பதிப்புகளில்

’எளிமையான மனிதனாக இருந்தும் நீங்கள் வணிகத்தில் வெற்றி அடைய முடியும்’- FreshWorks என நிறுவன பெயரை மாற்றிய கிரீஷ் மாத்ருபூதம்

FreshDesk நிறுவனம் அதன் ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகளையும் செயல்படுத்த FreshWorks என்கிற குடையின்கீழ் இயங்க உள்ளது ! 

10th Jun 2017
Add to
Shares
352
Comments
Share This
Add to
Shares
352
Comments
Share

ஃப்ரெஷ்டெஸ்க் (FreshDesk) என்கிற SaaS நிறுவனம், ’ஃப்ரெஷ்வொர்க்ஸ்’ (FreshWorks) என புதிதாக பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நிறுவனத்தின் வளர்ந்துவரும் வணிக சாஃப்ட்வேர் தொகுப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சியாகும்.

சென்னையிலுள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனரான கிரீஷ் மாத்ருபூதம் கூறுகையில்,

”பல்வேறு ப்ராடக்ட்களை வழங்கும் நிறுவனமாக செயல்பட விரும்புகிறோம். 2010-ம் ஆண்டு நிறுவனத்தைத் துவங்கியதிலிருந்து எங்களது முதல் ப்ராடக்டைச் சார்ந்த பெயரையே நிறுவனத்திற்கு வைத்தோம். ஏனெனில் நிறைய தயாரிப்புகளை இணைக்கும் வரை வேறு பெயர் அவசியமில்லை என நினைத்தோம். ஏழு வருடங்களுக்குப் பிறகு இன்று வேறுபடுத்துவதற்கான வலுவான தேவை இருப்பதாக நம்புகிறோம்,” என்றார்.

இந்த முயற்சியில் ஃப்ரெஷ்வொர்க்ஸ் முதலீட்டாளரான ஜி கேப்பிடலின் மார்க்கெட்டிங் குழு மற்றும் பிற வடிவமைப்பு மற்றும் மார்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்து குழுவிற்கு உதவி கிடைத்தது.

கிரிஷ் மாத்ருபூதம் இணை நிறுவனர் ஷான் கிருஷ்ணசாமி உடன்

கிரிஷ் மாத்ருபூதம் இணை நிறுவனர் ஷான் கிருஷ்ணசாமி உடன்


ஃப்ரெஷ்வொர்க்ஸ் தயாரிப்புகள்

இது வரை ஃப்ரெஷ்வொர்க்ஸ் ஐடி சேவை மேலாண்மை (ITSM), வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை (CRM) மற்றும் க்ளௌட் சார்ந்த கால் செண்டர்கள் ஆகியவற்றிற்கான புதிய ப்ராடக்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ராடக்ட்கள் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடனும் ஊழியர்களுடனும் சிறப்பாக தொடர்பில் இருக்க உதவுகிறது. சமீபத்திய தயாரிப்புகளும் இதைச் சார்ந்ததாகவே இருக்கும்.

ஃப்ரெஷ்வொர்க்ஸின் தற்போதைய ப்ராடக்ட் தொகுப்புகள்:

ஃப்ரெஷ்டெஸ்க் : நிறுவனங்கள் இமெயில், தொலைபேசி, வலைதளங்கள், ஃபோரம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அதன் வாடிக்கையாளர்களுக்கு உதவ இந்த மல்டிசேனல் வாடிக்கையாளர் சப்போர்ட் ஹெல்ப்டெஸ்க் உதவுகிறது.

ஃப்ரெஷ்சர்வீஸ் : க்ளௌட் சார்ந்த சர்வீஸ் டெஸ்க் மற்றும் குழுவிற்கான ஐடி சப்போர்ட் தேவைகளுக்கான ITSM தீர்வை எளிதாகவும் வலுவான இண்டெர்ஃபேஸ் வாயிலாகவும் வழங்குகிறது.

ஃப்ரெஷ்சேல்ஸ் : ஹை வெலாசிட்டி லீட்களை கையாளும் சேல்ஸ் குழுக்களுக்கான CRM தீர்வுகளிக்கிறது.

ஃப்ரெஷ்காலர் : க்ளௌடில் முழுவீச்சில் இயங்கும் கால் செண்டர் 


ஏழு வருட பயணம்

Zendesk, Salesforce போன்ற உலகளவிலான நிறுவனங்களுடனும் சில ப்ராடக்டுகளில் Zoho-வுடனும் போட்டியிடுகிறது இந்நிறுவனம். சென்னையைச் சார்ந்த இந்நிறுவனத்தின் அலுவலகம் அமெரிக்கா, லண்டன், சிட்னி மற்றும் பெர்லினில் உள்ளது. கடந்த வருடம் செகோயா கேப்பிடல் மற்றும் Accel நிறுவனங்களிடமிருந்து 55 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது.

கடந்த ஏழு வருடங்களில் வாடிக்கையாளர் சேவையளிப்பதுடன் CRM மற்றும் ITSM பகுதிகளில் மற்ற ப்ராடக்டுகளையும் வழங்கியுள்ளது. ஸ்விக்கி, சிஸ்கோ, ஜாகுவர், லேண்ட் ரோவெர், 3எம், லென்ஸ்கார்ட் போன்றோர் அதன் 80,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களில் சிலர்.

145 நாடுகளில் 1,00,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இவர்களது சேவையை பெற்றுள்ளனர். எளிதாக பயன்படுத்தக்கூடியதாகவும், சிறந்த அம்சங்களைக் கொண்டதாகவும், பல்வேறு அளவுகளில் செயல்படும் வணிகங்களும் அணுகும் விதத்திலும் இருக்கக்கூடிய வணிக மென்பொருளை வழங்குகிறது. அதன் மூலம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடனும் ஊழியர்களுடனும் தொடர்பில் இருக்க உதவுவதே ஃப்ரெஷ்வொர்க்ஸின் நோக்கமாகும்.

ரஜினிகாந்தின் படங்களும் ஸ்டார்ட் அப் விருது சான்றிதழ்களும் நிரம்பியுள்ள அவரது அலுவலக கேபினுக்குள் யுவர் ஸ்டோரியுடனான உரையாடலில் கிரீஷ் கூறுகையில்,

”2010-ல் ஃப்ரெஷ்டெஸ்க் துவங்கியபோது இப்படிப்பட்ட வளர்ச்சியை நாங்கள் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இன்று மிகப்பெரிய நோக்கம் குறித்து பேசுகிறோம். ஆனால் இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த அறையின் அளவு மட்டுமே இருக்கும் இடத்திலிருந்துதான் நான் துவங்கினேன்.” 
”என்னுடைய நிறுவனத்தில் சேர்ந்துகொள்ள ஒவ்வொருவரையும் சம்மதிக்கவைக்க கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது. ஊழியர்களை பணியிலமர்த்துவது எளிதான விஷயமாக இல்லை. பங்குதாரராக இருக்கும் யோசனையைக்கூட தெரிவித்தேன். ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.”

வளர்ச்சியை நோக்கி…

எந்த ஒரு ஸ்டார்ட் அப்பின் பயணமும் எளிதாக இருக்காது. மன அழுத்தம் கொள்வது நிச்சயம் உதவாது. ஒரு வேளை நீங்கள் வீழ்ந்துவிட்டால் உடனே எழுந்து மறுபடி துவங்கவேண்டும். அப்படியே நின்றுவிட்டால் பிரச்சனை உருவாகும் என்கிறார் கிரீஷ்.

image


கடந்த வருடங்களில்  ஃப்ரெஷ்டெஸ்க் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் உட்பட சில நிறுவனங்களைக் கைப்பற்றியது:

1. ஏப்ரல் 2016-ல், Airwoot, சமூக ஊடகங்களில் வாடிக்கையாளர் சேவை தீர்வளிக்கும் தளம்

2. பிப்ரவரி 2016-ல், Framebench, ஆன்லைன் கொலாப்ரேஷன் தளம்

3. டிசம்பர் 2015-ல், Konotor, சென்னையைச் சார்ந்த மெசேஜிங் செயலி

4. அக்டோபர் 2015-ல், Frilp, ஒரு கடையையோ அல்லது சேவையையோ தங்களது நண்பர்கள் அல்லது பிறர் மூலமாக கண்டறிய உதவும் ஆன்லைன் தளம்

5. ஆகஸ்ட் 2015-ல், 1CLICK, ஸ்க்ரீன் பகிர்ந்துகொள்ளுதல் அல்லது உரையாடல்களைப் பதிவுசெய்தல் ஆகிய அம்சங்களைக் கொண்ட வீடியோ, வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் சாட் தளம்

6. அக்டோபர் 2016-ல், Chatimity, ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் (AI) மற்றும் chatbot தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்கும் சமூக சாட் தளம்

அப்படியானால் ஃப்ரெஷ்வொர்க்ஸ் மேலும் பல நிறுவனங்களை இணைத்துக் கொள்ள திட்டமிடுகிறதா? 

பல நிறுவனங்களைக் கைப்பற்றியதால் மேலும் பல தயாரிப்புகளை இணைத்துக் கொள்ளவும் நிறுவனங்களின் ப்ராடக்ட் தொகுப்பை உருவாக்கவும் உதவியது. நிறுவனங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யவில்லை என்றும் ப்ராடக்ட் சரியாக பொருந்துதல் மற்றும் கலாச்சாரப் பொருத்தம் ஆகிய காரணிகளின் அடிப்படையிலேயே கைப்பற்றினோம் என்றார் கிரீஷ்.

”எங்களுடைய நோக்கத்தைப் போன்ற அதே நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்களாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். மேலும் நாங்கள் உருவாக்குவதற்கு அல்லது உருவாக்க விரும்புவதற்கு பொருத்தமான ப்ராடக்டாக இருக்கவேண்டும்.” என்றார் கிரீஷ்.

எவ்வளவு விரைவாக செயல்படுகிறீர்கள்?

Freshdesk B2B மென்பொருள் நிறுவனம் என்பதால் கிரீஷ் தள்ளுபடி மாதிரியை விரும்பவில்லை. ”எங்களது முதல் வாடிக்கையாளர் எங்களது வலைதளத்தை கண்டறிந்து சோதனை முடிந்ததும் 38 டாலர் செலுத்தினார். எந்தவித கடினமாக விற்பனை முறையையும் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. அந்த முதல் வாடிக்கையாளர் Perth-ஐ சேர்ந்த ஆஸ்திரேலிய கல்லூரி. அவர்கள் இன்றும் எங்களுடன் இணைந்துள்ளனர்.” என்றார் கிரீஷ்.

இன்றைய வணிகங்கள் குறைந்த பட்ஜெட்டில் விரைவான மற்றும் எளிதான தீர்வையே விரும்புகின்றனர். பல வணிகங்கள் இதுவரை பயன்படுத்திய தீர்வுகள் விலையுயர்ந்ததாக மட்டுமல்லாமல் அத்தியாவசியமானதாகவும் இருந்தது. இவற்றை செயல்படுத்துவதற்கு அதிக நேரமாகும். மேலும் பயிற்சிபெற்ற நிபுணர்களின்றி பயன்படுத்துவது கடினமாக இருக்கும். இவை இரண்டுமே வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.

பல நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் நேரத்தையும் வளத்தையும் வீணாக்கி ஓய்ந்துவிட்டன. இந்த இடைவெளியை இணைக்கும் வகையில் உடனடி பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் எளிதாக பயன்படுத்தும் விதத்திலும் வெவ்வேறு அளவில் செயல்படும் நிறுவனங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும் ப்ராடக்டுகளை வழங்குவதாக தெரிவித்தார் கிரீஷ்.

உங்களது நிறுவனத்தின் வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் நுண்ணறிவுகளை சேல்ஸ் மற்றும் சப்போர்ட் குழுக்களுடன் பகிர்ந்துகொள்ளவோ அல்லது புதிய ஊழியர்களை இணைக்கவோ விரும்பினால் ஃப்ரெஷ்டெஸ்க் இண்டெக்ரேடட் சாஃப்ட்வேர் ப்ராடக்டுகள் அனைத்து குழுவும் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதிசெய்யும்.

”பல்வேறு அம்சங்களைக்கொண்டு செயல்படுவதுடன் ஃப்ரெஷ்வொர்க்ஸ் அனைத்து ப்ராடக்டுகளும் இமெயில் மற்றும் தொலைபேசி வாயிலான இலவச சப்போர்டுடன் வழங்கப்படுகிறது. விலையுயர்ந்த தீர்வுகளுக்கு மாறாக இப்படிப்பட்ட அம்சங்களே வணிகங்களை கவர்கிறது.” என்றார் கிரீஷ்.

2016-ல் வாடிக்கையாளர் அனுபவம் மோசமாக இருந்ததால் ஒரு நிறுவனத்துடனான வணிக நடவடிக்கைகளையே 82 சதவீத வாடிக்கையாளர்கள் நிறுத்திக்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிப்பதாக ஃப்ரெஷ்வொர்க் பகிர்ந்துகொண்டது. அதே சமயம் தடையற்ற அனுபவத்தை வழங்குதல் என்பது விற்பனை முதல் சப்போர்ட் வரை ஒரு முழுமையான சேவையளிக்கப்படுவதாகும். கிரீஷ் கூறுகையில்,

”இண்டர்னல் குழுக்கள் சிறப்பாக இணைந்தாலும் நிறுவனத்திற்குள்ளிருக்கும் மற்ற ஊழியர்களிடமோ துறையிடமோ தகவல்களை தெரிவிக்க மறுக்கும் மனநிலை கொண்டவர்களை ஒன்றிணைப்பது கடினமாக இருக்கும். இந்த பிரச்சனைக்கான தீர்வை நோக்கிதான் ஃப்ரெஷ்வொர்க்ஸ் செயல்படுகிறது.”

நிலையான நிறுவனத்தை மக்கள்தான் உருவாக்குகின்றனர்

இன்றும் நிறுவனத்திற்குள் கலாச்சாரத்தை மேம்படுத்துவதுதான் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்கிறார் கிரீஷ். அவர் கூறுகையில்,

”மக்கள் எப்படிப்பட்டவர்களோ அப்படியேதான் இருப்பார்கள். வெற்றி யாரையும் மாற்றிவிடாது. நாம் எப்படிப்பட்டவரோ அதை சற்று அதிகப்படுத்தும். மக்களிடம் இனிமையாக பழகுவது எனக்குப் பிடிக்கும். இவ்வாறு ஒரு விரும்பத்தக்க எளிமையான மனிதனாக இருந்தே நீங்கள் வணிகத்தில் வெற்றியடையமுடியும்.”

பங்குதாரர்களால் விரும்பப்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்குவது எளிது. மிகப்பெரிய நிறுவனங்களில் நீங்கள் ஒரு பங்குதாரராக இருந்தால் வருவாயும் மதிப்பும் அதிகரிக்கையில் அதை விரும்புவீர்கள். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியாக பணிபுரிகிறார்களா?

இது குறித்து கிரீஷ் விவரிக்கையில், “என்னுடைய பணி வாழ்க்கை எப்போதும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் நண்பர்களும் குடும்பத்தினரும் தங்களது பணி குறித்த அதிருப்தியை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். வேலை பிடிக்கவில்லையெனில் ஏன் அதை விட்டுவிட்டு வெளியேறுவதில்லை? ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய இயலாத நிலையில் இருப்பார்கள். இது என் ஆழ் மனதில் பதிந்துவிட்டது. எனவே நான் உருவாக்கும் நிறுவனத்தில் மக்கள் தங்களது சுய விருப்பத்தினால் நிறுவனத்துடன் இணைந்திருக்கவேண்டும். செய்யும் பணியை விரும்பிச் செய்பவர்களும் இங்கே பணிபுரியவேண்டும் என்று விரும்புவர்களுமே என்னுடன் இணைந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதுதான் எனக்கு உற்சாகமளிக்கிறது.”

மேலும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் என அனைவராலும் விரும்பப்படும் ஒரு நிறுவனத்தை குழு உருவாக்க நினைக்கிறது என்றார் கிரீஷ். தங்களது முக்கிய வலிமையில் கவனம் செலுத்தி பணிபுரிவோர் மட்டுமே ஃப்ரெஷ்வொர்க்ஸில் பணியிலமர்த்தப்படுகிறார்கள்.

”நீங்கள் சச்சின் டெண்டுல்கராக இருந்தால் நீங்கள் சிறப்பாக பேட்டிங் செய்வீர்கள். உங்களுக்கு பந்துவீச்சாளர் பொறுப்பளித்துவிட்டு ஏன் சிறப்பாக செயல்படவில்லை என்று உங்களைக் கேட்டால் அது என்னுடைய தவறு. இயற்கையிலேயே திறமை இருக்கும் ஒரு விஷயத்தில் ஒருவர் ஈடுபடும்போது அவர்கள் மகிழ்ச்சியாக செயல்படுவார்கள். அப்போதுதான் வேலையிலும் விளையாட்டைப் போல ரசித்து ஈடுபடமுடியும்.”

”இந்தியாவில் துரதிர்ஷ்ட்டவசமான உண்மை என்னவென்றால் அனைவரும் பொறியியல் முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியாளர்கள் பலர் மார்கெட்டிங்கில் பணிபுரிகின்றனர். வருவாய் அல்லது மதிப்பை மட்டுமே உயர்த்தினால் போதாது. ஒன்றிரண்டு வருடங்கள் செயல்படக்கூடிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவது எளிது. ஆனால் காலம் கடந்து நிலைத்திருக்கக்கூடிய ஒன்றை உருவாக்கவே நான் விரும்புகிறேன். வென்சர் கேப்பிடல் நிதியுடன் செயல்படும் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடைவதும் நிலையான நிறுவனமாக அதை உருவாக்கும் நோக்கமும் அதிக கடினம் நிறைந்ததாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து கஷ்யப்

Add to
Shares
352
Comments
Share This
Add to
Shares
352
Comments
Share
Report an issue
Authors

Related Tags