பதிப்புகளில்

ஸ்வேதா திவாரி மீட்டெடுத்த கலையும்; கலைஞர்களும்...

gangotree nathan
20th Aug 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

பிஹாரில் உள்ள சிறு நகரம் கயா. இந்த ஊரில் பிறந்தவர் ஸ்வேதா திவாரி. ஏட்டுப் படிப்பில் அவர் அவ்வளவு கெட்டிக்காரராக இல்லாவிட்டாலும் அவருக்கு எப்போதும் கலை, இசை மீது ஈர்ப்பு அதிகமாக இருந்தது. அவரது அந்த நுண்கலை ஆர்வமே பின்னாளில் "சுங்கி' (Chungi) என்ற ஓர் அமைப்பை அவர் உருவாக்க மையப்புள்ளியாக இருந்தது என்று சொல்லலாம்.

சுங்கி அமைப்பானது நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வாதார வாய்ப்பினை வழங்கி வருகிறது. அதுதவிர பெண்கள் தங்களது கலைத்திறமைகளை காட்சிப்படுத்த நல்ல தளமாகவும் இருக்கிறது.

சுங்கியின் இலக்கு ஒன்றே...நலிவுற்ற பெண்களுக்கு நல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதே அது. பட்டப்படிப்பை முடித்ததுமே ஸ்வேதா ஒரு விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். அவரது அந்த முதல் பணி தலைகீழாக சுழற்றியடிக்கும் பெரும் ராட்சத ராட்டினத்தில் அல்லாடுவதுபோலே இருந்திருக்கிறது. அதை அவரே விவரிக்கிறார், "வைகறையில் புறப்பட்டால் பின்னிரவில் வீடு திரும்புவது, இதுதான் வேலை நேரம் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி வேலைப்பளு, கடைசி நேர நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், பணியிட நெருக்கடி, வார இறுதி நாட்களிலும் பணி புரிவது, பார்ட்டி கொண்டாட்டங்கள்...என இன்னும் பல.

image


இவை எல்லாம் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பின, "பகலில் செய்து முடிக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன வேலை பார்க்கிறாள்" என்பதே அது. ஆனால், இத்தகைய விமர்சனங்கள் அவளை ஒடுக்கிவிடவில்லை. மாறாக சமூக மாற்றத்துக்கான சிந்தனையை அவர் மனதில் விதைத்துச் சென்றது.

'சுங்கி'யால் சாத்தியப்பட்ட மாற்றம்

"சுங்கியின் முதற்கண் முயற்சி கலையையும், கலைஞர்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. இந்த நவநாகரிக உலகில் வெகு சிலருக்கே க்ராச்சே, காந்த்தா, மதுபனி ஓவியம் போன்ற நுண்கலைகள் தெரிந்திருக்கின்றன. அத்தகைய சிறப்புமிக்க கலைகளை அறிந்தவரை அடையாளப்படுத்தினால் அக்கலையும் இணைந்தே அடையாளப்படும். அதேவேளையில் இத்தகைய நுண்கலை திறன் படைத்த கலைஞர்களின் கைவினைகளை ஆன்லைன் மூலம் வர்த்தகப்படுத்தும்போது அவர்களுக்கான முகவரி கிடைக்கும்" எனக் கூறுகிறார் ஸ்வேதா.

ஸ்வேதா, தனது சொந்த ஊர் மக்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார். அவரது விருப்பத்துக்கு வடிவம் கொடுத்தது 'சுங்கி'. அப்படி என்ன சாதித்துவிட்டார் ஸ்வேதா என்கிறீர்களா? அரிய நுண்கலைகளில் பெண்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் அவர்களுக்கான நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சுங்கியைப் பற்றி ஸ்வேதா மேலும் கூறும்போது, "கலைஞர்கள் ஒன்றிணைந்து கட்டமைத்த ஒரு நெருக்கமான உறவு அது. எங்களுடன் ஒரு கலைஞராக இணைந்த சுனிதா இன்று எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கமாகிவிட்டார். எங்கள் வேலை சவால்கள், அதனூடே எழும் சிறு நகைப்புகள், அன்றாட குடும்ப சிக்கல்கள் என அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்" என்கிறார்.

image


சவால்கள்:

சுங்கி உருவாக்கத்தின் பின் இரண்டு முகங்கள் இருக்கின்றன. அது வேறு யாருமில்லை. ஒருவர் ஸ்வேதாவின் தாயார் வீணா மற்றொருவர் அவரது சகோதரி ஸ்மிதா. சுங்கியை முழுமையான நிறுவனமாக மாற்றுவதில் எதிர்கொண்ட சவால்களில் மிகப்பெரிய சவால் என ஸ்வேதா குறிப்பிடுவது பெண்கள் தங்கள் சமூக சங்கிலிகளை உடைத்தெறிய வைத்ததே ஆகும். சுங்கியில் இணைந்த பெண்களை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக கணவர் தரும் நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க, ஸ்வேதா பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருக்கிறார். ஆம் ஆரம்ப நாட்களில், பெண்களை தனது சுங்கியில் இணைக்க அவர்களது குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற வேண்டியிருந்தது. எங்கள் தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஒரு சிலர் எங்கள் மீது நம்பிக்கை கொண்டனர். 

அவர்கள் நம்பிக்கையை வென்று சில பெண்களை சுங்கியில் இணைத்தோம். இப்படித்தான் சுங்கியில் முதல் வெற்றி முகங்கள் வெளி உலகுக்கு அறிமுகமாகின. அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பானது இன்னும் பல பெண்களை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்தது. ஒரு புதிய தொழில் முயற்சியில், தூர மேலாண்மை சற்று சிக்கலாக இருந்தது. பெண் கலைஞர்கள் அவர்கள் சொந்த ஊரில் இருந்து படைப்பாற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போது மும்பையில் இருந்து கொண்டு சுங்கியை ஸ்வேதா துடிப்புடன் செயல்படுத்த வேண்டியிருந்தது. 

அதேபோல், பல நேரங்களில் பொருளாதார நெருக்கடியாலும், நேரமின்மையாலும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியாத நிலையும் உருவாகியிருக்கிறது. இன்றளவும் ஸ்வேதா எதிர்கொள்ளும் மிகப்பெரியச் சவால் நிதி மேலாண்மை. இருப்பினும் அதை எப்படி நேர்த்தியாக எதிர்கொள்வது என்பதை, தான் கற்று வருவதாகக் கூறுகிறார் ஸ்வேதா.

ஸ்டீவ் ஜாப்சின் வாழ்க்கை குறிப்பை ஆழ்ந்து படித்துள்ள ஸ்வேதா அவரது தோல்விகள் குறித்த பதிவுகள் தனக்கு புது உத்வேகம் அளித்தது என்கிறார்.

image


தொடர் உத்வேகத்துக்கான வழி என்ன?

"எனது உத்வேகத்துக்கும், எனக்கான ஆதரவுக்குமான ஊற்று என் குடும்பமே. என் வெற்றியை என் குடும்பத்தினருக்கே உரித்தாக்குகிறேன்" என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் ஸ்வேதா. கடந்த ஓராண்டில் சுங்கியின் கலைஞர்கள் தங்களது சுய திறனை உணர்ந்திருக்கின்றனர். அவர்கள் பெற்ற தன்னம்பிக்கை சமூகத்தில் அவர்களுக்கு அந்தஸ்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அவர்களது நிலைமாற்றம் அளப்பரியது. புது வெள்ளம் போல் அவர்களுக்கு அது புத்துணர்வு அளித்துள்ளது. இது ஒன்றே எனக்குப் போதும். இந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்ற எண்ணமே என்னை பெருமிதம் கொள்ளச்செய்கிறது. அதுவே எனக்கு உந்து சக்தியாக இருக்கிறது.

image


எனக்கான பாதை இதுவே...

"சுங்கியின் வரவு செலவு கணக்குப் புத்தகம் பூஜ்ய இருப்புடனேயே தொடங்கியது. ஆனால், இன்று சுங்கி 25 பெண் கலைஞர்கள் உட்பட மொத்தம் 35 கலைஞர்களுக்கு தனது ஆதரவுக் கரத்தைக் கொடுத்துள்ளது" என பெருமிதத்துடன் சொல்கிறார் ஸ்வேதா. இப்போது ஸ்வேதாவிடம் க்ராச்சே, மதுபணி, காந்த்தா போன்ற நுண்கலைகளை உயிர்ப்பிக்கும் கலைஞர்கள் கைவசம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இதேபோல் நலிந்துவரும் கலைகளைக் கண்டறிந்து அவற்றை உயிர்ப்பிக்கும் பணியை உள்ளூர் கலைஞர்களைக் கொண்டே சுங்கி நிறைவேற்றும். இனி வரும் காலங்களில் குறைந்தது 100 கலைஞர்களையாவது வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். பெண் கைவினைக் கலைஞர்களின் சுயமுன்னேற்றமும், பொருளாதாரச் சுதந்திரமுமே சுங்கியின் என்றென்றைக்குமான லட்சியம்" என தீர்கமாக கூறுகிறார் ஸ்வேதா.

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags