பதிப்புகளில்

இணையத்தில் நல்லெண்ணத்தை பரப்பும் பேராசிரியர்...

cyber simman
13th Nov 2017
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

இணையத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தென்கொரிய பேராசிரியர் மின் யங் சுல் பற்றியும் அவரது ’முழு ஒளி’ இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இணையத்தின் எதிர்மறை தன்மையால் அதன் மீது நவம்பிக்கை கொண்டவர்களும் இந்த பேராசிரியரை அவசியம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.

image


ஏனெனில் பேராசிரியர் மின், இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ‘முழு ஒளி’ Sun Full இயக்கத்தை நடத்தி வருகிறார் என்பது தான். இந்த இயக்கம் பற்றி அறிந்து கொண்டால் பேராசிரியரை பாராட்டவும் தோன்றும், அவர் செய்வதை பின்பற்றி நடக்கவும் தோன்றும். இந்த ஊக்கமே அவரை கவனிக்க வைக்கிறது.

இணையத்தில் நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கூட்டு நிதி திரட்டுதல் முதல் கூட்டு முயற்சிகள் வரை எண்ணற்ற செயல்களுக்கு இணையத்தை பயன்படுத்தலாம். இணையம் மூலம் மாற்றங்களை கொண்டு வரலாம், புதிய பாதை காட்டலாம். ஆனால் இணைய பயன்பாட்டிற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. இது எதிர்முறையான செயல்களையும் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இணையத்தில் அவதூறு பரப்புவதும், காரணமே இல்லாமல் வசைபாடி வெறுப்பை உமிழ்வதும் வெகு சுலபம்.

இதை பின்னூட்ட வடிவில் செய்யலாம். நேரடி தாக்குதலாகவும் நடத்தலாம். விவாதங்களில் ஊடுருவி அதன் மைய பொருளையே பாழாக்கலாம். இன்னும் பலவிதங்களில் நிகழும் இந்த பாதிப்பு பிரச்சனை பொதுவாக ’டிரால்ஸ்’ (Trolls) என குறிப்பிடப்படுகிறது. அதாவது இணையத்தில் ஒருவரை பின் தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை கூறி வெறுப்பேற்றுவது. சைபர் சீண்டிவிடுதல் என்றும் இதை புரிந்து கொள்ளலாம்.

ஃபேஸ்புக்கில் துவங்கி, டிவிட்டர், வாட்ஸ் அப், விவாத தளங்கள், செய்தி தளங்கள் என எல்லாவற்றிலும் இவற்றை பார்க்கலாம். அரத்தமுள்ள கருத்துக்களுக்கு நடுவே எதிர்மறை கருத்துக்கள் தோன்றும். இவை வெற்று கேலியாக இருக்கலாம். ஆவேசம் கொண்ட தாக்குதலாகவும் இருக்கலாம். துவேஷ நஞ்சை கக்கலாம். இணைய சாமானியர்கள் முதல் நட்சத்திரங்கள் வரை பலரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகுகின்றனர். பலர் இணையத்தில் இப்படியும் உண்டு என புறந்தள்ளி சென்றுவிடுகின்றனர். இன்னும் சிலர் வேதனைக்கு இலக்காகி இணையமே வேண்டாம் என விலகி விடுவதும் உண்டு. விபரீதமான சில தருணங்களில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தற்கொலை போன்ற தீய முடிவுகளுக்கும் வந்துவிடுவதுண்டு.

இணையம் இந்த பிரச்சனையை அறியாமல் இல்லை. இதை கட்டுப்படுத்தவும் இணையத்தில் பலர் முயன்று வருகின்றனர். இந்த வரிசையில் தான் கொரிய பேராசிரியரும் வருகிறார். ஆச்சர்யப்படும் வகையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இந்த முன்னோடி பற்றி தற்செயலாகவே அறிந்து கொள்ள முடிந்தது. இணைய கலாச்சாரம் தொடர்பாக தேடிக்கொண்டிருந்த போது, சைபர்வெளியில் நல்லெண்ணத்தை பரப்பும் கொரிய பேராசிரியர் எனும் செய்தி தலைப்பு கவனத்தை ஈர்தத்து. ஸ்டார்2 எனும் தளத்தில் வெளியாகி இருந்த அந்த செய்தியை கிளிக் செய்து படித்துப்பார்த்தால், கொரிய பேராசிரியரின் முயற்சி வியக்க வைப்பதாக இருக்கிறது.

பேராசிரியர் மின், இணையத்தில் நல்லெண்ண கருத்துக்களை பரவச்செய்து வருகிறார். அதாவது இணையத்தில் வெளியாகும் எதிர்மறையான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நல்லவிதமான கருத்துக்களை பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறார். இதற்காக என்றே ’முழுஒளி’ இணைய இயக்கத்தையும் துவக்கி நடத்தி வருகிறார்.

கொரியாவில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் இணையவாசிகள் நல்லெண்ண கருத்துக்களை இணையத்தில் வெளியிடுவதை அவரது இயக்கம் ஊக்குவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இணையத்தில் தாக்குதலுக்கும், துவேஷத்திற்கும் இலக்காகின்றனர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நல்லவிதமான கருத்துக்களை வெளியிட ஊக்குவித்து வருகிறது. இதற்காக பள்ளி அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கொரிய அளவில் மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளிலும் இந்த முறை பிரபலமாகி வருகிறது.

image


இந்த இயக்கத்தின் பயனாக, இதுவரை 72 லட்சத்திற்கும் மேலான நல்லெண்ண கருத்துக்கள் இதன் உறுப்பினர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இயக்க இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை பெரிய விஷயமல்ல. ஆனால் இந்த செயலின் பின்னே உள்ள நோக்கம் பெரியது.

விஷமிகள் இணையத்தில் போகிற போக்கில் மோசமான கருத்துக்களை பதிவு செய்து விட்டுச்செல்கின்றனர். இந்த கருத்துக்கள் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவதும் உண்டு. அதைவிட மோசமான முடிவுக்கும் கொண்டு செல்வதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று இதற்கான உதாரணம். விவாத தளம் ஒன்றில் ‘ நான் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமா? என ஒருவர் கேட்டிருக்கிறார். காதலியுடனான மன முறிவு தந்த சோகத்தில் இருந்த அந்த வாலிபர் கேட்ட கேள்விக்கு, ஆம் என்று ஒருவர் பதில் சொல்லி இருந்தார். இன்னொருவர், நீங்கள் இறப்பதற்கு முன் ஐபோனை கொடுத்து விட்டு செல்லவும் என கூறியிருந்தார். இப்படி நீண்ட கருத்துக்களின் விளையாக அந்த இளைஞர் இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

இது போல எண்ணற்ற வேதனையான உதாரணங்கள் இருக்கின்றன. கொரியாவிலும் நட்சத்திரம் ஒருவர் இணைய பின்னூட்ட தாக்குதலால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்த போது பேராசிரியர் மின், இணையத்தில் வெளியாகும் எதிர்மறை கருத்துக்களை சமன் செய்ய ஏதாவது செய்ய வேண்டியது அவசியம் என நினைத்தார். தலைநலர் சியோலில் உள்ள சுன்காங் எனும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், பல்வேறு இணையதளங்களில் நட்சத்திரங்களின் பக்கத்தில் நல்ல விதமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என தனது மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தார். மாணவர்களும் ஆயிரக்கணக்கில் நல்லெண்ன கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்த முயற்சி பற்றி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதனால் ஊக்கம் பெற்ற பேராசிரியர் இந்த செயலை தொடர்வதற்காக சன்புல் இயக்கத்தை துவக்கினார். கொரிய மொழியில் முழு ஒளி என்று பொருள்.

இந்த இயக்கத்தின் மூலம், உறுப்பினர்கள் இணையத்தில் நல்லவிதமான கருத்துக்களை வெளியிட ஊக்குவித்து வருகிறார். இதன் உறுப்பினர்கள் இணையத்தில் உலாவி, வெறுப்பை உமிழும் கருத்துக்கள் வெளியாகி இருக்கும் இடங்களில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நல்ல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப பொருத்தமான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

பூகம்பம் பாதிப்பு, தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் நல்லெண்ண கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படி நல்லெண்ண கருத்துக்களை பரவச்செய்ய முயன்று வருவதோடு, அண்மையில் சமூக ஊடக மனித உரிமைகள் குழுவையும் அவர் துவக்கியிருக்கிறார். இந்தக்குழு இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் சட்ட உதவியை வழங்கி வருகிறது.

மோசமான கருத்துக்கள் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது நமக்கு தெரிந்தது தான். ஆனால் நல்லவிதமான கருத்துகளை பதிவு செய்வதன் மூலம், எல்லோரும் நமக்கு எதிரானவர்கள் அல்ல, ஆதரவான குரல்களும் உள்ளன என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்த்த முடியும். அதை தான் முழு ஒளி இயக்கம் ஊக்குவித்து வருகிறது.

அது மட்டும் அல்ல, நல்லவிதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருப்பது மற்றவர்கள் எதிர்மறையான கருத்துகளை வெளியிடுவதையும் தவிர்க்க உதவலாம். இத்தகைய கருத்துகள் இணைய சீண்டலில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இணையத்தில் நல்லெண்ணத்தை விதைப்போம்!

முழுஒளி இயக்க இணையதளம்: http://sun-full.org/index.htm#&panel1-2

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக