஞ்சம் விநோதமாக தோன்றினால் அல்லது மிகவும் அரிதான தகவலை அளிப்பதாக தோன்றினால் அது சரிதானா என உறுதி செய்து கொள்வது அவசியம். அதிலும் அலுவல் நோக்கில் நீங்கள் பயன்படுத்த உள்ள தகவல் எனில் அதை பரிசோதித்துவிடுவது நல்லது.

சரி,ஒரு தகவலின் நம்பகத்தன்மையை அறிவது எப்படி?

இதற்கு சில அடிப்படையான வழிகள் இல்லாமல் இல்லை. முதலில் தகவலின் மூலம் எது என பாருங்கள். அது வெளியான தளம் நம்பகமானதா என அறிந்து கொள்ளுங்கள். அந்த தளம் புதிதாக இருப்பதோடு அதன் அறிமுக பக்கத்தில் (அபவுட் அஸ்) அதிக விவரங்கள் இல்லை எனில், உடனே அந்த செய்தி இணையத்தில் வேறு இடங்களில் இருக்கிறதா என பார்க்க வேண்டும். மற்ற தளங்களிலும் வெளியாகி இருந்தால் அவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

image


துறை சார்ந்த தகவல் எனில் அந்த துறைக்கு என உள்ள அதிகாரபூர்வ தளங்களில் தேடிப்பார்க்கலாம். உதாரணமாக புரோகிராமிங் பற்றிய செய்தி எனில் ஹேக்கர் நியூஸ் அல்லது ஸ்லேஷ்டாட் தளத்தில் அது தொடர்பான விவாதம் நடைபெற்றுள்ளதா என பார்க்கலாம். இல்லை கேள்வி பதில் தளமான குவோராவில் இது தொடர்பான கேள்வியை சமர்பிக்கலாம்.

இணையத்திலும், ஃபேஸ்புக்கிலும் பல தகவல்களும், வீடியோக்களும் மிக எளிதாக வைரலாக பரவும் நிலையில் இந்த விழிப்புணர்வு கொஞ்சம் அவசியம் தான்.

அதற்காக இணையத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. பொய்கள் உலாவும் இடமாக இருந்தாலும் அதை கண்டறிந்து தெளிவதற்காக அதைவிட அதிகமான சாத்தியக்கூறுகள் இணையத்தில் உள்ளன.

ரெட்டிட் தளத்தையே இதற்கு உதாரணமாக சொல்லலாம். இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணித்துக்கொள்ளும் ரெட்டிட் தளம் இணைய விவாதங்களுக்கான பரந்து விரிந்த மேடையாக இருக்கிறது. ரெட்டிட் தளத்தில் பல்லாயிரகணக்கான தலைப்புகளின் கீழ் விவாதங்கள் நிகழத்து கொண்டே இருக்கின்றன. இந்த விவாத சரடு சுவாரஸ்யமாக இருப்பதோடு, தகவல் பொக்கிஷமாகவும் இருப்பதை காணலாம்.

புரோகிராமர் கதை தொடர்பான விவாதத்தையே இதற்கான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த விவாத சரட்டில், இது பொய் கதை என்பது முன்னரே குறிப்பிடப்பட்டிருக்கிறதே என ஒருவர் கோபமாக கேட்டிருக்கிறார் என்றால், மேலும் பலர் இந்த கதையின் புரோகிராமிங் அம்சங்களை அலசி ஆராய்ந்து அர்த்தமுள்ள சந்தேகங்களை எழுப்புவதை பார்க்க முடிகிறது. ஒருவர் எந்த காபி மெஷினை டெல்நெட் வலைப்பின்னலுடன் இணைக்க முடியும் என தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகத்தை எழுப்புகிறார் என்றால் இன்னொருவர், புரோகிராமின் சில குறிப்புகளில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுகிறார். இன்னொருவரோ, இணையத்தில் வெப்கேமுடன் இணைக்கப்பட்ட முதல் சாதனம் காபி பானை என்பதை மறக்க வேண்டாம் என இணைய வரலாற்றை நினைவுபடுத்தியுள்ளார். ஆக இந்த விவாத சரட்டை ஒரு முறை மேலோட்டமாக படித்தால் கூட இந்த கதை தொடர்பான பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அது தான் ரெட்டிட்டின் பின்னே உள்ள இணைய சமூகத்தின் பலம்.

இன்னொரு புறத்தில் பலரும் அந்த புரோகிராமரின் சாகசத்தை பாராட்டியபடி வாழ்க்கையின் பணிகளை தானியங்கிமயமாக்குவது பற்றி விவாதித்திருப்பதும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஒரு சிலர், அதிக சம்பளத்திற்கு ஒப்பந்தம் பெற்று அந்த பணிகளை குறைந்த கட்டணத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யும் புரோகிராமர்கள் இருப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக, ரெட்டிட் தளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள். இதன் இந்திய மற்றும் தமிழ் வடிவங்களும் கூட இருக்கின்றன. அதில் நீங்கள் எதிர்கொண்ட விவாத சரடுகள் பற்றிய உங்கள் அனுபவம் எப்படி?

தொடர்புடைய இணைப்பு 1; https://github.com/NARKOZ/hacker-scripts

ரெட்டிட் சரடு: https://www.reddit.com/r/programming/comments/3tuqgt/based_on_a_true_story_hackerscripts/

தகவல் திங்கள் தொடரும்... 

கட்டுரையாளர்- சைபர்சிம்மன் (பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர், இணையம் தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர்)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

சென்ற வார 'தகவல் திங்கள்' கட்டுரை:

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதுமையான நினைவூட்டல் சேவை!

Add to
Shares
42
Comments
Share This
Add to
Shares
42
Comments
Share
Report an issue
Authors

Related Tags