ஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 2
ஒரு தொழில்முனைவோராக என் ஸ்டார்ட்அப்பிற்கு தேவையான முதல் தேடும் பயணத்தில் நான் கற்ற பாடங்களும் அனுபவங்களும்...
எனது NEEDS திட்ட முயற்சியில் விக்கிரமாதித்தனாக மீண்டும் பல வங்கிகளை ஏறி இறங்கினேன். மதுரையில் ஏறாத வங்கி இல்லை. பல வங்கிகளில் தருகிறோம் என்று சொல்லவில்லை தரமாட்டோம் என்றும் சொல்லவில்லை தொங்கலில் போட்டார்கள். விண்ணப்பித்து பத்திருபது நாட்களுக்கு பிறகு TMB வங்கி மேலாளர் மட்டும் எங்களை அழைத்து அன்பாக மறுத்து வழங்க முடியாததிற்கு வருந்தினார். வேதனையாக இருந்தாலும் கூப்பிட்டு சொன்னாரே அது எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்தது. அதற்கடுத்து அந்த முயற்சியை கைவிட்டேன். பிறகு மீண்டும் மனைவி தான் கைகொடுத்தார். நண்பர்கள் இருவர் உதவினார்கள். கொஞ்சம் மீண்டு எங்கள் ஸ்டார்ட்அப்பின் மார்கெட்டிங்கில் கவனம் செலுத்தினேன். நம்பிக்கை கொடுத்தது.
கடந்த ஆறு மாதங்களாக எந்த புதுகடன்களும் வாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். நடுவில் திடீர் செலவுகள் வரும். திணறுவேன். எங்கிருந்தாவது ஒரு உதவி வந்து சேரும். நிறைய அனுபவங்கள், கற்றலுக்கு பின் மீண்டும் எங்கள் ஸ்டார்ட்அப்பின் திட்டங்களை மறு உருவாக்கம் செய்தேன். NEEDS ஐ விட்டுவிட்டு இம்முறை SEED Funding தேடுவதில் கவனம் செலுத்தினேன். அவை நல்ல பலன் கொடுக்கிறது.
Seed Funding என்பது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் முழுமையான திட்டத்துடன் இருக்கும். ஆனால் செயல்வடிவம் பெற்று இருக்காது. செயல்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும். அதை நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் சுற்றுவட்டத்தில் ஆரம்பித்து Angel Investors வரை தேடுவது தான் இந்த வகை. மேல்தட்டு தொழில் வர்க்கத்தில் இது கொஞ்சம் எளிது. அகியோ மோரிட்டா ஒரு சிறந்த உதாரணம். தன் தந்தையாரிடம் சென்று இப்படி ஒரு எலெக்ட்ரானிக் ரேடியோ தொழில் நிறுவனம் ஆரம்பிக்க இருக்கிறோம் என்றவுடன் தந்தையும் கொஞ்சம் நம்பிக்கையுடன் கொடுத்து உதவினார். அதுதான் பின்னாளில் சோனி நிறுவனமாக வளர்ந்தது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ்க்கு அவரது குடும்பம் தான் ஒரு லட்சம் டாலர் பணம் கொடுத்து உதவியது. அதே போல எலன் மஸ்க் கதையிலும் அவரது குடும்பம் தான் முதல் முதலீட்டாளர்கள்.
கூகிள் நிறுவனம் ஆரம்பிக்கும்போது அது ஒரு காலேஜ் ப்ராஜெக்ட் தான். ஆனால் அவர்கள் ஆசிரியர்களுக்கு அது வெற்றி பெரும் என்று தோன்றியது. ஆகவே பேராசிரியர் ஒருவரே முதலீடு செய்தார். இங்கே IIT, IIM தவிர வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் சூழல் இல்லை. இங்கே உள்ள கல்லூரிகள், பல்கலைகழகங்கள் மாணவர்கள் வேலைக்கு செல்வதற்கே உதவுகிறார்கள். வேலை தேட Campus Interview நடக்கும். தொழில் தொடங்க தொழில் முதலீட்டாளர்களுடன் Campus Interview எங்காவது நடந்திருந்தால் அபூர்வம்.
இந்தியாவில் Seed Funding-ல் இருக்கும் முக்கிய பிரச்சனை Startup Funding குறித்த புரிதல் இல்லாதவர்கள் செய்யும் முதலீட்டிற்கு ஐம்பது சதவீதம் பங்கு கேட்பது. தங்க முட்டையிடும் வாத்து கதை ஞாபகம் வருகிறதா... அதே அதே. உண்மையில் உலக நாடுகளில் இந்த Seed Funding Stage-ல் ஒரு லட்சம் டாலர்கள் முதல் ஐந்து லட்சம் டாலர்கள் வரை பெறுவார்கள். அதற்கு ஈடாக சராசரியாக 6%, அதிகபட்சமாக 10% பங்குகள் தான் கேட்பார்கள். அதிகபட்சம் 15% இருக்கும். அது தான் சரி. அப்போது தான் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனர் அடுத்தடுத்த முதலீட்டு படிநிலையில் வரும் முதலீட்டாளர்களுக்கு பங்கு கொடுத்து நிறுவனத்தின் முதலீட்டை பெருக்க முடியும். முதல் ரவுண்டிலேயே பெரிய பங்கை கொடுத்துவிட்டால் அடுத்து யாரும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பதே உண்மை.
மேலும் அடுத்தடுத்து முதலீடு பெருக பெருக முதல் முறையாக முதலீடு செய்தவரின் பங்கு மதிப்பு கூடிக்கொண்டே தான் செல்லும். ஒரு நல்ல நிறுவனத்தில் Seed Funding செய்வதென்பது மிக அபரிதமான லாபத்தை கொடுக்கும். நல்ல உதாரணம் ராம்ஸ்ரீராம் கூகிள் நிறுவனம் ஆரம்பிக்கும் போது ஒரு லட்சம் டாலர்கள் ( அன்றைய மதிப்பில் 40 லட்சம் ரூபாய்) முதலீடு செய்கிறார். அதற்காக அவருக்கு 5% பங்கு கொடுக்கப்பட்டது. அவரைப் போலவே இன்னும் மூவர் முதலீடு செய்கிறார்கள். பின்னாளில் கூகிள் வளர வளர ராமின் பங்கு மதிப்பு பல மடங்கு எகிறியது. இன்று அவரிடம் உள்ள பங்கின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள் (10,000 கோடி ரூபாய்களுக்கும் அதிகம்) இந்த அளவிற்கு ரிட்டர்ன் வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்காது.
இந்தியாவில் இது போன்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கிறது. இப்போது தான் சில தனிநபர்களின் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. ஆனாலும் மிக அதிக அச்ச உணர்வு இருக்கிறது என்று கருதுகிறேன். ஆனால் என் அனுபவத்தில் சொல்கிறேன் இந்திய இளைஞர்களை விட நம்பிக்கையான திறமையான தொழில்முனைவோர்கள் உலகில் இல்லை என்பேன். ஏனென்றால் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு இங்கிருக்கும் சவால்களை விட வேறு எங்கும் கிடையாது. அத்தனை சவால்களையும் தாண்டி இரண்டு வருடம் வெற்றிகரமாக நடத்திவிட்டாலே கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம். சரியான முதலீடு மட்டும் கிடைத்துவிட்டால் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவார்கள். ஒருவரே முதலீடு செய்யலாம் அல்லது 15பேருக்கு மிகாமல் பலரும் முதலீடு செய்யலாம். பலர் செய்தால் அதற்கு பெயர் Crowd Funding.
இந்தியாவில Crowd Funding பொதுக்காரியங்களுக்கு அல்லது சேவைகள் செய்ய மட்டும் தான் என்று கருதப்படுகிறது. அதிகபட்சம் சினிமாவிற்கும், புத்தகம் வெளியிடவும் செய்யப்படுகிறது. இங்கே உள்ள Crowd Funding இணையதளங்களும் அப்படிதான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் உலகநாடுகளில் ஸ்டார்ட்அப்புகள் Crowd Funding மூலம் வெற்றிகரமாக உருவாகி இருக்கின்றன. இதில் Limited, Unlimited என்று இரண்டுவகை உண்டு. எனக்கு இத்தனை பேர் தான் முதலீடு செய்ய வேண்டும் இவ்வளவு தான் வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கொரு Campaign நடத்தி கேட்பது.
இரண்டாம் வகை இத்தனை பேர் என்றோ, இவ்வளவு தான் வேண்டுமென்றோ கணக்கு கிடையாது. பெரிய அளவில் பிரச்சாரம் செய்து பலரிடமும் திட்டத்தை சொல்லி முதலீடு கோருவது. The Dash என்ற Wireless Smart-in Headphone Company சமீபத்தில் Crowd Funding மூலமாக ஐம்பது நாளில் 34 லட்சம் டாலர்கள் (20 கோடி ரூபாய்களுக்கு மேல்) திரட்டினார்கள். இந்தியாவில் இரண்டுவருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய Campaign நடந்தது மத்திய அமைச்சர்களின் ஆதரவோடு. Freedom 251 என்ற பெயரில் 251 ரூபாய்க்கு மொபைல் போன் தருகிறோம். முன்பதிவு செய்யுங்கள் என்று அறிவித்தார்கள். அது என்னவானது என்பது பலரும் அறிந்ததே. ஆகவே Unlimited வகையறா Crowd Fundingல் மக்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். Seed Funding கதைக்கு வருவோம்.
ஓகே நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் Seed Funding செய்ய விரும்புகிறீர்கள். ஒரு நல்ல ஸ்டார்ட்அப் நிறுவனம் என்பதை எப்படி அடையாளம் காணலாம்? அடுத்த பதிவில் சொல்கிறேன்.
(கட்டுரையாளர்: கார்த்திகேயன். இவர் ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ், நிறுவனத்தின் நிறுவனர். இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)