பதிப்புகளில்

நீண்ட இடைவேளைக்கு பின் பணியைத் துவங்கும் தாய்மார்களுக்கு 10 உற்சாகக் குறிப்புகள்!

YS TEAM TAMIL
9th Jan 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

என்னுடைய சமையலறையிலிருந்து குக்கரின் விசில் சத்தம் கேட்கிறது. வீட்டு வேலை செய்பவர் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாளைய பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறான் என் மகன். அடுத்த அரைமணிநேரத்தில் எப்போதுவேண்டுமானாலும் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரலாம். என் மகனை அவனுடைய நண்பனின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து செல்லவேண்டும். மளிகை பொருட்கள் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும். தொலைபேசி விடாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது...

கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறது அல்லவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் மிகவும் பதற்றத்துடன் இருப்பேன் என்றுதானே? அதுதான் இல்லை. இது என்னுடைய வழக்கமான மாலை நேரம்தான். நான் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்.

image


நான் மட்டுமல்ல. என்னைப்போல் பல பெண்கள் இதுபோன்ற சூழலை ஒவ்வொரு நாளும் சந்திக்க வேண்டியிருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பணியிடத்துக்கு செல்ல முடியாமல் உங்களை எது தடுக்கிறது?

"என்னுடைய கதையை கேளுங்கள். நான் படிப்பில் எப்போதும் முதல் மூன்று இடத்தை பிடித்துவிடுவேன். அது பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், எம்பிஏ படிப்பாகட்டும். இதனாலோ என்னவோ என்னைச் சுற்றி இருப்பவர்கள் நான் ஒரு நல்ல பணியில் சேர்ந்து மிகச்சிறந்த வாழ்க்கையை தேர்ந்தெடுப்பேன் என்று நம்பினார்கள். மாறாக நான் பணியாற்றிக்கொண்டிருந்த ஒரு ஜெர்மன் பன்னாட்டு நிறுவன வேலையை ராஜினாமா செய்தேன். 

என்னுடைய கணவர் பணி நிமித்தமாக அமெரிக்கா செல்லவேண்டியிருந்தது. நான் அவருக்கு உறுதுணையாக இருக்க முடிவுசெய்தேன். கணவருடன் அமெரிக்காவிற்கு பயணித்தேன். ஆனால் எனக்கு சார்பு விசா கிடைத்த காரணத்தால் பணியை தொடரமுடியவில்லை. இல்லத்தரசியாக இருக்க முடிவெடுத்தேன்.

சில வருடங்களுக்குப் பின் இந்தியா திரும்பினோம். குழந்தைகள் பிறந்தனர். பணியில் சேரமுடியாமல் இடைவெளி நீண்டது. பத்து வருடங்கள் கடந்தது. என்னுடைய இரண்டாவது குழந்தை பள்ளிக்கு செல்லும்வரை அவர்களுடன் என்னுடைய நேரத்தை செலவுசெய்ய முடிவெடுத்தேன். ஒரு அம்மாவாக, ஒரு இல்லத்தரசியாக என்னுடைய பொழுதை மிகவும் ஆனந்தமாகக் கழித்தேன்.

இந்த புதிய பொறுப்பை ஏற்று அதற்கேற்ப நம்மை தயார் செய்துகொள்வதற்கு சிறிது காலமாகும். அதனால் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை மட்டும் சிறப்பாக செய்யலாம் என்று நினைத்தேன். கூடுதலாக பணிக்கும் சென்று வேலைப்பளுவை அதிகரித்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய நிறைய தோழிகள் இவ்வாறு இரண்டையும் சமன்படுத்திச் செல்வதை பார்த்திருக்கிறேன். வியந்துமிருக்கிறேன்.

இதோ! என்னுடைய இரண்டாவது குழந்தை பள்ளிக்கு கிளம்பிவிட்டான். நானும் ஏதேனும் பணியில் என்னை அமர்த்திக்கொள்ள என்னுடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம். ஆனால் என்னுள் பல கேள்விகள் முளைத்தன. எனக்கு பயமாக இருக்கிறதா? நான் மிகவும் பின்தங்கிவிட்டேனா? என்னால் வெற்றி அடைய முடியுமா? அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? ஆம்! எனக்குள் பயம் முளைக்கத்தான் செய்தது. ஆனால் நான் என் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்த்தேன். எதற்கும் பயப்படக்கூடாது. நாம் எதை நம் வாழ்க்கை லட்சியம் என்னு நிர்ணயிக்கிறோமோ துனிந்து அதை நோக்கி பயணிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினேன் அல்லவா? அதையே நாம் ஏன் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன்.

இளம் பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை சந்தித்தேன். அவர்கள் பொறியியல் சம்பந்தப்பட்ட வகுப்புகளை பள்ளி மாணவர்களுக்கு எடுத்தார்கள். என்னுடைய மகன் அந்த வகுப்பில் சேர்ந்தான். இந்த வகுப்பில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளை பார்த்து வியந்தேன். மாணவர்கள் வளர்ந்து எதிர்காலத்தில் தொழில்புரியத் துவங்கும்போது இந்த பயிற்சி எவ்வளவு பயனளிக்கும் என்று புரிந்தது. நானும் இந்த பயிற்சியாளர்களுடன் என்னை இணைத்துக்கொண்டேன். அவர்களை சரியாக வழிநடத்தி அவர்களுக்கேற்ற நிறுவனங்களுடன் இணைத்தேன். எல்லாம் சரியானபடி நடந்தது. “க்ளௌட் மெண்டர்” என்னும் நிறுவனம் உருவானது.

நான் ஒரு தொழில்முனைவர் ஆனேன். என்னால் உருவாக்கப்பட்ட இந்த “க்ளௌட் மென்டர்” நிறுவனத்தின் நோக்கமே மாணவர்கள் பல கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். தொழிலதிபர்கள் ஆக வேண்டும் என்பதுதான். இந்த நிறுவனத்தில் ஒரு திறமைமிக்க குழுவினரால் STEM பாடத் தொகுப்பு உருவாக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும்போது அவர்களின் படைப்பாற்றலும், புதிதான சிந்தனைகளும் தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணங்களும் மேலோங்கும். இந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டேன். என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். கடந்த ஐந்து வருடத்தில் எத்தனையோ நாடுகளுக்கு பிரயாணம் செய்து விட்டேன். இன்று என்னைப்போல் பல பெண்களை பார்க்கிறேன். புதிய பொறுப்புகளை ஏற்பதற்கு சிலருக்கு பயம். சிலருக்கு சந்தேகம். சிலருக்கு கவலை. அவர்களுக்காகக் கீழ்கண்ட பத்து முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் தனிப்பட்ட நபர் இல்லை: உங்கள் கணவர்/மனைவி, உங்கள் குழந்தைகள், உறவினர், நண்பர்கள், உடன்பணிபுரிவோர் என அனைவரும் உங்களுடன் இருக்கிறார்கள். உங்களுக்குள் இருக்கும் அந்த லட்சிய வெறியை இவர்கள் பார்க்கும்போது நிச்சயம் உங்களுக்கு உதவுவார்கள்.

  1. உங்களுக்கு திறமை இருக்கிறது: குழந்தைக்கு காது வலி. கணவர் வெளியூரில் இருக்கிறார். வீட்டு வேலை செய்பவர் இன்று வரவில்லை. குழந்தையின் க்ராப்ட் ப்ராஜெக்ட் வேறு. பெற்றோரை மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் ஒரே நாளில் செய்ய முடித்திருக்கிறீர்கள் அல்லவா? பிறகென்ன? உங்களால் எதையும் செய்ய முடியும்.
  2. உங்களுக்கென தனித்திறமை இருக்கிறது: இல்லத்தரசிகளால் பல்வேறு வேலைகளை திறம்பட செய்யமுடியும். பெரிய நிறுவனங்களின் முதலாளிகளும் வியக்கும் வண்ணம் இல்லத்தரசிகள் நன்றாக திட்டமிடுகிறார்கள். செயல்படுத்துகிறார்கள். உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வையுங்கள். அதே திறமையுடன் அலுவலக சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் துணிந்து எதிர்கொள்ளுங்கள்.
  3. வல்லுனராக இருங்கள்: நீண்ட இடைவேளைக்குப் பிறகு பணிக்கு திரும்புகிறீர்கள். அதனால் உங்களை மற்றவர்கள் மிகவும் அரவணைத்து செல்லவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வேலையை திறம்பட செய்யுங்கள். மற்ற பணியாளர்களைப் போலவே உங்களையும் நடத்தும்படி நீங்கள் நடந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் உங்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் வளர்கிறார்கள்.
  4. சரியாக தீர்மானியுங்கள்: நீங்கள் இல்லத்தரசியாக இருந்த சமயம் குழந்தைக்கு தேவையான உணவை எடுத்து கையில் கொடுத்திருப்பீர்கள். வாயில் ஊட்டிவிடுவீர்கள். இப்பொழுது பணியில் சேர்ந்தாகிவிட்டது. அலுவலக வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்தே தீரவேண்டும். வேறுவழியில்லை. உங்கள் குழந்தை பசித்தால் தானாக உணவை எடுத்து தட்டில் வைத்து சாப்பிட நேரிடும். அதற்காக நீங்கள் குற்ற உணர்ச்சியோடு இருக்கவேண்டிய அவசியமில்லை. தங்கள் தேவைகளை தாங்களாகவே பூர்த்திசெய்வது குறித்து ஒரு நாள் உங்கள் குழந்தை உங்களுக்கு நன்றி பாராட்டத்தான் போகிறான்.
  5. எதையும் எதிர்கொள்ளும் துணிவோடு இருங்கள்: நீங்கள் எப்பொழுதும் உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து பழகிவிட்டீர்கள். அதனால் உங்கள் அருகாமை இல்லாதது குறித்து அவர்கள் கவலைக்கொள்வது இயற்கைதான். குடும்பத்தையும் பணியிடத்தையும் சமாளிப்பது என்பது கடினமாகத்தான் தோன்றும். என்னதான் நாம் திட்டமிட்டு அட்டவணை போட்டு செயல்பட்டாலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நிச்சயம் ஒருநாள் இரண்டையும் சமன்படுத்தி செல்லும் பக்குவம் எல்லோருக்கும் வரும்.
  6. உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்: திடீரென்று அலுவலக பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள். உங்களுக்கென்று சில பொழுதுபோக்கு விஷயங்கள் இருந்திருக்கும். நீங்கள் மிகவும் ரசித்து பிடித்து செய்துவந்த விஷயங்கள் பல இருந்திருக்கும். புத்தகங்கள் படித்திருப்பீர்கள், நண்பர்களுடன் காபி அருந்திக்கொண்டே அரட்டை அடித்திருப்பீர்கள், பிடித்த பாட்டை கேட்டுக்கொண்டிருப்பீர்கள், நடைப்பயிற்சி செய்திருப்பீர்கள். உங்கள் பொழுதுபோக்கு இதில் எதுவாக இருந்தாலும் வேலைக் காரணமாக அதை அப்படியே நிறுத்திவிடாதீர்கள். இந்த பொழுதுபோக்குடன் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்களோ அதேபோல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள்.
  7. நோக்கம்: உங்கள் நேரத்தையும் உழைப்பையும் எதிர்மறை சிந்தனைகளாலும் செயலாலும் வீணாக்காதீர்கள். உங்களை நீங்களே ஆய்வு செய்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை ஆராயுங்கள். ஏன், எதற்காக என்ற கேள்விகளை எழுப்புங்கள். உங்கள் உழைப்பு சரியான நோக்கத்தோடு பொருந்தியதாக இருக்கட்டும்.
  8. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்: முதலில் ஒரு பணியில் சேர்கிறீர்கள். அந்த வேலை உங்களுக்கு பிடித்தவாறு அமையாமல் போகலாம். எப்படி மாறுவது என்று யோசனை வேண்டாம். பயம் வேண்டாம். மாறுங்கள். இதில் தவறு ஏதும் இல்லை.
  9. நிறைவற்றதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்: வேலைக்கு போவதையும் வீட்டை சமாளிப்பதையும் உடனடியாக நிறைவாக செய்வது என்பது கடினம். உங்கள் வாழ்க்கைப்பாதையை நீங்கள் தீர்மானியுங்கள். சுக துக்கம் கலந்ததுதான் வாழ்க்கை. உங்கள் இல்லற வாழ்க்கையையும் பணியையும் சமன்படுத்தி சில விஷயங்களில் நிறைவற்று இருந்தாலும் அதை அரவணைத்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். எல்லாம் ஒரு அனுபவம்தான். அப்படி அரவணைத்து சென்றால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாகும்.

ஆசிரியர் குறிப்பு : விருந்தா பேன்சோட் - 'க்ளௌட் மென்டர்' நிறுவனத்தின், இணை நிறுவனர்

தமிழில்: ஸ்ரீவித்யா

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக