தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றான் 7 வயது சிறுவன் முகமது யாசின்!

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் முகமது யாசின், 2ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
100 CLAPS
0

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரான பாட்சா - அப்ரோஸ் பேகத்தின் இளையமகன் முகமது யாசின். அம்மாவட்டத்திலுள்ள சின்ன சேமூர் அரசு தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது, சாலையில் பணக்கட்டுகளை கொண்ட பை ஒன்று கிடந்துள்ளது. பையை திறந்து பார்த்த அதில் பணக்கட்டு இருப்பதை கண்டு உடனடியாக அந்தப் பணத்தை வகுப்பாசிரியரிடம் கொடுத்துள்ளார். அவர், சிறுவனை உடன் அழைத்து சென்று அம்மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனிடம் வழங்கியுள்ளனர். சிறுவனின் செயலை பார்த்து வியந்த எஸ்.பி. கணேசன், சிறுவனுக்கு சீருடை, புத்தகப்பை, காலணி ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.

சிறுவனின் நேர்மையை கண்டு பிரபலங்கள் முதல் பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். பலரும் நேரில் சந்தித்து வேண்டும் உதவிகளை செய்வதாகக் கூறினர். அப்படி, ஈரோடு ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் யாசின் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். அப்போது யாசினுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால் அதனைச் செய்யத் தயாராக உள்ளதாகக் கூறினார்கள். ஆனால், உதவிகளை ஏற்க மறுத்தனர் குடும்பத்தினர்.


இதையும் படிங்க: 'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்!


அப்போது, சிறுவன் யாசின் அந்நிர்வாகிகளிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார். யாசினின் ஆசையை ரஜினியிடம் அவரது ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர். உடனடியாக யாசினை பார்க்க விரும்பிய ரஜினி, யாசினையும் அவரது குடும்பத்தினரையும் போயஸ் இல்லத்தில் சந்தித்தார். அப்போது, யாசினுக்கு ரஜினி தங்கச் செயின் பரிசளித்தார்.

முகமது யாசினின் நேர்மையை பாராட்டும் விதமாக, மற்ற குழந்தைகளும் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 2-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் சிறுவன் யாசினைப் பற்றிய செய்தி இடம் பிடித்திருக்கிறது.

ஆத்திசூடி ’நேர்பட ஒழுகு’ என்ற தலைப்பில் சாலையில் கிடந்த பணத்தை எடுப்பது போன்றும், அதை ஆசிரியடம் வழங்கி, பின் இருவரும் போலீசாரிடம் ஒப்படைப்பது போன்ற காட்சிகள் கார்டூனில் வரையப்பட்டும், அதற்குக் கீழ் போலீசாரிடம் பணத்தை ஒப்படைத்த சிறுவன் முகமது யாசினை, எஸ்.பி. சக்திகணேசன் பாராட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.

பட உதவி : விகடன்

இச்செய்தியால், மகிழ்ச்சியில் திளைத்துள்ள யாசினின் தாய் அப்ரோஸ் பேகத்திடம் பேசினோம்...

“ஸ்கூல் சார் தான் என் பையனை பத்தி புத்தகத்துல வந்திருக்குனு காமிச்சாங்க. எனக்கு பாத்ததும் கண்ணுலாம் கலங்கி, மனசு நிறைந்சிருச்சு. மூணு நாள சாப்பிடக்கூட தோணல அவ்ளோ சந்தோஷமாக இருக்கு. எஸ்.பி சார் பாராட்டினது, ரஜினி சாரை சந்திச்சது, இப்போ புத்தகத்துல என் புள்ள போட்டோ... இப்படியெல்லாம், சந்தோஷம் வாழ்க்கையில் கிடைக்கும்னு நினைச்சுக்கூட பார்த்தில்லை. உண்மையில், என் பையனோட நேர்மையை உலகம் அறியச் செய்த பள்ளி ஆசிரியர்களுக்கும், போலீசாருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் தான் நன்றியை தெரிவிக்கனும்,”என்று மனமகிழ்வை வார்த்தைகளில் வெளிப் படுத்தினார்.

புத்தகத்தில் இடம் பெற்றபிறகும் சரி, அதற்கு முன்னதாகவும் யாசினை தனியார் பள்ளியில் சேர்க்க நிதியுதவி அளிக்க முன்வந்தவர்களிடம் பிள்ளைகள் அரசுப்பள்ளியிலே படிப்பை தொடரட்டும் என்றனர் அவருடைய பெற்றோர்கள். அது குறித்து அப்ரோஸ் கூறுகையில்,

“எனக்கு இரு பிள்ளைகள். இரு குழந்தைகளும் இரு கண்கள். மூத்த பையனும் அரசுப் பள்ளியில் தான் படிக்கிறான். இரண்டாவது பையனை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்து, இருவருக்கும் இடையே ஏற்ற தாழ்வினை ஏற்படுத்திவிடக்கூடாது. ஆங்கில வழிக் கல்வியும் அவசியமேனு முன்பு தனியார் பள்ளியில் சேர்க்க விருப்பப் பட்டுள்ளேன். இப்போ தான், அரசு பள்ளிகளிலே இங்கிலீஷ் மீடியம் இருக்கே. அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தது என்று நினைத்ததே இல்லை. இப்போ படிக்கிற பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பசங்க ‘அம்மா மிஸ்’னு தான் கூப்பிடுவாங்க. அவங்களும் பாடத்தைத் தாண்டி பொதுவான விஷயங்களை பேசி, நல்லொழுக்கத்தை வளர்க்கின்றனர். அதனால், இந்த ஸ்கூலில் இருந்து வேற ஸ்கூலுக்கு மாற்றும் எண்ணமே எனக்கு ஏற்படல...” என்றார்.

குழந்தை வளர்ப்பு என்பது இன்று பெற்றோர்களுக்கு சவால் நிறைந்ததாகவும், சிக்கலானதாகவும் மாறிவிட்டது. ஐந்து வயது தொடங்கியதில் இருந்தே வாழ்க்கையின் முக்கியப் படிப்பினைகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய லட்சியங்களை  புரிந்து கொள்ளும் சக்தி படைத்த குழந்தைகளுக்கு, அறமும் நெறியும் கற்றுக்கொடுப்பது அவசியம். அப்படி எல்லா குணங்களுக்கு அடித்தளமாய் அமையும் நேர்மை பண்பினை குழந்தைகளுக்கு எப்படி கற்று கொடுப்பது என்பது குறித்து அவர் கூறுகையில்,

“என் கணவர் பிளாட்பாரத்தில் பனியன் விற்கும் ஜவுளி வியாபாரம் பண்றாரு. நான் வீட்டு வேலைக்கு செல்வேன். எங்க குடும்பத்தோட நிலை என்ன, கஷ்டம் என்ன எல்லாமே பசங்களுக்கு தெரியும். மற்ற குழந்தைகள் ஒரு பொருள் வாங்கி சந்தோஷப்படுறதை எங்க பிள்ளைங்க பாத்தா, அந்த சந்தோஷத்தை அவங்களுக்கு எப்படி கொடுக்கிறதுனு தான் பார்ப்போம். தவிர அந்த பொருளையே வாங்கிக் கொடுக்க நினைக்கமாட்டோம்.”

எங்களால் முடிந்ததை வாங்கி கொடுப்போம். என் பசங்களும் மனசார ஏத்துபாங்க அதை. அடுத்தவங்க பொருளுக்கு ஆசப்படக்கூடாதுனு சின்ன சின்ன விஷயங்களிலும் சொல்லி கொடுப்போம். குழந்தைகள் நெருப்பு மாதிரி. ஒரு முறை சொல்லிக்கொடுத்தா போதும், கப்புனு பிடிச்சுப்பாங்க. அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் நம்மள பாத்து தான் வளருறாங்கனு போது, நாமும் அதற்கு ஏற்றவாறு நடந்துக்கணும், என்கிறார் அப்ரோஸ்.

Latest

Updates from around the world