68வது தேசிய திரைப்பட பட்டியலில் 5 விருதுகளை அள்ளிய சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

68வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா மற்றும் அஜய் தேவ்கன் பெற்றுள்ளனர்.
21 CLAPS
0

68வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் 5 விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா மற்றும் அஜய் தேவ்கன் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு, 30 மொழிகளில் 305 திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறப்பு திரைப்படம் அல்லாத பிரிவில், 28 மொழிகளில் 148 படங்கள் பெறப்பட்டன. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர 15 மொழிகளில் உள்ள திரைப்படங்கள் பெறப்பட்டன. 24 புத்தகங்கள் மற்றும் 5 திரைப்பட விமர்சகர்கள் சினிமா விருதுகளில் சிறந்த எழுத்துக்காக போட்டியிட்டனர்.

68வது தேசிய திரைப்பட விருதுகள்:

68வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் மிகவும் மதிப்பு மிக்கதாக கருத்தப்படும் ‘National Awards’ 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதனை இந்திய அரசின் திரைப்பட விழா இயக்குநரகம் நிர்வகித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, தேசிய விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு விழா 2020 ஆம் ஆண்டு முதல் பல பிரிவுகளில் திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று முன்னதாக, திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா தலைமையிலான 10 பேர் கொண்ட நடுவர் குழு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து 68 வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில்,

“அனைத்து ஜூரி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளை மதிப்பாய்வு செய்த அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன், மேலும், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுபவர்களை வாழ்த்த விரும்புகிறேன். சிறப்பாகப் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள். கோவிட் காரணமாக இரண்டு ஆண்டுகளாக விருது விழாவை நடத்த முடியாமல் போன நிலையில், இந்த ஆண்டு 68 தேசிய திரைப்பட விருதுகளை அறிவிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது:

சிறந்த நடிகருக்கான விருது தமிழில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக சூர்யா-விற்கும், இந்தியில் ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ படத்தில் நடித்ததற்காக அஜய் தேவ்கனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது பட்டியல் வரை இடம் பெற்ற சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போது தமிழக ரசிகர்களின் கனவை நனவாக்கும் வகையில், சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா முதன் முறையாக தேசிய விருது பெறுவது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ படத்தில் நடித்ததற்காக மூன்றாவது முறையாக தேசிய விருது பெற உள்ளார். இதற்கு முன்னதாக 1998ம் ஆண்டு வெளியான ‘ஜக்ம்’ மற்றும் 2002ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட் ஆஃப் பகத் சிங்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

5 விருதுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’:

விமான நிறுவனம் டெக்கான் நிறுவனர் ஜி கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2020ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தின் கதை அமைப்பும் மற்றும் சூர்யாவின் நடிப்பும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களை குவித்தது.

ஆஸ்கர் போட்டியில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் படக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டது.

அதன் பின்னர், 366 படங்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் சூரரைப்போற்று படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் இடம்பிடித்திருந்தது. ஆனால், இப்படம் விருது பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும் ஓடிடி தளத்தில் வெளியாகி ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

78வது கோல்டன் குளோப்பில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் பிரிவில் திரையிடப்பட்ட பத்து இந்திய படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள 68வது தேசிய விருதுகள் பட்டியலில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 விருதுகளை வாரிக்குவித்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் பெற்றுள்ளனர். சிறந்த பின்னணி இசைக்கான விருதை இப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் பெற்றுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான விருது இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதும் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகளை ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பெற்றுள்ளது.

4 விருதுகளை குவித்த ‘அய்யப்பனும் கோஷியும்’:

மலையாள த்ரில்லர் படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ 4 பெரிய விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் சச்சி என அழைக்கப்படும் கே ஆர் சச்சிதானந்தனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பல்வேறு மொழிகளிலும் ரீமேக் உரிமையை வாங்க முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டிருந்தன.

இந்நிலையில், படம் வெளியாகி 5 மாதங்களில், 2020ம் ஆண்டு இயக்குநர் சச்சி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தற்போது அவருக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது மலையாள சினிமாவையே கலங்க வைத்துள்ளது.

சிறந்த துணை நடிகராகருக்கான விருது ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் நடித்த பிஜு மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சண்டை இயக்கத்துக்கான விருது ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராஜசேகர், மாபியா சசி ஆகியோரும், சிறந்த பாடகிக்கான விருது கலகாத்தா பாடல் பாடிய நஞ்சம்மாவும் வென்றுள்ளனர்.

வெற்றி பெற்ற படங்களின் பட்டியல்:

 • பழம்பெரும் மராட்டிய வீரரான தானாஜி மாலுசரே பற்றிய வரலாற்றுத் திரைப்படமான தன்ஹாஜி, முழுமையான சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதை வென்றுள்ளது.
 • சிறந்த தமிழ்த் திரைப்படம் மற்றும் சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படமும், இந்த படத்தில் நடித்ததற்காக லட்சுமி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் வழங்கப்பட உள்ளது.
 • சிறந்த அறிமுக இயக்குநராக மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வசனத்திற்காகவும் மண்டேலே திரைப்படம் தேர்வாகியுள்ளது.
 • குழந்தை நட்சத்திரம் நடிகர் வருண் புத்ததேவ் நடித்த ‘தூல்சிதாஸ் ஜூனியர்’ திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படமாகவும், சிறந்த கன்னட திரைப்படம் மற்றும் சிறந்த லொகேஷன் சவுண்ட் விருதுகளை ‘டோலு’ வென்றுள்ளது. சிறந்த பெங்காலி திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற இரண்டு விருதுகளை ‘அவிஜாத்ரிக்’ பெற்றுள்ளது.
 • சிறந்த தெலுங்கு படமாக ‘கலர் போட்டோவும்’ , சிறந்த மலையாள படமாக ‘திங்கலாச்ச நிச்சயமும்’ விருது பெற்றுள்ளன.
 • சிறந்த மராத்தி படமாக ‘கோஸ்தா ஏகா பைதானிச்சி’, சிறந்த அசாமிய திரைப்படமமாக ‘பிரிட்ஜ்’ தேர்வாகியுள்ளது.
 • சிறந்த வர்ணனை விருது - ஷோபா தரூர் சீனிவாசன்
 • சிறந்த இசையமைப்பாளர் - விஷால் பரத்வாஜ்
 • சிறந்த ஒளிப்பதிவாளர் - ஷப்டிகுன்ன காளப்பா
 • சிறந்த இயக்குநர் விருது - ஆர்.வி.ரமணி (ஓ தட்ஸ் பானு )
 • சிறந்த புலனாய்வுப் பிரிவு படம் - சேவியர் பிரிகேடியர் ப்ரீதம் சிங்
 • சிறந்த ஒப்பனைக் கலைஞர் - டி.வி.ராம்பாபு (நாட்டியம் - தெலுங்கு)
 • சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - நச்சிகேத் பார்வே & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் - இந்தி)
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - அனீஸ் நாடோடி (கப்பேலா - மலையாளம்)
 • மத்தியப் பிரதேசம் திரைப்படங்களுக்கு மிகவும் உகந்த மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷியாம் (மணிப்புரி)
 • கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature):மலையாளம் டிரீமிங் ஆப் உட்ஸ் (Dreaming of woods)

Latest

Updates from around the world