இணையத்தை கலக்கும் சமூக ஊடக செயலி ’வெரோ’

cyber simman
4th Mar 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

ஆங்கிலத்தில் மோஸ்ட் ஹாப்பனிங் என்று சொல்வார்களே, இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கும் சமூக ஊடக செயலியான வெரோவை (Vero ) தான் இதற்கான உதாரணமாக சொல்ல வேண்டும். அண்மை காலம் வரை யாரும் அறியாத செயலியாக இருந்த வெரோ, கடந்த ஒரு வார காலத்தில் பல லட்சம் பயானாளிகளால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முன்னிலை பெற்றிருப்பதோடு, சமூக ஊடக பரப்பில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது. இன்ஸ்டாகிராமுக்கு சவால் விடும் செயலி, அடுத்த இன்ஸ்டாகிராம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வெரோ, தனது திடீர் எழுச்சியால் இணைய உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

image


இன்ஸ்டாகிராம் பயனாளிகள் கூட்டம், கூட்டமாக வெரோவுக்கு மாறிக்கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், வெரோவில் இருந்து வெளியேறுவது எப்படி என பலரும் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வெரோவின் எழுச்சியும், வீழ்ச்சியும் என்ற தலைப்பிலும் கூட இந்த நிகழ்வு அலசி ஆராயப்படுகிறது. வெரோவுக்கு மாறியாச்சா என பலரும் கேட்ட நிலை மாறி, வெரோவில் இருந்து வெளியேறுவது பற்றி பேசப்படுகிறது. ஆக, வெரோவைச்சுற்றி எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கும் வெரோ செயலி பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். இன்ஸ்டாகிராம் போல, வாட்ஸ் அப் போல வெரோவும் ஒரு சமூக ஊடக செயலி. இன்ஸ்டாகிராம் போலவே இதிலும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். அந்த பகிர்வு மூலம் ஃபாலோயர்களை தேடலாம், நட்பு வளர்க்கலாம். இவைத்தவிர வெரோவுக்கு என்று தனித்தன்மையாக விளங்கக் கூடிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன.

வெரோவில் புகைப்படங்களை பகிர்வதோடு, அதனுடன் இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம். இணைய முகவரிகள், தொலைக்காட்சி கோப்புகள், ஒலி கோப்புகள், புத்தகங்கள், இசை என பலவற்றையும் இப்படி பகிர்ந்து கொள்ளலாம். அதோடு, வெரோவில் வெறும் ஃபாலோயர்கள் மட்டும் கிடையாது. அவர்களை நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள், அறிமுகமானவர்கள் மற்றும் பின் தொடர்பவர்கள் என நான்கு விதமாக பிரிக்கலாம். நட்பு கோரிக்கையை ஏற்கும் போதே, இப்படி வகைப்படுத்த வேண்டும். ஆனால், இந்த ரகம் பிரித்தல் நண்பர்களுக்கு தெரியாது. ஒட்டுமொத்தமாக எல்லோரையும் ஃபாலோயர்களாக கருத வேண்டுமா என்ன? பயனாளிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்திக்கொள்ளலாம் என்கிறது வெரோ.

இந்த அம்சங்களை முன்வைத்து, வெரோ தன்னை உண்மையான சமூக ஊடக செயலி என்று வர்ணித்துக்கொள்கிறது. (இத்தாலி மொழியில் வெரோ என்றால் உண்மை என்று பொருளாம்). ஆனால், சமூக ஊடக பரப்பில் வெற்றி பெற இந்த வர்ணனை மட்டும் போதுமா? இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராம் போன்ற நிலைப்பெற்றுவிட்ட செயலியை அசைத்து பார்க்க முடியுமா என்ன?

அதனால் தான் 2015-ம் ஆண்டிலேயே அறிமுகமாகிவிட்டாலும் வெரோ செயலி இத்தனை ஆண்டுகளாக பெரிய அளவில் கவனத்தை ஈர்க்க முடியாமல் முடிங்கி கிடந்தது. ஆனால் திடிரென பார்த்தால்,வெரோ செயலி இணைய உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளில் மொத்தமே ஒன்றரை லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி, கடந்த ஒரு வார காலத்தில் 30 லட்சம் பதிவிறக்கத்தை கடந்திருக்கிறது.

இந்த திடீர் ஆதரவிற்கான காரணம், புரியாத புதிராக இருந்தாலும் இன்ஸ்டாகிராம் சேவை மீதான பயனாளிகளின் அதிருப்தி முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. ஃபேஸ்புக்கால் கையகப்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம், அண்மைக்காலமாக அல்காரிதம் மயமாகி இருக்கிறது. உறுப்பினர்கள் டைம்லைனில் புகைப்படங்கள் அவை வெளியான கால வரிசையில் தோன்றாமல், கண்ணுக்குத்தெரியாத அல்கோரிதம் தீர்மானிக்கும் விதத்தில் அமைகிறது. இதனால் எந்த புகைப்படத்தை யார் பார்க்க முடியும், எத்தனை பேர் பார்க்க முடியும் என்பதெல்லாமும் அல்கோரிதம் கைவரிசையாகவே அமைந்துவிடுகிறது.

இந்த ஆல்காரிதம் விளையாட்டு இன்ஸ்டாகிராம் உறுப்பினர்கள் பலரை ஆவேசம் கொள்ள வைத்துள்ளது. பலர் தங்கள் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை இழக்க நேர்வதாகவும் புலம்பி வருகின்றனர். எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் வசம் ஒப்படைத்துவிட்டு, அதன் விளம்பர நோக்கத்திற்கு கட்டுப்பட்டு தங்கள் உரிமைகளை இழந்து தவிக்க வேண்டுமா என்றும் பலர் அதிருப்தி கொண்டுள்ளனர். ஏற்கனவே இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் மீதும் இத்தகைய அதிருப்தி கடுமையாக இருக்கிறது.

இந்த பின்னணியில் தான், இன்ஸ்டாகிராமுக்கு மாற்று செயலி எனும் வகையில் கவனத்தை ஈர்த்துள்ளது. வெரோவின் மாறுபட்ட அம்சங்களுடன், அது விளம்பரங்களை இடம் பெறச்செய்வதில்லை மற்றும் அல்கோரிதம் மூலம் குறுக்கிடுவதில்லை என உறுதி அளிப்பது இன்ஸ்டாகிராம் அதிருப்தியாளர்கள் பலரை கவர்ந்திழுத்துள்ளது. இந்த எண்ணத்துடன் வெரோ பக்கம் சாய்ந்தவர்களில் சிலர், இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இது பற்றி தகவல் தெரிவித்து வெரோ செயலி பற்றி குறிப்பிட்டிருந்தை அறிய முடிகிறது.

இவற்றின் விளைவாக, வேரோவில் இணைவது எப்படி என பேச வைத்து பிரபலமாக்கியது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமுடனான ஒப்பீடு, மற்றும் அல்கோரிதம், விளம்பரம் இல்லாத தன்மை ஆகிய அம்சங்கள் அதை மேலும் பிரபலமாக்கியது. புதிய இன்ஸ்டாகிராம் என்றும் சொல்ல வைத்திருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் வெரோவின் இந்த திடீர் புகழ் நிலைத்து நிற்கக் கூடியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஃபேஸ்புக்கிற்கு மாற்று, டிவிட்டருக்கு மாற்று என்றெல்லாம் கூறப்பட்ட பல செயலிகள் ஆரம்ப பரபரப்பிற்கு பின் காணாமல் போயிருக்கின்றன. எல்லோ, பீச், சீக்ரெட், மஸ்தூதன் என பல செயலிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். வேரோவும் இந்த வரிசையில் சேருமா அல்லது இன்ஸ்டாகிராமுக்கு சவால் விடும் அளவுக்கு நிலை பெறுமா? என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.

image


இதனிடையே, வெரோ வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை என்று அறிந்திருந்தாலும் கூட, அதில் உறுப்பினராகி விடுவோம் என்ற எண்ணத்திலும் பலர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை வெரோ அடுத்த பெரிய சமூக ஊடக செயலியாக உருவெடுத்துவிட்டால் அதில் நமக்கான இடம் இருக்கட்டும் எனும் எண்ணமே இதற்கு முக்கிய காரணமாகிறது. கிட்டத்தட்ட இணையத்தில் துண்டு போட்டு இடம் பிடித்து வைப்பதற்கு சமமாக இதை கருதலாம்.

இந்த பரபரப்பும் விவாதமும் ஒரு பக்கம் அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில், வெரோ சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டது. அதற்கு முதல் காரணம், திடிர் ஆதரவால் அதன் சேவை முடங்கி போனது தான். இதனால் புதிய உறுப்பினர்கள் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி அதிருப்தி அடைந்தனர். வெரோ சேவையின் தரம் பற்றிய விமர்சனமாக இது மாறிய நிலையில், அதன் நிறுவனர் பின்னணி தொடர்பான செய்திகள் வெளியாகத்துவங்கியது மேலும் அதிருப்தியை உண்டாக்கியது.

வெரோ நிறுவனரான அய்மான் ஹரிரி லெபனான் முன்னாள் பிரதமர் ரபிக் ஹரிரியின் மகன் ஆவார். அய்மான் ரஷ்ய மென்பொருளாளர்களுடன் இணைந்து இந்த செயலியை உருவாக்கியதும், அவரது முந்தைய நிறுவனம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தவிக்க விட்டதும் தெரியவர, வெரோவுக்கு மாறியவர்களில் சிலர், வேரோவில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தனர். ஆனால் வெரோவில் இருந்து வெளியேறுவதும் அத்தனை சுலபம் இல்லை என்று தெரியவரவே, அவர்கள் மேலும் அதிருப்தி அடைந்தனர்.

ஆம், வேரோ செயலியில் இருந்து வெளியேற விரும்பினால் வெறும்னே டெலிட் செய்துவிட்டு வந்துவிட முடியாது. அதற்கான கோரிக்கையை சமர்பித்துவிட்டு காத்திருக்க வேண்டும். நினைத்தவுடன் வெளியேற வழியில்லாதது எந்த வகை சுதந்திரம் எனும் கேள்வி வெரோ மீதான மற்றொரு விமர்சனமாக உருவெடுத்துள்ளது.

இந்த கேள்விகளையும், சவால்களையும் வெரோ எப்படி சமாளிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றாலும், சமூக ஊடக செயலிகளின் ஆதிக்கம் குறித்து இணையவாசிகள் பொறுமையிழக்க துவங்கியிருக்கின்றனர் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags