பதிப்புகளில்

'நன்றே செய், அதை இன்றே செய்': ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு!

posted on 12th November 2015
Add to
Shares
20293
Comments
Share This
Add to
Shares
20293
Comments
Share

கோவை, வடவள்ளியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது சுரேஷ் பாபுவின் விளைநிலம். அதைச் சுற்றி, புதுக் கட்டிடங்கள் நிறைய முளைத்திருக்கின்றன. கருவேலம் புதர்கள் மண்டிய இடங்களில், கிரிக்கெட் விளையாடுகின்றனர் சிலர். ஓரிடத்தில் சோளம் வளர்க்கப்படுகிறது. அதைத் தவிர வேறு விவசாய நிலம் அங்கு இல்லை.

ஆஸ்திரேலியாவில் வேலை, நிறைவான சம்பளம் என சென்று கொண்டிருந்த வாழ்க்கையின் மீது திடீரென பிடிப்பற்று போய், விவசாயம் செய்வதாய் முடிவு செய்து தாய்நாடு திரும்புகிறார் சுரேஷ். அந்த வகையில், சுரேஷின் கதை உலகிற்கு சொல்லப்பட வேண்டிய கதை.

image


சுரேஷ் பாபு; பிறந்து வளர்ந்தது கோவையில். 2005ல் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (CIT) மென்பொருள் பொறியியல் இளநிலை முடித்த போது, பெங்களுரில் வேலைக் கிடைத்தது. அந்த வேலையில் சேர விருப்பமில்லாததால், ஆஸ்திரேலியா சென்று முதுநிலை படிப்பை மேற்கொண்டு, 2008ல் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவில், 2009-ல் இருந்து 2014 வரை சாப்ட்வேர் எஞ்சினியராக வேலை செய்த பிறகு, 2014 ஜனவரியில் தாய்நாடு திரும்பினார் சுரேஷ் பாபு.

தமிழ் யுவர்ஸ்டோரி சுரேஷ் பாபுவிடம் பிரத்யேகமாக நடத்திய நேர்காணல் இதோ:

“அதற்கு மேல் ஐ.டி துறையில் வேலைச் செய்ய ஆர்வம் இல்லை. சொந்தமாக நிலம் இருந்தது, அதை பண்படுத்தி விவசாயம் செய்யலாம் எனத் நினைத்தேன். நிலத்தை சீர் செய்ய பதினைந்து லட்சம் செலவானது. விவசாய பல்கலைக்கழகத்துடன் கலந்து பேசியதில், இங்கு தென்னையும் பாக்கும் விளைவிக்கலாம் என அறிந்துக் கொண்டேன். கர்நாடகாவிலுள்ள விட்டலில் சென்று ஐந்தாயிரம் பாக்குக் கன்றுகள் வாங்கி வந்து பத்து மாதம் நர்சரியில் வைத்து வளர்த்து, 2015 ல் நிலத்தில் நட்டோம்.” என்கிறார் சுரேஷ் உற்சாகமாக.

imageபுதிய பயணமும், சவால்களும்

ஆனால்,சுரேஷ், இந்த தூரத்தை எளிதாக கடந்திருக்கவில்லை.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் வேலையை துறந்து விவசாயம் செய்ய கோவை திரும்பினார் சுரேஷ். ஆனால் மண் அரிப்பு ஏற்பட்டு, அவரது நிலம் விவசாயத்திற்கு ஏதுவாக இல்லாமலிருந்தது. அந்நிலத்தை நம்பி தாய் நாட்டிற்கு திரும்பும் முடிவை எத்தனை பேர் ஆதரிப்பார்கள்? சுரேஷிற்கு விவசாயத்தின் மீதிருந்த ஆர்வத்தை யாரும் புரிந்துக் கொள்ளவில்லை.தொடக்கத்தில், தனித்து போராடியிருக்கிறார். அவரது உழைப்பைக் கண்ட பிறகு தான், அதில் உள்ள தீர்க்கத்தை உணர்ந்து, குடும்பத்தினர் உதவியிருக்கின்றனர்.

மின்சார வசதி இல்லாத நிலம் அது. சில முறை விண்ணப்பித்தும், மின் வசதி கிடைக்காத காரணத்தால், மாற்று ஏற்பாடாக சோலார் சக்தியை தேர்ந்தெடுத்தார். அதன் மூலமாகத் தான், பாக்கு மற்றும் தென்னைகளுக்கு நீர் பாசனம் செய்திருக்கிறார். மண் அரிப்பு ஏற்பட்டிருந்த நிலத்தை சீர் செய்ய, குளத்து மண் பல லோடுகள் வாங்கிக் போட்டிருக்கிறார். மண் அரிப்பைத் தடுக்கும் வெட்டி வேரும், சில்வர் ஓக் மரமும் அங்கே நட்டிருக்கிறார்.

“மலையடிவாரமாக இருக்கும் காரணத்தினால் யானையும் காட்டுப் பன்றியும் வந்து அட்டகாசம் செய்வதுண்டு. சோலார் வேலி இருந்தாலுமே, ஒரு நாள் நல்ல மழையில், யானை வந்து சில வாழை மரங்களை நாசம் செய்தது. பின் மறுபடியும் பேட்டரி வைத்து சரி செய்தோம். சோலார் வேலியில் பலமான மின் சக்தி இருப்பதில்லை மிகக் குறைவான ‘ஆம்ப்ஸ்’ அளவில் தான் மின்சாரம் பாயும். அது அமைத்ததற்கு பிறகு வனவிலங்கு தொல்லை அவ்வளவாக இல்லை ”, என்னும் சுரேஷ், முழுமையாக இல்லை என்றாலுமே, தன்னால் முடிந்தவரை இயற்கை உரத்தையே பயன்படுத்துகிறார்.

இயற்கை உரம்

வளத்தை இழந்த நிலத்தை மீண்டும் செழிப்பாக்க, உரம் அத்தியாவசிய தேவையாக இருந்திருக்கிறது, அதைப் பற்றி பேசுகையில், “கோமியம் மற்றும் சாணத்தைக் கொண்டு, நாங்களே ‘பஞ்ச கவ்யம்’ தயாரித்து, பாசனம் மூலமாக அதை செலுத்துவோம். அதைப் போலவே, மீனையும் வெல்லப் பாகையும் தேவையான அளவு நீர் நிறைத்து நாற்பத்தைந்து நாட்கள் ஊற வைத்து,பின் வடிகட்டி, நூறு லிட்டர் நீருக்கு ஐந்து லிட்டர் கலவை நீர் என்ற கணக்கில் அதை உபயோகிப்போம்".

தினமும் இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இங்கே ஒரு சிம் கார்டு வைத்து, ஜி.பி.ஆர்.எஸ்-ல் கனெக்ட் செய்திருக்கிறேன். இந்தியாவில் எங்கு இருந்து வேண்டுமானாலும், ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், வேலியும் நீர் பாசன முறையும் தானாகவே இயங்கத் தொடங்கி விடும். மேட்டுப்பாளையத்தில் ‘க்ரவுன்’ என்னும் ஒரு நிறுவனத்தில் இருந்து வாங்கிய கருவி இது.”

சுரேஷின் தந்தை தாசில்தாராக இருந்து துணை மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர். சுரேஷின் தாத்தா காலத்தில் விவசாயம் செய்திருந்தாலுமே, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும், விவசாயத்தை அவ்வளவு சிரத்தையாக யாரும் மேற்கொள்ளவில்லை. தான் கற்கும் சிறு விஷயங்களையும், நிலத்தில் செயல் படுத்தி அதில் வெற்றியும் காண்கிறார் சுரேஷ்.

சாதனைகள்

தொடக்கத்தில், ஆதரவளிக்க யாரும் இல்லாத போது, மற்ற விவசாயிகளை சந்தித்து யோசனைக் கேட்பாராம் சுரேஷ். இன்று, பல ஊர்களிலிருந்தும் வந்து அவரிடம் அறிவுரைக் கேட்டுச் செல்கின்றனர்.

விவசாயம் செய்யத் தொடங்கி ஒரு வருடமே ஆகியிருக்கும் நிலையில், தன் முயற்சி புகழ் பெறுவதற்கு அடையாளமாக, ‘இளம் சாதனையாளர்’, ‘இளம் முற்போக்கு விவசாயி’ போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

“நான் விருதுக்காக எதுவும் செய்தில்லை. இது என்னுடைய துறை, அதில் சிறப்பாக செயல்படுவதனால் தான் விருது கிடைக்கிறது. இதைப் போன்ற விருதுகள் ஊக்கப் படுத்துபவையாக இருக்கின்றன”, என்கிறார்.

image


எதிர்கால திட்டங்கள் 

எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுகையில், “பத்து வருடமாய் விவசாயம் செய்யாததால், நிலம் அதன் வளத்தை இழந்திருக்கிறது. அதனால், முழுமையாக இயற்கை உரங்களை பயன்படுத்த முடியவில்லை. வருங்காலத்தில் முழுமையாக இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைத் தவிர, இன்னும் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது, அங்கும் விவசாயம் செய்யத் தொடங்க வேண்டும்” என்கிறார்.

இது மட்டுமின்றி, பொள்ளாச்சியின் ராயல் என்ஃபீல்டு டீலர் சுரேஷ் தான். அவ்வளவு சுலபமாய் யாருக்கும் கிடைக்காத ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப் கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

இன்றே செய்

“நன்றே செய், அதுவும் இன்றே செய்’னு சொல்லியிருக்காங்க. யார் சொன்னதுன்னு தெரியலீங்க, ஆனா, அது எனக்கு ரொம்ப பிடிச்ச வாக்கியம். எதையுமே தள்ளிப் போட வேண்டாம், இப்பவே செய்யணும்” என்று தெளிவாய் புன்னகைக்கிறார்.

செருப்பில் ஒட்டும் மண் மட்டுமே, நமக்கு மண்ணோடு மீதம் இருக்கும் உறவாகிப் போயிருக்கும் காலத்தில், மண்ணோடான தன் உறவைப் புதுப்பித்தும், வளர்த்தெடுத்துக் கொண்டும் இருக்கும் சுரேஷிற்கு சல்யூட்!

Add to
Shares
20293
Comments
Share This
Add to
Shares
20293
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக