பதிப்புகளில்

உத்வேக 'வெள்ளி'த்திரை | சத்த வித்தகர்களால் சாத்தியமான 'விசாரணை'

12th Feb 2016
Add to
Shares
28
Comments
Share This
Add to
Shares
28
Comments
Share

அலுவலக அழுத்தத்தை யோசித்துக்கொண்டே சாலையில் பள்ளிப் பகுதி ஒன்றைக் கடக்கும்போது, அங்கிருந்து வந்த கச்சாமுச்சா கீச்சுக்குரல்களின் ஒட்டுமொத்த சத்தத்தால் மனசு லேசாகியிருக்கிறது.

எதிர்பாராமல் கிடைத்த ஏதோ ஒரு பலனால் மனசுக்குள் சிரித்தபடி சென்ற அந்த ஜன்னலோர பஸ் பயணத்தின்போது, பின்னாலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கூடி வந்த ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு இனம்புரியாத வகையில் மனம் கனமாகியிருக்கிறது.

தூரத்தில் கேட்ட சாவு ஊர்வல இசை சத்தங்கள் குத்தாட்டம் போடத் தூண்டுதலாகவும், அதே ஊர்வலத்தை நெருங்கியதும் தொண்டையை அடைத்த துக்கமாகவும் அமைந்தது உண்டு.

கொஞ்சம் காசுக்கு வாங்கிய பட்டாசுகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் தீர்ந்து போக, ஊரே கொளுத்தும் பட்டாசுகளின் சத்தங்களுடன் எஞ்சிய 11 மணி நேர தீபாவளியை கொண்டாடித் தீர்த்ததும் ஒரு காலம்.

வீட்டு ஓனர் அழுத்தும் காலிங் பெல் ஓசை, ஹோம் மேக்கர் வேல்யூமின் ஏற்ற இறக்கங்கள், பக்கத்து சீட் அலுவலக நண்பர் அடிக்கடி மாற்றும் ரிங்டோன்கள் முதலானவை உளவியல் பாடங்கள் பயில துணைபுரிகின்றன.

ம்... ஒளி - ஒலிகளால் ஆன இந்த உலகத்தில், நாம் பார்க்கும் காட்சிகளைவிட கேட்கும் சத்தங்களால் பல நேரங்களில் உணர்வுபூர்வமாக வசமாகிறோம். இது நமக்குத் தெரியாமலே நடக்கிறது என்பதுதான் ஒலியின் மூலம் ஏற்படும் விளைவுகளின் சிறப்பு அம்சம்.

*

சினிமாவில் ஒளிதான் முதலில் முக்கியத்துவம் பெற்றது என்றாலும் காலப்போக்கில் அதற்கு இணையாக ஒலியும் பங்கு வகிக்க ஆரம்பித்தது. ஆனால், நம் தமிழ் சினிமா படைப்பாளிகளும், சினிமா ஆர்வலர்களும், ஊடகங்களும் முழுமையாக இன்னமும் சினிமாவில் ஒலி மீது உரிய கவனம் செலுத்தாதது கவலைக்குரியது.

மகேந்திரன், மணிரத்னம், பாலு மகேந்திரா, ஆபாவாணன், முதலான மிகச் சிலர்தான் ஒலிக்கும் ஒளிக்கு இணையான முக்கியத்துவம் கொடுத்தனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ் பிரிவில் தொழில்நுட்பம் வளராத காலக்கட்டத்தில் நம் மக்களை 'ஊமை விழிகள்' மிரட்டியதற்கு சவுண்ட் எஞ்சினீயர் தீபன் சாட்டர்ஜியின் வருகை முக்கியக் காரணம். ஒலிக்கும் தமிழ் சினிமா போதுமான முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது அவரது பங்களிப்புக்குப் பிறகுதான் என்பார்கள் ஒலிக் கலை வல்லுநர்கள்.

ரசூல் பூக்குட்டிக்கு ஆஸ்கர் விருது கிடைத்த நாளில்தான் நம் ஊடக சினிமா விமர்சகர்கள் பலரும் கூகுளில் 'சவுண்ட்' குறித்து தேடத் தொடங்கினர். உள்ளூரில் எடுத்துக்கொண்டால், மக்களுக்கு த்ரில் அனுபவம் தந்த திகில் படங்களில், அந்த வெற்றிக்குக் காரணமாக உழைத்த சவுண்ட் டிசைனர், சவுண்ட் எஃபெக்ட் நிபுணர், சவுண்ட் மிக்சிங் கலை நிபுணர்களைக் குறிப்பிடாமல், அதற்கு அதிகம் சம்பந்தமே இல்லாத இசையமைப்பாளரை மட்டும் புகழ்ந்து தள்ளுவதைப் பார்க்கலாம்.

தேசிய திரைப்பட விருதுகளில் 1978-ல் இருந்து 'ஆடியோகிராஃபி' பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பிரிவில் தமிழுக்கு இதுவரை கிடைத்துள்ள விருதுகளின் எண்ணிக்கை 6. நெஞ்சத்தைக் கிள்ளாதே, அஞ்சலி, தேவர் மகன், மகாநதி, காதலன், கன்னத்தில் முத்தமிட்டால். இந்த விருது ஓர் அளவுகோல் இல்லை என்றாலும், தமிழ் சினிமாவில் ஒலி அமைப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததைச் சொல்லவே இந்த டேட்டாவை மேற்கோள் காட்டுகிறேன்.

கமல்ஹாசன் படங்களில் ஒலி அமைப்புக்கு உரிய இடம் இருப்பதை கவனித்திருக்கிறேன். 'விஸ்வரூபம்' படத்தில் ஒரு காட்சி. நாயகி பூஜா கதாபாத்திரத்துக்கு ஒரு 'வெளி' உறவு. அவரது கண் முன்னாலேயே அந்த நபர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அந்தக் காட்சியில் சுடப்படும் காட்சிதான் காட்டப்படுமே தவிர, நாயகியின் ரியாக்‌ஷன் காட்டப்படாது. என்னதான் நெகட்டிவான நபர் என்றாலும், நம்மோடு பழகிய ஒருவர் கண்முன்னே சுட்டுக் கொல்லப்படும்போது எப்படி அதிர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும்? ஆனால், அந்த அதிர்ச்சியை நேரடியாக காட்ட இயக்குநர் விரும்பவில்லை. இருந்தாலும், அந்த அதிர்வு பதிவு செய்யப்பட வேண்டும். அபாரமாக பதிவு செய்யப்பட்டது. எப்படி? அந்த நபர் சுடப்படும்போது ஏற்படும் சத்தத்துடன், அதற்கு இணையாக நாயகியின் அதிர்ச்சிக் குரலும் கலந்து ஒலிக்கும்!

சமகால தமிழ் சினிமாவில் பத்து விரல்களில் எண்ணத்தக்கவர்களின் படங்களில்தான் ஒலி அமைப்புகள் ஓரளவு உருப்படியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். 'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு, 'விசாரணை'யில் ஒலியை கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார். அதுதான் பார்வையாளர்களுக்கு நெருக்கமான அனுபவத்தை தந்திருக்கிறது.

image


விசாரணை... தமிழ் சினிமாவைத் தலை நிமிரவைக்கும் படைப்புகளில் ஒன்று. நம் சமூகத்தில் சமானிய மனிதர்களுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல் துறை பெரும்பாலும் அச்சுறுத்தலாகவே இருந்து வரும் ஓர் இருண்ட அவலத்தை மிக அழுத்தமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தின் 'கன்டென்ட்'டில் உள்ள சமூக - அரசியல் குறித்து பேச ஆரம்பித்தால் என் லேப்டாப்பின் கீ-போர்டு, என் விரல்கள், உங்கள் கண்கள் வலிக்கும் என்பதால் அதற்குள் நான் இப்போதைக்குச் செல்லவில்லை. நான் பேசப்போவது அந்தப் படத்தின் சத்தங்களும், அவை ஏற்படுத்திய தாக்கங்களும் மட்டுமே.

பொதுவாக, திரையரங்குகளில் தமிழ்ப் படங்கள் பார்க்கும்போது மிகவும் அந்நியமாகவே வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்துவிட்டு வெளியேறியதுதான் அதிகம். ஒரு ரசிகனைத் திரைக்குள் அழைத்துச் செல்லாததற்கு ஒலி அமைப்புகள் கையாளப்படும் உத்திதான் என்று கருதுகிறேன். ஆனால், 'விசாரணை'யில் நான் திரைக்குள் இருந்தேன்.

ஆம், அந்த இரு காவல் நிலையங்களிலும் என் கண்முன்னே தான் எல்லா சம்பவங்களும் நிகழ்ந்தன. இதை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் சொல்லத் தயாராக இருக்கிறேன். என்னை அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட்டுப் போனவர்கள் சவுன்ட் மிக்ஸிங் மற்றும் சவுண்ட் டிசைனிங் கலை நிபுணர்கள், அவர்களுக்கு உரிய 'ஸ்பேஸ்' வழங்கிய வெற்றிமாறன் ஆகியோர்தான்.

குறிப்பாக, அந்த நால்வருக்கும் விழுந்த அடிகள் நேரடியாக நம் மனதில் வலியை உண்டாக்கியது ஒலி அமைப்புதான். அந்த வலியின் வீரியம் மிகையாகிவிடாமல், குறைந்துபோகாமல் இருந்ததற்கும் இதுவே முக்கியக் காரணம். வாக்கி டாக்கி முதல் பூட்ஸ் வரை சத்தங்கள் அனைத்தும் கச்சிதமாக கலந்து தரப்பட்டதுதான் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்காதவர்களைக் கூட காவல் நிலையத்தில் உட்காரவைத்தது.

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அந்த இறுதிக் காட்சிகளில் நானும் அந்த மூவருடன் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தோற்றுப்போனேன். அந்த சகதிகள் சூழ்ந்த கோரைகளுக்கிடையே உயிருக்கு பயந்து நடுங்கினேன். காட்சிகளும் ஒலியும் கச்சிதமாக கையாளப்பட்டதன் விளைவுதான் இது.

காட்சிகளால் காட்டுவதற்குக் கூட லாயக்கு இல்லாத கொடூர வன்முறையின் தாக்கத்தை ரசிகர்களுக்கு கடத்துவதற்கு சத்தங்கள் உறுதுணைபுரியும். இதையும் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறது 'விசாரணை'.

சரி, இதெல்லாம் எனக்கு மட்டும் கிடைத்த அனுபவமா?

இல்லை. 'விசாரணை'யைப் பார்த்த பெரும்பாலானோருக்கு இதுபோன்ற அனுபவம் முழுமையாகக் கிடைத்திருக்கும். நான் வளைச்சி சுத்தி கஷ்டப்பட்டு சொன்னவற்றைதான், வடிவேலுவின் விவரிப்புக்குப் பின் "அண்ணனுக்கு ஒரு மசால் தோசை" என்று அந்த சர்வர் ஆர்டர் செய்யும் பாணியில், "படம் பேஜாரா இருந்துச்சு", "ஒரு மாதிரி ஆயிடுச்சுங்க", "நைட்டு தூக்கம் வரலைங்க", "இதாங்க படம்", "வெர்றி இன்டென்சிவ்", "வெரி எங்கேஜிங்..." இப்படி நச்சுன்னு சொல்கிறார்கள்.

*

நான் விரும்பும் படைப்பாளிகள், கலைஞர்களை தூரத்தில் இருந்து பார்க்கவே விரும்புவேன். அவர்களின் படைப்புகளுடன் மட்டும்தான் நெருக்கம் காட்ட விரும்புவேன். மிக அரிதாகவே ஒரு கலைஞரின் முகத்தை நேரடியாகப் பார்க்க வேண்டும்; அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுவது உண்டு.

'விசாரணை' பார்த்து முடித்தவுடன், இந்தப் படத்துக்கு படப்பிடிப்பிலேயே ஒலிப்பதிவையும் செய்தார்களா? அல்லது எல்லாமே ரி-கிரியேட் செய்யப்பட்டதா? யாரெல்லாம் சவுண்டுக்கு பங்கு வகித்திருக்கிறார்கள் எனத் தேடத் தொடங்கினேன். சவுண்ட் டிசைனர் பிரதீப், சவுண்ட் மிக்சிங் கலை நிபுணர் உதயகுமார் ஆகியோர்தான் அந்த சத்தங்களின் வித்தகர்கள் என்பதை அறிந்தேன். அவர்களிடம் பேச நினைத்தேன். நண்பர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தபோது, உதயகுமாரின் செல்போன் எண் கிடைத்தது. இரவில் அடித்தேன். "ஒரு பத்து நிமிடம் பேசலாமா?" என்று ஆரம்பித்த அந்த உரையாடல் முடிய ஒரு மணி நேரம் ஆனது. சூடான என் தோசை ஆறிப் போனது.

சினிமாவில் ஒலி அமைப்பு குறித்தும், 'விசாரணை'யில் அதன் பங்கு குறித்தும் என்னிடம் உதயகுமார் பகிர்ந்தவற்றில், பகிரத்தக்க தகவல் எனக் கருதியதை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்கிறேன்...

image


* சவுண்ட் மிக்சிங், டிசைனிங், சவுண்ட் எஃபக்ட்ஸ் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு படைப்பைத் தரும் இயக்குநர்கள் இங்கு குறைவு. இப்போதுதான் இதன் மதிப்பை பலரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி அத்தி பூத்தாற்போல் வரும் படைப்புகளுள் ஒன்றுதான் விசாரணை.

* முதலில் விசாரணை படத்தை ஒளிப்பதிவின் வல்லமையைக் காட்டும் படைப்பாகவே இயக்குநர் வெற்றிமாறன் கருதினார். படப்பிடிப்பு முடிந்தவுடன்தான், இந்தப் படத்துக்கு வலு சேர்க்கப்போவது ஒலி அமைப்புதான் என்பதை அவரே சொன்னார். அதுதான் ஒரு சினிமா படைப்பாளியின் ஆளுமைக்குச் சான்று. எங்களுக்கு முழு சுதந்திரமும் போதுமான நேரத்தையும் வழங்கினார். பொதுவாக, எங்களுக்கு யாரும் போதுமான நேரம் ஒதுக்கித் தருவதே இல்லை. அதனால், பல இடர்பாடுகளைச் சந்திக்க நேர்கிறது. ஆடுகளம் படம் தந்த அனுபவத்தால், விசாரணையை அடுத்தகட்ட சினிமாவாக உயர்த்துவதற்கு ஒலி அமைப்பு உறுதுணைபுரியும் என்பதை இயக்குநர் வெற்றிமாறனுக்கு உணர்த்தியது என்று நினைக்கிறேன்.

* நாங்கள் முதலில் திரைப்பட விழாவுக்கான பதிப்பைதான் தயார் செய்தோம். பின்னணி இசை இல்லாமல், ஒலி அமைப்புகளை மட்டுமே பயன்படுத்தி படத்தை முடிக்க வேண்டும். இது, விசாரணை போன்ற படங்களுக்கு சவால் மிகுந்த முடிவு. துணிச்சலாக இறங்கினோம். பின்னணி இசை இல்லாமல் படத்தை முடித்து வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பினோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வரவேற்பு கிடைத்தது.

* பொதுவாக, தென்னிந்திய சினிமா என்றால் ஓவர் சத்தமாக இருக்கும் என்ற கருத்து பாலிவுட், உலக சினிமா படைப்பாளிடம் உண்டு. வெனீஸில் இந்தப் படத்தை திரையிடுவதற்கு முன்பு ட்ரையல் வெர்ஷனுக்காக படத்தைப் பார்த்தார்கள். அப்போது, வட இந்திய சினிமா நிபுணர் ஒருவர், "விசாரணை படம் தமிழா? சரி, மொத்த வால்யூமை பாதியளவாக குறைத்துப் பார்க்கலாம்?" என்று முடிவு செய்து படத்தை ஒளிபரப்பி பார்க்கத் தொடங்கினார். அதன்பின், படம் தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக வால்யூமை உயர்த்தினார். கடைசியில் நாங்கள் வைத்திருந்த வால்யூம் லெவலுக்கு அவரும் வைத்தார். வியப்பில் ஆழ்ந்தார். அதுதான் எங்கள் வெற்றி. அவர்களுக்கு ஏற்றபடி நாங்கள் வால்யூமை குறைத்து அனுப்பினோம். அவர்கள் தரம் என்று நினைப்பதை நாங்கள் செய்து காட்டினோம்.

* பிரியர்தர்ஷன் தொடங்கி அனுராக் காஷ்யப் வரை கவனிக்கத்தக்க படைப்பாளிகள் பலரும் விசாரணையைக் கண்டு வியந்தனர். அவர்கள் பார்த்தது திரைப்பட விழா பதிப்பு. அதில் இசை இல்லை. படத்தைப் பார்த்துவிட்டு, "இதில் இசை இல்லை என்பதை நாங்கள் உணரவே இல்லை. அந்த அளவுக்கு கச்சிதமாக இருந்தது" என்று அவர்கள் சொன்னார்கள். இப்போது தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள வெர்ஷன் என்பது பின்னணி இசையுடன் கூடியது. ஒட்டுமொத்த வால்யூமும் சற்று அதிகரிக்கப்பட்டது. நம் ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்பதால்தான் இப்படிச் செய்தோம்.

* காவல் நிலைய காட்சிகளில் பெரும்பாலானவற்றில் பின்னணி இசை இருக்காததை கவனிக்கலாம். அந்த இறுதிக்காட்சிகளும் அப்படித்தான். கதை நிகழும் இடத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் ஒலி வடிவில் ரி-கிரியேட் செய்தோம். அதை உரிய இடங்களில் ஏற்ற - இறக்கங்களுடன் கையாண்டோம். முடிவில், ரசிகர்களுக்கு இயல்பான சினிமா அனுபவத்தை தர முடிந்தது.

* ஒலி சார்ந்து இயங்கும் கலை நிபுணர்கள் தொழில்நுட்ப ரீதியில் அப்டேட்டாக இருந்தால் மட்டும் போதாது. அன்றாட உலகையும் நிகழ்வுகளையும் காது கொடுத்து கேட்க வேண்டும். 'அழகி' படத்துக்காக குழந்தைகளை டப்பிங் பேச வைத்தார்கள். அவர்களுக்கு லிப் சிங்க் சரியாக அமையவில்லை. ஆனால், சரியாக டயலாக் பேசுகிறார்கள். அவர்களைத் தனியாக பேசவைத்து, பிறகு நான் திரையில் லிப் மூவ்மென்ட்டுக்கு ஏற்றபடி புகுத்தினேன். அதற்கான தொழில்நுட்ப வசதிகள் இப்போது இருக்கிறது. அதெல்லாம் இல்லாத காலக்கட்டத்தில், அஞ்சலி படத்தை இயக்குநர் மணிரத்னம் குழு எப்படி எடுத்திருக்கும் என்று நினைத்துப் பார்த்து அசந்துபோன தருணங்களும் உண்டு.

* 'அஞ்சாதே' படத்தில் திருவிழா காட்சியும், பட நாயகி குளிக்கும் இடத்தில் பிரசன்னா கதாபாத்திரம் செல்லும் காட்சியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த இடத்தில் திருவிழா சத்தம் விட்டு விட்டு கேட்கும். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தவண்ணமும் கேட்கும். அப்படி ஒலியை அமைத்தேன். "அதை அப்படியே பயன்படுத்தலாம்; அந்த காட்சிக்கான டெம்ப்-ஐ கூட்டக்கூடிய பின்னணி இசை எதுவும் வேண்டாம்" என்று இயக்குநர் முடிவெடுத்து செய்து காட்டினார். அதுபோல் எத்தனை இயக்குநர்கள் செய்வார்கள்? நான் திருவிழாவுக்குச் சென்று திரும்பி நடந்தபோது, அப்போது கேட்ட ஒலியின் அளவுதான் என்னை இங்கே கச்சிதமாக ஒலியை அமைக்க உதவியது. எனவே, வெறுமனே நான்கு சுவற்றுக்குள் இருந்து பணிபுரிவதும் சரியாக இருக்காது.

* விசாரணையைப் பார்த்த சாதாரண ரசிகர்களால் ஒலி அமைப்பு குறித்து எல்லாம் ஆழமாகப் பேசத் தெரியாது. ஆனால், வழக்கமான படங்கள் தரும் அனுபவத்தைக் காட்டிலும், இந்தப் படம் தரும் பாதிப்பும் தாக்கமும்தான் அவர்களுக்கு எங்கள் பணி நிறைவு தந்திருக்கிறது என்பதை உணர்த்தும். திரைத்துறையில் படைப்பு சார்ந்து இயங்குபவர்களுக்கு மட்டும்தான் எங்களின் முக்கியத்துவம் தெரியும். ஊடகங்கள், விருது வழங்கும் தனியார் துறையினரைப் பொறுத்தவரையில், நாங்கள் இன்னமும் கவனிக்கப்படாத - பேசப்படாத கடைநிலை சினிமா ஊழியர்கள்!

*

இந்த அத்தியாத்தில் வேறொரு படைப்பைப் பற்றிதான் எழுத தீர்மானித்திருந்தேன். ஆனால், உதயகுமார் உடனான உரையாடல்தான் என்னை விசாரணை பற்றியும், அதில் பரவலாகப் பேசப்படாத ஒலி அமைப்புகளைப் பற்றியும் உடனே எழுதத் தூண்டியது.

விசாரணை படத்தில் கவனித்த வகையிலும், உதயகுமாரிடம் பேசியதன் மூலமும் சில விஷயங்களில் தெளிவு கிடைக்கிறது. இனி, தமிழில் சினிமாவில் கவனிக்கத்தக்க படைப்புகளில் எண்ணிக்கை வெகுவாக உயரும். அவர்கள் தருகின்ற படைப்புகள், சினிமா ஆர்வலர்களை மட்டுமின்றி சாதாரண ரசிகர்களையும் ஈர்க்கும். அந்தப் படங்களில் ஒலி அமைப்புகளுக்கு உரிய இடமும் கிடைக்கும்.

அதேவேளையில், எல்லா விதமான ஊடகங்களும் சினிமா விமர்சனம், சினிமா பார்வை, சினிமா நிகழ்ச்சிகளைத் தரும்போது, நடிப்பில் தொடங்கி எடிட்டிங் உடன் நிறுத்திக்கொள்ளாமல், ஒலி சார்ந்தது மட்டுமின்றி மற்ற அனைத்து உறுதுணை சினிமா கலை - நிபுணர்களின் துறைகளையும் கவனித்து, அதை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், ஆஸ்கர் - தேசிய விருதுகளில் இருப்பது போலவே சவுண்ட் டிசைன், சவுண்ட் மிக்சிங் கலை நிபுணத்துவத்துக்கான அங்கீகாரத்தையும் தனியார் விருதுகள் தங்கள் பட்டியலில் சேர்க்க முன்வர வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் சினிமாவில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, திரைப்படக் கலையில் கவனிக்கப்படாத துறைகள் மீது ஈடுபாடு காட்ட வழிவகுக்கப்படுவது சாத்தியம். இதுபோன்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதால், நம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை தொடர்ந்து அளித்திட முடியும் என்பது உறுதி.

தமிழ் சினிமாவில் இந்த வகை மாற்றத்துக்கான கவன ஈர்ப்புப் படைப்பாகவும் 'விசாரணை'யை முன்வைப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைவு கிடைக்கிறது. உங்களுக்கும் அப்படியே என நம்புகிறேன்.

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு - உத்வேக 'வெள்ளி'த்திரை | 'உஸ்தாத் ஓட்டல்' பகிரும் 'பக்குவ' பிரியாணி!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Add to
Shares
28
Comments
Share This
Add to
Shares
28
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக