பதிப்புகளில்

பின்னணிப் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி: இசைப்பயணம் பற்றிய நினைவலைகள்!

6th Dec 2017
Add to
Shares
22
Comments
Share This
Add to
Shares
22
Comments
Share

கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் எல் சுப்ரமணியம் ஆகியோரின் பழைய பங்களா பெங்களூருவின் மல்லேஸ்வரத்திலுள்ள டாலர் காலனியில் உள்ளது. வீட்டின் வரவேற்பரையில் இருந்த ஆள் உயர விநாயகர் சிலை என்னை வரவேற்றது.

கவிதா கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாட ஆவலாக காத்திருந்தேன். அவரது பழைய பாடலான ’ஹவா ஹவாய்’ சமீபத்தில் வித்யா பாலனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ’தும்ஹாரி சுலு’ திரைப்படத்தில் புதுப்பொலிவுடன் இடம்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கவிதா பாலிவுட்டின் பின்னணி இசையில் தீவிரமாக செயல்படவில்லை. கணவருடன் இணைந்து பல்வேறு இசைப்பயணங்களில் பங்கேற்று வருகிறார். கவிதா தனது தற்போதைய காலகட்டம் குறித்து விவரிக்கையில்,

”எனக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது. பாலிவுட்டில் இருந்ததால் மட்டும் எனக்கு இது கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். நானும் பாலிவுட்டில் பாடினேன். ஆனால் பாலிவுட்டில் நான் மட்டுமல்ல பலரும் பாடி வருகின்றனர். நான் பண்டிகைகளில் பாடுகிறேன். ராஷ்டிரபதி பவன் புல்வெளியில் பாடிக்கொண்டிருந்தபோது அப்துல் கலாம் எனது பாட்டைக் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. ’ஐகிரி நந்தினி’ பாடலை ஆர்கெஸ்டிராவுடன் நான் பாடியதைக் கேட்டு ரசித்தார். அடுத்த வருடமே பத்மஸ்ரீ கிடைத்தது. இதற்கு அவர் ஒரு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன்.”
image


வேறுபட்ட ஒரு காலகட்டம்

கம்பீரமான பிள்ளையாரிலிருந்து எனது பார்வையை விலக்க முடியவில்லை. வீட்டிலுள்ளவர்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பும் இந்த பிள்ளையாரை வழிபாடு செய்வார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். கவிதா ஐந்து நிமிடங்களில் வந்தார். பளிச்சென்று காஞ்சிபுரம் புடவையில் காட்சியளிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எளிமையான ஒரு கருப்பு வண்ண சல்வார் கமீஸ் அணிந்திருந்தார்.

இதற்கு முன்பு பாடியதற்கும் தற்போது பாடுவதற்கும் என்ன வேறுபாடு உள்ளதென்று கேட்டேன். அதற்கு கவிதா, “பல்வேறு காரணங்களுக்காக பழைய காலகட்டம் எனக்கு பிடிக்கும். நான் மிகவும் சுறுசுறுப்புடனும் கவனத்துடனும் செயல்பட்ட காலம் அது. அப்போது சுருதியை திருத்திக்கொள்ள முடியாது. பெரிய ஒலி தொடர்பான மைக்ரோஃபோனில் (acoustic mics) பாடவேண்டும். ஒருவேளை முள் சிவப்புக்குறியை நோக்கி நகர்ந்தால் நீங்கள் அதிக ஒலியெழுப்புகிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் மைக்ரோஃபோனை சரிசெய்வார்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து பாடவேண்டும்.”

கவிதா பல்வேறு பாடல் வகைகளைப் பாடியுள்ளார். ஆனால் ’மிஸ்டர் இந்தியா’ திரைப்படத்தின் ’ஹவா ஹவாய்’ பாடல் 1987-ம் ஆண்டு அவரை மிகவும் பிரபலமாக்கியது. ஆஷா போஸ்லே ஸ்ரீதேவிக்காக பாடும் ஒரு பாடலை பாட கவிதாவை அழைத்தார் லக்ஷ்மிகாந்த்.

”ஜாவித் அக்தர் அங்கு இருந்தார். வேடிக்கையான வரிகள் அடங்கிய பாடலை என்னிடம் கொடுத்தார். அதைக் கற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். நான் அந்த வேடிக்கையான வரிகளை உச்சரித்துக்கொண்டிருந்தத்தைப் பார்த்த என் அம்மா என்னை பைத்தியம் என்றே நினைத்தார்,” என்று கூறி சிரித்தார் கவிதா.

ஒரு மறைமுக தவறு

அடுத்த நாள் கவிதா ஸ்டூடியோவிற்குள் நுழைந்தபோது இசைக்கலைஞர்களால் அந்த இடம் நிரம்பியிருந்தது.

“நாங்கள் அங்கே சென்றபோது பாடல் வரிகள் மாறியிருந்தது. ஜாவித் சாஹப் வந்து பாடலின் இறுதி வரிகளை சேர்த்தார். வேடிக்கையான வரிகளைக் கொண்ட பாடலைப் பாடுவதை நான் சௌகரியமாக உணரவில்லை. நான் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றிருந்தேன். இது எனக்கு புதிதாக இருந்தது. ஆனால் அந்த பாடலுக்கு அப்படிப்பட்ட வரிகள் தேவைப்பட்டது,” என்றார் அவர்.

எட்டு மாதங்கள் கழிந்தது. இசையமைப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரது பாடல் ஸ்ரீதேவிக்கு பொருத்தமாக இருப்பதால் அதையே வெளியடப்போவதாக தெரிவித்தார்.

கவிதா மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அந்த பாடலில் ஒரு இடத்தில் தவறாக பாடிவிட்டதால் மறுபடியும் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

”என்ன தவறு என்று என்னிடம் கேட்டார். அதில் ’ஜானு’ என்று வார்த்தைக்கு பதிலாக ’ஜீனு’ என்று பாடிவிட்டேன் என்பதை சுட்டிக்காட்டினேன். ஏற்கெனவே இந்த பாடலில் பல விசித்திரமான வார்த்தைகள் இருப்பதால் நான் வேண்டுமென்றே அவ்வாறு பாடியது போன்ற ஒரு உணர்வைத்தான் அது அளிக்கும் என்றார். மேலும் அதே போல் என்னால் மறுபடியும் பாடமுடியாது என்பதால் அப்படியே இருக்கட்டும் என்றும் கூறினார். அதன் பிறகு நான் பிரமலமடைந்தேன்,” என்றார் கவிதா.

கர்நாடக சங்கீதம் மற்றும் ரபீந்திர சங்கீத் மீதான விருப்பம்

ஒரு புன்னகையுடன் அவரது பயணம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

“நான் பிறப்பதற்கு முன்பே அனைத்தும் துவங்கிவிட்டது,” என்றார் அவர். கவிதாவின் இசைப் பயணம் பெங்காலி ரபீந்திர சங்கீத் மற்றும் தமிழ் பிராமண குடும்பங்களின் தேர்வான கர்நாடக இசை ஆகிய இரு இசைமுறையும் கலந்ததாகவே இருந்தது.

கவிதா தனது இளம் வயது குறித்து நினைவுகூறுகையில், ”என்னுடைய அம்மாவின் நெருங்கிய நண்பர் பட்டாச்சாரியா. நாங்கள் கிருஷ்ணமூர்த்தி. இரு குடும்பமும் டெல்லியில் சேர்ந்தே வாழ்ந்து வந்தோம். எங்களது குடும்பம் அரசுப்பணியில் இருந்து வந்தது. என்னுடைய அப்பாவிற்கு பெரிய வீடு வழங்கப்பட்டது. என்னுடைய அத்தையும் உடன் வந்தால் மட்டுமே அங்கு இருப்பிடத்தை மாற்ற சம்மதிப்பதாக கூறினார் என் அம்மா. எனவே அவர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டை நிராகரித்துவிட்டு இரு குடும்பங்களும் சேர்ந்து வாழ வசதியாக ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

image


கவிதாவின் அம்மாவிற்கும் அத்தைக்கும் இசையின் மீது அதீத ஆர்வம் இருந்தது. இதனால் கவிதாவை இசை பயில ஊக்குவித்தனர். கவிதாவிற்கு ஏழு வயதிருக்கையில் தனது முதல் தங்க பதக்கத்தை வென்றார்.

”நாங்கள் மிகவும் தீவிரமாக இசை பயின்றோம். இசை ஒரு பொழுதுபோக்கு. பள்ளிக்கு செல்லவேண்டும். இருப்பினும் நாங்கள் அதிகாலை எழுந்து பயிற்சி செய்ய என் அம்மா ஊக்குவித்தார்,” என்றார் கவிதா.

ஆனால் கவிதா பின்னணி பாடகராகவேண்டும் என்பது அவரது அத்தையின் கனவாகவே இருந்தது. கவிதா பள்ளிப்படிப்பை முடித்தவுடன் அவரது அத்தை அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றார்.

”நான் ஏன் பாரம்பரிய இசையில் ஈடுபடாமல் திரைப்பட இசையில் ஈடுபட்டுள்ளேன் என்று என்னுடைய அப்பா கேட்டார். என்னுடைய எதிர்காலம் இதில் உள்ளது என்றார் அவர். எனவே இது என்னுடைய அத்தையின் கனவு என்றே சொல்லலாம். அவரது கனவை நனவாக்குவதற்கான கடின உழைப்பு மட்டுமே என்னுடையது. நோக்கம் அவருடையது.”

பெரியளவில் துவங்குதல்

கவிதாவும் அவரது அத்தையும் மும்பையில் தங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டறிந்தபோது கவிதாவின் வயது 16. அவர்கள் தங்கிய வீடு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குநரான குரு தத்தின் தம்பியின் வீடு என்று தெரிந்துகொண்டனர். செயிண்ட் சேவியர் கல்லூரியில் சேர்ந்து கல்லூரி நிகழ்ச்சியில் ஜிங்கில்ஸ் பாடத்துவங்கினார்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வில் பாடகர் ஹேமந்த் குமார் சிறப்பு விருந்துனராக பங்கேற்றிருந்தார். கவிதா பாடுவதைக் கேட்டு அவரோட பாடுவதற்கு வாய்ப்பளித்தார். பல்வேறு நிகழ்வுகளில் அவருடன் சேர்ந்து பாடினார். மன்னா தேவுடன் அறிமுகமானார். அவர் ஒரு கச்சேரியில் பங்கேற்க குஜராத்திற்கு அழைத்தார்.

”அப்போதுதான் நான் முதல் முறையாக அவருடன் மேடையில் பாடினேன். அதைத் தொடர்ந்து 18 வருடங்கள் உலகெங்கும் பல்வேறு மேடைகளில் பாடினேன்,” என்றார் கவிதா.

ஹேமந்த் குமார், மன்னா தே இவர்களுடன் பாடியது மிகப்பெரிய கற்றல் அனுபவத்தை அளித்தது.

”அது ஒரு சிறந்த பயிற்சியாக அமைந்தது. மேலும் அமுல் ஸ்ப்ரே தயாரிப்பிற்காக தமிழில் கீதா தத்துடன் இணைந்து என்னுடைய முதல் ஜிங்கிளை பாடினேன். இது எனக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்க உதவியது,” என்றார்.

வகுப்பு, இசைபயிற்சி, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று கச்சேரிகள், ஜிங்கில்ஸ் என கவிதாவின் கல்லூரி நாட்கள் நிறைந்திருந்தது. அவரது அத்தையும் உடன் இருந்தார்.

“ஒன்று மற்றொன்றிற்கு வழிவகுத்தது. மிகவும் உற்சாகமாக இருந்தது.”

அவரது ரத்தத்திலேயே இசை கலந்திருந்தது

தனது வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய பங்கு வகிக்கத் துவங்கியதை உணர்ந்து மும்பையிலேயே தங்க விரும்பினார். அவரது அப்பா அப்போது சுவிசர்லாந்தில் இருந்தார். கவிதா கட்டாயம் மும்பையில்தான் இருக்க விரும்புகிறாரா என்று கேட்டார். கவிதா தனது முடிவிற்காக ஒருபோதும் வருந்தியதில்லை.

எனினும் பின்னணி பாடல் மீதான விருப்பம் 1971-ம் ஆண்டில் முதலில் ஏற்பட்டது. ஹேமந்த் குமார் பரேலில் இருந்த அவரது ஸ்டுடியோவிற்கு கவிதாவை அழைத்தார். அங்கு சென்றடைந்தபோது டாகூர் பாடலின் இரண்டு வரிகளை கற்றுக்கொடுத்தார்.

”இசைக் கலைஞர்கள் அனைவரும் வாசிக்கத் தயாராக இருந்தனர். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். கதவைத் திறந்துகொண்டு லதா மங்கேஷ்கர் உள்ளே நுழைந்தார். அந்த காலகட்டத்தில் ஒரு பெரிய ஹால் இருக்கும். இசைக் கலைஞர்கள் அங்கே அமர்வார்கள் இரண்டு மைக்ரோஃபோன்கள் இருக்கும். லதாஜிக்கு மூன்றடி இடைவெளி விட்டு நான் நின்று அவருடன் பாடவேண்டும். எனக்கு இதயத் துடிப்பே நின்றுவிட்டது என்றுகூட சொல்லலாம். அவரது குரலில் மெய்மறந்து என்னுடைய வரிகளை மறந்துவிட்டேன். இறுதியாக நான் பாடி முடித்தேன். அதுதான் என்னுடைய முதல் திரைப்பட வெளியீடு. அது ’ஸ்ரீமன் பிருத்விராஜ்’ என்கிற பெங்காலி திரைப்படம்,” என்றார் கவிதா.

