பதிப்புகளில்

திருமணத்திற்குப் பின்னும் சாதிக்கலாம்...

குடும்பத்தலைவி ராஷ்மி சஹாடே ஐஏஎஸ் ஆன வெற்றிக்கதை!

10th Apr 2018
Add to
Shares
471
Comments
Share This
Add to
Shares
471
Comments
Share

திருமணம் ஆகிவிட்டால் பெண்கள் கனவு காண்பதை நிறுத்திவிட வேண்டும், 24 மணி நேரமும் தன் கணவர், குழந்தைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிம்பங்களை உடைத்தவர் தான் ராஷ்மி ஐஏஎஸ். குடும்பத்தலைவியான அவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று புனேயின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். விடாமுயற்சியும், இலக்கில் தெளிவும் இருந்தால் வயது என்றுமே வெற்றிக்கு தடையல்ல என சாதித்துக் காட்டியவர். 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் எனச் சொல்வது வழக்கம். ஆனால், இதனை உடைத்து தனது மனைவியின் வெற்றிக்கு காரணகர்த்தா ஆகியுள்ளார் புனேயைச் சேர்ந்த சித்தார்த் சஹாடே.

இவர்களது வாழ்க்கை ஏறக்குறைய சரத்குமார் நடித்த சூர்யவம்சம் படம் போன்றது தான். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சித்தார்த் தனது மனைவியை எப்படியும் ஐஏஎஸ் ஆக்கிவிட வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, தொடர்ந்து தனது மனைவியை அவர் ஊக்கப்படுத்தினார்.

அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலைப் படித்தவரான ராஷ்மிக்கு சிறுவயது முதலே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் இருக்கவில்லை. மற்ற மாணவர்களைப் போல சாதாரணமாகத் தான் படித்து முடித்தார். வீட்டில் திருமணமும் செய்து வைக்கவே முழுநேர குடும்பத்தலைவி ஆனார்.

ஆனால், சித்தார்த் கதை அப்படியில்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டதால், அவரை மேற்கொண்டு படிக்க வைக்க, அவரது தாயாரால் இயலவில்லை. எனவே, குடும்பச்சூழல் காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், சிறுவயது முதலே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு அவருக்குள் இருந்தது. ஆனால், பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட தன்னால் அது இனி சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர், தனது மனைவி மூலம் தனது கனவை நினைவாக்கிக் கொள்ள முடிவு செய்தார்.

பட உதவி : Times of India

பட உதவி : Times of India


ஆகவே, தன் மனைவியை அடுப்படிக்குள் அடைத்து வைக்க அவர் விரும்பவில்லை. ராஷ்மியிடம் இருந்த திறமைகளைக் கண்டு கொண்ட அவர், அவரை எப்படியும் ஐஏஎஸ் ஆக்கியே தீருவது என தீர்க்கமாக முடிவெடுத்தார். 

‘ஆகாயத்தில் கோட்டை கட்டுவதாகக் கனவு காணுங்கள். பின் உடனடியாக எழுந்து அதற்கான அடித்தளத்தை போட ஆரம்பியுங்கள்’ என்ற பிரபல அறிஞரின் அறிவுரை அவருக்கு நினைவில் வந்தது.

உடனடியாக தனது மனைவியை ஐஏஎஸ் ஆக்குவதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக இறங்கினார். பணத் தேவைகளுக்காக சிறுவயது முதல் தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் கட்டிய வீடு, ஐந்து ஏக்கர் நிலம், தனது கடை என அனைத்தையும் விற்றார். கையில் கிடைத்த பணத்தில் எல்லாம் மனைவியின் படிப்பிற்கு தேவையான புத்தகங்களை அவர் வாங்கினார். ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளிலும் ராஷ்மியை அவர் சேர்த்து விட்டார்.

முதல் முயற்சியிலேயே ராஷ்மிக்கு வெற்றி வசப்பட்டு விடவில்லை. 2003ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுகளுக்கு ஆயத்தமாக ஆரம்பித்தார் அவர். ஆனால், தொடர்ந்து நான்கு முறை அவருக்கு தோல்வி மட்டுமே பரிசாகக் கிடைத்தது.

தனது கனவை நிஜமாக்குவதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்தார். இதற்கிடையே இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், இதனால் தன் மனைவியின் கவனம் சிதறிவிடக் கூடாது என நினைத்த சித்தார்த், குழந்தையையும் தானே பார்த்துக் கொண்டார்.

தன்னை எப்படியும் ஐஏஎஸ் ஆக்கிவிடுவது என அரும்பாடு பட்ட கணவரின் தியாகங்களை நினைத்து, மிகவும் கண்ணும் கருத்துமாகப் படித்தார் ராஷ்மி. படிப்பைத் தவிர தன் கவனம் வேறு எதிலும் சிதறி விடாமல் அவர் பார்த்துக் கொண்டார்.

நான்கு முறை முயற்சித்தும் ஏன் தன்னால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை என யோசித்தார் ராஷ்மி. ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், இலக்கை அடைய தன் பாதை சரியானது தானா என ஆராய்ந்தார். தனது பாடத்தை புவியியலில் இருந்து வரலாறாக மாற்றினார். புதிதாக தேர்ந்தெடுத்த வரலாற்றை இன்னும் ஆர்வத்தோடு படித்தார்.

தன்னைச் சுற்றி இருந்த தடைகளால் சற்றும் மனம் தளரவில்லை ராஷ்மி. அவற்றைத் தகர்த்தெறிந்து கணவர் தந்த ஊக்கத்தோடு தொடர்ந்து வெறித்தனமாகப் படித்தார்.

ராஷ்மி, சித்தார்த்தின் முயற்சிகளும், தியாகங்களும் வீண் போகவில்லை. 2010ம் ஆண்டு தனது 29வது வயதில் ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றார் ராஷ்மி. புனேயின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். இத்தேர்வில் தேர்ச்சி ஆனவர்களில் ராஷ்மிக்கு 169-வது இடம் கிடைத்தது.

தன் மகளை கலெக்டர் ஆக்கிய மருமகனை ராஷ்மியின் அப்பா பாராட்டி இப்படிச் சொல்கிறார், 

“சித்தார்த் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால், அவர் ராஷ்மியைவிட புத்திசாலி,” என்கிறார். ராஷ்மியின் அப்பா, புனே முனிசிபல் கார்ப்பரேசனில் அடிமட்ட தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை மராத்தி மொழியில் முடித்தவர் ராஷ்மி. எனவே, அவர் தனது ஐஏஎஸ் தேர்வு மற்றும் நேர்காணலையும் மராத்தி மொழியிலேயே எதிர்கொண்டார்.

image


தான் பட்ட பாடுகளுக்கெல்லாம் பலனான, தனது மனைவி ஐஏஎஸ் ஆகிவிட்ட மகிழ்ச்சியில் சித்தார்த் கூறுகையில், 

“ராஷ்மியின் இந்த வெற்றியால் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. தூரத்து உறவினர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என தொடர்ந்து எங்களுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது. ஊர் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ராஷ்மியின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். ராஷ்மி தனது கடின உழைப்பாலும், தியாகத்தாலும் எங்கள் கனவை நினைவாக்கி விட்டார்,” என பெருமையுடன் கூறுகிறார்.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தனது இலக்கை அடைந்து விட்ட ராஷ்மி, அதோடு நிறுத்தி விடாமல் தற்போது ஐஏஎஸ் தேர்வுகளுக்காக படித்து வரும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.

திருமணம் ஆகிவிட்டாலே குடும்பம், குழந்தைகள் என தன் வட்டத்தை எந்தவொரு பெண்ணும் சுருக்கிக் கொள்ளத் தேவையில்லை. அதற்கு முன் தான் இலக்கு, சாதனை என்பவை இல்லை. திருமணத்திற்குப் பின்னும் கல்வியில் சாதிக்க முடியும் என்பதை தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார் ராஷ்மி.

Add to
Shares
471
Comments
Share This
Add to
Shares
471
Comments
Share
Report an issue
Authors

Related Tags