சில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்!

  27th Jun 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  உணவு என்று வந்துவிட்டால் அதற்கு எப்பொழுதுமே மக்களிடையே வரவேற்பு இருக்கும். அண்மையில் இவர் என்னை தொடர்பு கொண்டு தங்களைப் பற்றி சொன்னபோது, இதேப் போல் பலரும் உணவுத்துறையில் இருக்கையில் இவர்கள் அப்படி என்ன வித்தியாசமாக செய்துவிடப் போகிறார்கள் என்றே நினைத்தேன். ஆனால் அவரிடம் இருந்த துறை பற்றிய தெளிவும், தொழிலை கொண்டு செல்லவேண்டிய புரிதலும், முக்கியமாக இத்தொழில் முனைவு வழியே வீட்டிலுள்ள பெண்களுக்கு வருவாய் ஈட்ட உதவுவதன் மூலம் நிதி சுதந்திரத்தையும், சுய தைரியத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தித்தரும் நோக்கம் என்னை பெரிதும் கவர்ந்தது.

  கார்த்திகேயன்; இவர் தனது வழிகாட்டியான எம்விஎஸ் மணி (நிறுவனர், சிஇஓ மற்றும் முதலீட்டாளர்) உடன் இணைந்து ‘போஜன் எக்ஸ்பிரஸ்’ என்கிற முயற்சியை துவங்கியுள்ளார். இந்நிறுவனம் அலுவலகம் செல்வோருக்கு வார நாட்களில் வீட்டில் சமைக்கப்பட்ட ஃப்ரெஷ்ஷான உணவை மலிவு விலையில் வழங்கும் சேவையளிக்கிறது. 

  கார்த்திகேயன் தான் ஒரு சமூக தொழில்முனைவோராக அழைக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறார். ’போஜன் எக்ஸ்பிரஸ்’ அவருக்கு உற்சாகம் தரக்கூடிய ஒரு மாறுபட்ட முயற்சியாகும்.

  ”ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனித வளத்துறையில் என்னுடைய வழிகாட்டி எம்விஎஸ் மணி அவர்களின் கீழ் பணிபுரியத் துவங்கினேன். பின்னர் கேரளாவிற்கு மாற்றலாகி ஒரு உணவகத்தைத் துவங்கினேன். அது சிறப்பாக செயல்பட்ட போதும் வணிகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் அந்த முயற்சியை கைவிட்டேன்.” 

  தொழில் புரிவதில் ஆர்வம் இருந்ததால் பயணம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட திட்டமிட்டு மின் வணிக தளம் ஒன்றின் இணை நிறுவனரானேன். வட்டியில்லா விடுமுறை கடன் என்பதை அறிமுகப்படுத்தினேன். இந்தத் தொழில் முயற்சியும் சிறப்பாக இருந்தபோதும் மீண்டும் உணவுத் துறையிலேயே நுழையும் எண்ணம் ஏற்பட்டது,” என்று தன் முன்முயற்சிகள் குறித்து பகிரத்தொடங்கினார் கார்த்திகேயன்.

  போஜன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் கார்த்திகேயன்

  போஜன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் கார்த்திகேயன்


  கார்த்திகேயனின் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட அனுபவத்திலிருந்தே போஜன் எக்ஸ்பிரஸ் உருவானதாக கூறுகிறார். அவரது தாத்தா மற்றும் மாமா இருவருக்கும் உணவை வழங்குவதற்காக சிறு வயதில் ரயில் நிலையத்தில் இருக்கும் ஸ்டீம் ஓட்டுநரை சந்தித்து உணவை ஓப்படைப்பாராம். அதே போல் நேரம் கணக்கிடப்பட்டு சிற்றுண்டியும் அனுப்பப்படும்.

  ”நான் வசிக்கும் இடத்திலிருந்து 140 கிலோமீட்டர் தூரம் இருக்கும் இடத்திற்கு உணவை விநியோகிப்பது சாத்தியம் என்றால் 40 கிலோமீட்டர் மட்டுமே இருக்கும் சென்னை போன்ற நகரில் ஏன் அவ்வாறு விநியோகிக்க முடியாது என சிந்தித்தேன்...”

  அவர் தனது தகவல் தொழில்நுட்பத் திறன் மற்றும் வணிகத் திறனை மெருகேற்றிக்கொண்டு போஜன் எக்ஸ்பிரஸ் துவங்கினார்.

  போஜன் எக்ஸ்பிரஸ் 

  2015ல் துவங்கப்பட்ட உணவு-டெக் ஸ்டார்-அப் நிறுவனமான ‘போஜன் எக்ஸ்பிரஸ்’ தென்னிந்திய உணவு வகைகளை குறிப்பாக அலுவலகம் செல்லுவோருக்கும், வீடுகளுக்கும் அளிக்கிறது. இதன் சிறப்பே 100 % சைவ உணவுகளை வீட்டு ருசியில் அளிப்பதாகும்.

  “எங்களுடன் இணைந்துள்ள சென்னையைச் சேர்ந்த 25க்கும் அதிகமான பெண்கள் வீட்டில் இருந்து சமைத்த உணவினை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் அதை எடுத்துச் சென்று அலுவலகம் மற்றும் வீட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். எங்களுக்காக சமைக்கும் அனைத்து பெண்களும் எங்களின் சுகாதார விதிமுறைகளின் கீழ் கட்டுப்பட்டு உணவு அளிப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்றார் கார்த்திகேயன்.

  சமைப்பதில் விருப்பமுள்ள பெண்களை தேர்ந்தெடுத்து, இவர்கள் அளிக்கும் முறையில், கொடுக்கப்பட்ட அளவுகளில் சமைத்து தருவதால், போஜன் எக்ஸ்பிரசில் இணைந்துள்ள ஒவ்வொரு பெண்மணியும் மாதம் தங்களுக்கான வருவாய் ஈட்ட வழிகிடைக்கிறது.

  “போஜன் எக்ஸ்பிரஸ் ஒரு மாறுபட்ட விதத்தில் பெண்கள் மேம்பாட்டிற்கு உதவுகிறது. அவர்களுக்கு இலவசமாக உரிமை வழங்கி அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.”

  ஒரு பெண்ணை மேம்படுத்தினால் ஒரு குடும்பத்தையே மேம்படுத்தியதாக பொருள்படும். பயன்படுத்தப்படாமல் இருந்த பெண்களின் சக்தி பயன்படுத்தப்பட்டு படிப்படியாக வளம் நிறைந்த சுற்றுச்சூழல் உருவாக்கப்படுகிறது. தற்போது சென்னை மற்றும் சுற்றியுள்ள சுமார் 40 இடங்களில் (ஆவடி, அம்பத்தூர், நங்கனல்லூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட) இவர்களின் உணவு விநியோகிக்கப் படுகிறது. 

  image


  பெண்களை ஈடுபடுத்தி ஸ்டார்ட்-அப் தொடங்கியதன் காரணத்தை கேட்டதற்கு கார்த்திகேயன் கூறுகையில்,

  “நான் ஒரு சமூக தொழில்முனைவர். நான் லாப நோக்கோடு செயல்படவில்லை. நான் வருவாய் ஈட்டுவதற்கு நீண்ட நாட்களாகும். ஆனால் ஒரு பெண்ணின் மேம்பாட்டிற்கு நான் வாய்ப்பளிப்பதால் ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது. இந்தக் கூடுதல் வருவாயைக் கொண்டு பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வி வழங்கலாம். குடும்பத்தின் மருத்துவ பராமரிப்பிற்கு உதவும். அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்கி சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தருகிறேன்.”

  பெண்களுக்கு உணவு தயாரிப்பு தொடர்பான செய்முறை வழிகாட்டல்களை போஜன் எக்ஸ்பிரஸ் வழங்குகிறது. இவர்கள் ஒரு மாதத்திற்கு சுமார் 45 சாப்பாடுகளைத் தயாரிக்க நூறு சதவீத முன்பணம் வழங்கப்படும். 

  “மக்கள் அதிகம் விரும்பும் சுவைகளையும் செலவுகளையும் கருத்தில் கொண்டே இந்தச் செய்முறை வழிகாட்டல்கள் அளிக்கப்படும். ஒரு பெண் உணவு தயாரிப்பில் போதுமான லாபம் கிடைக்கவில்லை என புகாரளித்தால் நான் மூலப்பொருட்களின் அளவை உடனடியாக ஆராய்ந்து பார்ப்பேன்.” 

  இவ்வாறு கொடுக்கப்படும் பகுதிகளைக் கொண்டு உணவு தயாரிப்பது ஆரம்பத்தில் சற்று கடினமாகவே இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு தனிப்பட்ட சமையல் பாணி இருக்கும். ஆனால் சில நாட்களில் அவர்களுக்கு பழகிவிடும், என்கிறார்.

  ”ஒரு பெண்ணுக்கு உண்மையிலேயே பணத்தேவை உள்ளதா என்பதையும் வாடிக்கையாளருக்கு உண்மையிலேயே உணவுத் தேவை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்கிறோம். நானே இதில் நேரடியாக செயல்படுகிறேன். வாடிக்கையாளர்களுடன் உரையாடி அவர்களது சந்தேகங்களை தீர்த்துவைக்கிறேன்,” என்கிறார் கார்த்திகேயன்.

  தினமும் வெவ்வேறு மெனு தயாரிக்கப்படுகிறது. இவர்கள் தயாரிக்கும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அடுக்குகளாக இருக்கும் ஸ்டீல் பாத்திரத்தில் உணவு பேக் செய்யப்பட்டு பரிமாறப்படுகிறது.

  ”இத்தகைய ஸ்டீல் பாத்திரமும் சிறு வயதை நினைவூட்டுகிறது. அதே மாதிரியான ஸ்டீல் அடுக்குகளைத் தயாரிக்கும் சரியான உற்பத்தியாளரைக் கண்டறிவதற்கு பல மாதங்கள் ஆனது. தற்போது சிறப்பு ஸ்டீல் அடுக்குகளை உற்பத்தி செய்பவர் எங்களுடன் இணைந்துள்ளார், ப்ளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்துவிட்டோம்.” 
  image


  முதலீடு மற்றும் விரிவாக்கம்

  10 லட்ச ரூபாய் முதலீடாக துவங்கப்பட்ட போஜன் எக்ஸ்பிரஸ், மேலும் ஏழு முதலீட்டாளர்களிடம் பெற்ற விதை நிதியை கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக மெல்ல விரிவடைந்துள்ளது.

  “3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண ஹோட்டலை போல் இயங்கியபோது, மாத வருவாய் சுமார் 7 லட்சமாக இருந்தது. எங்கள் பிசினஸ் மாடலை வீட்டு விநியோக கேட்டரிங் முறையாக மாற்றியதில், ஒரு நாளைக்கு 100க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு 3 ஏரியாக்களுக்கு மட்டும் உணவு வழங்கி தொடக்கத்திலேயே 1.5 லட்ச ரூபாய் மாத வருவாய் ஈட்டத்தொடங்கினோம். இப்போது 40க்கும் அதிகமான இடங்களுக்கு உணவு தருவதால், இதுவரை 14 ஆயிரம் வாடிக்கையாளர்களை நாங்கள் இந்த 3 ஆண்டுகளில் பெற்றுள்ளோம்.”

  உணவு வழங்கலை அதிகரிக்க இவர்கள் இன்னும் சில மாதங்களில் ஒரு மாதத்தில் 500க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற முயற்சித்து வருகின்றனர். 

  ”ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதன் மூலமும் முகநூல் வாயிலாகவும் நாங்கள் வளர்ச்சியடைந்து வருகிறோம். எங்களது தரமே எங்களை விளம்பரப்படுத்துகிறது,” என்றார் கார்த்திகேயன்.

  அது மட்டுமல்லாது அடுத்த ஐந்தாண்டுகளில் தென்னிந்தியாவில் சிறந்த கேரியர் சேவையளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பதே அவரது இலக்காகும். 

  சவால், போட்டியை சமாளுப்பது எப்படி?

  பலரும் இத்துறையில் இருந்தாலும் இவர்கள் தங்களுக்கென ஒரு பாணியை பின்பற்றுவதால் மக்களிடையே நல்ல வரவேறுப்பு உள்ளது என்கிறார் கார்த்திகேயன். இதற்கு தங்களின் முதலீட்டாளர் மற்றும் உணவுத்துறையின் வல்லுனரான ராமகிருஷ்ணனின் உதவி பெரிதும் உதவியதாக தெரிவித்தார்.

  “பல பெண்கள் அவரவரின் வீட்டில் இருந்து சமைத்தாலும், போஜன் எக்ஸ்பிரஸ் தயாரித்துள்ள ஒரே செயற்முறையைத்தான் அவர்கள் பின்பற்றி சமைக்கின்றனர். இதுவே ஒரே சுவை மற்றும் அளவையும் தருகிறது, தரமும் பாதுகாக்கப்படுகிறது.”

  அடுத்து முக்கிய சவால், டெலிவரி. இது எல்லா ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்கிறார். அலுவலகம் செல்வோருக்கு சரியான நேரத்தில் உணவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய போஜன் எக்ஸ்பிரஸில் பெண்களால் இயக்கப்படும் தனியார் ரிக்‌ஷா சேவைகளுடன் இணைந்து செயல்படுகின்றது. 

  செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கிறோம். சமையலுக்கு வழங்குவதற்காக சில காய்கறி விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றோம்.

  தற்போது காலை உணவு அதாவது லன்ச் மற்றும் விநியோகிக்கும் இவர்கள், விரைவில், டின்னரும் வழங்கப்போகிறார்கள். வருங்கால திட்டமாக இன்னும் 100க்கும் அதிகமான பெண்களை தங்கள் நிறுவன பார்ட்னர்கள் ஆக்கி அவர்களுக்கு வருவாய் ஈட்ட வாய்ப்பளிக்க உள்ளதாக கூறுகிறார். 

  வீட்டில் இருந்தபடி சமையலில் ஆர்வமுள்ள பெண்கள் ‘போஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற தளத்தில் தங்களுடன் இணைய விருப்பம் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுக்கிறார் கார்த்திகேயன். 

  சிறந்த தரம், சரியான அளவு மற்றும் நேரத்துக்கு பேமண்ட் இதுவே சமைத்துத்தரும் பெண் பார்ட்னர்களுக்கு இவர்கள் தரும் உத்திரவாதம். அதேப்போல் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த உணவை, சரியான நேரத்தில் டெலிவரி செய்வதே போஜன் எக்ஸ்பிரஸ் வெற்றியின் தாரக மந்திரம். 

  வலைதள முகவரி: போஜன் எக்ஸ்பிரஸ்

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  Our Partner Events

  Hustle across India