பதிப்புகளில்

பணிப்பெண்ணாக இருந்து எழுத்தாளர் ஆன பேபி ஹால்டரின் ஊக்கமிகு கதை!

30th Mar 2018
Add to
Shares
64
Comments
Share This
Add to
Shares
64
Comments
Share

பேபி ஹால்டர் அவர்களின் குறிப்பிடத்தக்க விஷயங்களில் ஒன்று அவரது ஒளிமயமான புன்னகை. அந்த பிரகாசமான மகிழ்ச்சியான புன்னகை இல்லாமல் அவர் முகம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அவர் தனது கதையை பகிர்ந்துகொண்டதும் பிரச்சனைகளில் இருந்து அவர் மீண்டெழுந்த திறனும் உறுதியும் அவர் கண்களில் மிளிறியது. அது அவரது புன்னகையை மேலும் சிறப்பாக்கியது.

இவர் குழந்தைத் திருமணம், குடும்ப வன்முறை, வறுமை என பல இன்னல்களைக் கடந்து வந்துள்ளார். அவர் சந்தித்த பிரச்சனைகள் புத்தகமாக எழுதப்பட்டு எட்டு இந்திய மொழிகளிலும் 13 வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அவரது வார்த்தைகள் மில்லியன் கணக்கான பெண்களுக்கு உந்துதலளித்து வருகிறது.

image


பேபி பிறந்தது முதலே அடுத்தடுத்து பல ஆண்கள் அவரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். முதலில் அவரது அப்பா. பேபிக்கு பன்னிரண்டு வயதாகும்போது அவரது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு அவரது வயதைப் போன்று இருமடங்கு வயதுடைய ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஓராண்டு கழித்து பேபிக்கு 13 வயதிருக்கும்போதே ஒரு குழந்தைக்குத் தாயானார். அதற்குப் பிறகு அடுத்தடுத்து மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்தது. வீட்டில் தினமும் அவரது கணவரின் துன்புறுத்தல்களுக்கிடையே மூன்று குழந்தைகளையும் வளர்த்தார். அவர் ஒவ்வொரு சம்பவத்தையும் விவரிக்கையில் அவரது ஆழ்மனதில் இருந்த கோபம் வெளிப்பட்டது. அத்துடன் அவர் வாழ்க்கையில் சந்தித்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பெண்களின் வலிமையும் ஒன்று திரண்டு காணப்பட்டது.

”என்னுடைய அம்மா என் அப்பாவை விட்டு கைக்குழந்தையுடன் வெளியேறி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை உணர்ந்தேன். என்னுடைய அப்பாவின் நடத்தையை சகித்துக்கொள்ள முடியாததால் என் அம்மா வீட்டை விட்டு வெளியேறினார். என்னுடைய சகோதரியை அவரது கணவர் தன் கைகளாலேயே கழுத்தை நெறித்ததை என் கண்களால் பார்த்திருக்கிறேன். என்னுடைய வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பெண் மீது ஆசீட் வீசி தாக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். எப்படிப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம் என்று நான் எப்போதும் நினைப்பேன். மூன்று பெண்கள் தங்களது உயிரை இழந்ததை என் கண்களால் பார்த்துள்ளேன். நான் நான்காவது நபராக இருக்க விரும்பவில்லை,” என்று யுவர்ஸ்டோரி இடம் நினைவுகூர்ந்தார்.

பொறுத்தது போதும்

வாழ்க்கை இவ்வாறு கொடூரமாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றும் தலைவிதியை மாற்றி எழுதி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான மார்க்கத்தை கண்டறியவேண்டும் என்பதிலும் பேபி திடமாக இருந்தார். அப்போது அவர் வசித்த மேற்கு வங்காளத்தின் துர்காபூர் பகுதியில் இருந்து தப்பிப்பதற்கான திட்டத்தை வகுக்கத் துவங்கினார். 

”என்னுடைய குழந்தைகள் அப்படிப்பட்ட ஒரு சூழலில் வளர்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் படிக்கவேண்டும் என நான் விரும்பினேன். இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என நினைத்தேன்,” என்றார் அவர்.

அவரிடம் எந்த திட்டமும் இல்லை. ஆனால் யாரையும் நம்பக்கூடாது என முடிவெடுத்தார். அவரது நோக்கம் சரியானது என்பதால் கடவுள் அவரது முயற்சிக்குத் தேவையான வலிமையை வழங்குவார் என நம்பினார். ஒரு நாள் பேபி தனது மூன்று குழந்தைகளுடன் அவரது பகுதியை விட்டு வெளியேறினார். புதுடெல்லியில் இருந்த அவரது சகோதரர் வீட்டிற்கு முதலில் சென்றார். 

”அவரது குடும்பத்தினர் எனக்கு ஆதரவளிக்கவில்லை. என்னை ஒரு சுமையாகவே நினைத்தனர். தினமும் வீட்டில் சண்டை நடக்கும். அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானம் செய்வார்கள்,” என நினைவுகூர்ந்தார்.

பேபியின் சகோதரரின் நண்பர் பேபிக்கு உதவ முன் வந்தார். வீட்டு வேலைக்கு உதவி தேவைப்பட்ட ஒரு குடும்பத்திற்கு பேபியை அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் அவரது குழந்தைகளும் அங்கேயே தங்க அனுமதி வழங்கப்பட்டது. “அவர்கள் மனிதாபிமானம் இன்றி நடந்துகொண்டனர். அங்கு வீட்டு வேலை செய்த ஒரே காரணத்திற்காக என்னை அடிமைபோல் நடத்தினர். கிட்டத்தட்ட ஓராண்டு அங்கு தங்கினேன். ஆனால் எனக்கு வேறு வேலை பார்த்து தருமாறு அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன். ஒரு நாள் ஒருவர் என்னை டேடஸ் அவர்களிடம் அழைத்து சென்றார்,” என்றார் பேபி.

”அன்று முதல் என்னுடைய வாழ்வின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்தது.”

டேடஸ் என்றழைக்கப்படுபவரின் பெயர் பிரபோத் குமார். அவர் ஓய்வுபெற்ற மானுடவியல் பேராசிரியர். ஹிந்தி இலக்கியத்தில் தலைசிறந்தவரான முன்ஷி பிரேம்சந்த் அவர்களின் பேரன். இவர்தான் பேபியை ஊக்குவித்து அவரது திறமையை கண்டறிந்தவர்.

டேடஸ் என்னுடைய குழந்தைகளுடன் அவரது இடத்திலேயே தங்குமாறு கூறினார். அவரை டேடஸ் என அழைக்கச் சொன்னார். அவரது குழந்தைகள் அவரை டேடஸ் என்றே அழைத்தனர். போலிஷ் மொழியில் டேடஸ் என்றால் ’அப்பா’. அவர் மெதுவாக அமைதியாக பேசுவார். அவரது குரல் என்னுள் அமைதி உணர்வை ஏற்படுத்தியது,” என்றார்.

டேடஸ் பேபியின் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்தார். பேபி சிறப்பாக எழுதவும் படிக்கவும் உதவினார். 

”என்னுடைய பெற்றோர் எனக்குக் கொடுக்காததை அவர் எனக்குத் கொடுத்தார். அதன் பிறகு என்னுடைய சிறகுகள் பறக்கத் தயாராயின,” என்றார் பேபி. 

புத்தக வாசிப்பு மற்றும் எழுத்து

பேபி மற்றும் டேடஸ் இடையே நல்ல உறவு மலர்ந்தது. பேபி வேலை செய்து கொண்டிருக்கும்போது இடையே சற்று நேரம் உரையாட அவரை அழைப்பார் டேடஸ். ”என்னுடைய வாழ்க்கை பற்றியும், என்னுடைய படிப்பு குறித்தும் கேட்டார். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாக தெரிவித்தேன். மிகவும் முக்கிய விஷயம் ஒன்றை அவர் என்னிடம் தெரிவித்தார். ’கல்வியும் அறிவும் ஒன்றோடொன்று தொடர்புடையது அல்ல’ என்றார்,” என்று பகிர்ந்துகொண்டார் பேபி.

அறையை சுத்தம் செய்யும்போது டேடஸின் புத்தகத் தொகுப்பில் இருந்து வங்காள மொழி புத்தகங்களை வாசிக்க முயற்சிப்பார். 

”அவரது புத்தகங்களை நான் படிக்க முயற்சிப்பதை அவர் கவனித்தார். ஒரு நாள் ’நீ படிக்க விரும்புகிறாயா?’ என்று என்னிடம் கேட்டார். நான் வெட்கப்பட்டு புத்தகத்தை அதன் இடத்திலேயே வைத்துவிட்டேன். அவர் என்னை படிக்கச் சொன்னார். அது தஸ்லீமா நசரீன் எழுதிய புத்தகம். அந்த புத்தகம் குறித்து என்னுடைய கருத்தைக் கேட்டார். அந்த புத்தகம் என்னுடைய குரலை பிரதிபலித்ததாகவே நான் உணர்ந்தேன் என்று அவரிடம் கூறினேன்.” 

ஒருமுறை பேபி அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்தபோது டேடஸ் அவரிடம் சென்று ஒரு பேப்பரையும் பேனாவையும் கொடுத்தார். எழுது என்றார். ”நான் பயந்து போனேன். என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. அவரிடம் கேட்டதற்கு உன்னைப் பற்றி எழுது என்றார்,” அவரும் எழுதத் துவங்கினார்.

பேபி தனது அறையில் ஒரு டைரியில் ஒவ்வொரு இரவும் எழுதினார். “ஒரு நாள் நான் எழுத மறந்தாலும் என் மகள் என்னை திட்டுவாள். எவ்வளவு எழுதியுள்ளேன் என்று டேடஸ் கேட்டார். நான்கு பக்கங்கள் மட்டுமே எழுதியுள்ளேன் என்றும் நிறைய தவறு இருப்பதாகவும் தெரிவித்தேன். அதை படித்துக் காட்டச் சொன்னார். நான் அவரிடம் கொடுத்துவிட்டு என் வேலைக்கு திரும்பினேன். அவர் திரும்பி வந்தார். கைகுலுக்கினார். ‘நன்றாக எழுதியிருக்கிறாய். எழுதுவதை நிறுத்திவிடாதே. தொடர்ந்து எழுது’ என்றார். நான் முன்பு படித்திருந்த ’தி டைரி ஆஃப் ஆன் ஃப்ரான்க்’ புத்தகத்தில் வருவது போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது,” என்றார்.

பேராசிரியர் தனது நட்பு வட்டத்துடன் பேபி குறித்து பகிர்ந்துகொண்டார். “அவர்கள் அனைவரும் ‘பேபி, எழுதுவதை நிறுத்திவிடாதே’ என்றனர். எனக்கு துணிவும் உற்சாகமும் பிறந்தது. புத்தகத்தை எழுதி முடித்து டேடஸ் கையில் ஒப்படைத்தேன்,” என்றார்.

அசாதாரண வாழ்க்கை

அவரது புத்தகத்தில் புதைந்திருக்கும் முக்கிய அம்சமே உண்மைதான். “நான் பாதிக்கபட்டவளாக உணரவில்லை. ஏனெனில் பலர் என்னைப் போன்ற சூழலை சந்தித்திருப்பார்கள். என்னுடைய திருமணம் குறித்து நான் எழுதியபோது என்னைப் பற்றி மட்டுமே நான் எழுதுவதாக எனக்குத் தோன்றவில்லை. கோடிக்கணக்கான பேபி பற்றி எழுதுவதாகவே நினைத்தேன். அதுவே எனக்கு வலிமை அளித்தது,” என்றார்.

டேடஸ் அந்த டைரியை எடுத்து ஒரு நாவலாக மாற்றினார். ’அசாதாரண வாழ்க்கை’ என்கிற அர்த்தத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் முதலில் ஹிந்தி மொழியில் வெளியானது. அதன் பிறகு 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

”ஒரு நாள் வங்காள தேசம் சென்றேன். அங்கு எழுத்தாளர்கள் கடவுளாகவே பார்க்கப்படுவார்கள். அங்கு என்னுடைய புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் குளியலறைக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு என்னையே கிள்ளிப் பார்த்தேன்,” என்றார்.

பேபி பற்றிய தகவல் எங்கும் பரவியது. உலகெங்கிலும் இருந்து பத்திரிக்கையாளர்களும் பிபிசி போன்ற பிரபல செய்தி நிறுவனங்களும் அவரது பயணத்தை ஆவணப்படுத்த அணுகினார்கள். 

”பலர் தங்களது புத்தகங்களை மொழிபெயர்க்க பலரைத் தேடி அலைந்துள்ளதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் யாரையும் தேடிச் செல்லாமலேயே என் புத்தகத்தை மொழிபெயர்க்க அவர்களாகவே என்னை அணுகினர்,” என்றார்.

பேபி வீட்டு வேலை செய்வதை விட்டுவிடுமாறு டேடஸ் வலியுறுத்தினார். பேபி கொல்கத்தாவிற்கு மாற்றலானார். அவரது புத்தகம் வாயிலாக ஈட்டிய தொகையைக் கொண்டு அங்கு ஒரு வீடு கட்டினார். “எனக்கு பேரிஸில் அதிக ராயல்டி கிடைத்தது. அங்கு ஆறு லட்சம் பிரதிகள் விநியோகிக்கப்பட்டது,” என்றார்.

ஒரு சர்வதேச ஆவணப்பட தயாரிப்பாளருடன் நடந்த நேர்காணல் சம்பவம் குறித்து நினைவுகூர்ந்தார். 

“நான் என் வீட்டு முகப்பை சுத்தம் செய்துகொண்டிருந்தேன். பெரிய பெரிய கேமிராக்களுடன் சிலர் வீட்டினுள் நுழைந்தனர். பேபி ஹால்டரை பார்க்கவேண்டும் என்று என்னிடம் கூறினர். அவர்களை உள்ளே வரவேற்று டீ வழங்கினேன். அறைக்குள் சென்று உடை மாற்றி வெளியே வந்தேன். அவர்கள் என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதான் உண்மை என்றேன்.”

அவரது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். அவரது மகன்களில் ஒருவர் அப்பாவுடன் வசிக்கிறார். மற்றவர்கள் பேபியுடன் வசிக்கின்றனர். அவரது மூன்றாவது மகள் குர்கானில் பணிபுரிகிறார். பேபி மேலும் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். ஒன்று ’ஈஷத் ரூபாந்தர்’ (பெங்காலி) மற்றொன்று ’கரே ஃபெஹர் பத்’ (பெங்காலி மொழியில் எழுதப்பட்ட சுயசரிதை).

அவர் தற்போது சோனாகச்சி அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிறுவனம் பாலியல் தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் பணியிலும் கடத்தப்பட்டவர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ”ஒரே ஒரு நபருக்கு நான் உதவ முடிந்தாலும் என்னுடைய வாழ்க்கை பயனுள்ளதாக அமைந்தது என மகிழ்வேன். புதிய புத்தகம் ஏதேனும் எழுதுகிறேனா என புத்தக வெளியீட்டாளர்கள் தொடர்ந்து என்னை அழைத்து கேட்டு வருகின்றனர். என்னுடைய நான்காவது புத்தகத்தின் வரைவு கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. இதற்கு அன்னை சரஸ்வதி மற்றும் டேடஸ் அவர்களின் ஆசீர்வாதமே காரணம்,” என்றார்.

பெண்கள் தங்களது விரும்பத்தகாத வாழ்க்கையில் இருந்து வெளியேறினால் அவர்களுக்கு சுதந்திரமான ஒளிமயமான வாழ்க்கை காத்திருக்கிறது என்று ஊக்கமளிக்கிறார் பேபி.

உலகம் மாறி வருகிறது. மக்களின் மனநிலையும் மாறி வருகிறது. நான் சந்தித்த அதே சூழலை தற்சமயம் சந்தித்து வரும் பெண்களிடம் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என அறிவுறுத்த விரும்புகிறேன். ’நான் எனக்கு முக்கியம்’ என்று உங்களுக்குள் கூறிக்கொண்டே வெளியேறுங்கள். முக்கியமாக படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். படியுங்கள். படிப்பது மிகவும் முக்கியமானதாகும். அது உங்கள் அறிவுக் கண்கள் திறக்கப்பட உதவும்,” என்று கூறி விடைபெற்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
64
Comments
Share This
Add to
Shares
64
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக