பதிப்புகளில்

ஓரிகாமியில் கலக்கும் தனி ஒருவன்: 10 ஆண்டுகள், 400 பள்ளிகள், 2000 மாணவர்கள்!

ஓரிகாமி எனும் காகித மடிப்புக் கலையை தமிழக பள்ளி மாணவர்களிடம் பரவலாக்கும் தியாக சேகர்.

கீட்சவன்
12th Feb 2018
Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share

தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காகித மடிப்புக் கலையைக் கொண்டு சேர்த்திருக்கிறார் ஓரிகாமிக் கலைஞர் தியாக சேகர் (36). இரட்டை இலக்க எண்ணிக்கையில் அடிப்படையான ஓரிகாமி மாடல்களைத் தெரிந்தவர்களே இங்கு குறைவு என்றச் சூழலில், தியாக சேகர் 500-க்கும் மேற்பட்ட மாடல்களில் கலக்குவதுடன், மாணவர்களுக்கு எளிமையான வழிகளில் கற்றுத் தருவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

image


நம் கண்முன்னே இரண்டு பாதைகள். ஒன்று ஏற்கெனவே பலரால் புழங்கப்பட்டது. எந்த இடையூறுகளும் இல்லாமல் அதில் பயணிக்கலாம். இன்னொன்று, யாருமே புழங்காத பாதை. அதில் பயணித்தால் போய்ச் சேருமிடம் எப்படிப்பட்டது என்று எவருக்குமே தெரியாது. நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்..?

ராபர்ட் ஃப்ராஸ்டின் 'தி ரோடு நாட் டேக்கன்' கவிதை விதைத்த சிந்தனைதான், ஓரிகாமி கலைஞர் தியாக சேகர் தன் கலைப் பயணத்தை விவரிக்கும்போது மனதில் விரிந்தது. அவரது தெரிவு தனித்துவமானது. இதோ அவர் கடந்து வந்த பாதையும், அவர் மேற்கொள்ளப் போகும் பயணமும்...

"கும்பகோணம் - கபிஸ்தலம் அருகேயுள்ள நக்கம்பாடி எனும் சிறு கிராமம் சொந்த ஊர். பாபநாசம் செயின்ட் பாஸ்டீன் பள்ளியில் மூன்றாவது வரை படித்தேன். அங்கே பேப்பர் கிராஃப்ட் கற்றுத்தர ஒருவர் ஆண்டுக்கு இருமுறை வருவார். அந்தக் கலை மீது இயல்பாக இருந்த ஈர்ப்பால் அவர் அருகிலேயே நின்றுகொண்டிருப்பேன். என் ஆர்வத்தைக் கண்டு கலர் பேப்பர்களைக் கொடுத்து என்னையே நறுக்கச் சொல்வார். கிராஃப்ட் ஒர்க்குகள் முடிந்தபிறகு எஞ்சிய காகிதத் துண்டுகளைச் சேகரித்துக்கொள்வேன். ஒருமுறை அவர் புறப்படும்போது பேப்பர் கிராஃப்ட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றைத் தந்துவிட்டுச் சென்றார். 

அன்று முதல் பள்ளிக் காலத்தில் என் கையில் எந்த பேப்பர் சிக்கினாலும் பூக்கள், கப்பல், ராக்கெட், பறவை என ஏதாவது செய்வேன். பள்ளி விழாக்களில் பேப்பர் டெக்கரேஷனில் என் கைவண்ணம்தான் மிகுதியாக இருக்கும். அந்நாட்களில் 'அறிவொளி இயக்கம்' மூலமும் காகித மடிப்புக் கலை குறித்த அறிமுகம் கிடைத்தது. இவைதான் என் ஓரிகாமி கலைப் பயணத்துக்கான துவக்கப் புள்ளி என்று அப்போது எனக்குத் தெரியாது.

image


கல்லூரிக் காலம் குழப்பமான மனநிலை நிறைந்தது. திருவையாறில் சோஷியாலஜி முடித்தேன். பெரம்பலூர் ரோவர் கல்லுரியில் எம்.எஸ்.டபிள்யூ சேர்ந்தேன். இரண்டாம் ஆண்டில் களப்பணிக்குச் செல்வோம். அப்போது, சமூக செயற்பாட்டாளர் ஆன்டோவின் அறிமுகம் கிடைத்தது. மலை கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கான அவரது செயல்பாடுகள் மலைக்கவைத்தது. குழந்தைகளுக்காக இயங்கவேண்டும் என்ற உந்துதல் அங்கிருந்துதான் முளைக்கத் தொடங்கியது. அவரால்தான் உலகத் திரைப்படங்களின் அறிமுகமும் கிடைத்தது. 

எனினும், ஏனைய என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகளை நேரடியாகப் பார்த்தபோது, படிப்புக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் சோர்வைத் தந்தது. படிப்பை நிறுத்திவிட்டேன். வீட்டில் செலவு செய்து படிக்க வைக்கிறார்கள்; ஆனால், நானோ எதிலும் பிடிப்பின்றி என் இலக்கற்ற தேடலுக்காகத் திரிகிறேன். இந்தக் குற்ற உணர்வால் சிலகாலம் அண்ணனின் ஓட்டலில் பணியாற்றினேன். என் தேடலில் முடக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியது. மீண்டும் வேறு திசை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தேன்.

நண்பர் ஒருவர் மூலம் திருவண்ணாமலையில் 'கூக்கூ' அமைப்பின் சிவராஜ் தொடர்பு கிடைத்தது. அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அவருடன் மூன்று ஆண்டு காலம் செயல்பட்டேன். குழந்தைகள் சார்ந்தும், சூழலியல் சார்ந்தும் இயங்கத் தொடங்கினேன்.

 ஒருமுறை என்.எஸ்.எஸ். முகாமில் காத்தவராயன் எனும் ஆசிரியர் பேப்பர் கிராஃப்ட் கற்றுத் தந்தார். அந்தக் கலைக்கு 'ஓரிகாமி' என்று பெயர் என்பதே அன்றுதான் தெரியும். அந்த அறிமுகம்தான் ஓரிகாமியில் அழுத்தமாகக் கால்பதிக்க துணைபுரிந்தது. இதனிடையே, 'குக்கூ' சிவராஜின் ஆலோசனைப்படி, நம்மாழ்வாரிடம் வானகத்தில் சேர்ந்தேன். அவருடன் பயணித்தபோது முழுமையான தெளிவு கிடைத்தது.

image


"நீ எது செய்தாலும் அது உலகத்துக்கு ஏதோ ஒரு வகையில் தேவைப்படும்தான். எனவே, உனக்குப் பிடித்ததை நீ தேர்ந்தெடுத்துச் செய்!"
"எந்த வேலையைச் செய்தாலும் அதில் மகிழ்ச்சியும் துன்பமும் கலந்தே கிடைக்கும். நீ செய்வது உனக்குப் பிடித்த வேலையாக இருந்துவிட்டால் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிப்பாய்; துன்பம் கண்ணுக்குத் தெரியாத தூசாகிவிடும்."

என்னிடம் நம்மாழ்வார் சொன்ன இந்த வாக்கியங்கள்தான் என் தேடல் எது என்பதைக் கண்டடையவைத்தது. குழந்தைகளை நோக்கியே பயணிப்பது என்று தீர்மானித்தேன். அதற்கு, எத்தனையோ வழிகள் இருந்தன. எவரும் முழுமையான ஈடுபாடுகொள்ளாதிருந்த ஓரிகாமியை நம் குழந்தைகளிடம் கொண்டுசெல்வதுதான் என் தெரிவாக இருந்தது. இதையடுத்து, சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் முடித்த இளம் கலைஞர்களுடனும், குழந்தைகளுடன் இயங்கும் கலைஞர்களுடன் பழகத் தொடங்கினேன். புத்தகங்கள், இணையம், முகாம்கள் வாயிலாக ஓரிகாமியைத் தீவிரமாகக் கற்றுக்கொண்டேன். 

குழந்தைகளுக்கு ஒரு கலையை கற்றுத் தரும் வழிமுறைகளை நண்பர்கள் மூலம் நேரடியாக கற்றுக்கொண்டேன். உலகின் பல நாடுகளிலும் காணப்படும் 500 ஓரிகாமி மாடல்களைக் கற்றுக்கொண்டேன். தமிழகம் முழுவதும் பயணித்து மாணவர்களுக்கு ஓரிகாமி சொல்லித்தர ஆரம்பித்தேன்" என்றார் தியாக சேகர்.

சடாகோ சாசாகி நினைவு தினத்தையொட்டி, கடந்த அக்டோபரில் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் குழந்தைகள் ஓரிகாமியில் 1000 கொக்குகள் செய்து தோரணம் கட்டி கவனம் ஈர்த்தனர். ஒரு பள்ளியில் அனைத்து மாணவர்களும் இணைந்து 1000 ஓரிகாமி கொக்குகளை உருவாக்கியது தமிழகத்திலேயே அதுதான் முதல் நிகழ்வு. கவனம் ஈர்த்த அந்த நிகழ்வின் பின்னணியில் இருந்தவர் தியாக சேகர். தமிழில் வெளிவந்துள்ள முதல் காகித மடிப்புக் கலை புத்தகம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இவரது 'கொக்குகளுக்காகவே வானம்.'

தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு காகித மடிப்புக் கலையைக் கொண்டுசெல்லும் அனுபவத்தைப் பகிர்ந்தவர், "பயிற்சி முகாம்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 400 பள்ளிகளில் சுமார் 1,500 மாணவர்களுக்கு ஓரிகாமியைக் கொண்டு சேர்த்திருக்கிறேன். இதில் பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். சில தனியார் பள்ளிகளில் மாதம்தோறும் ஓரிகாமி வகுப்புகள் எடுக்கிறேன்.

ஓரிகாமி என்பது குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுச் செயல்பாடு. அதேநேரத்தில், கல்வி சார்ந்த பலனும் தரக்கூடியது. உதாரணமாக, ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து கொக்கு மடிக்கும்போது கவனித்தல் என்ற செயல்பாடும் படைப்பாற்றலும் மேம்படும். அடிப்படை கணிதத்தைக் கற்றுக்கொள்ள ஓரிகாமியும் உறுதுணைபுரியும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மகிழ்ச்சி, கல்வி, உளவியல், புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த பல்வேறு பலன்களை உள்ளடக்கியதுதான் ஓரிகாமி.
image


எனக்குத் தனிப்பட்ட முறையில் ஓரிகாமி ஈர்த்ததற்கு மிக முக்கியமான காரணம், இதிலுள்ள எளிமைத்தன்மை. ஓரிகாமிக்கான மீடியம் என்பது மிக எளிதானது. வேஸ்ட் பேப்பர்கூட போதும், இந்தக் கலையில் சிறந்துவிளங்க. ஏழைக் குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொண்டு, தங்களுக்கு கிடைக்கக் கூடிய பேப்பர்களை வைத்தே ஓரிகாமியில் அசத்த முடியும்" என்றார்.

இக்கலை மூலம் வருவாய்க்கு வாய்ப்பு உண்டா? என்றதற்கு, 

"ஆரம்பத்தில் ஆறு ஆண்டுகளாக போதுமான வருவாய் இல்லை. ஓரிகாமி என்ற கலை குறித்து புரிதலை ஏற்படுத்துவே பெரும் சவலாக இருந்தது. இந்தக் கலையின் மீதான அவசியமும் ஆர்வமும் கூடிய பிறகுதான் இப்போது நான்கு ஆண்டு காலமாக ஓரளவு வருவாய் ஈட்ட முடிகிறது.” 

புதிதாக வரக் கூடிய ஒருவரால் ஓரிகாமியை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருத்தல் சிரமம்தான். எனவே, முதலில் தேவையை உருவாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்காக, ஓரிகாமிக் கலைஞர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறேன். குறிப்பாக, ஆர்வமிக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இக்கலையை தீவிரமாகக் கற்றுத் தருகிறேன். இதன்மூலம் இந்தக் கலையை பரவலாக்க முடியும் என்று நம்புகிறேன்" என்றார்.

சரி, அடுத்து?

"ஓரிகாமியில் புதிய மாடல்களை உருவாக்குவதற்கு கணிதம் - வடிவியலின் அடிப்படையை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். நம் மண் சார்ந்த தனித்துவமான ஓரிகாமி மாடல்களை உருவாக்க வேண்டும். இன்னொரு பக்கம், தமிழகத்தில் ஓரிகாமிக் கலையைப் பிரபலப்படுத்தும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். தனி ஒருவனால் இது சாத்தியம் இல்லை. எனவே, ஓரிகாமி கலைஞர்கள் பலரை உருவாக்க வேண்டியதும் அவசியம்," என்றார் காகித மடிப்புக் கலையில் தனி ஒருவனாக வலம் வரும் தியாக சேகர்.

ஓரிகாமி கலைஞர் - பயிற்சியாளர் தியாக சேகரை தொடர்புகொள்ள 96770 78360

Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக