பதிப்புகளில்

இனி அழ வேண்டாம்... டாடி-மகள் கூட்டணியில் உருவான வெங்காயத் தோல் உரிக்கும் மிஷின்!

பிறர் தொழில் தொடங்குவதற்கும், தொடங்கிய தொழிலை வளர்ப்பதற்கும் இயந்திரங்களை தயாரித்து கொடுத்து அவர்களையும் சம்பாதிக்க வைப்பதுடன் தானும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் இவர். 

jaishree
20th Aug 2018
Add to
Shares
256
Comments
Share This
Add to
Shares
256
Comments
Share

சமையல் உலகின் ‘மாமியார்களான’ வெங்காயங்களின்றி, பதார்த்தங்கள் செய்வது கடினம். ஆனால், அதை உரித்தெடுப்பதோ கடினமோ கடினம். நால்வருக்கு சமைக்கும் வீடுகளிலிலே வெங்காயம் உரித்தல் ஃடப்பஸ்ட் டாஸ்காக இருக்கையில், வெங்காயத்தினை பிரதானமாகக் கொண்டு செயல்படும் ஊறுகாய் தொழில்கள், வெங்காய வடகம் தயாரிப்பு தொழில், உணவகங்களுக்கு பெரும் சிக்கலான வேலை இது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான தீர்வை கண்டறிந்துவிட்டார், பியுசி வரை மட்டுமே படித்த நாகராஜன். இப்போது அதன் அட்வான்ஸ் வெர்ஷனை அவருடைய மகள் தயாரித்ததுடன், அடுத்தடுத்து, உணவுத்துறை சார்ந்து பயணிக்கும் தொழில் முனைவோர்கள், அன்றாடம் சந்திக்கும் சிரமங்களுக்கு தீர்வு அளிக்கக்கூடிய இயந்திரங்களை டாடி- மகள் கூட்டணியில் தயாரித்து வருகின்றனர்.

  

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த நாகராஜன், பியூசி வரை படித்தவர். குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு அவருடைய அப்பா செய்து வந்த ரைஸ் மில்லில் மோட்டார் பளுபார்த்தல் வேலையினை செய்து வந்துள்ளார். கிடைத்த சொற்ப பணம் சட்டை பாக்கெட்டைக்கூட நிரப்பாத நிலையில், மாற்றுத் தொழிலை பற்றி சிந்தித்துள்ளார். அப்போது, முந்தைய தொழில் கொடுத்த அனுபவத்துடன், மிஷின் மெக்கானிசம் பற்றிய ஆர்வமும் தொற்றிக் கொள்ள, சொந்தமாக மிஷின்களை உருவாக்கத் தொடங்கியுள்ளார்.

 ‘சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்’ கீழ் ரூ25,000 கடன்தொகை பெற்று, நெல்லிருந்து அரிசியை பிரித்தெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழிலை தொடங்கியுள்ளார். இதுவே, இன்று ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழிலுக்கான தொடக்கம். 

குடும்ப நிலை சீரானது, வருமானம் ரூபாய் ஐந்தராயிரமாகியது. இது 1986ம் ஆண்டில். அதற்கு பின், சந்தையில் அறிமுகமாகி கர்நாடக பொன்னியின் வரவால் நம்மூர் ரைஸ்மில்கள் காற்று வாங்கத்தொடங்கியது. நாகராஜனுக்கும் அதே நிலையே.

உசிலம்பட்டி ஊறுகாய் தயாரிப்புக்கூடங்கள் நிறைந்த கிராமம். ஊறுகாய் தொழில் செய்துவந்த பலரும், பூண்டு மற்றும் வெங்காய உரித்தலில் உள்ள சிரமங்களை நாகராஜனிடம் பகிர்ந்துள்ளனர்.

சாக்கு பைகளில் பூண்டுகளை நிரப்பி, அடித்து தோலுரித்தல், வெங்காயங்களை தண்ணீர் ஊறவைத்து உரிப்பதே நடைமுறை பழக்கத்தில் இருந்துள்ளது. அதற்கு மாற்று வழியை தான் உருவாக்குவதாக நாகராஜன் உறுதி அளித்துள்ளார். அவர் அளித்த வாக்கை மெய்பிக்க அவருக்கு 2 ஆண்டுகளாகியது. 

அனுபவ கல்வியுடன் டெக்னீக்கல் லைப்ரரி புத்தகங்களும் வழிகாட்ட, 2 ஹெச்.பி மோட்டாரில் இயங்கக்கூடிய பூண்டு தோல் உரிப்பான் இயந்திரத்தை உருவாக்கி ‘வெர்கோ இன்ஜீனியரிங் வொர்க்ஸ்’ 'Virgo Engineering Works' என்ற பெயரில் இயந்திரம் தயாரிக்கும் தொழிலையும் தொடக்கினார். 

பூண்டு, வெங்காய உரித்தல் இயந்திரம் உருவாக்கிய நாகராஜன் மற்றும் மகள் ப்ரீத்தி

பூண்டு, வெங்காய உரித்தல் இயந்திரம் உருவாக்கிய நாகராஜன் மற்றும் மகள் ப்ரீத்தி


“வெங்காயம் மற்றும் பூண்டு தோல் உரிக்கும் மிஷினை கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டுகள் மேல் எடுத்துக்கொண்டது. மிஷின் மாதிரிப் படம் வரைந்து ஸ்கிராப் பொருள்களை கொண்டு மிஷினை உருவாக்குவேன். சரி வராது, உடனே அழித்து விட்டு அடுத்த முயற்சிக்கு போயிருவேன். இப்படி 15 தடவை முயற்சி செய்தபிறகே நான் நினைத்த இயந்திரம் கிடைத்தது,” 

எனும் நாகராஜனது, இயந்திரத்தை வாங்கிச் சென்றவரது தொழில் ஏறுமுகத்தில் இருந்தாலும், அவருக்கு அடுத்த மிஷின் ஆர்டர் கிடைப்பதற்கு ஒரு ஆண்டுகளாகியது. ஆனால், இடைப்பட்ட காலத்தை அடுத்த இயந்திரம் உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக பார்த்தார் அவர். ஆம், எலுமிச்சை பழங்களை எட்டாக, பதினாறாக வெட்டக்கூடிய இயந்திரத்தை உருவாக்கினார். 

பள்ளிப்படிபை பாதியிலே விட்டவர் என்றாலும், ஆங்கில நாளிதழ் வாசிக்கும் பழக்கமுடையவர். அப்படி, ஒரு நாள் நாளிதழ் படிக்கையில் ‘நேஷனல் இனோவெஷன் பவுண்டேஷன்’ குறித்த விளம்பரத்தை பார்த்திருக்கிறார். உடனே, தான் தயாரித்த இயந்திரம் புது கண்டுபிடிப்பா என்பது தெரியவில்லை. முடிந்தால் வந்து சோதித்து கொள்ளவும் என்று கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். 

இன்ஜினீயர் குழுவுடன் உசிலம்பட்டிக்கு வந்த அதிகாரிகள் பாராட்டுக்களை குவித்ததுடன், மறு ஆண்டே ‘தேசிய கண்டுபிடிப்பு விருது’ அவருக்கு வழங்கினர். 2005ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் அப்போதைய  ஜனாதிபதி அப்துல் கலாமிடம் விருதினை பெற்றுள்ளார். 

பூண்டு சாகுபடியில் முதன்மை பங்கு வகிக்கும் மாநிலங்களுள் ஒன்றான குஜராத்தில் விருது பெற்றவருக்கு, மிகப்பெரும் ரீச் கிடைத்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் 500 மிஷின் ஆர்டர்கள் கிடைத்துள்ளது. அச்சமயத்தில், நாகராஜனின் மகள் முத்து ப்ரீத்தி எம்.டெக் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்க, பைனல் இயர் புரோஜெக்ட் செய்ய வேண்டியுள்ளது.

“பெரும்பாலான இன்ஜீனியரிங் ஸ்டூடன்ஸ் 10 ஆயிரம் ரூபாயுக்கு புரோஜெக்ட்டை வாங்கி சமர்ப்பிக்கின்றனர். நானும் அப்படி தான் நினைத்தேன். அப்போது தான் அப்பா, பீலிங் மிஷினை ஆட்டோமெட்டிக்காக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மெக்கானீக்கல் டிவைசை ஆட்டோமெட்டிக் மிஷினாக ரெடி செய்ய புரோகிராம் செய்து அதையே பைனல் இயர் புராஜெக்ட்டாக சமர்பித்தேன்,” 

எனும் ப்ரீத்தி தான், இப்போது அப்பா பிசினஸின் நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங் டிபார்மென்ட்டை கவனித்து வருகிறார். காய்கறி கட்டர் மிஷின், முந்திரிப்பருப்பு தோல் நீக்கி இயந்திரம் என அப்பா- மகள் உருவாக்கிய புதுமையான இயந்திரங்களின் பட்டியலில் விரைவில் தயிரை கடைந்த வெண்ணெய் எடுக்கு இயந்திரமும் இணையவிருக்கிறது. மேலும், அவர்களுடைய நிறுவனம் உணவுத்துறை சார்ந்து கஸ்டமர்களின் தேவைக்கேற்ற இயந்திரங்களை பிரத்யேகமாக தயாரித்து தருகிறது. 

மார்க்கெட்டிங் துறையில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்றாலும், இன்று ஊறுகாய் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் ‘சக்தி மசாலா’, ‘ஆச்சி மசாலா’, ‘சின்னீ’ஸ் ஊறுகாய்’ ‘ருச்சி ஊறுகாய்’ மன்னார் பிராண்டின் ஊறுகாய் என இன்னும் பல ஊறுகாய் கம்பெனிகளில் பூண்டு மற்றும் வெங்காயம் தோல் உரித்து தருவது ‘வெர்கோ இன்ஜீனியரிங் வோர்க்ஸ்’-ல் உருவாகிய இயந்திரங்களே! 

தோல் உரிக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பூண்டு 

தோல் உரிக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பூண்டு 


இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கிய ப்ரீத்தி, “வெள்ளப்பூண்டு, வெங்காயம் இரண்டுமே, மார்க்கெட்டிலிருந்து கைக்கு வருகையில் ஈரப்பதத்துடன் இருக்கும். சோ, அதை முதலில் டிரையர் மிஷினில் வைத்து ஒரு கால் மணிநேரம் உலர்த்த வேண்டும். அதன் பிறகு, முழு பூண்டு என்பதால் அதை உடைக்கும் மிஷின் போட்டு சிறு சிறு வெள்ளப்பூடுகளாக உடைக்கவேண்டும். பூண்டின் கொண்டை, நடுவில் இருக்கும் குச்சி தனியாக வந்துவிடும். அதுக்கப்பறம் தான் தோல் உரிக்கும் மிஷினில் போட வேண்டும். அப்பா உருவாக்கிய மிஷனில் வெள்ளைப்பூண்டை கொட்டினால், தோல் உரித்துக் கொண்டேயிருக்கும், அருகில் ஒருவர் நின்றுக் கொண்டேயிருக்கவேண்டும். ஆனால், இப்போ அப்படி கிடையாது. ஹோப்பரில் பூண்டுகளை கொட்டிவிட்டு டைம் செட் செய்துவிட்டால், அதுவே குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட பூண்டு மட்டும் மிஷினில் இறங்கி தோலுரிக்கும். அப்படி, ஹோப்பரில் இருக்கும் முழு பூண்டும் அதுவே கொஞ்ச கொஞ்சாய் இறங்கி தோலுரிக்கும் ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மிஷின் இது. 

ஒரு மணிநேரத்துக்கு 100 கிலோ பூண்டும், 150 கிலோ சின்ன மற்றும் பெரிய வெங்காயம் உரிக்கலாம். இது மூன்று படிநிலைகளையும் ஒன்றாக இணைத்து அடுத்தடுத்த தொடர்ந்து செயல்படக்கூடிய இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்,”என்கிறார் ப்ரீத்தி.  

வெர்கோவின் இயந்திரங்களால் சிறுத்தொழில் தொடங்கிய நாமக்கலை சேர்ந்த இளைஞர் இரண்டே ஆண்டில் ரூ 6 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். ஆனால், நாகராஜனுக்கு பணம் சம்பாதிப்பது நோக்கமில்லை. நாடு முழுவதும் பல தொழில் முனைவோர்களை உருவாக்குவதையே அவரது பணியாய் கொண்டுள்ளார். ஆல்ரெடி, 50க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கிவிட்டார்.

“ஒரு தோல் உரிக்கும் மிஷின் ரூ 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். அதோடு உலர்த்தும் கருவி, பூண்டை சிறு சிறு பல்லாக உடைக்கும் மிஷின் சேர்த்து மொத்தமாய் ரூ 10 முதல் 15 லட்சமாகும்.” 

சென்னையில் தடுக்கி விழுந்தால் பிரியாணிக் கடை தான். அதனால், தோலுரித்த வெங்காயம் மற்றும் பூண்டுக்கு மவுசு குறையாது, எனும் நாகராஜனுக்கு வருமானம் ஈட்டுவதில் ஈடுபாடு இல்லையென்றாலும், அப்பா உருவாக்கிய இயந்திரத்தால் பலன் பெற்ற தொழில் முனைவராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் முத்துப்ரீத்தி. ஹோட்டல்கள், வெங்காய அப்பளம் தயாரிப்பாளர்களுக்கு நாள்தோறும் 100 கிலோ உரித்த வெங்காயங்களை சப்ளை செய்து வரும் ப்ரீத்தி, மக்களின் உபயோகத்துக்காக கன்டெய்னர்களில் அடைக்கப்பட்ட 100 கிராம் உரித்த பூண்டு மற்றும் வெங்காயங்களை சூப்பர் மார்க்கெட்களுக்கு வினியோகித்து வருகிறார்.

‘வெர்கோ இன்ஜீனியரிங் வொர்க்ஸ்’ குழு ஊழியர்கள் 

‘வெர்கோ இன்ஜீனியரிங் வொர்க்ஸ்’ குழு ஊழியர்கள் 


தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளாவிலிருந்து ஆர்டர்கள் வருகின்றன. “ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளன. அந்தளவுக்கு பெரிதாக செய்யவில்லை. ஆனால், விரைவில் தமிழ்நாடு முழுவதும் எல்லா கடைகளிலிலும் உரித்த பூண்டு மற்றும் வெங்காயம் கிடைக்கும். அதற்கான முயற்சியில் தற்போது இருக்கிறேன்,” என்கிறார் ப்ரீத்தி. 

இயந்திரத் தயாரிப்பு, உரித்த வெங்காய மற்றும் பூண்டுகளின் பல்க் ஆர்டர் மற்றும் தினசரி ஆர்டர்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனிதனியாக வருமானம் ஈட்டி வருகின்றனர். இயந்திர தயாரிப்பில் ஆண்டுக்கு கிடைக்கும் ஆர்டர்களின் ஏற்ற, இறக்கத்தை பொறுத்து, ரூ 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானமாக ஈட்டிவரும் நாகராஜன், கிடைக்கும் வருமானத்தை அடுத்த கண்டுப்பிடிப்புக்கான முதலீடாக்கிவிடுகிறார்.

“வெங்காயம் உரிப்பது பெண்களது வேலை, அதையும் குறைத்தால் எப்படி என்று விமர்சனம் செய்கின்றனர். மனிதனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. இதில் ஆண், பெண் பாகுபாடு எல்லாம் இல்லை. அடுத்து காய்ந்த மிளகாய் கம்பு அகற்றுதல், பேரீச்சம்பழம் கொட்டை நீக்குதல் என என்னிடம் உள்ள நூறு புரோஜெக்ட்களில், ஒரு 20 கண்டுபிடிப்புகளயாவது உருவாக்கினால் தான் எனக்கு ஆனந்தம்,” என விடை பெறுகிறார் இந்த இயந்திரன்.
Add to
Shares
256
Comments
Share This
Add to
Shares
256
Comments
Share
Report an issue
Authors

Related Tags