டப்பிங் காலகட்டம்

1976 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே பாடிய பாடல்களை ரெக்கார்டிங் செய்யத் துவங்கினார். ’காதம்பரி’ திரைப்படத்திற்காக வெளியான அவரது இரண்டாவது பாடல் ஒரிஜினல் பாட்டு கிடையாது. அவரது பாடல்கள் இறுதியாக லதா மங்கேஷ்கரால் டப் செய்யப்படும்.

”1978-ம் ஆண்டு லஷ்மிகாந்த் பியாரேலால் அவர்களுக்காக ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு பாடல்கள் பாடி வந்தேன். ’மாங் பாரோ சஜ்னா’ என்கிற திரைப்படத்திற்காக பாடினேன். அனைத்து பாடல்களையும் நான் பாடினேன். பிறகு அந்த பாடல்கள் லதாஜியால் பாடப்பட்டது. ஆனால் என்னுடைய பாடல்களில் ஒன்று ரேகா திரைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டது.”

விரைவில் திரைத்துறையின் பல சிறு இசையமைப்பாளர்களுடன் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கவிதாவிற்குக் கிடைத்தது.

”பஞ்சம் என்றழைக்கப்படும் ஆர் டி பர்மன் என்னை அழைத்து வாய்ப்பளித்தார். ஆனால் அவர் இசையமைத்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியடைந்தது. மோசமான காலகட்டத்தில் இருந்தார். ’ஹம் ஹை லஜவாப்’, ’கரிஷ்மா’ போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்தன. என்னுடைய பாடல்களும் தோல்வியடைந்தது. ஒரு நாள் ஒரு நல்ல திரைப்படத்தில் ஒரு நல்ல பாடலை வழங்குவதாக என்னிடம் கூறினார்,” என்றார் கவிதா.

அவரது வாக்கை காப்பாற்றும் விதத்தில் ’1942 : ஏ லவ் ஸ்டோரி’ திரைப்படத்திற்காக பஞ்சம் கவிதாவை அழைத்தார்.

சுபாஷ் காய் அவர்களும் புதிய தயாரிப்பைத் துவங்கியிருந்தார். அதற்காக புதிய பாடகர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பினார். ’கர்மா’ திரைப்படத்திற்காக கிஷோர் குமாருடன் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

"கிஷோர் குமாருடன் பாடும்போது மிகவும் பதட்டமாக உணர்ந்தேன். எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத இசைப் பிரிவில் அந்த பாடல் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் லஷ்மிஜி கடினமான உழைத்தார். கிஷோர் குமார் அதிக ஊக்கமளித்தார். அந்த நாட்களில் பாடல் ஒத்திகைக்கு அதிக நேரம் எடுக்கும். இசையமைப்பாளர்கள் தயாராவதற்குள் கிடைக்கும் நேரத்தில் அவரது வாழ்க்கை குறித்து விவரிப்பார். மிகவும் நகைச்சுவையாக பேசுவார். இறுதி ஒத்திகைக்கான நேரம் வரும்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நான் சிரித்துக்கொண்டிருப்பேன். என்னுடைய குரல்வளம் மாறிவிடும். அந்த அளவிற்கு நான் சிரிப்பேன். அவர் ‘இது பாடுவதற்கான நேரம், கிளம்பு’ என்று சொல்வார்,” என்று கவிதா விவரித்தார்.

லதாவும் ஆஷாவும் பிரபலமாக பாடல்களை பாடிவந்த சூழலில் மற்ற பாடகர்களும் களமிறங்கத் துவங்கினர்.

ஒரு இடைவெளி

எனினும் 1994-ம் ஆண்டிலிருந்து அவரது பணியில் தற்காலிக இடைவெளி ஏற்பட்டது. ஒவ்வொரு பாடலும் குமார் சானு மற்றும் நதீம் ஷ்ரவனால் பாடப்பட்டது.

”எனினும் கிளாசிக் மற்றும் செமி கிளாசிக் பாடல்களுக்கு என்னை அழைத்தனர். நான் வெவ்வேறு பாடல் வகைகளை பாடினேன். அந்த சமயத்தில் ஏ ஆர் ரஹ்மான் பம்பாய் திரைப்படத்திற்காக என்னை அழைத்தார். ’குச்சி குச்சி ராக்கம்மா’ பாடலைப் பாடினேன். அதைப் பாடி முடித்ததும் ரஹ்மான் என்னை மற்றொரு பாடல் பாடச்சொன்னார். அப்படிப் பாடிய பாடல்தான் ’உயிரே...’,” என்றார் கவிதா.

பாடலை இரண்டாம் பட்சமாக்கியவரைக் கண்ட தருணம்

1999-ம் ஆண்டு ’ஹே ராம்’ திரைப்படப் பணியில் ஈடுபட்டிருந்த டாக்டர் எல் சுப்ரமணியம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அது ஒரு க்ளாசிக் ஃப்யூஷன் இசை என்பதால் கவிதா சற்று பதட்டமாகவே இருந்தார். ஹரிஹரனுடன் இணைந்து டூயட் பாடலின் சில வரிகளைப் பாடினார். அது தொடரவில்லை. ஆனால் அடுத்த நான்கு மாதங்களில் ஹிந்தி பேசத் தெரிந்த ஒரு பாடகி சுப்ரமணியத்திற்கு தேவைப்பட்டது. கவிதாவை பெங்களூருவிற்கு அழைத்து ’க்ளோபல் ஃப்யூஷன்’ என்கிற ஆல்பத்திற்காக பாடவைத்தார்.

”அந்த மூன்று நான்கு மாதங்கள் நாங்கள் ஒன்றாகவே பணியாற்றினோம். ஒருவரை ஒருவர் விரும்பினோம். ரெக்கார்டிங் சமயத்தில் அவரது குழந்தைகளை நான் சந்தித்தேன். நான் வீடு திரும்புகையில் முதல் முறையாக எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அந்த குழந்தைகளின் அம்மா இறந்து நான்காண்டுகள் முடிந்திருந்தது. அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. நான் சிறப்பாக பாட அவரும் குழந்தைகளும்தான் காரணம்,” என்றார்.

இறுதியாக பாடலை இரண்டாம் பட்சமாக மாற்றிய ஒருவரை சந்தித்தார் கவிதா.

“ப்ரொஃபஷனலாக பாடமுடியாமல் போனால் பரவாயில்லை என்று அவர் நினைத்தார்,” என்றார் கவிதா. திரைப்படத்துறை எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்தார். மும்பையிலிருந்து வெளியேறினார்.

அப்போது துறையில் பல மாற்றங்கள் ஏற்படத் துவங்கியிருந்தது. புதிய இயக்குநர்கள் வரத் துவங்கினர். புதிய தேவைகள் ஏற்பட்டது. ஸ்கிரிப்ட்டோ அல்லது இயக்குநரோ இல்லாத இசை வகையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார் சுப்ரமணியம்.

இது ஒரு மாறுபட்ட இசைப்பயணத்திற்கு வழிவகுத்தது.

“ஒரு கிளாசிக்கல் இசைக்கலைஞரின் வாழ்க்கையைக் கண்டேன். இரவு 11 மணிக்கு அவர் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் தனது வயலினை எடுத்து பயிற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களது படிப்பில் கவனம் செலுத்தி, அவர்களுடன் விளையாடி அனைத்தும் முடிந்த பிறகு வயலின் பயிற்சியில் ஈடுபடுவார். அவரது வாழ்க்கை முழுவதும் இரவு வெகு நேரம் கழித்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏனெனில் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். அவர் முழு ஈடுபாட்டுடன் கடினமாக உழைப்பதைப் பார்த்திருக்கிறேன்,” என்றார் கவிதா.

தனிப்பட்ட முறையில் இசையின் மதிப்பை நன்குணர்ந்த சமயம் அது.

“இசையை மேலும் அனுபவித்து ரசிக்கத் துவங்கினேன்,” என்றார். நாம் பேசிக் கொண்டிருக்கையில் தனது கணவர் எல் சுப்ரமணியத்துடன் அடுத்த இசைப் பயணத்திற்கு ஆயத்தமாகத் துவங்கினார் கவிதா கிருஷ்ணமூர்த்தி.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து கஷ்யப்

Add to
Shares
22
Comments
Share This
Add to
Shares
22
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக