பதிப்புகளில்

கழிவுப் பொருளைக் கைவினைப் பொருளாக்கும் ப்ரீத்தி இன்டர்நேஷனல்

siva tamilselva
7th Nov 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

“ஒரே ஒரு முறை நீங்கள் சரியானதை தேர்வு செய்து விட்டால் போதும்” என்கிறார் ட்ராப் பாக்ஸ் நிறுவனரும் சிஇஓவுமான ட்ரா ஹட்சன். ஹிரிதேஷ் லோஹியாவை மல்டிமில்லினராக்கிய யோசனை தோன்றுவதற்கு முன்பு அவர் செய்த தொழில்கள் அனைத்திலும் தோல்விதான் வந்தது. “ஒரு டெக்ஸ்டைல் கெமிக்கல் தொழிற்சாலை தொடங்கினேன். பிறகு ஒரு ஸ்டோன் கட்டிங் தொழிற்சாலை, வாஷிங் பவுடர் தயாரித்து விற்பனை செய்யும் தொழில், பங்குச் சந்தை வர்த்தகம் எனப் பல தொழில்கள் செய்தேன். இவை எல்லாவற்றிலும் நான் ஏராளமான பணத்தை இழந்தேன்” என்கிறார் அவர்.

image


கடைசியாக குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழிலுக்கு வந்து சேர்ந்தார். அது ஒரு அற்புதமான ஐடியா என்பதற்காக அல்ல. அது ஒன்றைத் தவிர வேறு எதையும் அவரால் செய்ய முடியவில்லை. “பல்வேறு தொழில்களில் எங்கள் பணத்தைப் பூராவும் இழந்த பிறகு, புதிதாக வேறு தொழில் தொடங்குவதற்கு பணம் இல்லை. எங்களின் பழைய தொழிற்சாலையைச் சுற்றி குவிந்திருந்த குப்பைகள்தான் மிச்சம். பழைய கோணிப் பைகள், கெமிக்கல் வாங்கிய காலி ட்ரம்கள், பிளாஸ்டிக் குப்பைகள் என்று நிறைந்து கிடந்தது. சாப்பாட்டுக்கே வழி இல்லை. அந்தக் குப்பைகளில் எதையாவது விற்று அன்றாடத்தை ஓட்டலாம் என்று பார்த்தால், யாரும் அதை வாங்கத் தயாராக இல்லை. அந்தக் குப்பைகளில் இருந்து எப்படி வருமானம் ஈட்டுவது என்று யோசித்தோம். அந்த யோசனையில் பிறந்தது தான் ப்ரீத்தி இன்டர்நேஷனல். 2005ல் இதை ஆரம்பித்தோம்.” என்கிறார் ஹிரிதேஷ்.

இதற்கு முன்னாள் தொடங்கிய தொழில்கள் தனது மனைவி பெயரில் அமையாததுதான் தோல்விக்குக் காரணம் என நம்பினார் ஹிரிதேஷ். “என் மனைவி ப்ரீதி. எனது உறுதி அவர்தான். எனக்கு அவர்தான் அதிர்ஷ்டம். இதற்கு முந்தைய தொழில்கள் எல்லாம் தோற்றுப் போனதற்கு அவரது பெயரை வைக்காததுதான் காரணம் என்று நம்புகிறேன். இந்த முறை நான் அந்தத் தப்பை செய்ய மாட்டேன்” என்றார். மனைவியின் பெயரில் ப்ரீத்தி இன்டர்நேஷனலைத் தொடங்கினார்.

கழிவுப் பொருட்களில் இருந்து கையால் செய்யக் கூடிய பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறது ப்ரீத்தி இன்டர்நேஷனல். “பழைய கோணிப்பைகளில் இருந்து கைப்பைகள் தயாரிக்கிறோம். ராணுவ கூடாரங்கள், டெனிம் பேண்ட் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கிறோம். பழைய டின்கள், டிரம்கள், பழைய ராணுவ ஜீப்புகள், டிராக்டர் பகுதிகள், பழைய இயந்திரப் பகுதிகளில் இருந்து பர்னீச்சர் பொருட்களைத் தயாரிக்கிறோம். பழைய ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் ஹெட்லைட்டுகளில் இருந்து புதிய விளக்குகளைத் தயாரிக்கிறோம். இந்தப் பொருட்கள் சீனா, அமெக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகின்றன. பழைய பொருட்களில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்வதில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் நாங்கள்தான். சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரே நிறுவனம் நாங்கள்தான்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார்.

“தற்போது எங்கள் வர்த்தக வரவு செலவு கிட்டத்தட்ட 80 லட்சம் டாலர். 36 நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனம் எங்களுடையது. மூன்று பெரிய தொழிற்சாலைகளில் எங்கள் தயாரிப்புகள் உற்பத்தியாகின்றன. கிட்டத்தட்ட 400 பேர் பணியாற்றுகின்றனர். எங்களின் மிக முக்கியமான சந்தை சீனாதான். எங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் அங்குதான் இருக்கின்றனர். புதிய தலைமுறை இளைஞர்கள் பார்கள், கபேக்கள், பப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளை எங்களின் தயாரிப்புகள் கொண்டு அலங்கரிப்பதை வெகுவாக விரும்புகின்றனர். எங்களின் உற்பத்தியை அதிகரித்து 2016ல் வர்த்தக வரவு செலவை 2 கோடி டாலராக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று பெருமையுடன் கூறுகிறார் ஹிரிதேஷ். “சீனாவின் நிங்போவில் சமீபத்தில் ஒரு சில்லறை விற்பனைக் கடையைத் தொடங்கினோம். இது ஒரு டெஸ்ட் ஷோரூம்தான். ஆனால் நல்ல வரவேற்பு இருக்கிறது. சீனாவில் எங்களின் பொருட்களை விற்பனை செய்ய மேலும் 12 கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் அவர்.


குப்பையை சுத்தப்படுத்துவது ஒரு காலத்தில் ஹிரிதேஷின் அன்றாட வருமானத்திற்கான வழியாக இருந்தது. இப்போது அதுதான் அவரது வாழ்க்கையின் மிக உற்சாகமான பக்கம். “எங்களுடையது முழுமையாக ஒரு வடிவமைப்பு அடிப்படையிலான வர்த்தகம். நாங்கள் பார்க்கக் கூடிய ஒவ்வொரு கழிவுப் பொருளையும் வேறு மாதிரி வடிவமைத்து பயனுள்ள பொருளாக எப்படி மாற்றுவது என்றுதான் சிந்திக்கிறோம். மிகவும் உற்சாகமான வேலை இது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கழிவுப் பொருளை கண்டுபிடிக்கிறோம். அதை மக்கள் விரும்பக் கூடிய வகையில் பயனுள்ள பொருளாக மாற்றுகிறோம்.

ப்ரீத்தி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் விரிவாக்கத்தில் இந்தியாவுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. “இந்தியாவைப் பொருத்தவரையில் ஆன்லைன் விற்பனை வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. எங்கள் பொருளையும் ஆன்லைன் விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக பெப்பர்ஃபிரை, ஃபிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களுடன் பேசி வருகிறோம்” என்கிறார் ஹிரிதேஷ். பிரீத்தி இன்டர்நேஷனலின் பிரபலம் குறைவதற்கு வாய்ப்பில்லை. “2015க்கான ஏற்றுமதி ஆர்டர்கள் முழுவதும் முடிந்து விட்டது. 2016ல் சீனாவின் கான்ட்டான் கண்காட்சி, ஷாங்காயில் நடக்கவிருக்கும் இன்டர்நேஷனல் பர்னீச்சர் கண்காட்சி போன்ற சர்வதேச கண்காட்சியில் கலந்து கொள்ள இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் அடைந்த வெற்றியை சமீபத்தில் டிஸ்கவரி சேனல் படமாக்கியுள்ளது. தி லிக்குடேட்டர்ஸ் என்ற பெயரில் அவர்கள் அந்த எபிசோடை சுமார் 140 நாடுகளில் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். பொருட்கள் எப்படி உற்பத்தியாகின்றன என்று படமாக்கப்பட்டுள்ள அந்த எபிசோட் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும்” என்று சந்தோஷமாகக் கூறுகிறார் ஹிரிதேஷ்.

ப்ரீத்தி இன்டர் நேஷனல் சொந்தக் காலில் நிற்கும் ஒரு நிறுவனம். “நாங்கள் வங்கிகளில் இருந்தோ அல்லது நிதி நிறுவனங்களில் இருந்தோ கடன் எதுவும் வாங்கியதில்லை” என்கிறார் ஹிரிதேஷ். அவரும் அவரது மனைவி ப்ரீத்தியும்தான் ப்ரீத்தி இன்டர் நேஷனலின் அடிப்படை உறுப்பினர்கள். “எங்களுக்கு இது எந்த ஒரு பாராட்டையும் எதிர்பார்க்காமல் பிடித்துச் செய்யும் வேலை. இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் எங்கள் கைகள் இருக்கும்” என்கிறார் ஹிரிதேஷ்.

ஹிரிதேஷைப் பொருத்தவரையில், ஒரு தொழில் முனைவரின் வாழ்க்கையில் கடினமான பகுதி தொடர் தோல்வியிலிருந்து பிறக்கும் அவநம்பிக்கைதான். ”தொடர்ந்து பல தொழில்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு, மறுபடியும் புதிதாக மற்றொரு தொழில் தொடங்குவது பற்றி நினைத்துப் பார்ப்பதே பெரிய கடினமாக இருந்தது. பல முதலீட்டாளர்களிடம் எங்களின் புதிய தொழில் யோசனையைச் சொன்னோம். யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடுமையான பணத் தேவை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆரம்ப முதலீட்டுக்கு எனது மனைவியின் நகையை விற்கத் தொடங்கினோம். மாதிரிகளை செய்தோம். அதைப் புகைப்படம் எடுத்து, இணையதளங்களில் பதிவேற்றினோம். அந்தப்படங்களை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் சந்தைப்படுத்தினோம். முதல் ஆர்டரை பெறுவதற்கு 2 ஆண்டுகள் ஆனது. அந்த இரண்டு வருடங்களும் மிகக் கடினமான காலகட்டம்.

image


ப்ரீத்தி இன்டர் நேஷனலின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. “எங்கள் வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 25 சதவீதம்” என்கிறார் ஹிரிதேஷ். அவருக்கு வழிகாட்டி யாருமில்லை. “அகம் பிரம்மாஸ்மி (இந்தச் சமஸ்கிருதச் சொல்லுக்கு நானே பரம்பொருள் என்று அர்த்தம்) என்பதை மட்டுமே நான் நம்புகிறேன். நீண்டகால கடின உழைப்பின் மூலம் நீங்கள் உங்களின் சொந்த அதிசயத்தை நுகர்வீர்கள்.

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக