பதிப்புகளில்

ஃபேஷன் உலகில் தங்கள் வெற்றிக்கதையை நிலைநாட்டிய இரட்டையர்கள்!

23rd Dec 2015
Add to
Shares
6.6k
Comments
Share This
Add to
Shares
6.6k
Comments
Share

அபர்னா பட்கே மற்றும் கேட்கி அன்னச்சட்ரே இருவரும் சேர்ந்து தொழில் முனைவதை பற்றி பல முறை பேசியுள்ளனர். ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற பெண்களை போன்று இவர்களும் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு முதல் முக்கியத்துவம் அளித்தனர். ஆயினும், அவர்கள் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், ஏதாவது செய்யவேண்டும் என்ற அவர்கள் எண்ணம் வென்றது. அதன் அடுத்த கட்டம், என்ன செய்வது என்று தீர்மானிப்பது. " தொழிலுக்கு நாங்கள் புதிதிது என்பதால்,பெருமளவு பணத்தை முதலீடு செய்ய விரும்பவில்லை" என்கிறார் அபர்ணா. ஃபேஷன் துறை மீது கேட்கிக்கு இருந்த விருப்பமும், வடிவமைப்பின் மீது அபர்னாவிற்கு இருந்த நாட்டமும், அவர்களை ஃபேஷன் மற்றும் வாழ்வியல் துறையை தேர்வு செய்யவைத்தது. 2013இல் ஜூன் மாதம் அவர்கள் "சாணக்யா லைப்ஸ்டைல்" மற்றும் ரீடைல் நிறுவனத்தை பதிவு செய்தனர். தற்போது அந்த நிறுவனம், 'மோடோ விவெண்டி' மற்றும் 'இண்டோ மூட்' என்ற இரண்டு சொந்தத் தயாரிப்புகளை வைத்துள்ளது.

கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு : மோடோ விவெண்டி Modo Vivendi

முன்னெச்சரிக்கையொடு தொழிலில் இறங்கிய இருவரும், நன்றாக விற்பனை ஆகக்கூடிய ஒரு பொருளை விற்பனை செய்ய முடிவு செய்து தங்களுக்கு மிகவும் பிடித்த தொப்பியை தேர்வு செய்தனர். ஐரோப்பிய நாடுகளுக்கு, ஆடைகளை வடிவமைத்து, தயாரித்து வந்த ஒரு நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, தொப்பிகளை மோடோ விவெண்டியின் கீழ் விற்பனை செய்யத் துவங்கினர்.

முதல் கட்டமாக அவர்கள் தருவித்த பொருட்கள், பெரும் வெற்றி அடைந்தன. ஒவ்வொரு பொருளும் விற்றுப்போனது. தற்போது, 250க்கும் மேற்பட்ட பொருட்களை தங்கள் பெயரின் கீழ் விற்பனை செய்கின்றனர். கையுறை, கைப்பை, காலணிகள், இடுப்பு கச்சைகள், பாவாடைகள், மேலங்கிகள் மற்றும் மேலுடுப்புகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

தங்கள் தொழில்முனைவு பயணத்தில் 8 மாதங்கள் ஆனபின், ஒரு புது அடையாளத்தின் கீழ் இந்திய பாரம்பரிய ஆடைகள் விற்பனை செய்ய முடிவெடுத்தனர். இம்முறை தங்கள் வடிவமைப்பில், பிரத்தியேக சீலைகளை வடிவமைத்தனர். தற்போது இண்டோ-மூடின் (Indo Mood) கீழ், துப்பட்டா, ஸ்டோல், குர்தா, மற்றும் துணி பொருட்களை வடிவமைத்து விற்பனை செய்கின்றனர்.

" ஆரம்பக்கட்ட முதலீடு 50000, கொண்டு, தொழில் முனைவோராகும் எங்களது கனவை நாங்கள் நனவாக்கிக் கொண்டோம். தற்போது எங்கள் நிறுவனம் ஆண்டு ஒன்றிற்கு 30 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுகின்றது. மேலும் அபரிமிதமான வளர்ச்சி காண்கிறது. 50 சதுரஅடி உள்ள ஒரு இடத்தில், இருந்து, தற்போது அதைவிடவும் 10 மடங்கு பெரிய ஒரு இடத்தில் தங்கள் நிறுவனத்தை மாற்றியுள்ளனர்.

மேலும் 4 பணியாட்களை பணிக்குஅமர்த்தியுள்ளனர். அவர்கள் நிறுவனத்தின் வலைத்தளம், தொழில்நுட்பம், விற்பனை ஆணைகளை சரிபார்த்தல், பொருட்களை வாடிக்கையாளர்க்கு அனுப்புதல் என அனைத்தையும் கவனித்துக் கொள்கின்றனர். " நாங்கள் சிறிய நிறுவனமாக இருந்தாலும், பணியாளர்களை தக்கவைப்பது கடினமான காரியமாக இருந்தாலும், தற்போது நிலையை சரியாக கையாண்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் நல்ல ஒரு சூழ்நிலை நிலவி வருகின்றது. எங்கள் பணியாளர்களை நண்பர்களாகவே நாங்கள் பார்க்கிறோம். மிகவும் நெருக்கமான ஒரு குழு எங்களுடையது என்கிறார் அபர்ணா.

Team Chanakyaa

Team Chanakyaa


வேலையில் ஒரு நாள்

அபர்னா மற்றும் கேட்கி இருவரும் வடிவமைப்பில் முழுமையாக ஈடுபடுகின்றனர். வடிவங்கள் இறுதியானதும், அதற்கான துணி வகைகள் தேர்வானதும், எத்தனை ஆடைகள் உற்பத்தி செய்யவேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பின்னர் அவ்வேலையை துணி தைபவர்களிடம் ஒப்படைகின்றனர். தற்போது இவர்களிடம் 10 தையல்காரர்கள் உள்ளனர். அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப, அவர்களிடம் வேலைகள் ஒப்படைக்கப்படுகின்றது.

மோடோ விவெண்டி மற்றும் இண்டோ மூட் இரண்டிற்கும் தற்போது விசுவாசமான வாடிக்கையளர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும், இவர்கள் ஆடைகள் மீது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். முக்கியமாக கைகளால் நெய்த துணிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. தங்கள் வலைத்தளம் மட்டுமல்லாது, மின் வணிக வலைத்தளமான ஈபே விலும் இவர்களது ஆடைகள் விற்பனைக்கு உள்ளன. ஈபே நடத்திய பெண் தொழில் முனைவோருக்கான 'ஷி மீன்ஸ் பிஸ்னஸ்' என்ற போட்டியின் வெற்றியாளராக அபர்னா மற்றும் கேட்கியை தேர்வு செய்துள்ளது.

தற்போது அபர்னா மற்றும் கேட்கியின் எதிர்காலத் திட்டம் என்றால் அது, ஆடைகளை தாண்டி வாழ்வியல் முறைக்கு தேவையான அனைத்து பொருட்களிலும் தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதே. ஆடைகளில் ஆரம்பித்த அவர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு பொருட்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மேலும் ஆடை வடிவமைப்பிலும், அடுத்த கட்டமாக ஆண்களின் ஆடைகளை வடிவமைக்கத் திட்டம் வைத்துள்ளனர். " எங்கள் வாடிகையாளர்களுக்கு சிறந்த பொருட்களை தருவதையே நாங்கள் விரும்புகிறோம்" என்கிறார் கேட்கி.

சாணக்யா என்ற பெயர் காரணம்

கேட்கியின் கணவர், ஆஷிஷ், பிராண்டிங் துறையில் வல்லுநர். அவர்தான், சாணக்யா, மோடி விவெண்டி, மற்றும் இண்டோ- மூட் ஆகிய பெயர்களை வைத்தவர். "மோடி விவெண்டி" என்றால், வாழ்வியல் முறை என்று லத்தின் மொழியில் அர்த்தம். மேலும் இண்டோ மூட் கேட்பவர் மனதில் இந்திய ஆடைகளின் பிம்பத்தை புதுவிதமாகக் காட்டும்.

சாணக்யா என்ற பெயர், இந்திய வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது. வரலாற்றில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் சாணக்யா. மேலும் அவர் எழுதிய "சாணக்கிய நிதி" என்ற புத்தகம், செய்யும் தொழில் எதுவானாலும், நமது சமுதாயத்திற்கான கடமைகளை மறக்க கூடாது என்று அறிவுறுத்துகிறது.

அதனால் தான் நிறுவனர்கள் இருவரும், கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிளிட்டி மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். " சென்ற வருடம் எங்கள் சிஎஸ்ஆர் ரின் ஒரு பகுதியாக, ரத்னகிரி பகுதியில், மழைகோட்டுகளும், புத்தகங்களும் அங்குள்ள மாணவர்களுக்கு கொடுத்தோம். அதன் பின் அக்குழந்தைகளிடமிருந்து, உங்கள் மழை கோட்டுகள், நாங்கள் மழைகாலத்திலும் பள்ளி செல்ல உதவின என்று கடிதம் வந்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் " என்கிறார் அபர்ணா.

நிறுவனர்களின் பின்புலம்

கேட்கி, மகாராஷ்ட்ராவின் சங்கலி மாவட்டத்தை சார்ந்தவர். வணிகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். மேலும் தற்போது, மின் வணிகத்தில் மேலாண்மை படிப்பை, நேஷனல் இன்ஸ்டியுட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்டில், படித்து வருகிறார்." அடுத்த நான்கைந்து மாதங்களில் நான் மேலாண்மை படிப்பை முடித்து விடுவேன். அப்போது என்னிடம் வணிகத்திலும், மின் வணிகத்திலும் மேலாண்மை பட்டம் இருக்கும்" என்கிறார் கேட்கி.

புனே நகரத்தை சார்ந்த அபர்னா, புனே பல்கலைகழகத்தில், கட்டிடக்கலை பயின்றார். மேலும், புனே மற்றும் மும்பையில் தனிப்பட்ட முறையில் பல கட்டிடங்களின் உட்புறத்தை வடிவமைத்துள்ளார். வடிவமைத்தல் மற்றும் அழகியல் அவரது விருப்பமாகும். எனவே தான் நிறுவனத்தில் வடிவமைப்புத் துறையை மிகவும் விரும்பி, பல வடிவங்களை தன் கைப்பட அமைக்கின்றார். பெண் தொழில்முனைவோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். பெண்கள் பல வழிகளில் ஒழுக்கமானவர்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் இல்லம் மற்றும் பணியிடங்களில் முளைக்கும் சவால்களை சமாளிப்பது மட்டுமன்றி சாதிக்கவும் செய்கின்றனர்" என்கிறார் அபர்னா.

image


குடும்பத்தின் ஒத்துழைப்பு

கேட்கி அவர் தொழில் மீது பேரார்வத்தோடும், ஃபேஷன் துறை மீது அதிக விருப்பத்தோடும் இயங்கி வருகின்றார். " நான் எனது கனவை வாழ்ந்து வருகின்றேன்" என புன்னகையோடு கூறுகின்றார். அவரது குடும்பம் அவருக்கு பேராதரவாக உள்ளது. அபர்னாவும் அதிர்ஷ்டக்காரர் தான். " எனது கணவரின் பெற்றோர் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு தருகின்றனர். மேலும், எங்கள் தொழிலில் ஆர்வம் கொள்கின்றனர். எனது இல்லத்தில் நான் தேவைப்படும் வேளைகளில், அவர்கள் அங்கு நின்று அவ்வேலைகள் தடை படாது பார்த்து கொள்கின்றனர். குடும்பத்தின் ஆதரவின்றி, ஒருவர் தொழிலில் வெற்றி பெறுவது இயலாது" என்கிறார் அபர்னா.

மோடோ விவெண்டியின் பொருட்டு, கேட்கி பயணிப்பதை காட்டிலும், இண்டோ மூடின் பொருட்டு அபர்னா பயணிப்பது அதிகமாக உள்ளது. பீகார், வெஸ்ட் பெங்கால், ஓடிஸா, ஜார்கண்ட், ஆந்திரா, மற்றும் கர்நாடகா என பல இடங்களுக்கு மூலப்பொருட்கள் வாங்குவதற்காக அபர்னா பயணித்துள்ளார்.

Indo-Mood

Indo-Mood


இவ்விருவரும் மற்றவர் பணிகளில் குறுகிடுவதில்லை. மேலும் மற்றவர் முடிவுகளை மதிக்கின்றனர். ஆனால் இறுதி முடிவை, இணைந்தே எடுக்கின்றனர். இருவரும் ஒன்றாக பயணிப்பது இல்லை. ஒரு பயணிக்கையில், மற்றொருவர் நிறுவனத்தின் தினசரி வேலைகளை கவனித்து கொள்கிறார். அவர்கள் விடுமுறையும் அவ்வாறே திட்டமிடப்படுகின்றது.

கையால் நெய்த துணிகளை ஊக்குவித்தல்

தற்போது பாரம்பரியமாக கைகளால் துணி நெய்யும் பல தொழிலாளர்கள், ஆதரவின்றி தவிக்கின்றனர். அரசு அவர்களுக்கு மானியம் அளித்தாலும், அவர்கள் தயாரிக்கும் துணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு வணிகம் செய்வதே அவர்களுக்கான சிறந்த ஆதரவாகும். ரசாயன கலப்பின்றி, கையால் நெய்யப்பட்ட பட்டு, லினென்(சனல் நார்துணி) மற்றும் இயற்கை வகையில் உற்பத்தியான பஞ்சு ஆகியவையே, இண்டோ மூட் டின் தாரக மந்திரம் என்கின்றனர் கேட்கி மற்றும் அபர்னா.

எதிர்கால திட்டம்

தற்போது அபர்னா மற்றும் கேட்கி தங்களது மற்றொரு கனவையும் நனவாக்குவதற்கு தயாராக உள்ளனர். அது புனேவில், அழகு மற்றும் ஆடைகளை விற்கும் ஒரு சிறு அங்காடி ஒன்றை நிறுவுவது. கைகளால் தொட்டு உணர்ந்து வாங்கும் பழக்கம் மக்களிடம் இன்னும் இருப்பதால், இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். அதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொருத்து, மேலும் பல நகரங்களில் கடைகள் திறக்கும் எண்ணத்தில் உள்ளனர். அவற்றில் முக்கிய கவனம் "இண்டோ- மூட்" ஆடைகள் மீதே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

 ஆக்கம் : சரிகா நாயர் | தமிழில் : கெளதம் s/o தவமணி

Add to
Shares
6.6k
Comments
Share This
Add to
Shares
6.6k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக