பதிப்புகளில்

உங்கள் நிறுவனம், உங்கள் தொழில், உங்களையும் புதுப்பித்துக் கொள்ள 10 வழிகள்!

21st Nov 2015
Add to
Shares
60
Comments
Share This
Add to
Shares
60
Comments
Share

தொழில் முனைவோரும் நன்கு அறியப்பட்ட ஜாம்பவான்களும் கூட தோற்றுப் போவதற்கு ஒரு பொதுவான காரணம்தான் இருக்கிறது: அவர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் திறனற்றவர்களாக இருப்பதுதான். பொதுவாக ஒரு வெற்றியைப் பார்த்தால் அதிலேயே தங்கிவிடும் மன நிலை இருக்கிறது. அது தவறு. மாறாக புதிய போட்டியாளர்கள் அல்லது மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நாமும் மாறத் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு நல்ல யோசனையைக் காட்டிலும் சிறந்தது புதுப்பித்தல். அது ஒரு அவசியமான பயிற்சி என்கிறார் ஜோஸ் லிங்க்னெர். “புதுப்பித்தலுக்கான பாதை: சீர்குலைவைப் புறந்தள்ளி மாற்றத்தைத் துரிதப்படுத்துவது எப்படி” (The Road to Reinvention: How to Drive Disruption and Accelerate Transformation) என்ற புத்தகத்தில் லிங்க்னெர் இவ்வாறு கூறுகிறார். தொடர் தொழில் முனைவோர், ஜாஸ் குழுவில் கிடார் இசைப்பவர், ஆரம்ப முதலீட்டாளர், எழுத்தாளர் என்ற பல்வேறு முகங்களைக் கொண்ட லிங்க்னெர் தனது சொந்த அனுபவத்தை இந்தப் புத்தகத்தில் கொணர்ந்திருக்கிறார். ஒளிரும் உதாரணங்கள், வழிமுறைகள், வழிகாட்டும் பட்டியல்கள் மற்றும் ஊக்கப்படுத்தும் அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறது இந்தப் புத்தகம். இதற்கு முன்பு லிங்க்னெர் எழுதி விற்பனையில் சக்கை போடு போட்ட புத்தகம் "Disciplined Dreaming" (ஒழுக்கமான கனவு ).

image


'அன்ரெலன்ட்டிங் இன்னோவேஷன் ' (ஜெரால்ட் டெல்லிஸ் எழுதியது) இன்வென்ட், ரிஇன்வென்ட், த்ரைவ் (லாயிட் செஃப்ஸ்க்கை எழுதியது) 'ஃப்ருகல் இன்னோவேஷன் ' (நவி ராட்ஜோ மற்றும் ஜெய்தீப் பிரபு எழுதியது) 'தி ஐடியா ஹன்ட்டர் ' (ஆன்டெ போய்ன்டன் மற்றும் பில் பிஸ்ச்செர் எழுதியது) போன்றவையும் இதே போன்ற புத்தகங்கள்தான். அவை குறித்த எனது விமர்சனங்களையும் பாருங்கள்.

ஒரு நிறுவனத்தின் மரபணுவில் (டிஎன்ஏ) ஆழமாகச் சென்று அதைப் புதுப்பித்தலில்தான் நீண்ட கால வெற்றி அடங்கியிருக்கிறது. புதுப்பித்தல் என்பது வெறும் பொருளில் அல்லது பிராண்டிங்கில் மட்டும் செய்யப்படுவதல்ல. செயல்பாடுகளில், வேலைத் தளத்தில், உங்கள் வாழ்க்கைத் தொழிலிலும் (career) அது நடக்க வேண்டும். 260 பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தில் இருந்து நான் எடுத்த ஒரு பத்து குறிப்புகளை மட்டும் இங்கு தருகிறேன்.

1.புதுப்பித்தலின் அவசியத்தைப் புரிந்து கொள்வது:

புதியதை உருவாக்க வேண்டும் என்ற தாகம் வெறுமனே ஒரு தொடக்கத்திற்கான திறவுகோல் மட்டும் அல்ல. கடினமான உலகப் பொருளாதாரத்தில் நீங்கள் உயரே நிற்பதற்கும் அதுதான் திறவு கோல். “புதுப்பித்தல் என்பது ஒரு தனிச் சம்பவம் அல்ல. அது ஒரு வாழும் முறை” என்கிறார் லிங்க்னெர். புதுப்பித்தல் என்பது அவ்வப்போது வரும் அச்சுறுத்தலைக் கையாளுவதற்கும் புதிய போட்டியில்லாத ஒரு பிரதேசத்தில் நுழையும் போதும் உதவுகிறது. “படைப்பாக்கம் என்பது புதியது. போட்டியிலும் நிலைத்து நிற்கும் திறன் வாய்ந்தது. வெளியிலிருந்து யாராலும் தரமுடியாத விஷயம் அது” என்கிறார் அவர். இந்த வழியில்தான் பெரிய நிறுவனங்கள் எல்லாம் கற்றுக் கொள்கின்றன. எப்படி சுறுசுறுப்பாகவும், வயிற்றில் எரியும் நெருப்போடும், எப்போதும் அவசர கதியிலும் இயங்குவது என்றும் என்ன பதவி என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொருவரும் எப்படிப் பங்களிப்பது என்றும் அவை கற்றுக் கொள்கின்றன. (பார்க்க எனது 15 இன்னோவேஷன் டிப்ஸ்: ஹவ் கார்ப்பரேஷன்ஸ் என்கேஜ் வித் ஸ்டார்ட்அப்ஸ் ‘15 innovation tips: how large corporations engage with startups’ என்ற கட்டுரை)

வர்த்தகப் புதுப்பித்தல் நாயகர்களுக்கு உதாரணமாக, ஐ பாட் மற்றும் ஐபோன் டீமைச் சேர்ந்த டோனி பெடெல் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஐஓடி (IoT) எனும் இணையத் தொழில் நுட்பம் சார்ந்த நெஸ்ட் லேர்னிங் தெர்மேஸ்டாட் தொடங்கியது, 1990களில் சாதாரண தரத்தில் உற்பத்தி செய்து கொண்டிருந்த சாம்சங் நிறுவனம் சந்தையைச் சரியாக மதிப்பீடு செய்து இன்றைக்கு உச்சபச்ச ஸ்மார்ட் போன் தயாரிப்புக்கு வளர்ந்தது, பழைய ஆயுதங்களை மறுசுழற்சி செய்து கொண்டிருந்த ஜெசிகா மின்டிச், காலிபெர் ஜூவல்லரி தொடங்கியது, வாஷிங் மெசின் தயாரிப்பில் இருந்து மோட்டார் வாகனத் தயாரிப்புகளில் இறங்கிய வேர்ல்பூல். இத்தகைய உயரத்தை அடையாத பார்டர்ஸ் புக், கே மார்ட், எலக்ட்ரானிக் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சர்க்யூட் சிட்டி ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

2.புதுப்பித்தலுக்கு எட்டு வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்

புதுப்பித்தல் கலாச்சாரத்தை வரையறுப்பதற்கு எட்டு கோட்பாடுகளை லிங்க்னெர் குறிப்பிடுகிறார்: அவை, கடந்த காலத்தைக் கடக்க விடுவது, நிறுவனத்தில் உறுதியை ஊக்கப்படுத்துவது, தோல்வியைத் தழுவுவது, தற்போதைய சந்தையில் உள்ளவர்களுக்கு எதிர்மறையாக செயல்படுவது, எதிர்கால சாத்தியங்கள் குறித்து கற்பனை செய்வது, உங்களுடனும் போட்டியிடுவது, வரையறைகளை மறுப்பது, எல்லை கடந்து இலக்கு நிர்ணயிப்பது ஆகும். “புதுப்பித்தல் என்பது கற்பனையில் பிறக்கிறது” என்கிறார் லிங்க்னெர். “பார்க்கும் போது அதில் நம்பிக்கை வையுங்கள்” பிறகு அதுவே “நீங்கள் நம்பிக்கை வைத்ததையே பிறகு பார்ப்பீர்கள்” என்று மாறும். இது வாழ்நாள் பாடம். மறுப்புக்கு எதிரான விடாப்பிடியான முயற்சி.

உதாரணங்கள்: நைக் (Nike) கலாச்சாரம் (எப்போதும் ஏதேனும் புதியதை தரத் தயாரான மென்மை), பெக் பெஸ்க்கெர், திரும்பத் திரும்ப சளைக்காமல் முயற்சித்து கடைசியாக தனது சில்லறை வர்த்தக செயலியான 'ஷாப்வித் இட்' தொடங்கி வெற்றிச் சுவையை ருசித்தது. 'டவ்-இன் ரியல் உமன்' விளம்பர பிரச்சாரம், கம்ப்யூட்டர்களில் இருந்து தொழில் நுட்ப சேவைக்கு ஐபிஎம் இடம் பெயர்ந்தது, டெலிகிராம்களில் இருந்து பணப் பரிவர்த்தனை சேவைக்கு மாறிய 'வெஸ்டர்ன் யூனியன்.'

3.உங்கள் படைப்பை நீங்களே வெற்றி கொள்ளுதல்

மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது சொந்த மென்பொருட்களையே விரைவில் பழசாக்கி விட்டு, அடுத்த அப்டேட் வெர்சன்களை தயாரித்து அளிக்கின்றன. மற்ற நிறுவனங்களும் இந்த உதாரணங்களில் இருந்து கற்றுக் கொள்ளலாம். புதிய பாணியைக் கண்டறிதல், புதிய யோசனையைத் தேடுதல், புதிய ஒப்பனைகளை உருவாக்குதல், விரிவான அல்லது சிறு பிரிவுகளாக விரிவாக்குதல் வழியில் கற்றுக் கொள்ளலாம். அப்படிக் கற்றுக் கொள்ளாவிட்டால், உங்களின் சுறுசுறுப்பான போட்டியாளர்கள் உங்கள் நிறுவனத்தையும் உங்கள் உத்திகளையும் தாண்டிச் சென்று விடுவார்கள்.

உதாரணங்கள்: பேக்ஸ் உடன் கூடிய பிரின்ட்டர் சேர்ந்த எச்பி நிறுவனம், ஸ்னூபா (SNUBA) தண்ணீருக்கடியில் நீந்த உதவும் சாதன (scuba diving) தயாரிப்புகளில் இருந்து மிதவை டாங்கிகளுக்கு (raft tank) மாறியது. வெரோனிகா ஸ்காட், குளிர் ஜெர்கின்களான பர்க்காக்களை ஏழைகளுக்கு உதவும் படுக்கைப் பைகளாக (sleeping bags) மாற்றியது. அசிபி கோகோ உணவு அங்கீகார குறியீட்டில் இருந்து மருந்து தொடர்பான சரிபார்க்கும் பணிக்கு (Sproxil) மாறியது. திவாலாவதைத் (ஜிஎம் மற்றும் ச்ரிஸ்லெர் போலல்லாமல்) தடுக்க உதவும் போர்டின் புது உபகரணம், ஹெர்ட்ஸ் அல்லது அவிஸ் அல்லாமல் சிப்கார் ஒரு தொடக்க நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. பெப்சி அல்லது கோகோ கோலாவின் தொடக்கநிலை பானமான ரெட்புல், ஆப்பிளின் கீ நோட் அல்லது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பவர்பாயின்ட்டை விட மேம்பட்டதாகக் கருதப்படும் ப்ரெசியின் கிராபிக்கல் பிரசன்டேஷன் மென்பொருள்.

4.உங்கள் செயல்பாடுகளை நவீனப்படுத்துங்கள்

புதுப்பித்தல் என்பது வெறுமனே பொருட்கள் அல்லது சேவைகளோடு சம்பந்தப்பட்டது அல்ல. உள்ளே வேலை செய்பவர்கள் மற்றும் வேலைத்தளத்தையே மாற்றும் செயல்பாடு. கேனான் பால்ஸ் காலாவதியாகி அதன்பிறகு பிரிக்சன் ஆடிட் வந்து விடும். புதிய கண்டுபிடிப்பு எனும் அலை வந்து பழையனவற்றை அடித்துச் சென்று விடும்.

உதாரணங்கள்: குவிக்கென் லோன்ஸ் நிறுவனம் தனது போட்டியாளர்களைக் காட்டிலும் விரைவாக இணையவழி சேவைகளை வழங்குவது, மைக்கேல் அப்ரசோப் தனது போர்க்கப்பல்களில் பழைய இணைப்பான்களை (fasteners) மாற்றி விட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இணைப்பான்களை பயன்படுத்துவது, மைக்கேல் டுபினின் டாலர் சேவ் கிளப் அறிமுகப்படுத்தியுள்ள சந்தா திட்டம் மற்றும் வைரலாகப் பரவி வரும் வீடியோ மார்க்கெட்டிங். முந்தைய உதாரணங்கள்: ஜிஎம்மை தாண்டிச் சென்ற டெயோட்டோ, ஐபிஎம்மைக் கடந்து சென்ற டெல், சியர்ஸ் அண்ட் கேமார்ட்டை தாண்டிச் சென்ற வால்மார்ட், யுபிஎஸ் வழங்கிய வர்த்தகரிடமிருந்து வர்த்தகருக்கு எனும் பி2பி வாய்ப்புக்கள், கலைஞர்கள் மற்றும் புரமோஷன்களுக்காக (உதாரணமாக ஸ்டீவ் வொன்டர், அரிதா பிராங்க்லின், சுப்ரீம்ஸ், ஸ்மோக்கி ராபின்சன் மற்றும் டெம்டேஷன்ஸ்-க்காக) பெர்ரி கோர்டி கட்டமைத்த டெட்ரோய்ட்டின் மோடோவின் ரெக்கார்ட்ஸ்.

5.பிரகாசமான அனுபங்களை உருவாக்குவது

வாடிக்கையாளரின் ஐம்புலன்களையும் கவரும் பிரகாசமான அனுபவத்தை உருவாக்க வேண்டும். மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வெளிப்பாடாக இருக்க வேண்டும். ஸ்திரத்தன்மையும் ஊக்கமூட்டலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.

உதாரணங்கள்: ஜிஇ-ன் எம்ஆர்ஐ ஸ்கேனர்கள் மற்றும் மருத்துவமனை அறைகளை குழந்தைகளுக்குப் பிடிக்கும் வண்ணம் டவுக் டையட்ஸ் மறு வடிவமைப்பு செய்தது. ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலைப் போன்று ஹென்டி போர்ட் மருத்துவமனை வடிவமைக்கப்பட்டது, கீக் ஸ்குவாட் போல கம்ப்யூட்டர் பழுது நீக்க சேவைகளை ராபர்ட் ஸ்டெபென்ஸ் வடிவமைத்தது, ஒயின் பாட்டில்களுக்கு அடுத்த படியாக பரிசுப் பைகள் வரிசையில் நிற்கும் ஹோல் புட்ஸ்-சின் வடிவமைப்பு.

6.நினைவில் நிற்கும் கதை சொல்லுங்கள்

பயன் மிக்க கதைகள் நல்ல வர்த்தகக் கதைகளைச் சொல்ல உதவலாம். தேடல் கதைகள், அன்னிய நிலம் குறித்த கதைகள், காதல் கதைகள், ஏழையாக இருந்து பணக்காரர் ஆன கதைகள், பழிவாங்கும் கதைகள் கூட உதவும். அந்தக் கதைகள் எளிமையாக இருக்க வேண்டும். தெளிவாகவும் சுருக்கமாகவும், நினைவில் நிற்கும் படியும் சாகசம் கலந்தும் இருக்க வேண்டும். நகைச்சுவை அம்சங்கள் இருந்தால் அதுவும் உதவும். நிறுவன அளவில் மேற்கொள்ளப்படும் வார நடவடிக்கைகள் போல, போட்டிகள் மற்றும் விருதுகள் போன்றவை கதை சொல்லும் இயக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

உதாரணங்கள்: மெக்சிகோவில் மறு சுழற்சியை அதிகரிப்பதற்காக யோ ரிசிக்லோ (YoReciclo) செய்யும் தனது பிரச்சாரத்தின் மூலம் அது செய்யும் குழந்தைகளின் எதிர்கால சித்தரிப்பு; ஸ்ட்வார்ட் ரெஸ்னிக், கிச்சிலிப்பழங்களை ‘க்யூட்டிஸ்’ என்ற பிராண்டிங்கில் அழைப்பது; லுல்லுலெமன் வழக்கொழிந்து கொண்டிருந்த யோகா பேண்ட்டுகளை அற்புதத்திற்கான அற்பணிப்பாக மாற்றுவது; நிக் பிரெட்மன் தனது குப்பைகளை அப்புறப்படுத்தும் சேவைக்கு ‘காலேஜ் ஹன்க்ஸ் ஹவுலிங் ஜங்க்’ (College Hunks Hauling Junk) என்று பிராண்ட் நேம் வைத்தது; இந்த பிராண்டுகள் மட்டுமல்ல பையர் பிராண்டாக இருந்த மார்ட்டீன் லூதர் கிங்கும் காபி கலாச்சாரத்தை பரப்பிய ஸ்டார்பக்ஸ்சும் கூட வெற்றிகரமான உதாரணங்களே.

7.உங்கள் கலாச்சாரத்தை சீர்திருத்துங்கள்

பார்வையில் மறு சீரமைப்பு, நிறுவன அளவில் பிராண்டிங்கை சிறப்பாக்குதல், புதிய அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்தல், கடைப்பிடிக்க வேண்டிய அமைப்பு நன்னெறிகள், எதிர்வினைகளின் மீது முழுமையான கவனிப்பு, சீரான பயிற்சி ஆகியவற்றின் மூலம் கலாச்சாரத்தை மீண்டும் புதிதாக மாற்றி அமைக்கலாம். அவசரமாக நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற போதிலும் அது எளிதல்ல. எனினும் இந்த மாற்றம் தேவை. பெரிய விஷயங்களைச் செய்யும் போது பொறுமை, உத்வேகம், விடாப்பிடித் தன்மை, படைப்பாக்கம் மற்றும் உறுதி தேவைப்படும். பழைய பாதுகாப்பு வேலிகளை அகற்றுவது கூட அவசியமாக இருக்கலாம். குறிப்பாக அந்த வேலிகள் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் களையெடுத்தே ஆக வேண்டும்.

உதாரணங்கள்: அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் உச்சபச்ச இலக்குகளை நிர்ணயித்து, அதன் விளைவாக உலகின் முதல் 15 டயர் நிறுவனங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்துள்ளது; பெரிய சர்வர்களை நிர்வகிக்கும் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ வாடிக்கையாளர்களுக்கு பேராதரவு அளிக்கும் ராக்ஸ்பேஸ்-ன் அணுகுமுறை; கிராபிக்ஸ் நிறுவனமான பாதெட், வாராந்திரக் கதை சொல்லும் நடைமுறை; 24 மணி நேரமும் படைப்பாக்கத்திற்கான செயல்பாட்டில் இருக்கும் ஆஸ்திரேலிய மென்பொருள் நிறுவனமான அட்லசியன்; சிறைக்குச் சென்று திரும்பிய குற்றவாளிகளுக்கு மறு வாழ்க்கை தரும் விதத்தில் அவர்களை ஆக்கப் பூர்வமான பணிகளில் இறக்கி விட்ட கிரிகோரி பாயலின் ஹோம்பாய் நிறுவனம்; குறைந்த பட்சத்திற்கும் குறைவாகக் கொடுக்காமல் முழுமையான சம்பளம் மற்றும் சலுகைகளை பணியாளர்களுக்கு அளிக்கும் சுசி யசுதா.

8.வாடிக்கையாளர் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்

வாடிக்கையாளருடன் இரண்டறக் கலத்தல் மற்றும் தொடர்பு, பிரிவு வாரியான ஆய்வு, வகைகளை விரிவு படுத்தல், வழங்கப்படும் சலுகைகளில் தெளிவு போன்றவை நமக்கு புதிய பார்வையைக் கொடுக்கலாம். வாடிக்கையாளர்கள் பொருள் வாங்கும் பழக்கங்களில், அவர்கள் நம்மோடு தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். எனவே நிறுவனங்கள் புதிய விநியோக வழிகளைக் காண வேண்டும். இதற்காக சில சமயம் வேறு நிறுவனங்களில் இருந்தும் புதிய யோசனைகளை கற்றுக் கொள்ளலாம். பலமாகக் காணப்படும் விநியோக வழிமுறைகளைக் கூட ஒரு படைப்பாக்க அணுகுமுறையோடு புதுப்பிக்கலாம். “உங்கள் இடத்தைப் பிடிக்க போட்டியிட்டுக் கொண்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே இரவில் உங்கள் விநியோக வழிகள் அனைத்தையும் சீர்குலைத்து விடலாம்” என்று அனுமானிக்கிறார் லிங்க்னெர்.

உதாரணங்கள்: மாதாந்திர அழகு சாதனப் பொருட்கள் விநியோகத்திற்கென பிரிச்பாக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள சந்தா முறை (“டிஸ்கவரி காமர்ஸ்”); பட்ஜெட் நோக்கில் உள்ள கடைகளுக்கு ஐகியா அளிக்கும் பர்னிச்சர் அசெம்பிளி கிட்ஸ்; நுகர்வோர் தங்கள் வீட்டிலிருந்தே கார்பனேட்டட் பானங்களைத் தயாரிக்க சோடா ஸ்ட்ரீம்ஸ் அளிக்கும் ஏரியேசன் எந்திரங்கள்; ஹார்லி டேவின்சனின் நிறுவன உரிமையாளர்கள் குழுக்கள்; இணைய வழியில் சட்ட ஆலோசனைகள் வழங்கும் லீகல்ஸும்.காம்; பெல்லா ஸ்கை ஹோட்டல், பெண் தொழில் நெறியாளர்களைக் (professionals) குறிவைத்து, பெண்களுக்கென்று தனி வளாகத்தை அமைத்திருப்பது; டையன் ஹெவின் அறிமுகப்படுத்தியிருக்கும் பெண்களுக்கான தனி உடற்பயிற்சிக் கூடம்; ரோர் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், பெண் ஓட்டுனர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைத்திருக்கும் மோட்டார் சைக்கிள்கள்; ஏற்கனவே நிறைய நிறுவனங்களால் நெரிசலுக்குள்ளாகியிருக்கும் சிலிக்கான் வேலிக்கு பதிலாக டெட்ராய்ட்டில் தொழில் தொடங்க இருப்பவர்களுக்காக லிங்க்னெர் ஆரம்பித்திருக்கும் ‘டெட்ராய்ட் (Detroit) ஆரம்ப முதலீட்டுப் பங்குதாரர்கள் அமைப்பு’ (Detroit Venture Partners).

9.உங்கள் வாழ்க்கைத் தொழிலை மாற்றுங்கள்

புதுப்பித்தல் என்பது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல தனிநபர்களுக்கும் பொருந்தும். திட்டமிடுதல், புது ட்ரெண்ட்டை கண்டறிதல், பிரதிபலிப்பு, கற்றுக் கொள்ளல் மற்றும் ஒரு விதமான சாகச விருப்பம் போன்றவை உங்களின் வாழ்க்கைத் தொழிலுக்கு புத்துயிரூட்ட உதவும். எதிர்காலத் திட்டத்தின் அடிப்படையிலான வேலைப் பின்னணி, ஆழ்ந்த சுய ஆய்வு, வழிகாட்டிகளுடன் தொடர்பு ஆகியவை உங்களை எடுத்த வேலையில் ஆழ்கவனமுடையவராகவும் அர்ப்பணிப்பு மிக்கவராயும் வைத்திருக்க உதவும்.

உதாரணங்கள்: பேஷன் துறையில் மொத்தக் கொள்முதல் செய்துகொண்டிருந்த தனது வேலையை விட்டு விட்டு சொந்தமாக ஜோர் எனும் இணைய வழி வர்த்தக தளத்தைத் தொடங்கிய மோனா பிஜோர்; பதினேழு வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சோபியா அமோருசோ, ‘நாஸ்டிகேல்’ எனும் பேஷன் இணையதளத்தைத் தொடங்கியது; வரலாற்று ஆசிரியர் சார்லஸ் பெஸ்ட், பள்ளிக் கூட புராஜெக்ட் பணிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக டோனர்ஸ்சூஸ்.ஆர்க் தொடங்கி பின்னர் அதையே மூன்று கோடி டாலர் கல்வி நன்கொடை இணையதளமாக வளர்த்தது; மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கான கண்ணாடி தயாரித்த ஆக்லே நிறுவன உரிமையாளர் ஜிம் ஜனார்ட், பின்னர் பனியில் அணியும் கண்ணாடிகள் (ski goggles), சன்கிளாஸ் அதைத் தொடர்ந்து ஹாலிவுட்டுக்கான ரெட் டிஜிட்டல் காமிராக்கள் என தனது தொழிலை விரிவு படுத்தியது; ஒரு தாயால் ஆரம்பிக்கப்பட்ட ரூத்தின் ஸ்டீக்ஹவுஸ் சங்கிலித் தொடர், பல தாய்மார்களுக்கு வேலை வாய்ப்பையும் நல்ல வாழ்க்கையையும் வழங்கியது.

முந்தைய உதாரணங்கள்: தனது இசைப் பாணியில் புதுமை படைத்த – பி பாப், கூல், ப்ளூ, ஹார்ட் பாப் மற்றும் எலக்ட்ரிக் இசைக் கோலங்களுக்கு முன்னோடியான -ஜாஸ் ட்ரம்பெட் மேதை மிலஸ் டேவிஸ்; உலகின் மகத்தான கொடையாளிகளில் ஒருவராக தன்னைத்தானே புத்தாக்கம் செய்து கொண்ட, கிவிங் பிளெட்ஜ் எனும் தொண்டு அமைப்பில் பிற பில்லினர்களோடு தன்னை இணைத்துக் கொண்ட பில்கேட்ஸ்; கணவன் விட்டுச் சென்ற நிலையில் வாழ்க்கையை கஷ்டப்பட்டு நடத்திக் கொண்டிருந்த ஜே.கே.ராவ்லிங். (ராவ்லிங், ஹாரிபாட்டர் புத்தகத்தை எழுதி பல பதிப்பகங்களுக்கு அலைந்தார். 12 பதிப்பகங்கள் அவரது கதையை நிராகரித்து விட்டன. அதன் பிறகு அதே புத்தகம் விற்பனையில் வெற்றியைச் சாதித்ததோடு, திரைப்படங்களாகவும் சாதனை படைத்தது.)

10.நீங்கள் எதை விட்டுச் செல்லப் போகிறீர்கள்?

உங்கள் மரணத்திற்குப் பிறகு எது நினைவில் நிற்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? வாழ்க்கைக்கும் அப்பால் உங்கள் தேவை என்ன, நீங்கள் இல்லாமல் உங்களால் என்ன செய்ய முடியும்? உங்கள் தாக்கம் என்ன? எதில் நீங்கள் நல்லவர்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடினால் போதும். நீங்கள் உங்கள் மரபுவழியில் எதை விட்டுச் செல்லப் போகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அதை நோக்கி இப்போதிருந்தே பணிகளைத் தொடங்குங்கள். முதல் அடியை எடுத்து வையுங்கள் (ராபர்ட் மவுரர் எழுதிய கைசென் புத்தகத்திற்குரிய எனது மதிப்புரையையும் பாருங்கள்).

“நன்றாகச் செய்வது மற்றும் நன்மை செய்வதற்கான திறனில் இருந்துதான் உண்மையான வெற்றி வருகிறது” என்று விளக்குகிறார் லிங்க்னெர். சமூகத்திற்குத் திருப்தியும், சொந்த ஆத்ம திருப்தியும் இல்லாமல் வர்த்தக வெற்றி சாத்தியமில்லை. எந்த வேலையில் அல்லது வாழ்க்கைத் தொழிலில் நீங்கள் மகிழ்ச்சி காண்கிறீர்கள் என முடிவு செய்யுங்கள். கருணை, அனுதாபம், தைரியம், நேர்மறை அணுகுமுறை, ஒழுக்கம், படைப்பாற்றல் மற்றும் மன உறுதியைப் பண்படுத்துவதில் இருந்துதான் உயர்ந்த பட்ச வெற்றியும் திருப்தியும் வருகிறது.

புதுப்பித்தலுகான ஓய்வு நேரமும், கிடைக்கக் கூடிய வளங்களும் உயர்ந்தபட்ச வெற்றியில் ஒரு வலிமையான இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அங்கே கார்ப்பரேட் அரசியல், மாற்றத்தை அனுமதிக்காத கலாச்சாரம் அல்லது தனிமனித சோம்பேறித்தனமும் இருக்கலாம். தொடர்ச்சியான புத்தாக்க செயல்பாடுகளுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட, கட்டுப்பாடான அணுகுமுறை, எதையாவது நாம் தவறாகத் தொடங்குவதில் இருந்தும் தோல்வியில் இருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவும்.

“முடிவற்ற சாத்தியங்களின் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று முடிக்கிறார் லின்க்னெர். மகத்தானது என்பது ஒரு விவாதமாக இருக்கக் கூடாது. அது நீங்கள் அடைய வேண்டிய இலக்கு.

புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைச் சிந்திக்க வைக்கும் மேற்கோள்களுடன் ஆரம்பிக்கிறது. அவற்றில் ஒரு சிலவற்றைக் கொடுத்து இந்த மதிப்புரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

நான் என்னவாக இருக்கிறேனோ அப்படியே என்னைப் போக அனுமதிக்கும் போது, நான் என்னவாகப் போகிறேனோ அப்படியே ஆகிறேன் – லா சூ
எச்சரிக்கை உணர்வின் மோசமான வெகுமதிதான் சலிப்பு – ஏ.ஜி.பக்காம்
இப்போதிருந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் செய்ததை விட செய்யாமல் விட்டது குறித்து அதிக ஏமாற்றத்தை உணர்வீர்கள் – மார்க் ட்வைன்
வாழ்க்கையில் இரண்டு முக்கியமான தேர்வுகள் உண்டு. ஒன்று இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வது, மற்றொன்று அவற்றை மாற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வது. - டென்னிஸ் வாய்ட்லி
கரையை விட்டுச் செல்வதற்கான துணிச்சல் இல்லாத வரையில் நீங்கள் ஒரு போதும் கடலைக் கடக்க முடியாது – கிரிஸ்டோபர் கொலம்பஸ்
ஒரு கப்பல் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கிறது. ஆனால் கப்பல் துறைமுகத்தில் நிற்பதற்கல்ல. – வில்லியம் ஷெட்
நோவா தனது பேழையை உருவாக்கும் போது மழை பெய்யவில்லை – ஹவார்ட் ரஃப்
நீங்கள் சொன்னதை எல்லோரும் மறந்து விடுவார்கள். நீங்கள் செய்ததையும் மறந்து விடுவார்கள். ஆனால் யாரும் நீங்கள் கொடுத்த உணர்வை ஒருபோதும் மறப்பதே இல்லை. – மாயா ஏஞ்செலு
நேரம் குறைவுதான். எனவே வேறு ஒருவரின் வாழ்க்கையை வாழ நேரத்தை வீணடிக்காதீர்கள் – ஸ்டீவ் ஜாப்ஸ்
சில விஷயங்கள் உங்கள் கண்ணைக் கவரும். ஆனால் உங்கள் இதயத்தைக் கவர்ந்தது மட்டுமே உங்களை வழிநடத்தும் – அமெரிக்கப் பழமொழி

ஆக்கம்: மதன்மோகன் ராவ்| தமிழில்:சிவா தமிழ்ச்செல்வா

Add to
Shares
60
Comments
Share This
Add to
Shares
60
Comments
Share
Report an issue
Authors

Related Tags