பதிப்புகளில்

மக்கள் மன்றம், நீதிமன்றம் இரண்டிலும் தோற்றுப் போனாரா சசிகலா?

Induja Raghunathan
14th Feb 2017
Add to
Shares
637
Comments
Share This
Add to
Shares
637
Comments
Share

இன்று காலை 10.45 மணி இருக்கும், நான் வசிக்கும் குடியிருப்பில் பணிபுரியும் தீவிர ஜெயலலிதா தொண்டரும், அஇஅதிமுக கட்சி அபிமானியான பெண்மணி என்னிடம் ஓடிவந்து, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்ததை பூரிப்புடன் சொல்லி இனிப்பு வழங்கிவிட்டு போனார். சசிகலா முதல்வராக வரமுடியாமல் போனதை எண்ணி அவருக்கு அப்படி ஒரு பேரானந்தம். வழக்கின் முதல் குற்றவாளி அவருக்கு பிடித்த அம்மாவாக இருந்தாலும் இன்று அவருக்கு இந்த வழக்கின் முடிவில் அளவில்லா சந்தோஷம். இது அவரின் வெளிப்பாடு மட்டுமல்ல, இன்றைய வழக்கின் தீர்ப்பு மட்டுமே சசிகலாவின் அரசியல் வருங்காலத்தை நிர்ணயிக்கமுடியும் என்பதால் நேற்று முதல் பலரும் இதே கருத்தை, அதற்கான முடிவை உற்றுநோக்கி காத்திருந்தனர். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் ஒருவித குழப்பநிலையும், அரசு இயந்திரங்கள் சரிவர இயங்கமுடியாமலும் இருந்து வந்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வந்த வதந்திகள், மறைக்கப்பட்ட உண்மைகள் என்று மக்களின் மனதிலும் கேள்விகளாக எழுந்தது. முதலில் ஜெயலலிதாவின் உடல்நலப் பிரச்சனையின் காரணமாக அவரிடம் இருந்த இலாக்காக்கள் மட்டும் பன்னீர்செல்வத்துக்கு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு முறை ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதெல்லாம் தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கட்சியினர் கொண்ட நம்பிக்கை மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசியான நபர் என்ற அடிப்படையிலே இதுவும் பார்க்கப்படது. டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்புக் காரணமாக, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, மீண்டும் மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் அஇஅதிமுக சட்டமன்ற வேட்பாளர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அன்று இரவே பதவி ஏற்றார். 

image


60 நாட்கள் முதல்வராக சுயமாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்களின் ஆதரவு கூடத்தொடங்கியதை வெகுவாக பார்க்கமுடிந்தது. வர்தா புயல், கிருஷ்ணா நதி நீருக்காக ஆந்திரா சென்றது முதல், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசுடன் நேரிலும், தொலைப்பேசியிலும் தொடர்பு கொண்டு இறுதியில் சட்டசபையில் சட்டமாகவும் நிறைவேற்றியது வரை, ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்திய இளைய சமுதாயத்தினரிடையே அவருக்கு நன்மதிப்பை பெற்றுத்தந்தது. இதனிடையே, அஇஅதிமுக கட்சியின் இடைக்கால பொது செயலாளராக, ஜெயலலிதாவின் 33 வருட தோழியும், இதுவரை அரசியல் உலகில் வெளிப்படையாக வெளியே வராமல் இருந்தவரும் ஆன விகே.சசிகலா பொதுக்குழுவில் ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஒரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், மறுபக்கம் கட்சியின் பொது செயலாளராக விகே.சசிகலாவும் இருந்து வந்தாலும், இரு பொறுப்புக்களையும் ஒருவரே வகிக்கவேண்டும் என்று குரல்கள் அஇஅதிமுக கட்சியில் வெடிக்கத்தொடங்கியது. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் நீடிக்க அவரின் கீழ் வரும் கேபினட் அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் கூட வெளிப்படையாக சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று சொல்லி வந்தனர். 

ஜெயலலிதா கைக்காட்டிய தற்காலிக முதல்வராக இரு முறை இருந்த ஓ.பி.எஸ் அப்போது சுயமாக இல்லாமல் அவரது கைப்பொம்மையாக இருந்தவர் என விமர்சிக்கப் பட்டிருந்தாலும், ஜெ’வின் இறப்பிற்கு பின் முதலமைச்சராக பதவி ஏற்ற அவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் தெரிந்தது. யாருடைய கட்டுப்பாட்டின்றி, சுதந்திரமாக, எளிதில் அணுகக்கூடிய மனிதராக பார்க்கப்பட்டார். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த ஆரம்பித்ததை கண்டு பலரும் அவரின் அணுகுமுறையை பாராட்டத் தொடங்கிய நேரமே, சசிகலா முதல்வராக வேண்டும் என்ற ஆதரவுக் குரல் பெருகியது. 

சென்னை அடுத்த எண்ணூரில் ஏற்பட்ட எண்ணைக் கசிவு இடத்தை பன்னீர்செல்வம் பார்வையிட்டு கொண்டிருந்த அதே வேளையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைப்பெற உள்ளதாக செய்தி வெளியாகியது அப்போதே சந்தேகத்துக்கு ஏற்படுத்தியது. இருப்பினும் பன்னீர்செல்வம் அக்கூட்டத்தின் தலைவராக கலந்துகொண்டு, விகே.சசிகலாவை முதலமைச்சராக முன்மொழிந்தார். முதல்வர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும் அதற்கு சொந்தக் காரணங்கள் இருப்பதாகவும் ஆளுனருக்கு கடிதமும் அளித்தார் ஓபிஎஸ்.  

இப்படி அடுத்தடுத்து நடந்த அரசியல் மாற்றங்களை கவனித்து வந்த மக்கள், சசிகலா முதல்வராக அஇஅதிமுக’வினர் முடிவெடுத்ததை கடுமையாக விமர்சித்தனர். சமூக ஊடகங்களில் அவருக்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றதையும், பொதுஜன மக்களிடமும் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதும் பலமுறை வெளிப்பட்டது. 

மவுனமாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அடுத்த இரு தினத்தில் அதிரடியாக செய்த அந்த நிகழ்வே தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்லவேண்டும். தனி ஒருவனாக, மெரினாவில் உள்ள ஜெயாவின் நினைவிடத்துக்கு சென்று தியான நிலையில் சுமார் 40 நிமிடங்கள் அமர்ந்து ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்தார். தியானம் கலைத்த அவர், வாய் திறந்து சொல்லவிருப்பது என்ன? ஜெயலலிதாவின் சாவு குறித்த மர்மங்களை உடைத்தெறிவாரா? சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவாரா? இப்படி பலரும் விவாதிக்க, அவர்களின் எண்ணத்தை பிரதிபலித்து அவரும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பற்றியும், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டனான தான் மவுனத்தை கலைக்க முடிவு செய்து அதிரடிகளை அடுக்கிவைத்தார். 

சசிகலா பொதுச் செயலாளர் ஆனபோது அதற்கு ஒப்புக்கொண்ட தாம், அவரை கட்சியினர் முதலமைச்சராக ஆக்கவேண்டும் என்பதற்காக தன்னை அவமானப்படுத்தியதாகவும், வற்புறுத்தி ராஜினாமா கடிதம் கொடுத்ததாக மீடியாக்கள் முன் சொன்னது, அஇஅதிமுக பிளவிற்கான முதல் அடியாகவே பலரால் நோக்கப்பட்டது. பொது செயலாளராக சசிகலா இருப்பதில் பிரச்சனை இல்லை என்றும் முதல்வராக அவர் ஆவதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாததே காரணம் என்பதை தொடர்ந்து சொல்லிவரும் ஓபிஎஸ்’ இன் கருத்துக்கள் பொது மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஓபிஎஸ் தனியாக வெளியேறினாலும், அவரை தொடர்ந்து பல சட்டமன்ற உறுப்பினர்களும், எம்பி’க்களும், அஇஅதிமுக தொண்டர்களும் அவருக்கு ஆதரவு தந்தது அவரின் பேச்சில் உண்மை இருப்பதை மேலும் வலுப்பெற வைத்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக பேசிவந்த சசிகலா மற்றும் அவரை ஆதரிக்கும் பெரும்பாலான 120+ எம்எல்.ஏ’க்கள் அவரையே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என முழங்கினர். 

சென்னையில் இருந்து பல கிமி தூரத்தில் உள்ள கூவத்தூர் என்ற ரிசார்டில் எல்லா எம்எ.ல்.ஏ’ க்களையும் தங்கவைத்து தொடர்ந்து தனக்கிருக்கும் ஆதரவை வெளிப்படுத்திய சசிகலா, மக்கள் மத்தியில் சென்றோ, சட்டமன்ற வேட்பாளர்களின் தொகுதி களவிவரங்களை கேட்டு நடக்கவோ தயாராக இல்லை. இதனிடையே போர்கொடி தூக்கிய ஓபிஎஸ்’-சை பார்க்க தினம் தினம் வெகுஜன மக்கள் வந்து ஆதரவு தந்தையும் நாம் பார்த்தோம்.

கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஜெயலலிதாவின் வழியில் சசிகலாவும் கடந்த இரண்டு மாதங்களாகவும், ஜெயா மருத்துவமனையில் இருந்தபோதும் எந்த ஒரு சலசலப்பின்றி நடத்திவந்ததை பாராட்டவேண்டிய அதே சமயத்தில், கட்சியின் மூத்த உறுப்பினரும், ஜெயலலிதாவின் அபிமானியான பன்னீர்செல்வத்தை திடீரென முதல்வர் பதவியில் இருந்து விலகச்செய்து தான் அந்த இடத்தை அடைய முயற்சித்ததே கட்சியின் பிளவிற்கு வழிசெய்தது என்பதை உணரவில்லை. எதிர்கட்சிகள் எதிரில் பெரும்பான்மையோடு வெற்றிப்பெற்ற அஇஅதிமுக ஏளன நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும் அந்த ஒரு காரணத்தினால் தான் என்றும் தனது முதல்வர் கனவை சற்று தள்ளிப்போட்டிருக்க வேண்டும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. 

இரும்பு மனுஷியாக வலம்வந்து அரசியலில் பல சவால்களையும், வழக்குகளையும் ஒரு பெண்ணாக சந்தித்து, தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றிப்பெற்ற ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் தனக்கு அடுத்த நிலையில், தற்காலிக முதல்வராக பன்னீர்செல்வம் ஒருவரை மட்டுமே நியமித்தார். அவரைத் தவிர வேறு எவரையும் அரசியலில் கைக்காட்டாத சூழ்நிலையில் திரைமறைவில் அவருக்கு நிழலாகவும், பலமாகவும் இருந்த சசிகலா, தானே அந்த அரசியல் வாரிசு என்று கூறிக்கொண்டது பலருக்கும் நெருடலாக இருந்த விஷயம். 

ஜெயலலிதாவிற்காக 33 வருட தியாக வாழ்க்கை வாழ்ந்ததாக சசிகலா குறிப்பிடுவதை மறுக்கமுடியாது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு, மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் கோட்பாடுகளை நிறைவேற்றமுடியாமல் போனதே சசிகலாவின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம். மேலும் இன்று வந்துள்ள சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பும் அவரின் அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கி மக்கள் எனும் மாமன்றத்தில் அவரை குற்றவாளியாக நிறுத்தியுள்ளது. 

Add to
Shares
637
Comments
Share This
Add to
Shares
637
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக