'ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்'- ஸ்வர்ணலதா நடேசன்

0 CLAPS
0

கவின் கல்லூரிகளுக்குச் சென்று பட்டம் பெற்று ஓவியத்துறையில் கால் ஊன்றும் பல பேருக்கு மத்தியில் ஸ்வர்ணலதா நடேசன் ஒரு விதி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். சமூக பிரச்சனைகளை, தனது திறமையைக் கொண்டு திறம்பட வெளிப்படுத்தியமைக்கு இந்தியாவின் சிறந்த 100 பெண்கள் என்ற பட்டியலில் அண்மையில் இடம்பெற்று, இந்திய அரசின் கெளரவம், குடியரசு தலைவருடன் சிறப்பு விருது மற்றும் விருந்து என்ற பல அங்கீகாரங்களுடன் தமிழகத்திற்கு திரும்பியுள்ளார் ஸ்வர்ணலதா.

தமிழ் யுவர்ஸ்டோரி அவரிடம் நடத்திய உரையாடல்...


வீட்டை அலங்கரித்து ஓவியம் பழகினேன்

சின்ன வயதிலிருந்து ரவி வர்மா ஓவியங்களை பார்த்தும், சேகரித்து வைக்கும் பழக்கமும் எனக்கு அதிகம். ஒவியங்களுடைய உலகத்தில் நான் என்னை அறியாமல் எடுத்து வைத்த அடி இது தான் என்றும் சொல்லலாம். ஓவியங்களை சேகரிப்பது மட்டுமல்லாமல், எனக்கு வித்தியாசமாக ஆடைகளை அணியவும், அதில் புது வடிவங்களும் இருப்பதை அதிகம் விரும்புவேன். அதனால், என்னுடைய ஆடைகளில் நானே சிறு ஓவியங்களும், வண்ணமான டிசைன்களும் செய்து அணிவதுண்டு, என்று தன்னுடைய கதையை நம்மோடு பகிரத்தொடங்கினார் ஸ்வர்ணலதா.

ஓவியங்களோடு எனக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது என்னுடைய திருமணத்திற்கு பின் தான். ஓவியப்ப்ரியையாக மட்டுமே இருந்த ஸ்வர்ணலதா, தன்னுடைய விட்டையே பற்பல ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கத் துவங்கிய சமயம் அது. ரவி வர்மா ஓவியங்களை பார்த்து பழகியதன் தாக்கம், தன்னுடைய வீடு முழுதும் தானாக வரைந்த ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கத் துவங்கினார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

"என்னுடைய கணவர் அப்போது தில்லியில் வக்கீலாக இருந்தார். நான் என்னுடைய ரெண்டு வேலைக்காரர்கள் மட்டும் இங்கு இருந்தோம். நேரம் அதிகமாக இருந்ததால், படிப்பு, ஆசை தீர வரைவது என்றே என்னுடைய நேரங்கள் போனது. பாத்ரூம் உள்பட வீட்டின் எல்லா இடங்களிலும் ரவி வர்மா ஓவியங்களில் லேசாக தஞ்சாவூர் ஸ்டைல் அலங்காரங்களும் செய்து ஒரு ஃப்யூஷன் ஓவியங்களை வரைந்தேன். "தன்னுடைய வீட்டை மட்டுமல்லாமல், கணவருடைய அலுவலகத்தையும் ஓவியங்கள் கொண்டு அலங்கரித்தது இவருக்கு முதல் பாராட்டை பெற்றுத்தந்தது.

நான் அவ்வளவு நன்றாக வரைவேன் என்று எனக்கே அப்போது தான் தெரியவந்தது. என்னுடைய கணவரின் கிளைண்ட் மூலம், ஒரு கண்காட்சியில் பங்கேற்கவும் வாய்ப்பு வந்தது. என்று நினைவுகூறும் ஸ்வர்ணலதாவால், அப்போது அதில் பங்கேற்க முடியாமல் போனது.

ஓவிய கண்காட்சியும் அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமும்

முதல் வாய்ப்பை நழுவவிட்டாலும், ஓவியங்கள் மீதான ஆர்வம் அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது.

அந்த கண்காட்சியில் பங்கேற்க முடியாமல் போனதை எண்ணி வருத்தமடைந்தாலும், வரைவதை மட்டும் நான் நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட 60 ஓவியங்களை முடித்தப்பின், சென்னையில் ஒரு சின்ன ஓவியக் கண்காட்சி நடத்தினேன்.

1998ம் ஆண்டில் இவர் நடத்திய அந்த முதல் கண்காட்சி, பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம். வெறும் கண்காட்சியாக ஆரம்பித்தது கடைசியில் ஒவியங்களுடைய விற்பனையோடு முடிந்தது. விற்பனை மட்டுமல்லாமல், பல புது ஓவிய ஆர்டர்களையும் எடுத்து வந்தார் ஸ்வர்ணலதா. புது ஆர்டர்களை செய்த போது தான், கேரளாவின் லலித் கலா அகாடமியில் கண்காட்சி நடத்த அழைப்பு இவரை வந்து சேர்ந்தது. அந்த கண்காட்சியில் பல ஒவியர்களும், மூத்த கலைஞர்களும் இருந்தனர்.

"என்னுடைய திறமையை பாராட்டினாலும், என்னுடைய ஓவியங்கள் வெறும் ஒரு பிரதி மட்டுமே என்று எடுத்துரைத்தனர். அன்று வரை, எனக்கு தெரியாத ஒரு பரிணாமத்தை பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்புகள் அமைந்தது. ஓவியக்கலையை பற்றி இன்னும் தெரிந்து, எனக்கான ஒரு புது விதத்தை உருவாக்கலானேன். என்னை ஒரு கலைஞராக மாற்றிய பாதை அதுவே."

படிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்ட ஸ்வர்ணலதா. ஓவியங்களை பற்றின புத்தகங்களை படித்து, தானாகவே கற்கத் தொடங்கினார். மேற்கிந்திய ஓவியங்கள் பல தெரிந்துக்கொண்ட சமயத்தில் ஸ்வர்ணலதாவை வெகுவாக கவர்ந்தன பிகாசோவின் படைப்புகள். "பிகாசோவின் ஓவியங்களில் ஒரு விதமான உண்மையையும், ஆழத்தையும் காண முடிந்தது. எனக்கு மக்கள் என்றால் பிடிக்கும், மக்களின் உணர்வுகளை உண்மையாக வெளிக்கொண்டு வர, பிகாசோவின் ஓவியங்கள் எனக்கு தூண்டுதலாக இருந்தது."

'க்யூபிசம்' எனப்படும் பிகாசோவின் ஓவிய முறையில், உணர்வுகளை வெளிக்கொண்டு வந்து ஸவர்ணலதா தன்னுடைய விதத்தை புகுத்தியது குறிப்பிடத்தக்கது. இன்று வித்தியாசமாக இந்த முறையில் தனக்கான ஓவிய முறையை உருவாக்கியது இவரை தனித்தன்மையுடன் வெளியே காட்டுகிறது. 


பெண்களின் பிரச்னையை எடுத்து சொல்லும் ஓவியங்கள்

ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் வலியையும் காட்டும் விதத்தில் வரையப்பட்டுள்ளது.

"சாதாரணமாக ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெண்கள் பாதிப்படைவது அதிகம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மன இறுக்கத்துடன் குழந்தை பேருக்காக, சிகிச்சை எடுத்துக்கொண்ட சமயம் அது. குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு பெண்கள் தான் காரணம், அவர்களிடம் தான் அந்த குறை என்று திணிக்கும் விஷயங்களை நான் கேள்விப்பட்டதுண்டு. சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் பெண்களிடம் இருக்கும் அந்த எதிர்பார்ப்பு கலந்த வலியை நான் பார்த்திருக்கிறேன்."

தன்னுடைய மன இறுக்கம் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் வரும் பெண் சிசுக் கொலை, பாலியன் கொடுமைகள் போன்ற செய்திகள் ஒரு பெரிய மன மாற்றத்தை ஸ்வர்ணலதாவிடம் ஏற்படுத்தியது. 

"அந்த குறிப்பிட்ட வலியை நான் அனுபவிக்காமல் இருந்தாலும், அதை என்னால் நிச்சயமாக உணரமுடிந்தது. நான் உணர்ந்த அந்த விஷயத்தை என்னுடைய ஓவியங்களில் வெளிப்படுத்தலானேன்." என்று விளக்குகிறார் ஸ்வர்ணலதா.

தில்லியில் நடந்த அந்த மறக்கமுடியாத கண்காட்சி

பெண் சிசுக் கொலை, பாலின பாகுபாடு என்ற பல தலைப்புகளில் கிட்டத்தட்ட 25 ஓவியங்களை இவர் வரைந்த போது தான், 2012ம் ஆண்டில் நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவம் நடந்தது.

"அப்போது நான் தில்லியில் இருந்தேன். எங்களுடைய வீடும் போராட்டம் நடந்த இந்தியா கேட் அருகாமையில் தான் இருந்தது. ஒரு நிர்பயா மட்டுமல்லாமல், கண்ணுக்கு தெரியாமல் பல பாதிப்படைந்த பெண்கள் போராட்டத்தில் இருப்பதை நான் உணர்ந்தேன். பாதிப்படைந்த அந்த நிர்பயாவின் இன்னல்களை ஓவியங்களாக வரையத்தொடங்கினேன்."

35 ஓவியங்களை வரைந்த ஸ்வர்ணலதா, தில்லியில் ஒரு பிரத்யேக கண்காட்சியை அமைக்க திட்டமிட்டார். 

"என்னுடைய விவரங்களையும் ஓவியங்களையும் அனுப்பி வைத்த உடனே கண்காட்சிக்கான தேதி எனக்கு தரப்பட்டது. மே மாதம் நடந்த அந்த கண்காட்சியை, என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நிர்பயா சம்பவத்திற்கு பின், தில்லியே முற்றிலுமாக மாறிப்போயிருந்தது. கண்காட்சிக்கு வந்திருந்த ஆண்கள் கூட அழுதனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், அவர்கள் சந்தித்த பிரச்னைகளை பற்றி என்னிடம் பேசினார்கள். இப்படி பல தரப்பட்ட கருத்துகளை என்னால் கேட்கமுடிந்தது. ஓவியங்களை வரைந்த களைப்பு, கண்காட்சிக்கான வரவேற்பை பார்த்ததும் மறைந்தே போனது."

ஓவியங்கள் அளித்த கெளரவம்

பெண்கள் மற்றும் சமூக வளத்துறையிலிருந்து டிசம்பர் மாதம் வந்தது அந்த இன்ப அதிர்ச்சி. இந்தியாவின் சிறந்த 100 பெண்கள் என்ற கெளரவத்திற்கு ஸ்வர்ணலதாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டு, தேர்வும் செய்யப்பட்டது.

அப்போது எனக்கு, இதை பற்றி சிறிதும் தெரியாது. என்னை பார்த்த பல பேர், '36 வயதினிலே' ஜோதிகா மாதிரி மயக்கம் அடையாதே என்று கேலியும் செய்தனர்.

குடியரசு தலைவரை சந்தித்த அந்த நாள் வாழ்நாளில் சிறந்தது என்று விவரிக்கிறார் ஸ்வர்ணலதா. குடியரசு தலைவருடன் பேசி, விருந்தும், விருதையும் வாங்கியது மட்டுமல்லாமல் தன் பெயரை பரிந்துரைத்தது யார் என்ற விவரத்தையும் அங்கு தான் ஸ்வர்ணலதா தெரிந்து கொண்டார்.

'ஸ்லம்டாக் மிளினியர்' திரைப்படத்திற்கு அடிப்படையான புத்தகம் Q&A என்ற புத்தகத்தை எழுதிய விகாஸ் ஸ்வரூப் தான் ஸ்வர்ணலதாவை பரிந்துரை செய்திருந்தார். "என்னுடைய தில்லி கண்காட்சிக்கு விகாஸ் வந்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்தது தான் இந்த கெளரவம்." என்று பெருமிதமாக கூறுகிறார் ஸ்வர்ணலதா.

பல பிரிவுகளிலிருந்து பெண்களை தேர்வு செய்திருந்தாலும், தென்னிந்தியவிளிருந்து சென்றிருக்கும் ஒரே ஓவியக்கலைஞர் என்ற பெருமை ஸ்வர்ணலதாவிற்கு கிடைத்துள்ளது. 


சத்தமில்லாமல் சமூகத் தொண்டு

பிரச்னைகளை விளக்கும் ஓவியங்களாக இருந்தாலும், ஸ்வர்ணலதாவின் பல ஓவியங்கள் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. "அதிலிருந்து கிடைக்கும் பணத்தை சொந்த செலவுக்காக எடுக்கக்கூடாது என்ற முடிவில் தீர்க்கமாக நானும் என்னுடைய கணவரும் இருக்கின்றோம். முதல் கண்காட்சியிலிருந்து, இப்போது வரை எனக்கு ஓவியங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஏழைக் குழந்தைகளை படிக்கவைப்பது, உதவி செய்வது, வேண்டுபவர்களுக்கு மருத்துவ வசதி போன்றவைகளுக்காகத் தான் நான் செலவிடுகிறேன்."

ஓவியம் என்பது கடவுள் எனக்கு தந்த பரிசு. அதை நல்ல வழியில் என்னுடைய சமூகத்திற்காக செலவிடுவதே எனக்கு மகிழ்ச்சி.

கிட்டத்தட்ட்ட 15 ஆண்டுகளாக ஓவியத்தில் மூழ்கியிருக்கும் ஸ்வர்ணலதாவிற்கு இருக்கும் ஊன்றுகோல் அவருடைய கணவர். "எனக்குள் இருந்த கலையை வெளியே உலகத்திற்கு எடுத்துக்காட்டியது அவர் தான். சரியான குடும்பச் சூழலும், சுதந்திரமும் எனக்கு என்னுடைய புகுந்த வீட்டில் இருந்தது தான், ஓவியங்களுக்கு என்னால் நேரத்தை செலவிடமுடிந்தது," என்கிறார்.

குரல் உயர்த்தி போராட்டங்கள் பல நடக்கும் இந்த காலத்தில், கலையின் மூலம் மக்களின் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் ஸ்வர்ணலதாவின் முயற்சிக்கு நம்முடைய பாராட்டுக்கள்!

இணையதளமுகவரி 

'படைப்புத்திறன் மூளை சார்ந்தது, ஹார்மோன்களோடு தொடர்பு உடையது அல்ல'- கலை இயக்குனர் ஜெயஸ்ரீ!

Latest

Updates from around the world