பதிப்புகளில்

பைன் ஊசி இலைகள், அரசி தவிடு மூலம் ஒளிரும் 500 கிராமங்கள்!

19th Nov 2015
Add to
Shares
164
Comments
Share This
Add to
Shares
164
Comments
Share

இமாலயப் பகுதிக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் ஜன்னலைத் திறந்தாலே அழகு மிளிர அணிவகுத்து பொன்னாக மின்னிய பைன் மரங்களை ரசித்து மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில், பைன் மரங்களால் நிகழும் பேராபத்துகள் குறித்து அவர்களுக்குத் தெரிய வருகிறது. ரசித்து மகிழ்ந்த நெஞ்சம் பயத்தில் பதைபதைக்கிறது. ஆம், பைன் ஊசி இலைகள் மூலம் ஏற்படும் தீப்பொறி பரவுவதால் காட்டுத் தீ உண்டாகி, பலரின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது என்பதே அந்த அச்சுறுத்தல்.

பிஹார் மாநிலத்தின் கிழக்குப் பகுதி. முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் படித்த இளைஞனுக்கு நியூயார்க்கில் அதிக சம்பளத்தில் நல்ல விருப்பத்துக்குரிய வேலை என்பது எவ்வளவு பேரானந்த கனவு. ஒரு எலக்ட்ரானிக் எஞ்சினீயர் என்ற முறையில், டைம்ஸ் சதுக்கத்தின் ஒளிரும் விளக்குகள் கூட அந்த மாணவனுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. ஆனால், இந்தியா திரும்பும் அந்த இளைஞர், தன் கிராமப் பகுதியில் மின்சாரமே இல்லாமல் இருளில் மூழ்கியிருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போகிறார்.

ஒரே விதமான நோக்கத்தையும், இரண்டு விதமான சூழல்களைப் பின்னணியாகக் கொண்ட இவ்விருவரும் தத்தமது பாதைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டு, புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடலாம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுத்துச் செயல்படத் தொடங்கினர்.

image


இமாலயம் - தித்திப்பு முடிவுடன் ஒரு திகில் கதை

ஓஷோ கம்யூனில் வசித்து வந்த ரஜ்னிஷ் ஜெயினும் அவரது மனைவியும் ஒரு கட்டத்தில், அர்த்தமுள்ள வாழ்க்கைக்காக 1996-ல் திரும்பினர். இமாலயத்தில் தங்கிய அவர்கள், தங்கள் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குறை வருவாய் கொண்ட கிராம மக்களின் நிலையை முழுமையாக அறியத் தொடங்கினர். உத்தராகண்டில் உள்ள 85 சதவீத கிராமப் பகுதிகளில் 2005-ல் இருந்து மாநில அரசால் மின்வசதி ஏற்படுத்தி தரப்பட்டிருந்தது. ஆனால், மோசமான மின்கடத்தி கட்டமைப்பு காரணமாக மலைப்பகுதிகளில் மின்சார வசதியே ஏற்படுத்தவில்லை. மின்வசதியின்றி மலைப் பகுதி ஏழை மக்கள் தவித்து வந்தனர்.

21-ம் நூற்றாண்டில் ஆதிமனிதர்கள் போல அடிப்படை வசதிகள் முழுமையாக இன்றி வாழ்ந்து வந்த மக்களைக் கண்ட இவர்கள், அவானி (AVANI) என்ற அமைப்பை உருவாக்கினர். அந்த மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே அமைப்பின் நோக்கம். முதற்கட்டமாக, 25 கிராமங்களில் சூரிய மின்சக்தியுடன் மின்சார வசதியை ஏற்படுத்தினர். "சோலார் விஷயத்தில் அரசு அதிக பணத்தைக் கொட்டி, உரிய பலனை எட்டாமல் போவது வீண். எனவே, கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று தீர்மானித்தோம். மக்களை தனிப்பட்ட முறையிலும், நிதி சார்ந்தும் ஈடுபடுத்திட வேண்டும் என்று விரும்பினோம்."

பைன் மரங்களால் சூழப்பட்ட நடு காட்டில் வசித்த அவர்கள், கீழே விழுகின்ற பைன் ஊசி இலைகளால் தீப்பொறி ஏற்பட்டு காட்டுத் தீயாகப் பரவி உயிரிழப்புகளுக்கும், உடமை இழப்புகளுக்கும் காரணமாகிறது என்பதை கவனித்தனர். "தண்ணீர், தீவனம், விறகுகள், இலைகள்... இவை எல்லாம் அழிந்துவிடுதல். இப்படித்தான் காலம் காலமாக அந்த கிராம மக்கள் பார்க்கின்றனர். பைன் ஊசி இலைகளை அழிப்பதைக் காட்டிலும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த யோசித்தோம். வளிமயமாக்கலைப் பயன்படுத்தி, இந்த பைன் ஊசி இலைகளைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டோம். இது முன்னோடிப் புத்தாக்கம்; இதை யாருமே நம்ப முன்வரவில்லை."

முதலில் 9 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வெள்ளோட்ட முயற்சி வெற்றி பெற்றது. மின் உற்பத்திக்குத் தேவையான 1.5 கிலோவாட் மின்சாரம் போக மீதமுள்ள 7.5 கிலோவாட் மின்சாரமும் பயன்பாட்டுக்கு கிடைத்தது. விரைவில் பச்சைக் கொடியுடன் 120 கிலோ வாட் வர்த்தக உற்பத்திக்கான வெள்ளோட்ட முயற்சியிலும் வெற்றி பெற்றனர்.

image


இந்த மின்சாரத்தின் பலன்கள் பல மடங்குகள் கொண்டவை. "நாங்கள் கார்பன் வெளியீட்டு பெரும்பாலும் மட்டுப்படுத்தினோம். தூய்மையான எரிபொருள் என்பதுதான் எங்கள் முதல் நோக்கம். இரண்டாவது, சரியான நேரத்தில் பைன் ஊசி இலைகளைத் திரட்டி, காட்டுத் தீயைத் தடுத்தாக வேண்டும். மூன்றாவதாக, அதிக செலவும் சூழல் கேடும் கொண்ட மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்."

இவர்களது முயற்சியின் மூலம் 7,500 விவசாயிகளைக் கொண்ட பகுதி பலனடைந்தது மட்டுமின்றி, காட்டுத்தீ அச்சுறுத்தலும் வெகுவாக குறைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தைக் காட்டிலும் இந்த மின் உற்பத்தித் திட்டம் மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000 வரை சம்பாதிக்கிறார்கள்.

இன்னொரு முக்கியத் திருப்பம் என்னவெனில், உயிரியில் இருந்து வெளியேறும் சக்கையானது மரக்கரி என்பதும் சிறப்பு. "அதை முறைப்படி சேகரித்து, வீடுகளில் சமையல் செய்வதற்கு வழங்கினோம். விறகுகளுக்காக 4 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்த இல்லத்தரசிகளின் வீட்டுப் படிகளிலேயே எரிபொருள் கிடைத்தது."

ஆக்யூமெனின் முதலீட்டு நிதி மூலம் 20 மின் உற்பத்தி ஆலைகளை அவானி நிறுவியது. அவானி வாயுமயமாக்கல் ஆலை ஒவ்வொன்றிலும் 120 கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, ஏறத்தாழ 3,000 மக்களுக்கு வழங்கப்படுகிறது.

image


பிஹார் குக்கிராமங்களின் ஒளிவிளக்கு!

பிஹாரைச் சேர்ந்த எலக்ட்ரிகல் எஞ்சினீயர் மனோஜ் சின்ஹாவுக்கு நியூயார்க்கில் வேலை, வசிப்பிடம் எல்லாமே. ஆனால், தன் சொந்த கிராமத்தில் மின்சார வசதியே இல்லை என்பதை நினைத்து தூக்கமின்றி தவித்தார்.

"நம் நாட்டில் மின் உற்பத்தி என்பது போதுமானதாக இல்லை. நம்மிடம் கூடுதல் மின்சாரமும் இல்லை. சுமார் 1,25,000 கிராமங்களைச் சேர்ந்த 40 கோடி மக்களுக்கு மின் வசதி இல்லை. அதாவது, நம் நாட்டின் ஒரு பெரும் பகுதி மக்களுக்கு நாம் சேவையாற்றவில்லை. இவர்களில் 20 சதவீத மக்கள் பிஹாரில் வசிக்கின்றனர். மின் வழங்கல் முறையும் சரியல்ல. ஒட்டுமொத்தமாக, பிஹாரில் 85 சதவீத மக்களுக்கு அரசு மின் வசதி வழங்குகிறது. மின் விநியோக முறையும் முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது. ஏதோ இலவசமாகவே வழங்குவதைப் போல் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிலுவைத் தொகையை செலுத்தவில்லை எனில், மின் வசதி பிடுங்கப்படும் என்பதே நிதர்சனம். இந்தப் போக்கு சரியல்ல" என்று விவரிக்கிறார் மனோஜ்.

இந்தப் பிரச்சனைகளுக்குத் தன்னால் ஆன தீர்வு குறித்து யோசிக்கத் தொடங்கினார் மனோஜ். தன் முழு நேரப் பணி குறித்து சிந்தித்தார். இவரது நண்பரும், இணை நிறுவனருமான ஞானேஷ் பாண்டே தான் சி.இ.ஓ.வாக பணியாற்ற நிறுவனம் ஒன்றில் இருந்து விலகினார். அப்போதுதான் தன் இறுதி முடிவை உறுதி செய்தார் மனோஜ்.

"அது முக்கிய காலகட்டம். அங்கேயே இருந்து மில்லியன்களுடன் தங்கிடுவது எளிது. ஆனால், நான் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். என் வாழ்க்கை முடியும் தருவாயில், மன அமைதி கிடைத்திட இந்தப் பாதைதான் சரியான தெரிவு என்பது தெளிவு" என்று பெரும்பாலானோர் பயணிக்கத் தயங்கம் பாதையைத் தேர்ந்தெடுத்தார் மனோஜ்.

மூன்று இணை நிறுவனர்களில் ஒருவரான ரத்னேஷ் யாதவ், வாயுமயமாக்கல் முறையில் உரிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி மின் உற்பத்தி செய்வது குறித்து முனைப்புடன் செயல்பட்டு வந்தார். இந்த முறையில் முன்னர் பலர் பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொண்டு சரியான வெற்றியைப் பெற்றிடாத நிலையிலும், அதில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய ஈடுபாடு காட்டிவந்தார்.

"சூரிய மின் திட்டம் தொடங்கலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அது அப்போது மிகப் பெரிய செலவு பிடிக்கும் ஒன்று. எனவே, உள்ளூர் வள ஆதாரங்களைப் பயன்படுத்தி, உயிரி முறையை நாடலாம் எனத் தீர்மானித்தோம். உள்ளூர் மக்களே நடத்தக் கூடிய எளிய ஆலையில் உற்பத்தி நடக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். ஏனெனில், அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமங்கள் என்பதால், நகரில் இருந்து உயர்நிலைப் பொறியாளர்களையெல்லாம் நியமிப்பது சாத்தியமில்லை" என்றார் மனோஜ்.

பிஹாரில் எந்தப் பகுதியில் மின்வசதி இல்லையோ, அங்கே மின் உற்பத்தி செய்வதற்கு கிடைத்த உயிரி என்பது அரிசி ஆலைகளில் கிடைக்கும் தவிடு தான். ஆனால், இவர்களது முன்முயற்சிகள் எதிர்பார்த்ததை விட அதிக பலன்களைத் தந்தது. 25 கிலோவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட 84 சிறிய ஆலைகளை அமைத்தனர். தினமும் ஆறு மணி நேரம் வீதம் ஆண்டுக்கு 340 நாட்கள் இயங்கின. ஒவ்வொரு ஆலையும் அதைச் சுற்றியுள்ள 400 வீடுகளுக்கு மின்வசதி கிடைக்க வழிவகுத்தது. ஒட்டுமொத்தமாக, இந்த முயற்சிகளால் 2,00,000-க்கும் மேற்பட்டோர் பலன் அடையும் வகையில் 300 கிராமங்களில் மின்னொளி வீசின.

கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தியதற்காக, இவர்களுக்கு UNFCCC-யிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழும் கிடைத்தது. ஆம், 42,000 லிட்டர்கள் மண்ணெண்ணெய் மற்றும் 18,000 லிட்டர்கள் டீசல் பயன்பாடுகளின் மூலம் வெளியேறக் கூடிய 215 டன்கள் கார்பனை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டனர். இதன் மூலம், அந்தக் கிராமப் பகுதிகளில் சுகாதாரமான சுற்றுச்சூழலும் நிலவியது.

"மினி - கிரிட் (சிறிய ரக மின் விநியோக அமைப்பு) துறை பற்றி மக்கள் கேள்விப்படாத காலகட்டத்தில் நாங்கள் ஆரம்பித்தோம். அரசு செல்ல முடியாத குக்கிராமங்களில் வசதிகளை ஏற்படுத்தித் தந்தோம். எங்களது அக்கறையை மனதில் கொண்டு, மக்கள் மாதம் தவறாது மின் கட்டணத்தைச் செலுத்திவிடுகிறார்கள். இப்போது அவர்களுக்கு காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை 95 சதவீத மின்சாரத்தைப் பெறுகின்றனர்."

இப்போது, இவர்கள் செலவினம் சற்றே குறைந்துள்ளதால் சூரிய ஒளி மின் திட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த இரு மின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் தூய்மையான மின்சாரத்தை ஊரகப் பகுதிகளில் 24 மணி நேரமும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். சூரிய மின்சக்தியை பகலுக்கும், தவிடு மின்சக்தியை இரவுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க இன்னோர் அம்சமும் உள்ளது. இவர்கள் கழிவின் கழிவையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்துகின்றனர். ஆலையில் இருந்து கிடைக்கும் கழிவில் இருந்து ஊதுபத்தி தயாரிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வோர் ஆலையிலும் 50 பெண்கள் வேலைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தயாராகும் ஊதுபத்திகள், 'கங்கா அகர்பத்தீஸ்' என்ற பெயரில் பிஹார் நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

"பெண்கள் மூலம் ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும்போது, அந்தக் குடும்பம் மட்டுமின்றி சமூகமே மேம்படும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணால் பணம் சம்பாதிக்க முடிந்தால், அந்தக் குடும்பத்தின் வாங்கும் சக்தி அதிகரித்து, வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயரும்" என்றார் மனோஜ்.

- ஆக்கம்: பிஞ்சல் ஷா | தமிழில்: கீட்சவன்

Add to
Shares
164
Comments
Share This
Add to
Shares
164
Comments
Share
Report an issue
Authors

Related Tags