பதிப்புகளில்

'தகவல் திங்கள்': 70 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தை ஊகித்த எழுத்தாளர்!

16th Apr 2016
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

அந்த காலத்திலேயே இணையம் இருந்தது தெரியுமா? அதாவது இணைய வலைப்பின்னலுக்கு வித்தான அர்பாநெட்டுக்கு முன்பாகவே இணையம் இருந்தது. அப்போது அதற்கு டாங்க் என்று பெயர். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு லாஜிக் பெட்டி இருந்தன. அவை தகவல் களஞ்சியமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் திகழந்தன. ஒவ்வொரு லாஜிக் பெட்டியும் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டியில் இருந்து தகவல்களை பெற்றுக்கொண்டன...

இது என்ன புது கதையாக இருக்கிறது என நினைக்க வேண்டாம். இது கதை தான். ஆனால் கட்டுக்கதை அல்ல. பழங்கதை-- வருங்காலம் சொன்ன அறிவியல் புனைகதை. முரே லெயின்ஸ்டர் (Murray Leinster) எனும் எழுத்தாளர் எழுதியது.

அறிவியல் புனைகதை என்றதும் ஆர்தர்.சி.கிளார்க், ஐசக் அசிமோ, பிலிப் கே. டிக் போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் நினைவுக்கு வரக்கூடும். இந்த பட்டியலில் முரே லெயின்ஸ்டரையும் சேர்த்த்துக்கொள்ள வேண்டும். லெயின்ஸ்டர் அறிவியல் புனைகதைகளை எழுதியவர் மட்டும் அல்ல அந்த காலத்திலேயே இணையத்தை கணித்தவர். அவர் இணையத்தை கற்பனை செய்த விதம் இப்போதைய வைய விரிவு வலையுடன் கச்சிதமாக ஒத்துபோவாது வியப்பை அளிக்ககூடியதாக இருக்கிறது என்கிறது ரிஜிஸ்டர் இணையதளம்.

image


இப்படி அவர் இணையத்தை கற்பனை செய்த விதத்தை தான் முதல் பத்தியில் படித்தீர்கள். 'ஏ லாஜிக் நேம்ட் ஜோ' (A Logic Named Joe) எனும் கதையில் இப்படி இணையத்திற்கான முன்னோட்ட வடிவம் பற்றி அவர் எழுதியிருக்கிறார். இந்த கதை 1946 வெளியான அஸ்டவுண்டிங் சயன்ன்ஸ் பிக்‌ஷன் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. பிட்ஸ்ஜெரால்டு ஜென்கின்ஸ் எனும் இயற்பெயர் கொண்ட முரே, இந்த தொகுப்பில் இரண்டு கதைகளை எழுதியிருந்தார்.

இந்த கதைகளில் ஒன்று தான் ஏ லாஜிக் நேம்ட் ஜோ. இப்போது படித்தாலும் அட எப்படி எல்லாம் கற்பனை செய்திருக்கிறார் என வியக்க வைக்கும் கதை இது!

முரேவின் கதையில், எல்லா வீடுகளிலும் இன்று நாம் அறிந்திருக்கும் கம்ப்யூட்டர் போல திறன் படைத்த ஒரு இயந்திரம் இருக்கிறது. அந்த இயந்திரங்களில் ஒன்று சுயமாக செயல்படும் ஆற்றல் பெற்றுவிட அதனால் ஏற்படும் விபரீதங்களை தடுக்க பரமாரிப்பாளர் போராடுவதாக கதை அமைந்துள்ளது.

கதையில் இந்த இயந்திரங்கள் லாஜிக் என குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு லாஜிக்கும் தரவுகளின் சேமிப்பிடமான டாங்க் என குறிபிடப்படும் தொட்டியில் இணைக்கப்பட்டிருந்தன.

ஏறக்குறைய இணையத்தின் செயல்பாட்டை இது ஒத்திருக்கிறது அல்லவா?

வருங்காலத்தில் கம்ப்யூட்டர்கள் வலைப்பின்னலில் இணைக்கப்பட்டு பெறக்கூடிய ஆற்றல் பற்றிய வியக்க வைக்கும் பார்வைகளில் ஒன்றாக ரிஜிஸ்டர் கட்டுரை இதை பாராட்டி விட்டு, லெயின்ஸ்டர் கற்பனையை அவரது வார்த்தைகளிலேயே படியுங்கள் என கதையில் இருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறது:

“உங்கள் வீட்டில் ஒரு லாஜிக் பெற்றிருக்கிறீர்கள். ஒரு காட்சி பெறும் கருவி போலவே அது இருக்கிறது. அதில் டயல்களுக்கு பதிலாக விசைகள் இருக்கின்றன. தேவையான தகவல்களை பெற விசைகளை தட்டுகிறீர்கள். ரிலேயுடன் கூடிய கார்ல்சன் சர்க்யூட் கொண்ட டாங்கில் இது இணைக்கப்பட்டுள்ளது. எஸ்.என்.ஏ.எப்.யு நிலையம் எனும் வார்த்தையை தட்டினால் டாங்கில் உள்ள ரிலே, எஸ்.என்.ஏ.எப்.யு வில் உள்ள ஒலிபரப்பில் ஒன்றை உங்கள் திரையில் தோன்றச்செய்கிறது... இது தவிர வானிலை கணிப்பு என பன்ச் செய்தால் அல்லது இன்றைய ஹையாலே பந்தையத்தில் வெற்றி பெற்றது யார் என கேட்டால் அல்லது கார்பீல்ட் நிர்வாகத்தின் போது வெள்ளை மாளிகை திருமதி யார் என கேட்டால் அவையும் திரையில் தோன்றுகிறது.

நாம் இப்போது இணையம் மூலம் டெஸ்க்டாப் கம்ப்யுட்டரில் தகவல் பெறுவது போலவே இது இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த கதை எழுதப்பட்ட காலத்தில் கம்ப்யூட்டர், இணையம் இரண்டு பற்றிய கருத்தாக்கமும் உருவாகி இருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மைக்ரோபிராசஸர் கண்டுபிடிப்பை தொடர்ந்து உருவாக்கப்பட்ட பர்சனல் கம்ப்யூட்டர்கள் வருகை தர இன்னமும் 25 ஆண்டுகள் இருந்த காலத்தில் இந்த கதை எழுதப்பட்டதை லெயின்ஸ்டர் தொடர்பான ’கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியம்’ கட்டுரை குறிப்பிடுகிறது. பர்சனல் கம்ப்யூட்டர் என கருதக்கூடிய இயந்திரம் பற்றி முதன் முதலில் விவரித்த கதைகளில் ஒன்றாக ஏ லாஜிக் நேம்ட் ஜோ இருப்பதாகவும் இந்த கட்டுரை பாராட்டுகிறது. கம்ப்யூட்டர்களை கூட விட்டுவிடுவோம், தொலைக்காட்சி பெட்டிகள் கூட இன்னமும் பரவலாக பயன்பாட்டிற்கு வரத்துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதை நிகழ்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது.

நாம் இப்போது இணையத்தை பயன்படுத்துவது போல அப்போது எல்லோரும் லாஜிக் இயந்திரத்தை பயன்படுத்தும் நிலையில், தயாரிப்பு பழுது கொண்ட லாஜிக் ஒன்று சுய உணர்வு பெற்று தனது உரிமையாளர்களுக்கு கேட்கும் தகவல்களை எல்லாம் வழங்கத்துவங்குவதால் விபரீதம் உண்டாகிறது. இந்த இயந்திரத்திற்கு ஜோ என பெயரும் உண்டு.

image


”ஜோ தீய நோக்கம் கொண்டதல்ல. மனித குலம் போதாமைகள் கொண்டது என தீர்மானித்து அதை அழித்து வீட்டு, அதற்கு பதிலாக சிந்திக்கும் இயந்திரங்களை நிறப்பும் லட்சியம் கொண்டது போன்ற நீங்கள் படித்திருக்கக் கூடிய ரோபோக்கள் போன்றது அல்ல ஜோ..” – லெயின்ஸ்டர் தனது கதையில் ஜோவின் தன்மை பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.

ஒரு இயந்திரம் வேலை செய்ய விரும்பும். அது போல தான் ஜோவும் செயல்படுகிறது. அதோடு அது லாஜிக் என்பதால், லாஜிக்கால் இதுவரை கண்டறியப்படாத பலவற்றை செய்ய முடியும்.. என்று அவரது வர்ணனை தொடர்கிறது. இதன் பிறகு நகரில் உள்ள மற்ற லாஜிக்கும் இதே போல செயல்படத்துவங்கி விடுகின்றன. மனைவிகளை கொலை செய்வது முதல் வங்கி கொள்ளை வரை பலவற்றுக்கு தகவல்கள் அளிக்கின்றன. இறுதியாக ஜோவை வலைப்பின்னலில் இருந்து நீக்கிய பிறகு தான் இயல்பு நிலை திரும்புகிறது.

அதீத கற்பனை அல்லது அபாரமான தொலைநோக்கு எப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்து நவீன விஞ்ஞானம் அதன் பிள்ளைப்பருவத்தில் இருந்த காலத்தில் லெயின்ஸ்டர் கம்ப்யூட்டர்களையும், அவற்றின் வலைப்பின்னல் ஆற்றல் பற்றியும் யூகித்து எழுதியது வியப்பாகவே இருக்கிறது.

அதனால் தான் அவர் அறிவியல் புனைகதை முன்னோடிகளில் ஒருவராக கொண்டாடப்பட வேண்டியவர் என கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியம் கருதுகிறது. முரே லெயின்ஸ்டர் எனும் புனைப்பெயரில் எழுதிய ஜென்கின்ஸ் (இயற்பெயரிலும் கதைகள் எழுதியிருக்கிறார்) 1916 முதல் 1974 வரை எழுதியிருக்கிறார். அறிவியல் புனைகதைகள் தான் அதிகம் எழுதியிருக்கிறார். தி ரன்வே ஸ்கைஸ்கேப்பர் என்பது அவரது முதல் குறிப்பிடத்தக்க அறிவியல் புனைகதையாக கருதப்படுகிறது. கதைகள், நாவல்கள் என கணிசமாக எழுதியவர் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கான திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறார்.

லெயின்ஸ்டர் எழுத்தாளர் மட்டும் அல்ல; கண்டுபிடிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது வீட்டில் ஆய்வுக்கூடம் வைத்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

image


இந்த கதையின் முன்னோடி தன்மையை விவரிக்கும் ரிஜிஸ்தர் கட்டுரை, தினசரி வாழ்க்கையில் தொழில்நுப்டமும், கம்ப்யூட்டரும் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு சூழலை கற்பனை செய்ததோடு, விரல் நுனியில் எல்லா தகவல்களும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய சிக்கலைகளையும் யூகித்திருப்பதாக பாராட்டுகிறது.

இந்த கதையில் அவர், மற்றவர்கள் ரோபோவை வில்லனாக்குவது போல ஜோவை தீய சக்தியாக சித்தரிக்கவில்லை. மேலும் அதற்கு ஒரு பெயர் சூட்டியது மூலம், அதிலும் ஜோ எனும் சகஜமான பெயர் சூட்டியது மூலம் அதன் மீதான அச்சத்தை குறைத்திருப்பதாகவும் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கதையில் அவர் தொழில்நுட்பத்தை கற்பனை செய்ததோடு மனித உளவியல் பற்றியும் யோசித்திருக்கிறார். அதனால் தான் இன்று தொழில்நுட்பத்தால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்றவற்றை அவரால் விவரிக்க முடிந்திருக்கிறது.

மகத்தான அறிவியல் இலக்கியங்கள் அறிவியல் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை ஆய்வு செய்வதோடு நிற்காமல், மனித அனுபவத்தின் அடிப்படை பண்புகளை தனித்து காண்பித்து, புதிய அனுபவங்கள் ஏற்பட்டு புதிய எல்லைகள் திறக்கும் போது அவற்றை எப்படி எதிர்கொண்டு, நிலைபெறுகின்றன என்பதை உணர்த்தக்கூடியதாகவும் இருக்கும் என்றும் ரிஜிஸ்தர் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அனுபவத்தை நீங்களும் உணர வேண்டும் என்றால் லெயின்ஸ்டரின் கதையை படித்துப்பாருங்கள்

லெயின்ஸ்டர் பற்றி மேலும் அறியலெயின்ஸ்டர் கதைகளை முழுவதும் படிக்க

தகவல் திங்கள் தொடரும்...

முந்தைய பதிவுகள்: 

தகவல் திங்கள்: ஃபேஸ்புக் காலத்தில் காபி கோப்பை மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்

ஊழியர்கள் பார்வையில் ஸ்டார்ட் அப் கதைகள்!

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக