பதிப்புகளில்

திருச்சி அருகே ஓர் ’சினிமா கிராமம்’: மக்களே நடித்து வெளியிடும் யூட்யூப் சேனல்!

மண் சார்ந்த கலைகளை மீளுருவாக்கம் செய்ய யூ-ட்யூபில் ‘பழமார்நேரி பஞ்சாயத்து’ என்றொரு சேனல் நடத்தி, சமூக வலைதளங்களில் பிரபலமாகி உள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த கலையரசன்!

sneha belcin
19th Jun 2018
5+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

திருச்சியில் இருந்து முப்பத்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பழமார்நேரி. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து கல்லணைக்கு வந்து, பாலத்தை கடந்து, திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் பயணித்தேன். சில இடங்களில் பசுமையான வயல்கள், சில இடங்களில் நிலம் வற்றிப் போய் காய்ந்திருக்கும் செடிகள் என புவி மாறுபட்டுக் கொண்டே இருந்தது. பழமார்நேரியை அடைந்து, ஒரு பழைய தேவாலயத்திற்கு முன் இறங்கி நின்றேன். காலத்தைப் போக்க ஆலயத்திலேயே படுத்து கிடக்கும் சிலரில் ஒருவர் எழுந்து, ‘கலைய பார்க்கவா வந்தீங்க?’ என்றார்.

அதற்கு முன்னரே நான் கலையை பார்த்துவிட்டேன். நான் கிராமத்திற்குள் வந்ததுமே எனக்கு வழி சொல்லிவிட்டு, “வாங்க.. வாங்க.. நல்ல க்ரௌடு இருக்கு வாங்க...” என்றபடியே அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஓடி விட்டார்.

சின்ன சின்ன டப்ஸ்மேஷ் வீடியோக்கள் செய்வதிலிருந்து, கிராமிய பாடல்களை வைத்து ஆல்பம் பாடல்கள் செய்வது வரை, குறுகிய தயாரிப்பு செலவில் நிறைய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் தஞ்சை கலையரசன். பழமார்நேரி எனும் கிராமத்தின் பெயரிலேயே ‘பழமார்நேரி பஞ்சாயத்து’ என்று ஒரு யூட்யூப் சேனல் தொடங்கி அதில் இயங்கிக் கொண்டிருக்கிறார். 

image


யாருக்குத் தான் இப்போது யூட்யூட் சேனல் இல்லை? என்றால், கலையரசனின் வீடியோக்களில் அந்த மொத்த கிராமமுமே பங்கேற்கிறது என்பது தான் சிறப்பு. ஒரு கிராமமே ஒன்று கூடி ஒரு யூ-ட்யூப் சேனலை நடத்துவது என்பது ஒரு நல்ல திரைப்படத்திற்கான ஒன் -லைன் போல இருக்கிறதல்லவா?

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றோம். ஒரு சின்ன சிமெண்ட் ரோட்டில் நின்று கொண்டிருந்தது படப்பிடிப்பு குழு. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் இருந்த குட்டி குட்டி வீடுகளின் வாசல்களில் எல்லாம் குழந்தைகளும், பெரியவர்களும், கிழவர்களும் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்ததும் உற்சாகமான ஐஸ்-காரர் வந்து கேமரா ட்ரைபாடு பக்கத்திலேயே நின்று கொண்டு, ‘பாம் பாம்’ என ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தார்.

இந்த பக்கம் கலையரசன் எதையும் கண்டுகொள்ளாமல், ஹீரோயின் பெண்ணுக்கு எப்படி அசைந்து வந்து எப்படி நிற்க வேண்டும் என அறிவுறுத்திக் கொண்டிருந்தார். இப்படி கொஞ்ச நேரம் வேலை பார்த்துவிட்டு, ‘சாரி.. ஒரு வாரமா பண்ணிட்டு இருக்கோம்..இன்னும் முடியல’ என்று பேட்டிக்கு வந்து அமர்ந்தார்.

கலையரசன் பிறந்து, வளர்ந்தது எல்லாமே பழமார்நேரி கிராமத்தில் தான். நிலம் செழித்திருந்த போது விவசாயம் செய்த பெற்றோர்கள், பிறகு கிடைக்கும் வேலைகள் எதையாவது செய்து கலையரசனை வளர்த்திருக்கிறார்கள். மொத்தம் மூன்று பள்ளிக்கூடங்கள் மாறி படித்திருக்கிறார். பனிரண்டாவது முடித்த பிறகு பிபிஏ படிப்பு. தினமும் பழமார்நேரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து புதலூர் சென்று, அங்கிருந்து ஒரு மணி நேரம் ரயிலில் பயணித்து திருச்சிக்கு சென்று படித்திருக்கிறார். இளநிலை படிப்பு முடிந்ததும், மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் ஒரு வருடம் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்திருக்கிறார்.

image


“பிஜி தான் படிக்க முடியலை, வேற எதாவது படிப்போம்னு தான் தஞ்சாவூரில் எடிட்டிங் டிப்ளோமா படிச்சேன்,” என்கிறார்.

எடிட்டிங் கற்றுக் கொண்ட பிறகு, திருக்காட்டுப்பள்ளியில் ஒரு சின்ன ‘எடிட்டிங் கடை’ திறந்து விட்டு, தஞ்சாவூரில் மேற்படிப்பு படிக்க சென்றிருக்கிறார் கலையரசன். பிபிஏ படித்துவிட்டு, எம்.எஸ்.சி விஸ்காமில் சேர்ந்து படித்திருக்கிறார். சமீபத்தில் தான் படிப்பை முடித்திருக்கிறார்.

“நாலு அரியர் இருக்கு. அதையும் மறக்காம சேர்த்துக்கோங்க...” என சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

எப்படி ஒரு கிராமமே ஒரு மனிதனை நம்பி, உற்சாகப்படுத்தி, அவருடைய முயற்சிகளில் பங்காக இருக்கிறது என யோசித்துக் கொண்டே இருந்தேன். கலையரசனை பார்த்து, பேசத் தொடங்கியதுமே அதற்கான பதில் கிடைத்துவிட்டது. கலையரசன், நிதானமான, மென்மையான பேச்சு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை என ஒரு அசத்தலான ஆளுமை, அவ்வளவு நம்பிக்கைக்கும் தகுதியானவர்.

“நான் சின்ன வயசிலிருந்தே இங்க எதாவது சின்ன சின்ன விழா நடக்கும் போது கொழந்தைங்களை எல்லாம் கூப்பிட்டு வெச்சு டான்ஸ் சொல்லிக் கொடுக்குறது, டிராமா பண்றது எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணுவேன். அதை பார்த்து பார்த்து எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை உருவாகியிருக்கும் இல்ல? அப்புறம் நான் இங்கேயே தானே இருக்கேன். யாராவது எதாவது கேட்டா செஞ்சு கொடுக்க நான் இருக்கேன். பதிலுக்கு அவங்க செய்யுறாங்க. மாறி மாறி சார்ந்து இருக்கிறோம், அவ்வளவு தான்.”

கடந்த ஆறு மாதங்களாகத் தான் ஓரளவு வேலை எளிதாக இருப்பதாக சொல்லும் கலையரசன், தான் சந்தித்த எண்ணற்ற சவால்களையும் மறப்பதில்லை. வீடியோக்கள் எடுக்க வேண்டும் என தொடங்கிய போது, அவருடைய உழைப்பில் முதலீடு செய்ய யாரும் இல்லை. செலவுகளை சமாளிக்க வேண்டியது பெரும் சிரமமாக இருந்திருக்கிறது. உதவிக்கு என யாரும் முன் வரவில்லை. கேமரா வேலை, டான்ஸ் கொரியோகிராபி, எடிட்டிங், டைரக்‌ஷன் என அத்தனையுமே ஒரே ஆளாக நின்று செய்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக உதவியில்லாதது பெருமளவு வருத்தத்தை அளித்திருக்கிறது.

இருந்தாலும் தொடர்ந்து இயங்கி, திருக்காட்டுப்பள்ளி வட்டாரத்தில் ஓரளவு தன் பெயரை நிலை நாட்டியிருக்கிறார் கலையரசன். இப்படி சமூக வலைதளங்களில் பிரபலமாகத் தொடங்கியதும், திருக்காட்டுப்பள்ளியில் காட்சி ஊடகத்தில் இயங்க நினைக்கும் ஆட்கள் கலையரசனிடம் வந்திருக்கிறார்கள். இப்போது, நினைத்த நேரத்தில் ஒளிப்பதிவாளரையோ, டான்ஸ் கொரியோகிராஃபரையோ தயார் செய்ய முடிவது பெரும் போராட்டத்திற்கு பிறகு தான்.

image


கிராமத்தில் இருக்கும் அத்தனை பேரும் உரிமையோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கி நிற்கும் ஒரு பதின்பருவ பையனை பார்த்து, ‘ அடுத்த பாட்டுல நீ நடிச்சிடு’ என்கிறார் கலையரசன்.

“கிராமிய கலைகள் தான் உழைக்கும் வர்க்கதுக்கு பொழுதுபோக்க இருந்தது. சினிமா பாடல்கள் பிரபலம் ஆகுற அளவுல கிராமிய பாடல்களும் பிரபலமா தான் இருந்தது. அப்படி, மண் சார்ந்த கலைகளை மீட்பது அவசியம்னு நான் நினைக்குறேன். தஞ்சாவூர் முழுக்க கிராமிய கலைஞர்கள் இருக்கிறதால, அது கொஞ்சம் சுலபமா நடக்குது,” என்கிறார்.

தற்போது குறைந்த செலவில் செய்யும் வேலையை சுதந்திரமாக பிரம்மாண்டமாக செய்ய விரும்புகிறார் கலையரசன். கூடவே, ஒரு முழு நீளப்படத்திற்கான திரைக்கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறார். கலையரசனின் அப்பா, சித்தப்பா, கிராமம் முழுதும் இருக்கும் அவருடைய உறவினர்கள் என்ன ஆனாலும் கலையரசனின் பக்கம் தான் இருக்கப் போகிறார்கள் என்பதை அவர்கள் பேசுவதில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

டப்ஸ்மாஷ் வீடியோக்கள் செய்வதாக இருந்தாலுமே, அதற்கென மெனக்கெட்டு, அந்த காட்சியில் வரும் காஸ்ட்யூம்களை போலவே நடிகர்களுக்கு அணிவித்து, அந்த சினிமா காட்சியை மறு உருவாக்கம் செய்வது தான் பழமார்நேரி பஞ்சாயத்து சேனலின் சிறப்பம்சம். தற்போது பழமார்நேரி பஞ்சாயத்து சேனலுக்கு ஒருலட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். 

image


"நாங்கள் எடுக்கும் பாடல் வீடியோக்கள் கிராமியச் சூழலில், இயற்கையில் இயல்பாக இருப்பதால் மக்களுக்கு பிடிக்கிறது. குழந்தைகள் வைத்து எடுத்த பாடல்கள் எல்லாம் 20-25 லட்சம் பார்வையாளர்களை கொண்டு ஹிட் ஆனது. காப்பிரைட்ஸ் இல்லாத வீடியோக்களின் வழியே நிலையான வருமானம் வருகிறது,” என கலையரசன் சொல்கிறார்.

பழமார்நேரி வறுமையும், சுகாதார சீர்கேடும் நிறைந்திருக்கிறது. இப்படி ஒரு பின்புலத்தில் இயங்கும் கலையரசன், அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு பெரிய முன்னுதாரணமாக இருக்கிறார். அங்கிருந்து வரும் பிள்ளைகள் காட்சி ஊடகத்தில் சாதிக்கும் ஆசையோடு வளர்கிறார்கள். இது அந்த வாழ்க்கை முறையை மாற்றுவதாகவே இருக்கும் என நம்புவோம்.

“இன்னைக்கு சமூக வலைதளங்கள் ரொம்ப பெரிய பிளாட்ஃபார்மா இருக்கு. யாராவது நமக்கு வாய்ப்பு தருவாங்கன்னு காத்துட்டு இருக்காம, நம்மளே நமக்கான வாய்ப்பை உண்டாக்கிகணும்னு நான் நெனைக்குறேன்,” என்று நிறைவு செய்கிறார். 


5+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags

Latest Stories