பதிப்புகளில்

10000 ரூபாயில் இருந்து 4 வருடங்களில் ஒன்றரைக் கோடியாய் வளர்ந்த 'புரோக்கன் காம்பஸ்'

YS TEAM TAMIL
10th Dec 2015
Add to
Shares
299
Comments
Share This
Add to
Shares
299
Comments
Share

கடந்த சில வருடங்களாக பரிசோதனைப் பயணங்கள் (Experiential travel) குறிப்பிடத்தக்க வகையில் ஒரு தொழிலாக வளர்ந்து வருகிறது. நிறையப் பேர் பை நிறையப் பணத்தோடு யாரும் பார்க்காத இடங்களுக்குப் பயணம் செல்ல விரும்புகின்றனர். வழக்கமான பேக்கேஜ் சுற்றுலாக்கள் மட்டுமல்லாமல், இத்தகைய வித்தியாசமான பயணங்களை ஏற்பாடு செய்யும் ட்ராவல் நிறுவனங்களுக்கு சந்தையில் ஒரு பெரும் தேவை வளர்ந்து வருகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய நிறைய புதிய நிறுவனங்கள் வந்திருக்கின்றன.

தோழிகள் மஞ்சரி வர்மாவும் அவானி பட்டேலும் தாங்கள் பார்த்து வந்த வேலை போரடித்துப் போய் “அடுத்து என்ன” என்ற தேடலில் இருந்து போது அவர்களுக்குக் கிடைத்த விடை “பயணம்”.

புரோக்கன் காம்பஸ்- இணை நிறுவனர்கள் மஞ்சரி மற்றும் அவானி

புரோக்கன் காம்பஸ்- இணை நிறுவனர்கள் மஞ்சரி மற்றும் அவானி


உற்சாகத்திற்காக பயணம் கிளம்புகிறவர்கள் இறுதியில் பிறருக்கு பயணத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பவர்களாக மாறி விடுவது அரிதாக நடந்து விடும். மஞ்சரி அவானி என்ற இரட்டையர்களுக்கு அப்படித்தான் நடந்தது. “நாங்கள் இருவரும் சின்ன வயதில் இருந்தே எக்கச்சக்கமாக பயணம் செய்திருக்கிறோம். பயணத்திலும் பல்வேறு இடங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் எங்களுக்கு இருந்த பேரார்வம்தான் அதற்குக் காரணம். எங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்களின் பயணத் திட்டத்தை வகுக்க அடிக்கடி எங்கள் உதவியை நாடுவார்கள்” என்கிறார் அவானி.

மஞ்சரியின் குடும்பம் ராணுவப் பின்னணி உடையது. இதனால் சின்ன வயதில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. எட்டு பள்ளிகளில் படித்திருக்கிறார். கடைசியாக அவர்கள் மும்பை வந்து சேர்ந்தனர். மும்பையில் மஞ்சரி விளம்பரப் படிப்பைப் படித்தார். புதிய தொழிலைத் தொடங்குவதற்கு முன் ஐந்து வருடங்கள் மஞ்சரி விளம்பரத் தொழிலில் ஒரு காப்பி ரைட்டராகப் பணியாற்றினார். அதன் பிறகு ஒரு சில பயணங்கள், அவரை மீண்டும் அவரின் சின்ன வயது விருப்பத்தைத் தட்டி எழுப்பின. அவ்வளவுதான். பயணங்களுக்கே தன்னை முழுமையாக ஒப்படைக்க முடிவு செய்து விட்டார் மஞ்சரி.

மஞ்சரி விளம்பரத் துறையில் தனது பணியை ஆரம்பித்த காலத்தில் அவானி லட்சத் தீவுப் பகுதிகளில் கடல்சார் உயிரியல் (Marine Biology) ஆய்வில் இருந்தார். அவருக்குக் கடல் மேல் காதல். இரண்டு ஆண்டுகள் அந்த வேலையில் இருந்தார். அதன்பிறகு சாகசப் பயண (adventure travel) நிறுவனம் ஒன்றில், அதன் வர்த்தகம் பற்றி கற்றுக் கொள்ள, பயணத் திட்ட வகுப்பாளராகப் பணியாற்றினார். தானே ஒரு பயண நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் உறுதிப் பட்டுக் கொண்டே வந்தது. ஒன்றரை வருடத்திற்குப் பிறகு வேலையை விட்டு விட்டு மஞ்சரியுடன் கைகோர்த்து இருவரும் 'புரோக்கன் காம்பஸ்' (Broken Compass) நிறுவனத்தை தொடங்கினர்.

புரோக்கன் காம்பஸ் ஒரு பயண நிறுவனம். தனி மனிதர்கள் மற்றும் குழுக்களுக்கு விருப்பத்திற்கேற்ற பயணத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம். வெவ்வேறு விதமான சூழலுக்கேற்ற, (பக்தி பயணம், வரலாற்றுப் பயணம் என்று) விதவிதமான தீம் பயணங்களை திட்டமிட்டுக் கொடுக்கிறது. இவர்களின் திட்டத்தில், பயணம் செய்பவர் வெறும் சுற்றுலாப் பயணியாக இல்லாமல், புதிய இடங்களைப் பார்த்து அனுபவிப்பார். புரோக்கன் காம்பஸ், பயணப் பட்டியலை முழுமையாக நிறைவேற்றுவதற்கு உரிய முழுமையான குழுவை வைத்திருக்கிறது. தன்னிடம் வருபவர்களுக்குப் பொருத்தமான, அவர்களின் விருப்பத்திற்கேற்ற பயணத் திட்டத்தை வகுப்பதுதான் இவர்களின் ஸ்பெஷல்.

புரேக்கன் காம்பஸ்சை அணுகுபவர் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதில் அவரின் பயணத் திட்டம் மற்றும் விருப்பம் தொடர்பான பல்வேறு விதமான கேள்விகள் இருக்கும். இது தவிர புரோக்கன் காம்பஸ்சின் பிரதிநிதிகளை நேரில் சந்திக்கும் போது, பயணியின் விருப்பம், அவரின் பட்ஜெட், எப்படிப்பட்ட இடத்தில் தங்க விரும்புகிறார், எப்படிப்பட்ட இடத்திற்குச் செல்ல விரும்புகிறார் என்ற சகல விஷயங்களையும் அறிந்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் ஹோட்டல்கள், தங்குமிடங்கள், வாகன ஏற்பாட்டாளர்கள் என்று சகலத்தையும் செய்து விட்டு, இறுதித் திட்டம் பயணிக்கு அனுப்பப்படும். அதில் ஏதேனும் மாற்றங்கள் சென்னால், அதையும் சரி செய்து கடைசியாக அற்புதமான விடுமுறையை ஏற்பாடு செய்து விடுவார்கள்.

இந்நிறுவனத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், உங்கள் பயணம் ஆரம்பித்த நேரத்தில் இருந்து முடியும் வரையில் 24 மணி நேரமும் அவர்கள் உங்கள் தொடர்பிலேயே இருப்பார்கள் என்பதுதான். உங்கள் விடுமுறைக் கொண்டாட்டத்தில் எங்காவது திக்குத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் இக்கட்டான நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை.

ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பயணத் திட்டம். பிரதானமான வருமான வாய்ப்பு இதுதான். ஒருவருக்கு ஏற்பாடு செய்தது எல்லோருக்கும் பொருந்தி விடாது. எனவே ஒவ்வொரு பயணத் திட்டத்திற்கும் முகவர்கள், ஹோட்டல்கள், வாகன ஏற்பாட்டாளர்கள் என அனைத்துப் பயணப் பங்குதாரர்களும் புதியவர்களாகத்தான் இருப்பார்கள். முழுப் பயணத்தையும் ஏற்பாடு செய்யாமல், வெறுமனே ஆலோசகராக மட்டும் பணியாற்றுவதில் ஒரு சிறு அளவு வருமானம் வரும். தொழிலை தொடங்கி ஐந்து வருடம் ஆகி விட்டது. இந்தக் காலகட்டத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து அவானி கூறுகையில்,

“விருப்பத்திற்கேற்ற விடுமுறைப் பயண வடிவமைப்பிற்கு எந்த அளவிற்கு வாய்ப்பிருக்கிறது என்று தனிப்பட்ட புள்ளி விபரம் எதுவும் இல்லை. என்றாலும் இது ஒரு வளர்ந்து வரும் வர்த்தகம். கடந்த நான்கு ஐந்து வருடங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் பேக்கேஜ் டூர் போய்க் கொண்டிருந்த குடும்பத்தினர், இப்போது விருப்பத்திற்கேற்ற விடுமுறைப் பயணத்தை மேற்கொள்ள எங்களிடம் வருகின்றனர். இந்த சந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. பயணிகளும் திறந்த மனதுடையவர்களாகவும், தங்களின் ஆளுமைக்குப் பொருத்தமான பயணத்தை தேடுவோராகவும் மாறி வருகின்றனர்” என்கிறார்.

அவானியும் மஞ்சரியும் ஒரு சிறு அனுபவத்தோடு இந்த தொழிலைத் தொடங்கியதில் இருந்து கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியுடன் நீண்ட பாதையைக் கடந்து வந்திருக்கின்றனர். தங்களது வளர்ச்சி பற்றியும் தங்களது பயணத்தில் மைல்கல்லாகக் கருதும் விஷயங்கள் குறித்தும் கூறும் அவானி,

“2010ல்தான் அதிகாரப்பூர்வமாக புரோக்கன் காம்பஸ் நிறுவனத்தை ஆரம்பித்தோம். 10 ஆயிரம் ரூபாய்தான் எங்கள் மூலதனம். ஆனால் எங்கள் வளர்ச்சி அதி வேகமாக இருந்தது. வெறும் பணத்தில் மட்டுமல்ல. வர்த்தகம், நிர்வாகம், சந்தைப் படுத்தல் என்று ஒவ்வொன்றிலும் வளர்ச்சி வேகமாக இருந்தது. 2013-14 நிதியாண்டில் எங்களின் வரவு செலவு ஒன்றரைக் கோடி. புதிய பயணத் திட்டங்கள், நிறுவன விரிவாக்கத் திட்டங்களுடன் இந்த ஆண்டில் 10 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

பிறருக்காக பயணத்தை திட்டமிடுவதும் ஒருங்கிணைப்பதும் எப்போதுமே போரடிக்காது. தங்களிடம் வந்த ஒரு வாடிக்கையாளர் தனது ஐந்தாவது திருமண நாளுக்கு பாட்மன் ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்கிறார் அவானி. “அமெரிக்காவுக்குச் சென்ற எங்கள் வாடிக்கையாளர் ஒருவர், தனது ஐந்தாவது திருமண நாளை அங்கு கொண்டாட விரும்பினார். அதற்கு ஒரு சாதாரண பாதிரியார் இல்லாமல் பாட்மன் ஆசிர்வாதம் வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார். நாங்கள் அதையும் செய்து கொடுத்தோம். இதே போல் வேறு சில திரைப்பட நடிகர்களைப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். அது ஒரு வேடிக்கையும் தனித்தன்மையுமான ஒரு பயண ஏற்பாடு.” 

புதிதாகத் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு அவானி சொல்ல விரும்புவது இதுதான். “விடாப் பிடியுடனும் விடா முயற்சியுடனும் இருங்கள். கடினமாக உழையுங்கள். உங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். தோல்வியைக் கண்டு பயப்படாதீர்கள். உங்கள் சந்தை ஆய்வை நன்கு மேற்கொண்டு என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதற்கான திட்டம் ஒன்றை உருவாக்குங்கள்”.

ஆக்கம்: ஆதித்யா பூசன் திவேதி |தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா

Add to
Shares
299
Comments
Share This
Add to
Shares
299
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக