பதிப்புகளில்

‘மேப் மை ஷாப்’- சென்னை உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயலி!

Gajalakshmi Mahalingam
26th Jan 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

குண்டூசி தொடங்கி, மளிகை சாமான்கள் வரை, தொலைக்காட்சி பெட்டி முதல் ரெப்ரிஜிரேட்டர்கள் வரை வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் இணையத்தில் வாங்கும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நம்மைச் சுற்றி எத்தனை கடைகள் இருந்தாலும் ஏன் இணையத்தை நாடுகிறார்கள் வாடிக்கையாளர்கள்? நமது தெருக்களில் உள்ள உள்ளூர் கடைகளின் நிலை என்னவாவது? இந்தப் பிரச்னைக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வை கண்டுபிடித்திருக்கிறார்கள் சென்னை மாணவர்கள் சேவியர் ஜெரோ, புலித்தேவன் மற்றும் உதயகுமார். 

தாங்கள் வடிவமைத்து, அறிமுகப்படுத்தியுள்ள ‘மேப் மை ஷாப்’(Map My Shop) செயலி உள்ளூர் சந்தையில் பெரிய மாற்றத்தை எற்படுத்தும் என்று நம்புகின்றனர் இந்த இளைஞர்கள்.

image


ஒரு பக்கம் கல்லூரி படிப்பு, மற்றொரு பக்கம் நலிவடைந்து வரும் சிறு வணிகர்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவி என்ற சிந்தனையோடு செயல்பட்டு வரும் 'மேப் மை ஷாப்' செயலியின் வடிவமைப்பாளர் சேவியர் ஜெரோவை நேர்காணல் கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி.

செயலி உருவான பின்னணி

“எந்த ஒரு கண்டுபிடிப்பிற்குமே ஒரு அடிப்படைக் காரணம் இருக்கும், அதே போன்று என்னுடைய செயலி உருவாக்கத்திற்குக் காரணம் நம் வீடுகளுக்கு அருகில் இருக்கும் பெட்டிக் கடைகள் பொலிவிழந்து வருவதே” என்கிறார் சேவியர் ஜெரோ. 

“சில ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரத்தில் கோலோச்சி வந்த அந்தக் கடைகள் இப்போது முடங்கிக் கிடப்பதற்கான காரணம் என்ன என்பதை நான் உணர்ந்தேன். அண்ணாச்சி எனக்கு முதல்ல சாமான கொடுங்க என்று மளிகைக் கடைகளில் சத்தம் போட்டு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த நிலை மாறி, இப்போது ஒரே கிளிக்கில் வீட்டில் இருந்தபடியே விருப்பப் பொருட்களைத் தேர்வு செய்து, தள்ளுபடிகள், இலவச கூப்பன்கள், இலவச டெலிவரி, என பெரு நிறுவனங்கள் மக்களை சொகுசுபடுத்தி ஆன்லைன் விற்பனைக்கு பழக்கப்படுத்திவிட்டனர்". 

நமது பகுதியில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் பொருட்களை விட வடிவத்தில், வண்ணத்தில், அதைவிடச் சிறப்பான விலையில் இணையத்தில் கொட்டிக்கிடப்பதே இதற்கு முக்கியக் காரணம். பொருட்கள் வைத்திருப்பவர்களுக்கும், வாடிக்கையாளார்களுக்கும் இடையேயான இந்தத் தகவல் இடைவெளியை குறைக்க வாய்ப்பில்லாமல் இல்லை. ஏன் நமது உள்ளூர் கடைகள் இதைச் செய்யவில்லை என்று யோசித்த போது அதற்கான தீர்வாக கிடைத்ததே 'மேப் மை ஷாப்' செயலி என்கிறார் அவர்.

மேப் மை ஷாப் செயலியில் என்ன சிறப்பு? என்று விவரிக்கத் தொடங்கினார் சேவியர்

“இந்த செயலி வாடிக்கையாளர்கைளையும் உள்ளூர் கடைகளையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. நீங்கள் வசிக்கும் பகுதியில் உங்கள் வீட்டிற்கு அருகில் 5 கி.மீ தொலைவிற்குள் உள்ள சிறு வணிக நிறுவனங்களின் விவரங்கள் இதில் கிடைக்கும். அதாவது அருகில் என்னென்ன கடைகள் உள்ளன, அவற்றில் என்ன தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன, எந்தக் கடையில் பொருளின் விலைக் குறைவு போன்ற விவரங்களை இதில் பெற முடியும்.”
imageசெயலியின் சிறப்பம்சங்கள்

அதேப் போன்று இதன் மற்றொரு சிறப்பு, நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்து விட்டு பிக் அப் மற்றும் ட்ராப் தேர்வுகளை செய்ய முடியும். அதாவது கடையில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வரிசையில் நிற்காமல் சென்ற உடன் பொருட்களை பெற்று வீடு வந்து சேர்ந்து விடலாம் என்று விளக்கம் அளிக்கிறார் சேவியர்.

பணி மாறுதல் காரணமாக புதிய பகுதிக்கு செல்வோருக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதும் சேவியரின் கருத்து. அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரத்தில் புதிய வீட்டில் அக்கம் பக்கத்தினரோடு பேசி அருகில் உள்ள கடைப் பற்றிய விவரங்களை கேட்டறிய வேண்டிய சங்கடத்தையும் இது போக்கிவிடும் என்கிறார் அவர்.

நிதி பற்றாக்குறைக் காரணமாக தற்போது ஆண்டிராய்டு போன்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மேப் மை ஷாப் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் சேவியர், இந்த செயலியில் கூடுதலாக பல அம்சங்கள் சேர்க்கப்பட்ட பிறகு முதலீட்டாளர்களை நாடும் திட்டம் உள்ளதாக தெரிவிக்கிறார். அதன் பின்னர் இந்த செயலியை விண்டோஸ் மற்றும் ஐஓஎஸ் போன்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார் இந்த பொறியியல் பட்டதாரி.

செயலியை வடிவமைத்த குழு

“நான் சென்னைப் பையன். பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே கொளத்தூர் பகுதியில் தான். பள்ளி காலத்தில் வகுப்பைத் தவிர வேறு எதிலும் தலை காட்டவே மாட்டேன், அதாவது விளையாட்டு, பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் என எதிலுமே பங்கேற்க மாட்டேன். கல்லூரியில் ஈசிஈ பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வருகிறேன். இன்னும் 6 மாத கால படிப்பு இருக்கிறது" என்கிறார் சேவியர்.

image


புலித்தேவனும், உதயகுமாரும் என்னுடைய வகுப்புத் தோழர்கள். நாங்கள் மூன்று பேரும் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் விதம் மற்றும் உலக மாற்றத்திற்கு ஏற்ப தீர்வு தேவைப்படும் சமுதாய பிரச்னைகள் குறித்து அடிக்கடி கலந்து பேசுவோம். அதுபோன்ற உரையாடலின் போது உதித்தது தான் இந்த செயலி என்று பெருமையோடு சொல்கிறார். என் நண்பர்களிடம் செயலி எண்ணம் பற்றி தெரிவித்த போது அவர்களும் என்னுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்தனர் என்றார் உற்சாகமாக.

கல்லூரிப் படிப்பிற்காக செய்யும் திட்டமாக மட்டும் இல்லாமல், மக்களுக்கு பயன்படும் திட்டமாக இந்த செயலி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். உள்ளூர் கடைகளுக்கு இணையம் வழியே டிஜிட்டல் அந்தஸ்த்தை பெற்றுத் தந்து சிறு வணிகர்களும் எதிர்காலத்தில் பிரகாசிப்பதற்கு இந்த செயலி வாய்ப்பளிக்கும் என்பதை உணர்ந்து எங்களின் பெற்றோரும் இதற்கு இசைவு தெரிவித்ததோடு, செயலி உருவாக்கத்திற்கு தேவையான முதலீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தையும் கொடுத்து உதவினர் என்கின்றனர் இந்த நண்பர்கள்.

“ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கும் போதே பெரிய முதலீடு, அதிக லாபம் என்ற எண்ணம் இல்லாமல், உங்களுக்குத் தோன்றும் எண்ணத்திற்கு வியாபார விஸ்திகரிப்பும், வளர்ச்சியும் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். சில சமயங்களில் உங்களின் ஸ்டார்ட்அப் எண்ணம் சிறந்ததாக இருந்தாலும் அவை வளர்ச்சி காணாமல் போய் விடும் வாய்ப்பு உள்ளது அதனால் அவற்றை முதலிலேயே கண்டறிந்து தொழிலை தொடங்க வேண்டும்,"

என்று தன் அனுபவத்தில் கற்றதை பகிர்ந்து கொள்கிறார் சேவியர்.

எங்களின் மேப் மை ஷாப் செயலி வளர்ச்சி நிலையிலே உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் அவர். செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே 200 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், மேலும் தொடர்கையில் நாங்கள் தற்போது கொளத்தூர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் மட்டுமே எங்களின் செயலியை அறிமுகம் செய்துள்ளோம். எதிர்காலத்தில் சென்னை முழுமைக்கும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்த மாணவர்-நண்பர்கள் குழு.சவால்கள்

கடைகளைப் பற்றிய விவரங்களைத் திரட்டுவதில் பெரும் சிரமம் இருக்கிறது. ஏனெனில் பெரிய நிறுவனங்களைப் போல பெட்டிக் கடைகள் மற்றும் சிறு வணிகர்கள் ஸ்டாக், விலை விவரங்களை துல்லியமாக வைத்திருப்பதில்லை. அவற்றை சேகரித்து வரிசைப் படுத்துவதில் இருந்தே தொடங்குகிறது பிரச்சனை என்கிறார் சேவியர். எனினும் எங்களின் செயலியில் இணைய, பல வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர், அவர்கள் தங்களுக்கு தெரிந்த கடைகளையும் எங்களுக்கு பரிந்துரைப்பதாகக் கூறுகிறார். 

'இது வரை 150 ஸ்டோர்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் செயலியில் இணைந்துள்ளனர், தற்போது மளிகைக் கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளை மையப்படுத்தியே செயல்பட்டு வரும் மேப் மை ஷாப்பில் விரைவில் ஐஸ்கிரீம் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட விவரங்களும் கிடைக்கும். மேலும் இரண்டு வாரத்தில் எலக்ட்ரானிக் கடைகள் பற்றிய விவரங்களுடன் மேப் மை ஷாப்பின் 3வது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக' உற்சாகத்தோடு கூறுகிறார் சேவியர் ஜெரோ.

செயலியை உருவாக்குவதற்கான கோடுகளை code எழுதும் போது வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பதை இந்தக் குழுவால் கற்றுக் கொள்ள முடிந்துள்ளது. செயலியின் செயல்பாடுகளை மேப் மை ஷாப்பின் நிறுவனர் சேவியரும், கற்பனைத் திறன் மற்றும் வடிவமைப்பை இணை நிறுவனர் புலித்தேவனும், மார்க்கெட்டிங் பிரிவை மற்றொரு இணைநிறுவனர் உதயகுமாரும் கவனித்துக் கொள்கின்றனர். எனினும் எங்களிடம் பாகுபாடு இல்லை அனைத்து பணிகளையும் நாங்கள் மூவரும் பகிர்ந்தே பணியாற்றுகிறோம் என்கின்றனர் அவர்கள். ASPIRE நிறுவனத்தின் நிறுவனர் சுவாமிநாதன், இவர்களின் செயலி வடிவமைப்பிற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

படிப்பையும், செயலியையும் சம அளவில் கொண்டு பயணிப்பது மிகவும் கடினம் என்று கூறுகிறார் சேவியர். அதற்காக படிப்பை பாதியில் விட்டுவிட்டு செயலி பக்கம் செல்வது முட்டாள்தனம் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் கற்றல் சமயத்தில் கற்பது மிக அவசியம் என்கிறார் அவர், வாழ்வில் கிடைக்கும் வெற்றி தோல்விகளைக் கடந்து நாம் கற்கும் கல்வி நம்மோடு இறுதி வரை பயணிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அவர்கள். எனவே எஞ்சி இருக்கும் 6 மாத கால படிப்பை முடித்துவிட்டு முழுவீச்சில் செயல்படக் காத்திருக்கின்றனர் இந்த இளம் சிங்கங்கள்.

நமது பிறப்பு சம்பவமாக இருந்தாலும் நமது இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தோடு, இளமை வேகம் மற்றும் சுறுசுறுப்புடன் ஸ்டார்ட் அப் களத்தில் ஒரு ரவுண்ட் வர காத்திருக்கின்றனர் இந்த இளைஞர்கள். இவர்களின் வெற்றிப் பயணம் முற்றுப் புள்ளிகள் இல்லாமல் தொடர வாழ்த்துக்கள்.

இணையதள முகவரி: MapMyShop, Facebook, APP

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற மாணவர்கள் தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்:

சென்னை மாணவன் அர்ஜுன் உருவாக்கியுள்ள பள்ளி வாகன செயலி!

மலிவு விலை பிரெய்லி பிரின்டர்கள்: 14 வயதில் அசத்தல் ஸ்டார்ட்-அப்!

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக