பதிப்புகளில்

ஒரே நிகழ்ச்சியில் பிரபலமாகி உச்சத்தை எட்டிய ‘தைக்குடம் பிரிட்ஜ்’

16th Jul 2018
Add to
Shares
90
Comments
Share This
Add to
Shares
90
Comments
Share

யூட்யூப் ஃபேன்ஃபெஸ்ட் நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியின் மேடைக்குப் பின்னால் இறுதி நேர ஒத்திகைகள், மேடை அமைப்புகள், மைக் டெஸ்ட், பிரபலங்களின் வருகை என அந்த இடமே பரபரப்பாக காட்சியளித்தது. இவற்றிற்கு இடையில் 12 நபர்கள் தங்களது கருவிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல ’தைக்குடம் பிரிட்ஜ்’ என்கிற இசைக்குழுவினர்தான். 

யூட்யூப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் இவர்களும் ஒருவர். இவர்களது முதல் வீடியோ வெளியானதில் இருந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து இன்று உச்சத்தை எட்டியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இந்த இசைக்குழு 59 சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்று உலகம் முழுவதும் 19 நாடுகளில் 400-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

கப்பா டிவியில் ஒரே ஒரு முறை நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட குழு 17 நபர்களைக் கொண்ட ’தைக்குடம் ப்ரிட்ஜ்’ ஆக உருவெடுத்தது. தைக்குடம் என்பது ஒரு சிறிய பாலத்தின் பெயர். இதன் பெயரையே இவர்களது குழுவிற்கு வைத்தனர். அதுவரை இந்த பாலத்தின் பெயரை பலர் அறியவில்லை. 

image


இந்தக் குழு பாடகர் மற்றும் வயலின் இசைக்கலைஞரான கோவிந்த் பி மேனன் அவர்களால் உருவாக்கப்பட்டது. ’ஃபிஷ் ராக்’ என்கிற இவர்களது முதல் யூட்யூப் வீடியோவால் பிரபலமான இந்தக் குழு, இன்று 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

பிஜய் நம்பியார் இயக்கத்திலான ’சோலோ’ என்கிற திரைப்படம் வாயிலாக இக்குழுவினர் தமிழ்த்திரை உலகில் அறிமுகமாகியுள்ளனர். இதில் ’ஐகிரி நந்தினி’ என்கிற பக்திப் பாடலை தற்கால ராக் இசையுடன் இணைத்து வழங்கியுள்ளனர்.

முன்னணி கிடார் இசைக் கலைஞர் மிதுன் ராஜு, ரிதம் கிடார் இசைக் கலைஞர் அசோக் பெட்டி நெல்சன், பாஸ் கிடார் இசைக் கலைஞர் மற்றும் பாடகர் வியன் ஃபெர்னாண்டஸ், கீபோர்ட் கலைஞர் ருதின் தேஜ், ட்ரம்மர் அனீஷ் டி என், பாடகர் அனீஷ் கோபாலகிருஷ்ணன் கப்பா டிவி மார்கெட்டிங் தலைவர் ஜோசப் ஆகியோருடன் யுவர்ஸ்டோரி உரையாடியது. இவர்கள் தங்களது ஐந்து வருட இசைப் பயணத்தை நினைவுகூர்ந்தனர்.

யுவர் ஸ்டோரி : தைக்குடம் பிரிட்ஜ் அங்கீகாரம் பெற்ற கதை என்ன?

மிதுன் ராஜு : 2013-ம் ஆண்டு கோடைக்காலத்தில் ஒரு புதிய முயற்சி குறித்து கலந்துரையாட வருமாறு கோவிந்த் எங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஒரு குறிப்பிட்ட மலையாள சானல் நேரடி ஒளிபரப்பு ஒன்றிற்காக இசைக்கலைஞர்களை தேடி வருவதாக தெரிவித்தார். எங்களில் பெரும்பாலானோர் அந்த சமயத்தில் மும்பை, ஔரங்காபாத், ஒடிசா போன்ற பகுதிகளில் பணியாற்றி வந்தோம். நாங்கள் அனைவரும் கொச்சியில் உள்ள இந்த சிறிய குடியிருப்பை வந்தடைந்தோம். ஒத்த சிந்தனையுடைய இசைக்கலைஞர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கவேண்டும் என்கிற இந்த சானலின் எண்ணம் எங்களுக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியதால் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டோம். எங்களது முதல் முயற்சி ஃபிஷ் ராக். இது நேரடியாக ஒளிபரப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கப்பா டிவி குழுவினர் எங்களது இசைக்குழுவிற்கு ஒரு பெயரை தீர்மானிக்கச் சொன்னார்கள். நாங்கள் தைக்குடம் பிரிட்ஜ் என பெயரிட்டோம். ஏனெனில் நாங்கள் ஒன்றிணைந்து பணிபுரிந்த குடியிருப்பிலிருந்து இந்த பாலத்தின் காட்சி தெரியும்.

யுவர் ஸ்டோரி : நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

வியன் ஃபெர்னாண்டஸ் : தொலைக்காட்சியில் வரப்போகிறோம் என்பதை நினைத்து எங்களில் பெரும்பாலானோர் உற்சாகமானோம். முதல் வீடியோவை படம்பிடித்தோம். சிறந்த அனுபவம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு வீடியோ யூட்யூபில் ஒளிபரப்பானது. இங்கிருந்துதான் எங்களது பயணம் துவங்கியது. ஒளிபரப்பு மிகப்பெரிய வெற்றியடைந்தது. சானல் தயாரிப்பாளர்கள் உடனடியாக இரண்டாவது நிகழ்ச்சிக்கு திட்டமிட்டனர். நல்ல வரவேற்பு கிடைத்தது. 

விரைவிலேயே இந்தச் சானல் இறுதி வீடியோவை யூட்யூபில் வெளியிட்டது. ஒரே இரவில் வீடியோ வைரலானது. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மெசேஜ், அழைப்புகள், பாராட்டுகள் போன்றவை வந்து குவிந்தன. எங்களில் பெரும்பாலானோரது முகநூலில் கோரிக்கைகளும் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

யுவர் ஸ்டோரி : ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக இந்தக் குழு உருவான நிலையில் இத்தகைய வரவேற்பு கிடைத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அசோக் பெட்டி நெல்சன் : நாங்கள் சரியான ஒரு விஷயத்தில் ஈடுபட்டுள்ளதாக உணர்கிறோம். துணிந்து தைரியத்துடன் செயலில் இறங்கினோம். விரைவில் இரண்டாவது நிகழ்ச்சிக்காக அதே குடியிருப்பில் திட்டமிடத் துவங்கினோம். அனைவரும் அந்த குடியிருப்பிற்கு மாற்றலானோம். ஒரு அறையை ஸ்டூடியோவாக மாற்றினோம். எங்களது நிகழ்ச்சிகள் தொடர்பான பணியைத் துவங்கினோம். அடுத்த இரண்டு வாரங்களில் அந்த சானலுக்கான இரண்டு எபிசோட்களுக்காக ஐந்து வீடியோக்களை படம்பிடித்தோம். இந்த சமயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அழைப்புகள் வரத் துவங்கியது. இதில் ஒன்று துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டோம். ஏனெனில் எங்களது குழுவில் சிலர் விமானத்தில் செல்ல பயந்தனர்.

யுவர் ஸ்டோரி : தைக்குடம் பிரிட்ஜ் வெற்றிக்குக் காரணம் என்ன?

ருதின் தேஜ் : நாங்கள் துவங்கியபோது வெவ்வேறு இசை வகைகளை ஒரே இடத்தில் வழங்கும் இசைக்குழுக்கள் அதிகம் இல்லை. இதுவே எங்களை வேறுபடுத்தும் காரணியாகும். எங்களது குழு 17 இசைக்கலைஞர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் வெவ்வேறு இசை வகையைச் சேர்ந்தவர்கள். எங்களது பணி அனைத்து வகையான இசைப் பிரியர்களையும் சென்றடையவேண்டும் என விரும்பினோம். பல முயற்சிகளை மேற்கொண்டு அனைவரும் விரும்பத்தக்க வகையில் வீடியோக்கள் இருக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டோம். எனவே இதில் கதை சொல்லுதல், நல்ல இசை மற்றும் இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் விதத்தில் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றிணைத்தோம்.

யுவர் ஸ்டோரி : உங்களது வீடியோக்களில் பெரும்பாலானவை உள்ளூர் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள நிலையில் வீடியோவில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்? உதாரணத்திற்கு நவரசம் வீடியோவில் கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி இடம்பெற்றது?

அனீஷ் டி என் : இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தும் நேரம் மிகவும் குறைவு என்பதால் எங்களது பணியின் மீது அதிக நேரம் கவனம் செலுத்தப்படவேண்டும் என விரும்பினோம். அனைத்து இசைக்கலைஞர்களும் ஏதோ ஒரு சமயத்தில் திரைப்படத்தில் இணைய விரும்புகின்றனர். எனவே எங்களது பணி சமூக பிரச்சனைகள், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தவேண்டும் என்பதையும் அதே சமயம் மக்களின் கண்களுக்கு விருந்தாகவேண்டும் என்பதையும் உறுதிசெய்தோம். இவை அனைத்தும் எங்கள் அனைவரிடமும் இயற்கையாகே காணப்பட்டது. முதல் வீடியோவில் 50 லட்ச ரூபாய் செலவிட்டோம். தைக்குடம் பிரிட்ஜ் பார்வையாளர் ஒவ்வொரு முறையும் முற்றிலும் புதிதாக ஒன்றை எதிர்நோக்குகின்றனர். இதுவரை அனைத்தும் எங்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.

image


யுவர் ஸ்டோரி : உங்களது இசைக்குப் பின்னால் இருக்கும் படைப்பாற்றலுடன் கூடிய செயல்முறை என்ன?

மிதுன் ராஜு : எங்களது முதல் ஆல்பமிற்கான டெம்ப்ளேட்டை கோவிந்த் அமைத்தார். பெரும்பாலான எங்களது தீவிர விவாதங்கள் வெவ்வேறு இசை வகைகள் குறித்தும் அவற்றை எவ்வாறு ஒன்றிணைப்பது ஆகியவற்றை குறித்துமே இருக்கும். படைப்பாற்றலுடன் கூடிய செயல்முறையில் குறிப்பிட்ட நேர வரையறையோ அல்லது யோசனைகள், இசைக்கலைஞர்கள், இசை வாத்தியங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு வரம்புகளோ இல்லை. பெரும்பாலும் எங்களது உள்ளுணர்வைக் கொண்டே செயல்படுகிறோம். உதாரணத்திற்கு நாங்கள் ’எறும்பு’ இசையமைத்தபோது என்னுடைய வீட்டு பால்கனியில் இருந்துகொண்டே 10 நிமிடங்களில் பாட்டை முடித்துவிட்டேன்.

யுவர் ஸ்டோரி : குழுவில் அதிக நபர்கள் இருக்கும் நிலையில் மக்கள் கருத்தறியும் அமர்வுகளையும் ஈகோ பிரச்சனைகளையும் எவ்வாறு கையாள்கிறீர்கள்?

வியன் ஃபெர்னாண்டஸ் : நாங்கள் பரஸ்பர மரியாதைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் எங்களது இணைப்பு உறுதியாகியுள்ளது. ஒவ்வொருவரும் அடுத்தவரின் ஈடுபாடு குறித்து பெருமை கொள்கிறோம். ஏனெனில் அனைவரும் ஒருங்கிணைத்து குழுவாக பணிபுரிவதே முக்கியம். 

தொடர்ந்து நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் உள்ளது. படைப்பாற்றல் கொண்ட துறை மட்டுமின்றி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே ஈகோ என்கிற பேச்சிற்கே இடமில்லை. 

உதாரணத்திற்கு மெட்டல் மற்றும் எலக்ட்ரானிக் இசை வகைகளைச் சேர்ந்த பாடல்களையும் பாடகர்களையும் கையாள்கிறோம். எனவே நாங்கள் சந்தித்து விவாதிக்கும் ஒரு மத்திய புள்ளியை தீர்மானிப்பது முக்கியமாகிறது. படைப்பாற்றலுடன் கூடிய ஒவ்வொரு செயல்முறைக்குப் பிறகும் நாங்கள் கருத்தறியும் அமர்வுகளையும் ஏற்பாடு செய்கிறோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

யுவர் ஸ்டோரி : ஆரம்பத்தில் நிகழ்ச்சிகள் கிடைப்பது எவ்வளவு எளிதாக அல்லது கடினமாக இருந்தது?

வியன் ஃபெர்னாண்டஸ் : அது எப்போதும் கடினமாக இல்லை. நாங்கள் சந்தையில் நுழைவதற்கு முன்பே எங்களது முதல் வீடியோ ஒரு முன் மாதிரியாக அமைந்தது. 2013-ம் ஆண்டு பல இசைக்குழுக்கள் இருந்தது. ஆனாலும் இன்று வரை அதிகமான விசாரணைகள் வந்து கொண்டிருக்கிறதே தவிர குறைவாக இருந்ததில்லை. சில நாட்களில் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். பெரும்பாலான நேரத்தை புதிய உள்ளடக்கதை உருவாக்குவதிலும், பயிற்சி எடுத்துக்கொள்வதிலும், ஏதோ ஒரு இடத்தில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருப்பதிலும் செலவிடுகிறோம்.

யுவர் ஸ்டோரி : இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு இசைக்குழுவின் ஆன்லைன் செயல்பாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறீர்கள்?

வியன் ஃபெர்னாண்டஸ் : நாங்கள் யூட்யூபின் ப்ராடக்ட். எங்களது முதல் வீடியோ வைரலானதால் எங்களுக்கு புகழ் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு நாங்கள் நிலையாக செயல்படவேண்டியிருந்தது. இன்று அதிகமான உள்ளடக்கங்கள் காணப்படுவதால் ஒவ்வொரு முறையும் நீங்கள் மிகச்சிறப்பான செயல்படவேண்டியது அவசியம். 

ஆன்லைன் செயல்பாடு பார்வையாளர்களுடன் நிகழ்நேர இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவும். சந்தையில் புதிதாக அறிமுகமாகும் விஷயங்களையும் அதற்கு பார்வையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பையும் தெரிந்துகொள்ளலாம். 

இன்று இசைத்துறையில் வருவாய் ஈட்டப்படுவதில் இணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு இசைக்குழுவில் ஆன்லைனில் செயல்படுவது கட்டாயமாகும். நேரடி வீடியோ ஸ்ட்ரீமிங் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

யுவர் ஸ்டோரி : நீங்கள் சந்தையை தொடர்ந்து கவனித்து வருகிறீர்களா? அதிகரித்து வரும் போட்டி உங்களை கவலையடையச் செய்கிறதா?

மிதுன் ராஜு : படைப்பாற்றல் சார்ந்த தீர்மானங்கள் பெரும்பாலும் சிக்கலானவை.

சந்தையைத் தொடர்ந்து கவனித்து வந்தாலோ அல்லது போட்டியாளர்களாக இருக்கக்கூடிய சாத்தியம் நிறைந்தவர்களை கவனித்து வந்தாலோ உங்களது படைப்பாற்றலுடன்கூடிய செயல்முறையில் அதிக மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும். இதை நாங்கள் விரும்பவில்லை. இறுதி ப்ராடக்டை சார்ந்தோ அல்லது அது ஏற்படுத்தும் தாக்கதை சார்ந்தோ நீங்கள் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் இவை உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. எப்போதும் எங்களது உள்ளுணர்வையே பின்பற்றினோம். தொடர்ந்து அவ்வாறே பயணிக்க விரும்புகிறோம்.

தைக்குடம் பிரிட்ஜ் உருவானதே எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் ஏற்பட்ட சிறப்பான விஷயமாகும். எதிர்காலத்தில் கலை சார்ந்து அதிகம் ஆராய விரும்புகிறோம்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி மோகன் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
90
Comments
Share This
Add to
Shares
90
Comments
Share
Report an issue
Authors

Related Tags