3 ஆண்டுகளில் 50,000 'பெண் ஓட்டுனர் தொழில்முனைவர்'களை உருவாக்கும்: 'ஓலா'வின் ஒப்பற்ற இலக்கு

gangotree nathan
1st Sep 2015
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
ரேணுகா - 'ஓலா'வின் பெண் ஓட்டுனர் தொழில்முனைவர்

ரேணுகா - 'ஓலா'வின் பெண் ஓட்டுனர் தொழில்முனைவர்


கடந்த சில ஆண்டுகளாகவே பெண் ஓட்டுனர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் பெண் பயணிகள் தங்களது தனிமைப் பயணத்தின்போது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள விரும்புகின்றனர் என்பதே. அந்த வகையில், தங்களது பெண் பயணிகளின் சவுகரியத்துக்காக பெண் ஓட்டுனர்களை அளிக்கும் சேவையை பல கால் டாக்ஸி நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆனால், ஓலா கால் டாக்ஸி அதை வித்தியாசமாக செய்கிறது. பெண் ஓட்டுனர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சுய முன்னேற்றத்துக்கும் வழிவகை செய்கிறது. ஆம் அவர்கள் சிறு தொழில்முனைவராக உருவெடுப்பதற்கு ஓலா உதவுகிறது.

இது குறித்து ஓலா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தொடர்பு துறை இயக்குநர் ஆனந்த் சுப்பிரமணியன் கூறும்போது, "பெண்களை ஓட்டுனர்களாக்கி அவர்களின் நிலையை உயர்த்தும் வகையில் ஓர் சமூகத்தை உருவாக்கி அவர்களை தொழில்முனைவராக மாற்றுவதே எங்கள் லட்சியம்" என்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஓலா நிறுவனம் "ஓலா பிங்க்" (Ola Pink) என்ற புதிய திட்டத்தை உருவாக்கியது. இதில் பெண் ஓட்டுனர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக "எம்பவர் பிரகதி" (Empower Pragati) என்ற முதலீட்டு நிறுவனத்துடனும் ஆட்டோமேடிவ் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் கவுன்சில் என்ற பயிற்சி நிறுவனத்துடனும் ஓலா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.


பயிற்சியும் திறன் மேம்பாடும்

"பிங்க் கேப்ஸ்" (Pink Cabs) திட்டத்தின் மூலமாக பெண் ஓட்டுனர் தொழிலையும் மற்ற தொழிலைப் போல் விரும்பித் தேர்வு செய்ய வேண்டும் என்பதே ஓலா நிறுவனத்தின் இலக்கு. குறிப்பாக சமூகத்தில் பொருளாதார அளவில் பின் தங்கியிருக்கும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு. அவ்வாறு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு ஓலா நிறுவனம் பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. பயணிகளுடன் எப்படி உரையாட வேண்டும், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் பயிற்சி, ஓட்டுனருக்கு தேவையான பணி நுணுக்கங்கள், அடிப்படை கார் தொழில்நுட்பம், வரைபடங்களை தெரிந்துகொள்ளுதல் போன்றவை அளிக்கப்படுகின்றன. ஓட்டுனர்களை தேர்வு செய்யும் முன்னர் அவர்களிடன் தகுதியான ஓட்டுனர் உரிமமும், வர்த்தக ரீதியாக ஓட்டுனராக பணியாற்றுவதற்கான அடையாளச் சான்றும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்கிறோம்" என்கிறார் ஆனந்த்.

மேலும் அவர் கூறும்போது "ஓலா நிறுவனம், பெண் ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தொடர்சியாக நிலையான வருமானமும் கிடைக்க வழிவகை செய்கிறது" எனத் தெரிவித்தார். முறையான பயிற்சியில்லாமல் வரும் ஓட்டுனர்களுக்கு முதலில் முழுமையான பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண் ஓட்டுனர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதுபோல் பெண் ஓட்டுனர்களிடமும் கெஒய்சி (KYC) என்றழைக்கப்படும் அவர்களது பணி வரலாறு மற்றும் சுய விவரங்களை தெரிவிக்கும் சான்றிதழை பெற்றுக்கொள்கிறோம்.

"இது வெளிப்படைத்தன்மை, மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவே. இதன் மூலம் கிரிமினல் பின்னணி உடையவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. ஓலா அப்ளிகேஷனில் பதிவு செய்துள்ள அனைத்து ஓட்டுனர்களின் தகவலும் ஓலா ஆப்பிலும் பதிவேற்றப்படுகிறது. இதற்காக ஓலா, ஆத் பிரிட்ஜ் (AuthBridge) என்ற நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளது. இந்நிறுவனம் இதுபோன்ற தனிநபர் பின்புலனை சேகரிப்பதில் இந்தியாவிலேயே தலை சிறந்த நிறுவனமாகும். இந்நிறுவனம் ஐ.எஸ்.ஓ, ஐ.எஸ்.ஓ- ஐ.எஸ்.எம்.எஸ். போன்ற தரச் சான்றிதழ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது."

வெற்றிக்கு வித்திடுதல்

ஓலாவின் சேவை இத்துடன் நின்றுவிடவில்லை. ஓலாவுடன் இணைத்துக்கொண்ட பெண் ஓட்டுனர்கள், வங்கியில் கடன் பெறவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மாதத் தவணைபோல் அல்லாமல் அன்றாடம் தவணை கட்டும் வகையில் இந்த கடன் முறை இருக்கிறது. எஸ்.பி.ஐ.., ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பினான்ஸ் கம்பெனி போன்ற நிறுவனங்களில் இத்தகைய வசதி இருக்கிறது. ஓட்டுனர்கள் சொந்தமாக கார் வாங்கிக் கொள்ள ஏதுவாக ஓலா, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஓலாவில் இணைந்து பயனடைந்த பெண்மணி ரேணுகா தேவி கூறும்போது:

"நான் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஓலா எனக்கு அதற்கான உதவியை செய்தது" என்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகாவிடம் ஒரு கார் மட்டுமே இருந்தது. இன்று அவரிடம் 7 கார்கள் இருக்கின்றன. இப்போது ரேணுகாவின் குடும்பத்துக்கான முக்கிய வருமானமாக இது உள்ளது. ஓலாவுடன் இணைத்து கொண்டதில், தான் பெரு மகிழ்ச்சியடைவதாக கூறும் ரேணுகா, "தொழில்நுட்ப ரீதியாக ஓலாவின் மேம்படுத்தப்பட்ட சேவைகள் பயணி, ஓட்டுனர் என இருவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்கிறது" என பெருமிதம் கொள்கிறார்.

ஓலாவின் செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் (SOS) சிறப்பம்சத்தை பற்றிக் கூறிய ஆனந்த, "இந்த சிறப்பம்சம் மூலம் பயணியின் உறவினர் அல்லது நண்பருக்கு அவர் எங்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறார் என்பதை அவ்வப்போது குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஓலாவில் 24/7 கால் சென்டர் சேவை வசதி இருக்கிறது. ஜிபிஎஸ் கருவிகள் மூலம் ஓலாவுடன் இணைத்துள்ள கால் டாக்ஸிகள் எங்கெல்லாம் செல்கிறது என்ற முழுமையான தகவல் சேகரித்து வைத்துக்கொள்ளப்படுகிறது. இதேபோல் பயணிகளின் மேலான கருத்துகளும் கேட்டு பதிவு செய்யப்படுகிறது" என்றார்.

எங்களிடம் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுனருக்கு அளிக்கப்பட்டுள்ள புக்கிங் ஏற்புடையதாக இல்லை என்று கருதினால் அதை அவர் நிராகரிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், 24/7 முறையில் இயங்கும் ஓட்டுனர் உதவி மையத்தை அவர்கள் தொடர்பு கொண்டு உதவி பெற முடியும்.

ஷீபா என்ற மற்றொரு பெண் ஓட்டுனர் சொல்கிறார்...

"நான் ஓலாவில் இணைந்து 2 மாதங்கள் ஆகின்றன. என் பணி எனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கிறது. இந்நிறுவனம் என்னை நல்ல முறையில் மரியாதையுடன் நடத்துகிறது. எனக்கு எப்போது தேவையோ அப்போது நான் பணியை ஏற்றுக் கொள்கிறேன். இதன் மூலம் என் வேலையையும், குடும்ப வேலையையும் என்னால் சமன் படுத்திக் கொள்ளமுடிகிறது."

அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 பெண் ஓட்டுனர்களையாவது உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. மேலும், அவர்களில் 70% பேராவது ஓலா மூலம் சொந்த கார் வாங்கி தொழில்முனைவராக வேண்டும். டாடா, நிஸான், ஃபோர்டு, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் எங்கள் மூலம் ஓலா ஓட்டுனர்களுக்கு கார்களை விற்பனை செய்து வருகின்றன. கார் உற்பத்தியாளர்கள் மற்றும் வங்கிகளுடன் ஒரு பிணைப்பை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். இவ்வகையில் ஏற்கெனவே 15,000 ஓட்டுனர்கள் பயன் பெற்றுள்ளனர்.

அதிகப்படியான பெண்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும் பல்வேறு தொடர்புகளை ஓலா ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள ஆல் இந்தியா உமன்ஸ் எஜுகேஷன் பண்ட் அசோஷியேஷன் (AIWEFA), சென்னையில் உள்ள அசோஷியேசன் பார் டிரெடிஷனல் எம்பிளாய்மெண்ட் ஃபார் உமன் (ANEW), பெங்களூருவில் உள்ள ஏஞ்ஜல் சிட்டி கேப் சர்வீஸ் ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் ஓலா நிறுவனம், பெண் ஓட்டுனர்களுக்கு நிலையான, நீடித்த வருமானத்தை நல்கும் ஒரு வேலை வாய்ப்பை எப்போதும் உருவாக்கித் தந்து கொண்டிருக்கும் என முடித்து கொள்கிறார் ஆனந்த்.

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags