பதிப்புகளில்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை கௌரவப்படுத்திய கூகுள் டூடுல்!

2nd Apr 2018
Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share

ஆனந்தி கோபால் ஜோஷியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுலில் அவரது புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஓவியர் காஷ்மிரா சரோடே என்பவர் இதனை வடிவமைத்துள்ளார். முழுமையாக பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் கூகுளின் முகப்பு பக்கம் காணப்பட்டது. ஆனந்தி புடவை அணிந்திருந்தார். அவர் கைகளில் மருத்துவ பட்டப்படிப்பின் சான்றிதழும் கழுத்தில் தாலிக்கு பதிலாக ஸ்டெதஸ்கோப் இருந்தது.

image


அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஒரு புரட்சிகரமான பிம்பமாகவே இவர் காட்சியளிக்கிறார். இது பாராட்டத்தக்கதும் பின்பற்றத்தக்கதுமாகும். அவருக்கு அளிக்கப்படும் கௌரவத்திற்கு சான்றாக விளங்கும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஆனந்திக்கு ஒன்பது வயதிருக்கையில் அவரது வயதைக் காட்டிலும் 20 வயது மூத்தவருடன் திருமணம் நடந்தது

ஆனந்தி பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ‘யமுனா’. கல்யாண் பகுதியில் பண்ணைக் குடும்பத்தில் பிறந்தார். ஒரு காலகட்டத்தில் அவரது குடும்பம் மிகப்பெரிய நஷ்டத்திற்கு ஆளானது. அவருக்கு ஒன்பது வயதிருக்கையில் கோபால்ராவ் ஜோஷி என்கிற 29 வயது தபால்துறை எழுத்தருடன் திருமணம் செய்து வைத்தனர். கோபால்ராவ் மனைவியை இழந்தவர்.

அவரது கணவர்தான் அவரது பெயரை ஆனந்தி என மாற்றினார். கோபால்ராவ் பரந்த கொள்கைகள் உடையவர். முற்போக்குச் சிந்தனையாளர். பெண் கல்விக்காக போராடுபவர். ஆனந்தி தொடர்ந்து படிக்கவேண்டும் என ஊக்குவித்தார். இந்த தம்பதி அலிபாக் பகுதிக்கு மாற்றலாயினர். இறுதியில் கொல்கத்தா சென்றனர்.

2. ஆனந்திக்கு பதினான்கு வயதிருக்கையில் தன் குழந்தையை இழந்தார்

ஆனந்திக்கு 14 வயதிருக்கையில் அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. அறிவியல் வளர்ச்சியும் போதுமான மருந்துகளும் இல்லாத காரணத்தால் அந்த ஆண் குழந்தை பிறந்து பத்து நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்தது. இந்த சம்பவமே ஆனந்தி மருத்துவர் ஆகவேண்டும் என்கிற உந்துதலை அளித்தது. கோபால்ராவ் வலியுறுத்தலின் பேரில் மருத்துவ பட்டப்படிப்பை மேற்கொள்ள தீர்மானித்தார் ஆனந்தி. 

இது குறித்து கோபால்ராவ் ராயல் வில்டருக்கு ஒரு கடிதம் எழுதினார். ராயல் வில்டர் ஒரு பிரபலமான மதபோதகர். 1880-ம் ஆண்டு ஆனந்திபாய் அமெரிக்காவில் மருத்துவம் படிக்க விரும்பிய பகுதியில் அவருக்கு இடமளிக்குமாறு விண்ணபித்து கடிதம் எழுதினார். வில்டர் அந்த கடிதத்தை பிரின்ஸ்டன்னின் ’மிஷனரி ரெவ்யூ’-வில் வெளியிட்டார். நியூஜெர்சியில் வசித்த தியோடிசியா கார்பெண்டர் இந்த கடிதத்தைப் படித்தார். அவர் ஆனந்திக்கு இடமளிக்க சம்மதித்தார். எனினும் கோபால்ராவிற்கு அமெரிக்காவில் சரியான பணி கிடைக்காததால் ஆனந்திபாயை தனியாக அமெரிக்க அனுப்ப தீர்மானித்தார்.

3. 19 வயதே ஆன நிலையில் ஆனந்தி பிரயாணம் செய்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தது

பலவீனம், தலைவலி, அவ்வப்போது ஏற்படும் காய்ச்சல், சில நேரங்களில் ஏற்படும் மூச்சுத்திணறல் என அனைத்து பிரச்சனைகளையும் ஆனந்தி எதிர்த்துப் போராடினார். தொடர்ந்து கோபால்ராவ் ஆனந்திக்கு ஊக்கமளித்து வந்தார். ஏனெனில் ஆனந்தி மேற்படிப்பை மேற்கொண்டு மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழவேண்டும் என கோபால்ராவ் விரும்பினார்.

எனினும் அந்த சமயத்தில் பழமைவாத இந்து சமூகமானது ஆனந்தியின் தீர்மானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனந்தி செரம்போர் கல்லூரி வளாகத்தில் உரையாற்றியபோது அவரது முயற்சி குறித்தும் அவரது கணவரின் தியாகம் குறித்தும் விவரித்தார். மேலும் இந்தியாவில் சிறந்த மருத்துவர்கள் இல்லாத நிலையை போக்க ஒரு இந்து பெண் மருத்துவராவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அவருக்கு பாராட்டுகளும் நிதியும் வந்து குவிந்தன. 1884-ம் ஆண்டு ஆனந்திக்கு 19 வயதிருக்கையில் கொல்கத்தாவிலிருந்து நீயூயார்க்கிற்கு கப்பலில் பயணித்தார். 

1886-ம் ஆண்டு பென்சில்வேனியா மகளிர் மருத்துவக் கல்லூரியில் (தற்போது ட்ரெக்சல் மருத்துவக் கல்லூரி) கெய் ஒகாமி, தபத் இஸ்லாம்பூலி ஆகிய இரு பெண்களும் ஆனந்தியுடன் சேர்ந்து பட்டம் பெற்றனர். இந்த மூன்று பெண்களும் அவரவர் நாட்டின் முதல் பெண் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஆனந்தியை ராணி விக்டோரியா பாராட்டினார்

அமெரிக்காவின் குளிரான வானிலையும் மாறுபட்ட உணவு வகைகளும் அவரது உடல்நலத்தை மேலும் மோசமாக்கியது. அவருக்கு காசநோய் ஏற்பட்டது. இருப்பினும் ’ஆரிய இந்துக்கள் மத்தியில் மகப்பேறு மருத்துவம்’ என்கிற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்பித்து 1886-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி எம்டி பட்டம் பெற்றார். இந்தச் செய்தி எங்கும் பரவி ராணி விக்டோரியா ஆனந்திக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அவர் இந்தியா திரும்பியபோது பலத்த கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்டார். அவர் தனது நாட்டில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரியை துவங்க விரும்பினார்.

”1886-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஒரு இளம் மருத்துவர் கப்பலில் வந்து இறங்கி கோல்ஹாபூர் பகுதியின் ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் பிரிவிற்கு பொறுப்பேற்க ஆவலாக இருந்தார். அவர் இந்தியாவின் முதல் இளம் பெண் மருத்துவராவார். அவரது பெயர் ஆனந்தி ஜோஷி. அவரது வாழ்க்கை தைரியமும் விடாமுயற்சியும் நிறைந்ததாகும்,” என்று கூகுள் குறிப்பிட்டிருந்தது.

5. நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய சோகமான மரணம்

அவர் இந்தியா திரும்பிய ஓராண்டிற்குள்ளாகவே 1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது 22-வது பிறந்தநாள் நெருங்கும் சமயத்தில் காசநோய் தாக்கத்தால் உயிரிழந்தார். அவரது இறப்புச் செய்தியைக் கேட்டு நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளானது. அவரது வாழ்க்கைக்கும் அவரது பணிக்கும் நாடே மரியாதை செலுத்தியது. 

”ஜோஷியின் வாழ்க்கை மிகவும் இளம் பருவத்திலேயே முடிந்துவிட்டது. அவரது 22-வது பிறந்தநாளுக்கு முன்பே அவர் காசநோய் தாக்கத்தால் உயிரிழந்தார். எனினும் அவரது மரபும் பல தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்காக அவர் வகுத்த பாதையும் இன்று வரை தொடர்ந்து வருகிறது. வீனஸில் உள்ள எரிமலைவாய்க்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது,” என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.

ஆனந்தியின் அஸ்தி தியோடிசியா கார்பெண்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் அந்த அஸ்தியை நியூயார்க்கின் போக்கிப்ஸில் இருந்த அவரது குடும்ப கல்லறையில் பாதுகாத்தார். மகாராஷ்டிர அரசாங்கம் பெண்களின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் இளம் பெண்களுக்காக அவரது பெயரில் ஒரு ஃபெலோஷிப்பை உருவாக்கியது. சமூக அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் நிறுவனமான ஐஆர்டிஎஸ் என்கிற லக்னோவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ’ஆனந்திபாய் ஜோஷி அவார்ட் ஃபார் மெடிசன்’ என்று அவரது பெயரில் விருதினை வழங்கி வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share
Report an issue
Authors

Related Tags