பதிப்புகளில்

திண்டுக்கல் தொடங்கி கூகுள், சென்னை வரை: தமிழரின் 'ஆங்கில'ப் பயணம்!

கீட்சவன்
25th Sep 2015
Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share

'ரெபிடக்ஸ் ஆங்கிலப் பேச்சு பயிற்சி நினைவிருக்கிறதா? 80'களின் தொடக்கத்தில் எல்லாருடைய வீடுகளையும் ஆக்கிரமித்த புத்தகம் இது. நாங்களும் ஒன்றை வைத்திருந்தோம். மூன்று பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி பள்ளியில் படிக்கிறார்கள். கணவரோ இந்த விஷயத்தைக் கண்டுகொள்வதில்லை. இந்தச் சூழலில்தான் நிலைமையை சரிசெய்ய, அம்மா ரெபிடிகஸிடம் அடைக்கலம் ஆக வேண்டியதானது.

பயிற்சி அளிக்கும் சந்தோஷ்

பயிற்சி அளிக்கும் சந்தோஷ்


தமிழ், இந்தி, பெங்காளி, குஜராத்தி என பல மாநில மொழிகளில் பல பதிப்புகளைக் கொண்ட இந்தப் புத்தகம், 30 நாட்களில் ஆங்கிலத்தில் புலமை பெற்றிட மக்களை வழிகாட்டியது. தங்களைச் சுற்றி இருப்பவர்களின் கண்களில் படாதவாறு பலரும் தங்களது படுக்கையறையில் ஒளித்து வைத்திருந்தார்கள். கிரிக்கெட் வீரர் கபில் தேவ் விளம்பரத்தில் வந்த பிறகுதான் ரெபிடெக்ஸை மக்கள் பெருமிதத்துடன் வெளிப்படையாக பயன்படுத்தத் தொடங்கினர்.

ஆங்கில மொழி மீதான தாகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதம் பேருக்கு, அதாவது 12.5 கோடி பேருக்கு ஆங்கிலம் பேசத் தெரியும் என்கிறது ஓர் உறுதிசெய்யப்படாத ஆய்வு. எனவே, ரெபிடக்ஸின் பதிப்பாளரான புஸ்தக் மஹால் இன்றும்கூட இந்தப் புத்தகம் மூலம் வசூல் வேட்டை நடத்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உண்மையில், வேலைவாய்ப்புகளுக்கு தங்கள் கல்வியை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாததற்கு ஆங்கிலம் பேசும் திறனின்மையே முக்கியக் காரணமாக இருக்கிறது. என்னைக் கேட்டால், பட்டப்படிப்பைக் காட்டிலுமே இந்தத் திறன்தான் மிகவும் முக்கியம் என்பேன். நானும் ஒரு சிறிய டவுனில் இருந்து வந்தவன்தான். அப்படி கிராமங்கள், சிறு நகரங்களில் இருந்து வரும் பலரும் தங்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டுள்ளனர்' என்கிறார் "மேரா இங்கிலீஷ்.காம்" (MeraEnglish.com) நிறுவனரும் இயக்குநருமான சந்தோஷ் கர்ணானந்தா.

சந்தோஷ் கர்ணானந்தா

சந்தோஷ் கர்ணானந்தா


வளர்ந்த கதையும் திறன்களை வளர்த்த விதமும்

தமிழ்நாட்டின், மதுரை அருகே உள்ள சிறு நகரமான திண்டுக்கல்லில் வளர்ந்த சந்தோஷ், 'தி இந்து' செய்தித்தாள் வாங்குவதற்காக தினமும் நான்கு கிலோமீட்டர் தூரம் நடப்பார். ஆங்கில நாளிதழ் வாசிப்பது வெட்டி வேலை என்று சொல்லும் பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், தனது பாக்கெட் மணியில் பேப்பர் வாங்குவார். "நான்தான் என் குடும்பத்திலே ஆங்கிலம் பேசும் முதல் தலைமுறை. நான் திண்டுக்கல்லில் இருந்த காலக்கட்டத்தில், பாடப்புத்தகத்தைத் தாண்டி ஆங்கிலம் வாசிக்கும் திறன் கொண்டவர்களைப் பார்ப்பதே அரிது" என்கிறார் சந்தோஷ்.

செய்தித்தாள்கள் மூலம் அடிப்படை ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொண்ட இவர், இப்போது தனது 27 வயதில் மேராஇங்கிலீஷ் வலைதளம் மூலம் ஒரு தொழில்முறை பயிற்சியாளராகவும், தொழில்முனைவராகவும் உருவெடுத்துள்ளார். இந்த வலைதளம் உங்களுக்கு ஆங்கிலத்தைக் 'கற்று' தராது; ஆனால், வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை முழுமையாகவும் சரியாகவும் சொல்லித் தரும். உதாரணமாக, 'denounce', 'renounce' ஆகிய சொற்களை எப்படிச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தத் தளம் சொல்லித் தருகிறது தெரியுமா? 'இந்தியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கண்மூடித்தனமானப் போக்கை நீங்கள் கண்டிக்க (denounce) வேண்டும் அல்லது அம்மொழியைக் கற்கும் ஆசையை நீங்கள் கைவிட (renounce) வேண்டும் என்று எளிதில் புரியவைக்கிறது மேராஇங்கிலீஷ்.

தமிழ்நாட்டில் துவக்கத்தில், 44 மையங்கள் மூலமாக 40,000 பேருக்கு சந்தோஷ் பயிற்சி அளித்துள்ளார். மேரா இங்கிலீஷ் (இலவச வலைதளம்), மை ஜிஆர்ஈ (MyGRE) மற்றும் மை ஜிமாட் (MyGMAT) மூலமாக மாணவர்களுக்கும் கார்ப்பரேட்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். ஆங்கிலப் பயன்பாடு, ஆங்கிலச் சொல்லாதிக்கத்தை வலுப்படுத்துதல், தொடர்புகொள்ளும் முறைகள் முதலானவையே இவரது பயிற்சியின் முக்கிய அம்சங்கள். 'லேர்ன் 1000 வேர்ட்ஸ் இன் 6 ஹவர்ஸ்' (Learn 1000 words in 6 hours) என்ற புத்தகத்தையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

தனிமையும் தன்னம்பிக்கையும்

திண்டுக்கல்லில் இவர் வளர்ந்த காலக்கட்டத்தில், பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ள முயன்ற நேரத்தில் இவரிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு யாருமே இல்லை என்பதுதான் வாழ்க்கையின் முரண். "ஏன் என்று சரியான காரணம் எல்லாம் இல்லை. எப்போதுமே ஆங்கில மொழி மீது எனக்கு ஈர்ப்பு இருந்தவண்ணம் உள்ளது. என் வகுப்பறை நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும்போதெல்லாம் அவர்களின் சிரிப்புகளுக்குத்தான் ஆளானேன்" என்று நினைவுகூர்கிறார் சந்தோஷ். இவரை அப்போது 'பீட்டர்' என்றே நண்பர்கள் அழைப்பார்களாம். "தங்களைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும் நபரைத்தான் பீட்டர் என்று அழைப்பார்கள்" என்று சிரிக்கிறார் சந்தோஷ்.

தனது பள்ளிக்காக ஆங்கில மொழி வினாடி வினா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவிப்பதன் மூலம் சந்தோஷ் ஊக்கம் பெற்றார். "என்னப் பற்றி கிண்டல் செய்பவர்களைக் கண்டுகொள்வதற்கு நேரம் இருக்காது. ஏனென்றால், அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு என்னைத் தயார் செய்துகொண்டிருப்பேன்" என்கிறார் சந்தோஷ். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, தனது பள்ளிக் குழுவுக்குத் தலைமை வகித்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றிருக்கிறார். "நிறைய போட்டிகளில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். ஆனால், அப்போதும்கூட ஆங்கிலத்தில் பேசுவது என்பது பெரிய பிரச்சினையாக இருந்தது" என்கிறார்.

பள்ளிப் போட்டியில் பரிசு பெறும் சந்தோஷ்

பள்ளிப் போட்டியில் பரிசு பெறும் சந்தோஷ்


"திண்டுக்கல்லில் அப்போது சிபிஎஸ்இ-யில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், பிறகு ஸ்டேட் போர்டு பள்ளிக்கு மாறினர். அப்போதுதான் மருத்துவம், பொறியியல் படிப்புக்காக அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதால், இது எழுதப்படாத போக்காகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என் வகுப்பில் இருந்த சக மாணவர்கள் எல்லாருமே வேறு பள்ளிக்கு மாறிவிட்டனர். நான் மட்டும் தனியாக பிளஸ் 1-ல் என் பள்ளியிலேயே தனித்து விடப்பட்டேன்.

அதுதான் என் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான நாட்கள். அப்போது, பாடம் சம்பந்தமாக சந்தேகம் கேட்க ஆசிரியர்களை விட்டால் யாருமே இல்லை. அந்த அளவுக்கு தனிமையில் வாடினேன். ஆனால், இப்போது திரும்பிப் பார்த்தால், அப்போது அந்த இரண்டு ஆண்டுகள் நான் பட்ட கஷ்டத்தின் பலனாகவே இப்போது இன்று இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன் என்பதை உணர முடிகிறது" எனும் சந்தோஷுக்கு, கூகுள் நிறுவனப் பணிக்கே குட்பை சொல்லி, தனித்துப் பயணிக்கும் வகையிலான தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்திருக்கிறது அந்தக் காலக்கட்டம்.

கூகுளுக்கான பாதை

ஆம், துணிச்சலுடன் தனித்து செயல்படும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அடங்கிய இவரது தனித்த பயணம்தான், இவரை உலக மக்களை ஒருங்கிணைக்கும் கூகுளுக்கு கொண்டு போய் சேர்த்தது.

ஆனால், சந்தோஷ் இன்று எட்டியுள்ள இலக்கை அடைவதற்காக கடந்து வந்த பாதை முட்கள் நிரம்பியவை. மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆவதற்காக ஸ்டேட் போர்டுக்கு மாறச் சொல்லி வீட்டில் கொடுத்தம் அழுத்தம் கொஞ்சமல்ல. "என் ஆங்கில மொழியறிவை வலுப்படுத்திக்கொள்வதற்கான தன்னம்பிக்கை விதையாகவே அப்போதைய அனுபவங்கள் அமைந்தன. அதுவே மேராஇங்கிலீஷுக்கு அடித்தளம் அமைத்தது. என் வலைதளத்தில் எழுதுவதும், எழுதவைப்பதும் மிகவும் எளிதானது. ஏனென்றால், அந்த இரண்டு ஆண்டுகள் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் அப்படிப்பட்டது."

2002-2003 காலக்கட்டத்தில், திண்டுக்கல் போன்ற இடங்களில் இணைய வசதி முழுமையாக சென்றடையவில்லை. படிப்பதும் விளையாடுவதும்தான் சிறுவர்களின் பொழுதுபோக்கு. சந்தோஷ் இரண்டையும் செய்தார். மிகத் தீவிரமாகவும் கடுமையாகவும் வாசித்தார். "'இந்தியா டுடே' மூலம் லயோலா கல்லூரி பற்றி தெரிந்துகொண்டேன். அதில் படிக்க வேண்டும் என்பதே கனவானது. கடுமையாகப் படித்து நல்ல மார்க் வாங்கினால் மட்டுமே அங்கு சீட் கிடைக்கும் என்று சொன்னார்கள்" எனும் சந்தோஷுக்கு 85 சதவீத மதிப்பெண் கிடைத்து, சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

பாதையைத் தேடியத் தருணங்கள்

ஒரு நகரின் பிரபலமான கல்லூரியில் அடியெடுத்து வைத்தபோது, சந்தோஷின் நெஞ்சில் உத்வேகத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. "திண்டுக்கல்லில் இருந்து சென்னை வந்த பிறகு, தனித் தீவில் சிக்கிக்கொண்ட உணர்வு அதிகரித்தது. இங்கு நண்பர்களைப் பெறுவது என்பது கடினமானது. ஏனென்றால், சரளமாக ஆங்கிலத்தில் பேசினால்தான் சகஜமாகப் பழகத் தொடங்குவர். நான் பொது அறிவில் சிறந்து விளங்கியதால் நட்பு வட்டத்தை ஓரளவு எளிதில் பெற முடிந்தது. பிறகு, என்னிடம் இருந்த தயக்கங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஓடின. என்னால் சரளமாக என் எண்ணத்தை பகிர முடிந்தது. மீண்டும் மீண்டும் ஒரு செயலை விடாமல் செய்யும்போது, அந்தச் செயலில் மேன்மை அடைவது உறுதி. இதுதான், கல்லூரி வளாகத் தேர்வில் கூகுள் வந்தபோது கைகொடுத்தது" என்கிறார்.

கடந்த 2007-ல் அக்கவுண்ட் அசோசியேட்டாக கூகுளில் சேர்ந்தார் சந்தோஷ். "அது என் வாழ்வில் நடந்த மிகப் பெரிய விஷயம். கூகுளில் பணிபுரிவதே எனக்கு போதுமான ஒன்றுதான். என்னுடைய பங்களிப்பு குறித்து அப்போது பெரிதாக சிந்திக்கவில்லை."

இப்படியான சூழலில், இரண்டாம் ஆண்டு முடியும் தருவாயில், சந்தோஷ் மனதில் ஒரு கேள்வி எழத் தொடங்கியது. "என் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும்? என் திறமையை எப்படி முழுமையாக வெளிப்படுத்துவது?" என்பதற்கான விடையைத் தேடத் தொடங்கினேன்" என்கிறார்.

சகோதரிகளுடன் சந்தோஷ்

சகோதரிகளுடன் சந்தோஷ்


ஒருநாள் காலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு, ஒரு பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். அது, வளாகத் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகுப்பு. நேர்காணலை எதிர்கொள்வது எப்படி என்று சொல்லித் தரப்படும். GMAT மற்றும் GRE-ல் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுக்க வாய்ப்பு கிடைத்தது. கூகுளில் இருந்து விலகிய பிறகு, இரண்டரை ஆண்டுகளுக்கு பகுதி நேர பயிற்சியாளராக இருந்தார். "மக்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்று நான் சொல்லிக் கொடுத்தாலும், என்னுடைய பல முடிவுகள் அப்படிப்பட்டதாக இல்லை" என்றும் சொல்கிறார்.

தன்னைப் போன்றவர்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற மக்களின் உறுதுணை மிக அவசியம் என அறிந்த சந்தோஷ், தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். "இளம் மாணவ, மாணவிகள் பலரையும் நேரில் கண்டுள்ளேன் அவர்கள் எல்லாருமே என்னைப் போன்ற போராட்ட வாழ்க்கையை அணுகிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது" என்கிறார்.

கூகுளில் இருந்து சேமித்ததை வைத்து 2012-ல் மேராஇங்கிலீஷ்,காம் வலைதளத்தை தொடங்கிய சந்தோஷ், "நான் இதைத் தொடங்கியபோது எப்படி வருவாய் ஈட்டுவது என்பது தெரியாது. எழுதுவது எப்படி என்பது மட்டுமே அப்போது எனக்குத் தெரியும். 2013-ல் இருந்துதான் வருவாயும் ஈட்டத் தொடங்கினேன்" என்கிறார். இன்று, 11 பயிற்சியாளர்களையும், எழுத்தாளர்களையும் கொண்ட மேராஇங்கிலீஷ் குழு, சென்னையில் அலுவலகத்துடனும் வகுப்பறையுடனும் செயல்பட்டு வருகிறது.

வீட்டில் இருந்து நெருக்கடி இருந்தாலும்கூட, தொழில்ரீதியிலாக இன்னும் வலுவாக வேண்டும் என்பதற்காக திருமணத்தைத் தள்ளிப்போட்டு வரும் சந்தோஷ், "மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று நாள் இடைவெளி எடுத்துக்கொண்டு திண்டுக்கல் போய் என் தாத்தா - பாட்டிகளைப் பார்த்தேன். ஆனாலும், அடுத்த கிளைன்டை நாடுவது பற்றியே என் சிந்தனை முழுதும் இருந்தது. தொழில்முனைவு என்பது முழுநேர வேலை. ஒருபோதும் விலகி இருக்க முடியாது. என் உடல்நிலையிலும் உணவிலும் கவனம் செலுத்தாததால் 2013-ல் உடல் எடை ரொம்பவே கூடியது. இப்போது, ஜிம்முக்கு போவதும் இயல்பு வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது.

என் தொழில்முனைவு வாழ்க்கைதான் எனக்கு வாழ்க்கையையும் கற்றுத் தருகிறது. நான் எளிதில் கோபமடையும் குணம் கொண்டவன். ஆனால், இப்போது அமைதியே உருவானவனாக இருப்பதற்கு என் தொழிலே காரணம். என்னதான் பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை எதிர்கொண்டு ஒவ்வொருநாளும் நிம்மதியாக உறங்கி, அடுத்த நாள் புன்சிரிப்புடன் அலுவலகம் செல்லும் உத்தியைக் கொண்டிருக்கிறேன். முடிவுகள் எடுக்கும் திறனும் வெகுவாக மேம்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் சோர்வு இருந்தாலும் இப்போது முழு உத்வேகம் கிடைக்கிறது" என்கிறார் ஆர்வத்துடன்.

'உங்கள் லட்சியத்துடன் வருவாய் ஈட்டுவதிலும் ஆர்வம் காட்டுங்கள்' - பயிற்சியின்போது தன் மாணவர்களிடம் சந்தோஷ் உதிர்க்க மறக்காத சொற்றொடர் இது.

"பல நேரங்களில் பகுத்தறியாமல் முடிவெடுங்கள் என்றே சொல்வேன். மூளையின் பகுத்தறியும் பகுதியைவிட பகுத்தறியா பகுதிக்குக்கு நிறையவே தெரியும். ஆனால், ஒரு விஷயத்தை அப்படியே விட்டுவிடக் கூடாது. தக்கவைப்பது என்பதுதான் மிக மிக முக்கியம். இந்த அளவுக்கு வளர்ச்சிக்கு வித்திடப்படும் என்று அப்போது எனக்குத் தெரியாது. முழு வெற்றிப் பாதையை அடையும் வரை, உங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை நிதானம் காப்பது அவசியம். கால நேரத்தைக் கணிப்பது எல்லா தொழில்முனைவர்களுக்கும் கைவந்த கலை" என்று சிலாகிக்கிறார் சந்தோஷ்.

மேராஇங்கிலீஷ் வலைதளம்

ஆங்கிலத்தில்: தீப்தி நாயர் | தமிழில்: கீட்சவன்

Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக