பதிப்புகளில்

’உங்களுக்கு ஏற்படும் கடினமான சூழலுக்கான பதில் நீங்களே’– மானசி ஜோஷி!

கார்ப்பரேட் பிரிவில் மென்பொருள் பொறியாளராக வாழ்க்கையை வாழ்ந்து வந்த மானசி ஜோஷி, 22 வயதிருக்கும் போது ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் கை, காலை இழந்தார். 

12th Jul 2018
Add to
Shares
94
Comments
Share This
Add to
Shares
94
Comments
Share

மானசி ஜோஷிக்கு நல்ல பணியில் சேர்ந்து நல்ல நிலையை எட்டவேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாக இருந்தது. 

“நான் பேட்மிட்டன் சாம்பியனஷிப்களில் பள்ளி, கல்லூரி அதன் பிறகு அலுவலகம் சார்பாகவும் விளையாடியுள்ளேன். ஆனால் இந்த விளையாட்டை தொழில்முறையாக மேற்கொள்வது குறித்து சிந்திக்கவில்லை. விளையாட்டு பொழுதுபோக்காக மட்டுமே இருந்தது. படிப்பையே இலக்காகக் கொண்டிருந்தேன்,” என்றார் மானசி.

கார்ப்பரேட் பிரிவில் மென்பொருள் பொறியாளராக வளர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவரது தலைமைப்பண்பை பலர் பாராட்டி வந்தனர். மேலாண்மை பட்டப்படிப்பை திட்டமிட்டு வந்த 22 வயதில் அவரது வாழ்க்கை முழுவதும் வாய்ப்புகளால் நிறைந்திருந்தது போன்றே தோன்றியது. ஆனால் வாழ்க்கை வேறு விதமாக திட்டமிருந்தது,” என்றார் மானசி.

image


வாழ்க்கையின் மாற்று திட்டம்

2011-ம் ஆண்டு பணிக்குச் சென்று கொண்டிருக்கையில் மானசிக்கு விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கால் நசுங்கிபோனது. கைகள் உடைந்துபோனது. அத்துடன் பல காயங்கள். அதன் பிறகு ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகளில் ட்ரக் ஓட்டுநர் மீது அவர் குற்றம் சுமத்தவில்லை. ஆனால் இதற்கு யாரேனும் ஒருவர் பொறுப்பேற்றுத் தீரவேண்டும்.

”நான் ட்ரக் ஓட்டுநர் மீது குற்றம் சுமத்தவில்லை என்பதற்காக நான் யாரையுமே குற்றம் கூறவில்லை என்று நினைக்கவேண்டாம். தினமும் நான் அலுவலகம் செல்லும் வழியில் சாலையை கடக்கவேண்டிய அந்த பரபரப்பான சந்திப்பில் இருந்த போக்குவரத்து சிக்னல் ஒரு வாரமாக பழுதடைந்திருந்தது. அந்த சூழலில் சாலையை கடக்கும்போது வியப்பில் ஆழ்ந்தேன். இந்த காரணத்தினால் பல்வேறு விபத்துகள் இங்கு ஏற்பட்டுள்ளது,” என்றார்.

மானசிக்கு விபத்து நேர்ந்தது மும்பை என்பதால் உடனடி மருத்துவ உதவி கிடைத்திருக்கும் என ஒருவர் நினைத்தால் அது தவறு என்பதை இவரது அனுபவம் காட்டுகிறது.

பெரும் துன்பம்

"காவலர்கள், பாதசாரிகள் என என்னைப் பலர் சுற்றியிருந்தனர். அனைவரும் உதவ விரும்பினர். ஆனால் எப்படி உதவுவது என ஒருவருக்கும் தெரியவில்லை. நான் சுயநினைவுடன் இருந்தேன். காயம் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. என் கைகள் உடைந்திருப்பதை பார்க்க முடிந்தது. என் கால் நொறுங்கிப் போயிருந்தது. யாராவது என்னை விரைவாக மருத்துமனைக்குக் கூட்டிச் செல்லலாமே என நினைத்தேன். ஆனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே கிடந்தேன். ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை. இறுதியாக என்னுடைய செல்போனை எடுத்து வீட்டிற்கு அழைத்து தகவல் சொன்னேன்,” என்று நினைவுகூர்ந்தார் மானசி.

மருத்துவ உதவிக்காக அவர் காத்திருந்த நிலையில் அருகில் இருந்தவர் அவரது ஹெல்மெட்டை திருடிச் சென்றார். மற்றொருவர் தனது போனில் வீடியோ எடுத்தார். 

”நான் ரத்த வெள்ளத்தில் கிடந்தது அந்த நபருக்குப் பொழுதுபோக்காகிவிட்டது. என்னால் என்ன செய்யமுடியும்? அங்கே நான் கிடந்த நிலையில் எனக்கும் பொழுதுபோக்கு தேவைப்படுகிறது என சொல்ல நினைத்தேன். சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் நான் இறந்துவிடாமல் இருக்க என்னுடைய நகைச்சுவை உணர்வை தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு காயம் ஏற்பட்டதால் நான் இறந்துவிடமாட்டேன். ஆனால் ரத்தப்போக்குதான் ஆபத்தானது. டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராஃபி போன்ற சானல்களில் ஆபத்திலிருந்து உயிர் பிழைத்தவர்கள் பற்றி எப்போதோ பார்த்திருந்த காட்சிகள் ஆழ்மனதில் இருந்து வெளிப்பட்டது,” என்றார் மானசி.

ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் மனிதர்களின் மோசமான பக்கத்தை அவர் சந்திக்க நேர்ந்தாலும் உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்களையும் சந்தித்தார். 

பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த பெண் ஒருவர் உடனடியாக கீழே இறங்கி மருத்துவமனைகளுக்கும் அவசர உதவி சேவைகளுக்கும் தொடர்பு கொண்டார். அத்துடன் அந்த வழியாக கடந்து சென்ற கார்களை நிறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுமாறு வேண்டினார். காரில் ரத்தக் கறையாகி அழுக்காகிவிடும் என்பதால் அதன் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கடந்து சென்ற ஒருவர் இறங்கி அவரது முதுகுப்புறம் சாய்ந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து அரை மணி நேரம் உடன் இருந்தார். ஏனெனில் அவரால் உட்கார முடியவில்லை. தரையில் விழுந்த நிலையிலேயே கிடக்கவும் விரும்பவில்லை. ஆனால் உட்கார முடியாத நிலை ஏற்பட்டதும் உள்ளூர் குடிசைவாசி ஒருவர் ஒரு சுத்தமான லுங்கியுடன் விரைந்து வந்தார். அவர் காயங்களில் தூசி பட்டுவிடாமல் இருக்க அதை கீழே விரித்தார்.

அடுத்தடுத்த சோதனைகள்

”நான் அழைத்து செல்லப்பட்ட முதல் மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவி செய்யப்படவில்லை. ஏனெனில் அவர்களது மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை செய்யத் தேவையான திறன் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர் இல்லை எனக் கூறிவிட்டனர். தகுந்த மருத்துவ வசதி கொண்ட மருத்துமனைக்கு என்னை கூட்டிச் செல்ல நவீன வசதிகளுடன்கூடிய ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர். மூன்று மணி நேரம் என்னை காக்க வைத்தனர். நான் மூன்று ஆம்புலன்ஸ்களைக் கண்டேன். என்னுடைய அவசரத் தேவைக்கு எதுவும் பயன்படவில்லை. இறுதியாக ஒரு மாருதி வேன் வந்தது. என்னுடைய உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம், எப்படி அதில் செல்லமுடியும்? வேனின் பின் கதவை திறந்து வைத்து அடுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்,” என்று சீறினார் மானசி.

மானசிக்கு விபத்து நேர்ந்தது காலை 8.30 மணிக்கு. அவர் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றபோது மாலை 6.30 மணி. இதற்கிடையில் அவரது ரத்தக் குழாய்கள் சுருங்கிப்போனதால் சிக்கல் அதிகரித்தது. அவர் பன்னிரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை அறையில் இருந்தார்.

விரைவிலேயே கால் அழுகிப்போனதால் அதை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. “அந்த சமயத்தில் நான் காலை மட்டுமே இழந்தேன் ஒரு உறுப்பை அல்ல என நினைத்துக் கொண்டேன். என்னால் எழுந்து ஓட முடியாது என்றாலும் கவலையில்லை என்றே நினைத்தேன். செயற்கை உறுப்புகள் துறையில் உள்ள முன்னேற்றம் குறித்து நான் அறிவேன். தொழில்நுட்பம் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் எனக்கு மைக்ரோப்ராசசர் சார்ந்த செயற்கை கால் வேண்டும் என மருத்துவரிடம் தெரிவித்தேன்,” என்றார்.

மறுவாழ்வு சிகிச்சைகளின்போதுதான் ஒரு விஷயத்தை உணர்ந்தார். “மைக்ரோப்ராசசர் சார்ந்த செயற்கை உறுப்பு இந்தியாவில் விலை உயர்வானது என்பதை உணர்ந்தேன். அதன் விலை 22 லட்ச ரூபாய். அது மட்டுமல்லாது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதை மாற்றவேண்டும். நான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள். என்னுடைய அப்பா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. நானும் சாதாரண பணியிலேயே இருந்தேன். எங்களால் இந்த செலவை ஏற்கமுடியவில்லை. ஆனால் நாட்கள் எனக்கு சாதகமாகவே நகர்ந்தன. எனக்குக் காப்பீட்டுத் தொகை கிடைத்தது. என் அப்பா தனது சேமிப்பு அனைத்தையும் ஒன்று திரட்டினார். என்னை போல் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காகவே நான் பணிபுரிந்த நிறுவனத்தில் நிதி திரட்டப்பட்டது. என்னுடைய கால்களில் நான் நிற்க பல்வேறு நபர்களும் நிறுவனங்களும் உதவியுள்ளது,” என்றார்.

ஒரு புதிய கனவு

2010-ம் ஆண்டு நிறுவனங்களுக்கிடையேயான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டார். இதில் தங்கப்பதக்கம் வென்றார். 2012-ம் ஆண்டு செயற்கைக் காலுடன் நடக்க பயிற்சி எடுத்துக்கொண்ட மூன்று முதல் நாலு மாதங்கள் கழித்து மீண்டும் அதே போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். 

”மனநிறைவு ஏற்பட்டதை உணர்ந்தேன். நான் வகுத்துக்கொண்ட எல்லைகளைத் தாண்டி சிந்திக்கவும் புதிய வாய்ப்புகளை ஆராயவும் எனக்கு நம்பிக்கை பிறந்தது,” என்று நினைவுகூர்ந்தார்.

மானசி தனது மனதில் நிர்ணயித்துக்கொண்ட எல்லைகளைக் கடந்து செல்வதற்கு இரண்டாண்டுகள் எடுத்துக்கொண்டார். பயணம் செய்தார். ஸ்கூபா டைவிங் பயிற்சி எடுத்துக்கொண்டார். பேட்மிண்டன் விளையாடினார். 2014-ம் ஆண்டு மூன்றாவது முறையாக அவர் போட்டியில் பங்கேற்றபோது அவர் வென்றதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை. கைகளை இழந்த மானசியின் நண்பர் ஒருவர் மானசி தொழில்முறையாக விளையாடலாம் என ஆலோசனை கூறினார். அப்போதிருந்து அது குறித்த எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. அவர் கூறுகையில்,

அப்போது எனக்கு ஆர்வம் இல்லாதபோதும் என்னுடைய திறனை சோதித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஆராய்ந்து வந்தேன்.

மானசி 2014-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்க முயற்சித்தார். அதில் தேர்வாகவில்லை என்றாலும் கவனிக்கப்பட்டார். ”2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய அளவிலான போட்டியில் முதல் முறையாக விளையாடினேன். வெள்ளிப்பதக்கம் வென்றேன். இந்த வெற்றியைக் கொண்டு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்பெயின் பேட்மிண்டன் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் பதக்கம் வெல்லவில்லை எனினும் என் வாழ்க்கையின் லட்சியத்தைக் கண்டறிந்தேன். அப்போதிருந்து இந்த விளையாட்டில் பயிற்சியைத் தீவிரப்படுத்தினேன். அதன் பிறகு நான் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் நான் பதக்கம் வென்றேன்,” என்றார்.

image


ஒரு புதிய சவால்

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் மோசமான நிதியுதவியே கிடைப்பதால் முழு நேர பயிற்சியில் ஈடுபடுவதற்காக மானசியால் பணியைத் துறக்க முடியவில்லை. ஆனால் அவர் தனது வருவாயில் சமரசம் செய்துகொண்டு குறைவான பணி நேரம் தேவைப்படும் பணிக்கு மாறினார். அவர் விவரிக்கையில்,
”இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுகள் சவால் நிறைந்த ஒன்றாகும். எங்களுக்கான கூட்டமைப்பு ஏதும் இல்லாததால் அரசு ஒதுக்கும் நிதி எங்களை வந்தடைவதில்லை. நான் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவள். எனவே மாநில மற்றும் மத்திய அரசின் ரொக்கப் பரிசைப் பெறும் தகுதி எனக்கு உள்ளது. ஆனால் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை,” என்றார்.

ஆனால் அவர் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டார். “விளையாட்டு வீரர்களான நாங்கள் முறைசாரா அமைப்பு ஒன்றை உருவாக்கினோம். நிர்வாகப் பணிகளை எங்களது குழுவிற்குள் பகிர்ந்துகொண்டோம். எங்களுக்கு உதவ ஒரு பயிற்சியாளர் இருந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டன் விளையாட்டில் அதற்கே உரிய சவால்கள் இருப்பதால் நாங்கள் எங்களை அமைதிப்படுத்திக் கொண்டோம். ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு அணியும் தனிப்பட்ட சவால்களைச் சந்திக்கின்றன,” என்றார்.

சமன்படுத்தும் நடவடிக்கை

சர்வதேச விளையாட்டுகளில் ஈடுபடும் வாழ்க்கையையும் தகவல் தொழில்நுட்பத் துறை பணி வாழ்க்கையயும் முறையாக நிர்வகிப்பது ஆரம்பத்தில் சோர்வடையச் செய்வதாகவே இருந்தது என் நினைவுகூர்ந்தார் மானசி. 

“பணியிடத்தில் சவால் நிறைந்த பொறுப்புகளை ஏற்கவேண்டிய சூழல் என்பதால் பெரும்பாலான நாட்களில் இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கே வீடு திரும்புவேன். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளைக் கடந்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. வீட்டைச் சென்றடைந்ததும் பயிற்சிக்குக் கிளம்பவேண்டும். கிடைத்த ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயிற்சிக்காகவே செலவிட்டேன். பணியிடத்தில் மதிய உணவு வேளையின் போது கிடைக்கும் நேரத்தில் வாகனங்களை நிறுத்துமிடத்தில் பயிற்சி செய்வேன். 

“தினமும் காலை 4.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்துவிடுவேன். பணிக்குக் கிளம்புவதற்கு முன்பு சில மணி நேரம் பயிற்சிக்குச் செலவிடுவேன். அல்லது யோகா செய்வேன்,” என்றார்.
image


"இந்த வாழ்க்கை பரபரப்பாக இருந்தது. ஆனால் என்னுடைய ஆர்வமே எனக்கு உந்துசக்தியாக இருந்தது. இந்த வாழ்க்கைமுறைக்குப் பழக எனக்கு ஒன்றரை வாரங்கள் ஆனது. பேட்மிண்டன் விளையாட்டில் ஈடுபடுவதால் நான் பொருளாதார ரீதியாக பலனடையவில்லை. பல மணி நேரம் இதற்காக செலவிட நேர்ந்தது. என்னுடைய சம்பளத்தில் பெரும் பகுதியை இதற்காக செலவிட நேர்ந்தது. தற்சமயம் எனக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்துள்ளது. ஆனால் இதை நான் நிரந்தரமாக சார்ந்திருக்கமுடியாது,” என்றார்.

என்னுடைய செலவுகள் போக மீதமிருக்கும் மொத்த தொகையையும் விளையாட்டிறகாகவே செலவிட்டேன். இருபத்தி இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள செயற்கைக் காலை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் மாற்ற வேண்டும். இதை நான் அறிந்திருந்தும் அதற்கென எந்தத் தொகையையும் ஒதுக்கி வைத்து சேமிக்கவில்லை. அதை நினைக்கையில் ஒரு கட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. ஆனால் அர்ப்பணிப்புடன் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என தீர்மானித்தேன். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும் என்கிற நம்பிக்கையைக் கொண்டேன். எனவே அதிக கவலைகொள்ள வேண்டாம் என்றும் தீர்மானித்தேன்,” என்றார்.

மானசிக்கு செயற்கைக் கால் பொருத்தி ஐந்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அதை மாற்றவேண்டிய காலம் கடந்துவிட்டது. ஆனால் அது அவரது வெற்றிக்குத் தடையாக இல்லை. சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாட்மிண்டன் போட்டி 2018-ல் மூன்று நிறத்தில் பதக்கங்களை வென்றார். இந்த வெற்றி இதுவரை இந்தியா சார்பில் விளையாடிய மாற்றுத்திறனாளி தடகள வீரர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவர் என்கிற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. 

தற்போது உலக தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் மானசிக்கு அவரது சாதனையை நினைத்து திருப்திபடுத்திக்கொள்ளவும் நேரம் இல்லை. கடும் பயிற்சி மேற்கொண்டு 2018-ம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய அளவிலான போட்டிகளுக்குத் தயாராகி வருகிறார். 

”2020 பாராலிம்பிக்ஸ் மீதே என்னுடைய ஒட்டுமொத்த கவனமும் உள்ளது,” என்றார்.

ஒவ்வொரு முறை அவர் தனது வருமானத்தில் சமசரம் செய்துகொண்டு அதிக சவால்கள் இல்லாத பணியை ஏற்றுக்கொள்ளும்போதும் அவரால் விளையாட்டையும் பணி வாழ்க்கையையும் எளிதாக சமன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஐந்து மணிக்கு பணியிடத்தில் இருந்து கிளம்புவார். ஏழு மணிக்கு பயிற்சிக்கு கிளம்பி பத்து மணி வரை பயிற்சி செய்வார்.

 “நான் இரவு 11.30 மணிக்கே வீட்டை வந்தடைவேன். இது சோர்வளிப்பதாக இருப்பினும் எனக்கு இது பிடித்துள்ளது,” என்றார். இவருக்கு இரண்டு ஸ்பான்சர்கள் உள்ளனர். தற்போது Welspun Enterprises, Divitas Capital ஆகிய இரு நிறுவனங்கள் எனக்கு ஆதரவளித்து வருகிறது. 2017-ம் ஆண்டு இறுதியில் இவர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இவர்களது ஆதரவு விலைமதிப்பில்லாதது. இவர்களுடனான இணைப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

விவேகம் நிறைந்த வார்த்தைகள்

மானசியின் மனநிலை அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வுகளை திறம்பட எதிர்கொள்ள உதவியது. இவ்வாறு எதிர்பாரா நிகழ்வுகளைச் சந்திக்கும் மக்களுக்கு அவரது ஆலோசனை : 

“அனைத்துமே நமது மனநிலையைச் சார்ந்தது. வாழ்க்கை எத்தகைய சூழலை நம் முன் வைத்தாலும் அதை திறம்பட கையாளும் வலிமை நம்மிடம் உள்ளது. பொறுமையுடன் சூழ்நிலையை மதிப்பிடுவதே முக்கியமாகும். நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நமக்கு வேறொருவர் சொல்லவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய நன்மைக்காக அடுத்தவர் அறிவுரை வழங்கினாலும் அதை ஆராயாமல் முழுமையாக நம்பிவிட வேண்டாம். அடுத்தவருக்கு ஏற்றதாக இருக்கும் விஷயம் உங்களுக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவசரப்படாமல் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அழவேண்டும் என்று நினைத்தால் அழுதுவிடலாம். ஆனால் உங்களது கடினமான சூழலுக்கு பதில் நீங்கள்தான் என்று நம்பிக்கை வையுங்கள்,” என்றார் மானசி.

ஆங்கில கட்டுரையாளர் : ராக்கி சக்கரபோர்தி | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
94
Comments
Share This
Add to
Shares
94
Comments
Share
Report an issue
Authors

Related Tags