பதிப்புகளில்

உத்வேக 'வெள்ளி'த்திரை: எளிதாக கடந்திடக் கூடாத 'காதலும் கடந்து போகும்'

17th Mar 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

பரபரப்பான சாலையில் முன்னங்காலில் முட்டிப்போட்டு, இடது கையை பின்னால் வைத்துக்கொண்டு, வலது கையில் அழகான ரோஜா பூவை நீட்டி "ஐ லவ் யூ...." என்று ஓர் இளம்பெண்ணிடம் ஓர் இளைஞன் ரொமான்டிக்காக உரக்கச் சொன்னதைப் பார்த்திருக்கிறீர்களா?

வீட்டு வாசலில் கணவனுக்கு முத்தமிட்டு அனுப்பும் மனைவியையோ? அல்லது மனைவியை அவரது அலுவலக வாசலில் விட்டுவிட்டு முத்தமிட்டுப் புறப்படும் கணவரைப் பார்த்திருக்கிறீர்களா?

இப்படி காதலும் காதல் நிமித்தமும் சார்ந்த ஆயிரெத்தெட்டு கேள்விகள் அடுக்கடுக்காக இருக்கின்றன. இவற்றின் பெரும்பாலான கேள்விகளுக்கும் நம்மிடம் நமக்குக் கிடைக்கக் கூடிய பதில்... "இல்லை".

இதுதான் நம் சமூகம். காமத்துக்கு இணையாக காதலும் இங்கே பொத்திப் பொத்தி வைக்கப்படுகிறது. எல்லாமே வீட்டுக்குள்தான். கொஞ்சம் உளவியல் ரீதியிலோ அல்லது அந்தரங்க ஆய்வாகவோ அணுகினால், 'வீட்டுக்குள் காமத்துக்கு மட்டுமே இடம்; காதலுக்கு உரிய இடம் இல்லை' என்ற முடிவுகளை அறியவும் வாய்ப்பு உண்டு.

தமிழ் சினிமாவில், ஏதோ ஓராண்டில் வெளியானவற்றில் வசூலைக் குவித்த 10 திரைப்படங்களை வெளிநாட்டு ரசிகர் ஒருவர் பார்க்க நேர்ந்தால், நம் தமிழ் சமூகத்தை அவர் எப்படிப் பார்ப்பார்?

'வாவ்... உலகிலேயே இப்படி ஒரு ரொமான்டிக்கான தேசம் ஏதுமில்லை!'

ஆனால், நம் சூழல் அப்படியா இருக்கிறது?

image


காதலும் கடந்து போகும்... "டைட்டில்ல மட்டும்தாண்டா இருக்கு... படத்துல லவ்வையே காணோம்" என்று சொல்லப்படுவதற்கு காரணம், நம் சினிமா அன்றாடம் இயற்றப்படும் காதல் இலக்கணமும், லவ் ஃபார்முலாக்களும் அப்படி. ஆனால், நம் சமூகத்தில் அங்கிங்கெனதாபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருக்கும் காதல் உணர்வை அப்பட்டமாகச் சொன்ன படம்தான் 'காதலும் கடந்து போகும்' என்று அழுத்தமாகச் சொல்லத் தயங்க மாட்டேன்.

நம்மில் பெரும்பாலானோரும் காதல் உணர்வுகளை உள்ளேயே ஆழமாகப் புதைத்து வைத்துவிட்டு, அது இருக்கும் இடம் தெரியாத அளவுக்குதான் அந்த உணர்வை வெளிப்படுத்தி வருகிறோம். உண்மையில், 'காதல் உணர்வை நாம் வெளிப்படுத்துவதே இல்லை' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதைத்தான் 'காதலும் கடந்து போகும்' கதிரும் யாழினியும் செய்கிறார்கள்.

சென்னையில் வேலை பறிபோக, புதிய வேலை தேடும் ஐ.டி. துறையைச் சேர்ந்த வெளியூர் பெண் யாழினி. அலட்சிய அழகும், இயல்பு தைரியமும், லட்சிய வெறியும் நிறைந்தவர். எளியவர்கள் வாழும் குடியிருப்பு அடுக்ககத்தில் தற்காலிகமாக குடியேறுகிறார். அவருக்கு எதிர்வீட்டில் கதிர். நல்லவர்கள் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு ரவுடியிஸ சிந்தனையுடன் வாழ்பவர்களுக்கு மத்தியில், நல்ல மனித மனம் படைத்த ரவுடி. இயல்பான முரண்பாடுகளுடன் நட்பு தொடங்குகிறது. மனிதர்களுக்கே உரிய சிறப்புகளுள் ஒன்றாக, எந்தப் புள்ளியில் நெருக்கம் ஏற்பட்டது என்று தெரியாத அளவுக்கு அந்த உறவு வலுக்கிறது. தங்களுக்கிடையிலான உறவு வலுத்துள்ளது என்பதை இருவருமே எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.

கதிரின் ரவுடியிஸ வாழ்க்கையின் முந்தைய நிலை, அடுத்தகட்ட நிலைகள் குறித்து விரிவாகப் பார்க்காமல், யாழினியை மையப்படுத்திய கதிரின் வாழ்க்கையின் மீதே இயக்குநர் அதிகம் கவனம் செலுத்துவதால், நாமும் அதைப் பற்றியே பார்ப்போம். யாழினிக்கு குடும்ப ரீதியில் இயல்பான சின்ன சின்ன பிரச்சினைகள், கதிர் உறுதுணையுடன் அதைத் தீர்க்க முயற்சி என நகர்கிறது. இடையில், தன் தொழில் ரீதியாக கதிருக்கு கிடைக்கிறது அடி. அதன் பின்னும் இயல்பாக நகரத் தொடங்குகிறது கதை.

நாம் திரையில் கண்ட இயல்பு மீறிய காதலையும், அதன் அதீத உணர்வு வெளிப்பாடுகளையும் பார்த்துப் பார்த்து, அதுபோன்ற கதைகளுக்கும் காட்சிகளுக்கும் நம் மைண்ட் செட்டாகிவிட்டது. எனவே, காதலும் கடந்து போக்கும் எனும் இயல்பான காதல் சினிமா சொல்லும் ரொமான்ட்டிக் தன்மையைப் புரிந்துகொள்ளவும், அதை உள்வாங்கி அனுபவிக்கவும் இரண்டாவது முறையாக படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வலுவானது.

image


'காதலும் கடந்து போகும்' மூலம் 'வாய்ப்பு' என்ற மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்குநர் நலன் குமாரசாமி சொல்ல முற்பட்டதாகவே அறிகிறேன். ஒருவேளை அவர் தன்னை அறியாமல் சொல்ல முற்பட்ட மிக முக்கிய அம்சமாகவும் அதை நான் கருதிக்கொள்கிறேன்.

நலன் குமாரசாமியின் முதல் படம் 'சூது கவ்வும்'. சமகால தமிழ் சினிமாவின் புது அத்தியாய படைப்புகளில் முதன்மையானது. நல்ல ரசனையான படைப்பைக் காட்டியும் கல்லா கட்டிடுதல் சாத்தியம் என்று நிரூபித்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மட்டுமின்றி, ப்யூர் சினிமாவை அணுகும் ஆர்வலர்களுக்கும் தீனி போட்டது அப்படம்.

சிரிப்பும் சிலிர்ப்பும்தான் 'சூது கவ்வும்' படத்தின் சிறப்பு என்பேன். இவ்விரண்டு வெளிப்பாடுகளுமே காட்சிக்குக் காட்சி இயல்பாக கலந்திருக்கும். அந்தப் படம் தந்த வெற்றியால், வேறொரு கதைக் களத்தில் அதே ஃபார்முலாவை வேறு வகையில் கிண்டி, புத்தம் புது ஃப்ளேவரில் வசூலை அதிகம் குறிவைத்து அவரால் படம் தந்திருக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால், அவர் தன் கவனத்துக்கு உரிய இரண்டாவது 'வாய்ப்பை' அப்படி அதன் போக்குக்குப் பயன்படுத்தவில்லை. மிக நிதானமாக, எந்த சமரசமும் கொள்ளாமல் தனக்குப் பிடித்த சினிமா மொழியையே கையாளத் திட்டமிட்டு மீண்டும் புதுமையை நாடுகிறார். அதன் விளைவுதான் 'காதலும் கடந்து போகும்'.

2010-ல் வெளியான ‘மை டியர் டெஸ்பிராடோ’ எனும் கொரிய திரைப்படத்தின் உரிமை விலைகொடுத்து வாங்கப்பட்டு, அதை அதிகாரபூர்வமாக தமிழில் கச்சிதமாக ரீமேக் செய்திருக்கிறார் நலன் குமாரசாமி. இந்த நேர்மையான அணுகுமுறையும், நம் சமூகச் சூழலை கதையில் பொருத்திய விதமும், இந்தியில் வெளியாகி கவனத்தை ஈர்த்த முக்கியமான படைப்பான 'சிட்டி லைட்' என்ற படத்தை நினைவூட்டியது. இரண்டும் வெவ்வேறு கதை, திரைக்கதை என்றாலும், அதுவும் இதைப்போலவே கொரிய படத்தை அதிகாரபூர்வமாக விலைகொடுத்து வாங்கி, இந்தியத் தன்மைக்கு ஏற்ப கச்சிதமாக செதுக்கப்பட்ட படைப்பு.

நம் வாழ்க்கையில் எடுக்கும் முயற்சிகளின் பலனாக சில நேரங்களில் நிச்சயம் 'வாய்ப்பு' அமையும். ஆனால், எந்தச் சூழலிலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறக்கூடாது என்பதை போகிற போக்கில் சொல்லிக் கடக்கிறது 'காதலும் கடந்து போகும்' எனும் சினிமா. நீங்கள் வெடித்துச் சிரிக்கும் காட்சிகள் வழியாக இதைச் சொன்ன விதத்தில் நலன் தனித்துத் தெரிகிறார்.

இப்படி கதையினூடே முதல் வாய்ப்பைப் பற்றி பேசும் நலன், தனக்கு கிடைத்த உறுதியான இரண்டாவது திரைப்பட வாய்ப்பை, வர்த்தகம் சார்ந்த சபலம் இல்லாமல் நேர்மையாகவும் இயல்பாகவும் பயன்படுத்தியிருப்பதை நமக்கு அவர் சொன்ன மறைமுக மெசேஜாகவே பார்க்கிறேன்.

'காதலும் கடந்து போகும்' படத்தின் சூடான விமர்சனங்களையும், விரிவான பார்வைகளையும் கடக்கும்போது இரண்டு விதமான முக்கிய விஷயங்களை கவனிக்க முடிந்தது.

'திரைக்கதையில் திருப்பங்களே பெரிய அளவில் இல்லை. ரொம்ப ரொம்ப மெதுவாக நகர்கிறது கதை' என்கிற ரீதியிலான கருத்தை அதிகம் பார்க்க முடிந்தது.

இதுவும் தமிழ் சினிமாவில் போலியாகக் கையாளப்படும் திரைமொழியைப் பார்த்துப் பார்த்து நம் மூளையை வளர்த்துக்கொண்டதன் விளைவுதான் என்பேன். நம்மில் பலருக்கும் ஸ்லோ மூவிக்கும், போரிங் ஃபிலிமுக்குமான வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது. 'சிங்கம்' போன்ற பர பர ஃபாஸ்ட் மூவி பலருக்கு போரிங்காக இருக்கலாம். அதேநேரத்தில், ஒரு தாத்தா நடந்து செல்வதை நான்கரை நிமிடம் காட்டும் 'வீடு' போன்ற படங்கள் பலருக்கு அற்புத அனுபவம் தரலாம்.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். நம் வாழ்க்கை எப்படி நகர்கிறது? மெதுவாகத்தானே செல்கிறது. ஆனால், போர் அடிக்கிறதா? இல்லைதானே. நம் அன்றாட வாழ்க்கையே மெதுவாகச் செல்லும்போது, அதை சினிமா எனும் கலை வடிவில் பார்க்கும்போது பெரும் பரபரப்பாக இருப்பதுபோல் காட்டுவதும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருதுவதும் எவ்வளவு பெரிய அபத்தம்?

அப்படிப் பார்க்கும்போது, காதலும் கடந்து போகும் திரைக்கதையும் இயல்பான வேகத்தில் மெதுவாகவே நகர்கிறது. ஆனால், எந்த இடத்திலும் அலுப்பு ஏற்படாத வகையில் நகர்த்தியதுதான் அதன் சிறப்பு.

இரண்டாவது முக்கியமான விஷயம்... ஒரு படைப்பை முன்யோசனைகள் ஏதுமின்றி அணுகும் போக்கு இப்போது நம் ரசிகர்களிடம் அதிகரித்திருப்பதைக் குறிப்பிடுவேன்.

'சூது கவ்வும்' என்ற படத்தின் டீம் என்பதால், படம் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தியேட்டருக்குள் போகாமல், எந்த முன்யோசனையும் இல்லாமல் படம் பார்ப்பது அதிகரிப்பதை நல்ல ஆரோக்கியமான போக்காக பார்க்கிறேன். குறிப்பாக, ஒரு படைப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்துப் பதிவு செய்வதையும், ஒரு படைப்பாளி வேறொரு நோக்கத்தில் வைத்த ஒரு காட்சியை, சமூகப் பார்வையுடன் பொருத்தமான வேறொரு நோக்கத்துடன் புரிந்துகொள்ளும் கலை ரசனையும் வெகுவாக கூடியிருப்பது நாளைய நல்ல சினிமாவுக்கு விரிக்கப்படும் சிவப்புக் கம்பளம்.

உதாரணமாக, செந்தில் குமார் என்பவர் பதிந்த ஒரு ஃபேஸ்புக் பதிவு:

'காதலும் கடந்து போகும்' படத்தில் பின் நவீனத்துவம், நவீனத்துவம், குறியீடு, பகடி... இப்படியான வார்த்தைகளை குறிக்கும் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா... அது:

நிஜ அடியாள் ரவுடியான விஜய் சேதுபதிக்கு பயந்து தன் பாதுகாப்புக்காக "பெப்பர் ஸ்ப்ரே" வாங்கும் ஹீரோயின் கடைசியில் அதை யூஸ் பண்ணுவது ஐ.டி. கம்பெனியின் ஹெச்.ஆர். மேனேஜரிடம்..!

image


"சார், நாளைக்கு லீவு வேணும்."

"அவசர அசைன்மெண்ட் இருக்கே பிரபா... என்ன மேட்டர்?"

"ஒண்ணும் இல்லை... மூடு சரியில்லை. ஒரு ஃபிரெண்டை கூப்டுட்டு பாண்டிச்சேரி வரைக்கும் போறேன். அவ்ளோதான்."

"தர முடியாது. என்ன பண்ணுவ?"

"வர முடியாது. என்ன பண்ணுவீங்க?"

பேசிக் கொண்டிருக்கும்போதே தொலைபேசி உரையாடலை துண்டித்த பிரபாகரன், எந்தக் குழப்பமும் இல்லாமல் நண்பருடன் பாண்டிச்சேரி சென்று புத்துணர்வுடன் திரும்பி மீண்டும் வேலையைப் பார்க்கத் தொடங்கினார். அவரது இமீடியட் பாஸும் 'இவன் இப்படித்தான்' என்று எதுவும் கேட்கவில்லை.

எனக்கு பிரபாவைக் கண்டால் பொறாமை பிய்த்துக்கொள்ளும். ஆம், உள்ளத்தில் உள்ளதை அப்படியே கொட்டுவார். ஒருநாள் விடுப்பு வேண்டும் என்பதற்காக, வாழையடி வாழையென நாம் சொல்லும் பல நூறு மொக்கை காரணங்களில் ஒன்றைச் சொல்லி, மேலதிகாரியின் உள்ளக் கருணையுடன் பிரபாவால் விடுப்பு எடுத்து எஞ்சாய் பண்ணியிருக்க முடியும். அவர் இடத்தில் நான் இருந்தாலும் சப்பையான காரணத்தைச் சொல்லியே விடுப்பு கேட்டிருப்பேன். ஆனால், பிரபா தன் மனம் சொல்லும் பேச்சைக் கேட்டு வாழ்பவர். அது பல நேரங்களில் சிக்கல்களைக் கொடுத்தாலும், அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வாழும் 'ஃபாரஸ்ட் கம்ப்'.

ஆம், டாம் ஹேங்ஸ் நடித்த ஃபாரஸ்ட் கம்ப் கதாபாத்திரத்தை பிரபா வடிவில் நான் ஓரளவு நேரடியாகப் பார்த்திருக்கிறேன். நம் மனம் சொல்வதை, விளைவுகள் - பிறரது ரியாக்‌ஷன்ஸ் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அப்படியே செய்துவிடுவது எவ்ளோ பெரிய மேட்டர்?!

யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் நினைத்ததை அப்படியே செய்து முடிக்க களமிறங்கும் 'காதலும் கடந்து போகும்' கதிர் கதாபாத்திரம், ஃபாரஸ்ட் கம்ப்-புக்கும் பிரபாவுக்கும் இணையானது. அரிதானதும் கூட.

நான் பார்த்து ஏங்கிக் கிடக்கும் 'ஃபாரஸ்ட் கம்ப்' கதாபாத்திரத்தின் தன்மைகளையும் கதிர் வழியில் காண முடிந்தது. 'ஜென்னி... ஐ மே நாட் பி எ ஸ்மார்ட் மேன், பட் ஐ நோ வாட் லவ் இஸ்' என்று கூறும் ஃபாரஸ்ட் கம்ப் கதாபாத்திரம் பாணி காதல் வெளிப்பாடு கொண்டவர்தான் கதிர்.

கைவிரல்களில் பிசைந்து ருசித்து சாப்பிடுவது பிடித்ததுதான் என்றாலும், விருந்துகளில் இமேஜை மெயின்டெயின் பண்றதுக்காக ஃபோர்க் உடன் போராடுகிறோம். நம்மால் கதிர் மாதிரி நடந்துகொள்வது என்பது கனவிலும் சாத்தியம் இல்லாதது. தன்னுடைய யாழினி வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, தன்னை பைத்தியமாக பலரும் நினைத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று தனக்குத் தெரிந்த யுக்திகளைக் கையாள்கிறாரே... அந்த இன்டர்வியூ காட்சிகள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கலாம்; கைதட்டி ரசிக்க வைக்கலாம்... ஆனால், அந்த கதிரின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்க முடியுமா?

நிச்சயம் முடியவே முடியாது.

அதுதான் கதிர்.

தன் சாதி மேட்ரிமோனியலில் வாழ்க்கைத் துணையைத் தேடும் தேசத்தில், பொருளாதார - சமூகப் பின்னணிகளை கண்டுகொள்ளாமல் நல்ல மனம் மீது நம்மில் எத்தனை பேர் காதல் வயப்படுகிறோம்?

நாம் அன்பு செலுத்துவோரின் நலனுக்காக, நம்மில் எத்தனை பேர் நமது வெற்று இமேஜை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்?

இப்படி சில முக்கிய கேள்விகளையும், காதல் உணர்வின் இயல்பு மீறாத வெளிப்பாடுகளையும் கச்சிதமாக சொல்லும் 'காதலும் கடந்து போகும்' என் ஆழ்மனதை விட்டு அகல இன்னும் சில காலம் ஆகலாம்!

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு: உத்வேக 'வெள்ளி'த்திரை |இன்றும் 'அவள் அப்படித்தான்' இருக்கிறாள்!

நம்மில் பலரது பார்வையை மாற்றும் 'குக்கூ'!

'பிசாசு'வை நேசிக்க வைத்த மிஷ்கினின் மாற்றுப் பாதை!

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக