விளைபொருட்களை அதிக உற்பத்தி செய்துவிட்டு நஷ்டப்படும் விவசாயிகள்- தீர்வு சொல்லும் ஐடி வல்லுனர்கள்

0 CLAPS
0

இந்திய விவசாயிகளுக்கு இப்போதுவரை ஒரு விளைபொருளின் தேவை எவ்வளவு? நடப்பு சீசனில் எத்தனை ஏக்கர்ல பயிரிடபட்டிருக்கு? நாம அதை பயிரிட்டால் நல்ல விலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற தகவல் துளியும் தெரியாது. அதனாலதான், ஒரே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு விளைபொருளை அதிகமாக உற்பத்தி செய்துவிட்டு விலை கிடைக்காமல் நஷ்டப்படுகிறார்கள். அதற்கு சரியான உதாரணம் தக்காளி. இன்னொருபுறம் சில பயிர்கள் உற்பத்தி குறைவாகி விலை உயர்ந்து நுகர்வோர்கள் கஷ்டப்படுகிறார்கள். உதாரணம் வெங்காயம், பயறு வகைகள். தகவல் தொடர்பு தொழில்நுட்பத் தினை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்த மாதிரிப் பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.


தமிழகத்தைச் சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு ஒன்று, 14 ஆண்டுகால முயற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்த ஒரு புதுமையை உருவாக்கினார்கள். அதன் வழியாக தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல் மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடினத் தன்மையை இலகுவாக்கும் ஒரு புது இணையத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. திட்டமிடுதலில் தொடங்கி விதை முதல் விற்பனை வரையிலான அனைத்து செயல்களையும் இவர்களது IT -Rural மாதிரியில் குறு, சிறு விவசாயிகளும் செய்துகொள்ள முடியும்.

“தமிழ்நாட்டுலதான் முதலில் முயற்சியை தொடங்கினோம். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு. அதிகாரிகள் மாற்றத்தினால் திட்டத்தின் வேகம் குறைந்தது. இந்நிலையில் எங்கள் குழுவில் ஒருவருக்கு ஹைதராபாத் நகரில் வேலை கிடைத்தது. ஆந்திரா அரசிடம் முயற்சி செய்யலாம்னு ஆலோசனை சொல்ல, எங்கள் பயணம் அங்கே தொடர்ந்தது” என்று பேசத் தொடங்குகிறார் இத்திட்டத்தின் ஆணிவேரான திருச்செல்வம்.

தீவிர பரிசோதனைக்குப் பிறகு கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்துலா என்னும் ஒன்றியத்தில் உள்ள 30 கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளில் இத்திட்டத்தின் அனைத்து குறிக்கோள்களும் விவசாயிகளின் முழு ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. இத்திட்டத்தினை கடப்பா மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தும் பொருட்டு ஆயிரம் கிராமங்கள் மத்திய அரசின் சிறப்பு விவசாயத் திட்டத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டுக்குழு இத்திட்டம் இந்திய விவசாயத்தில் புதிய அணுகுமுறையை ஏற்படுவதற்கு வழி வகுக்கும் என்ற பாராட்டோடு ஒப்புதல் அளித்தது. துரதிர்ஷ்டவசமாக ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளால் இத்திட்டம் செயல்படுத்தப்பட முடியாமல் போய்விட்டது. நாடு முழுவதற்கும் பெரிய அளவில் சென்று பயனளித்திருக்கவேண்டிய திட்டம் முடங்கிப்போனதான் பெரும் சோகம். .

‘‘விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்புனு பேசுற அதேநேரத்துல, தினம் தினம் விவசாயிகள் தற்கொலை பத்தியும், உணவுப்பொருள்களின் விலை உயர்வு, வீழ்ச்சி குறித்து படிக்கிறோம், வருத்தப்படுகிறோம், விவாதிக்கின்றோம். பிரச்சனைக்கான காரணம், விவசாயிகளுக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் ஒட்டுமொத்த விவசாய மேலாண்மை மேற்கொள்ள உதவும் அமைப்பு இல்லாததுதான். எங்க ஐசிடி (ICT) திட்டம் இதற்கான தீர்வாக அமையும்” என்று கூறுகிறார் திருச்செல்வம்.


திருச்செல்வத்துக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பக்கத்தில் உள்ள ஆலம்பட்டு கிராமம். வீட்டுக்கு ஒரே பையன். கடந்த 1996ம் ஆண்டு மதுரைப் பல்கலைக்கழகத்துல எம்.சி.ஏ. முடித்தார்.

சென்னையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, இணைய தொழில்நுட்பத்தின் தன்மையை புரிந்துகொண்ட, ஒத்த சிந்தனையுடைய நண்பர்களுடன் சேர்ந்து getbusticket.com என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கினார்கள். அதன் வழியாக பேருந்து பயணச் சீட்டுகளை ஆன்லைனில் பெறமுடியும். இது சார்ந்த முயற்சியில ஈடுபட்டிருந்தபோது ஆந்தராவில் மதனப்பள்ளி ஏரியாவில் விலை வீழ்ச்சி காரணமா விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டும் அவலநிலையை செய்தித்தாளில் படிக்க நேரிட்டது. நாலைந்து மாதம் கஷ்டப்பட்டு விளைவித்து கிலோ 8 ரூபாய்க்கு விலைபோனா எப்படியிருக்கும்? அதிகப்படியான வரத்து காரணமா விலை வீழ்ந்து பொருளை சாலையில் கொட்டுகிறபோது விவசாயிகளின மனநிலை கற்பனை செய்துபார்க்கமுடியாதது.

“ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சோம். எங்க துறையின் அடிப்படையே பகுத்தாராய்தல் தான். இந்த பிரச்னையை அலசினதுள்ள கண்ட அடிப்படையான விஷயம் 'தேவைக்கு அதிகமா உற்பத்தி செய்தல்' என்பதுதான். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறையின் தன்மையினை, பலத்தினை உணர்ந்த நாங்கள் விவசாயப் பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு தரமுடியும்னு நம்பினோம்” என்கிறார் திருச்செல்வம்.

மேலும் பேசிய அவர், “அப்படிதான் எங்க ஐசிடி ப்ராஜெக்ட் உருவானது. ஒரு தக்காளியைப் பற்றிய செய்தி எங்க மொத்த வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதா மாத்திடுச்சு. விவசாயம் சார்ந்த பல்வேறு துறை வல்லுநர்களோடு தொடர்புகொண்டு ஆலோசித்து முழுமையான, நிலையான, எளிதில் விரிவாக்கம் பண்ணும் வகையில் இந்த மாடலை உருவாக்கினோம். சில காரணங்களால் பஸ் டிக்கெட் திட்டத்தை அதை தொடர்ந்து நடத்தமுடியாத நிலைமை. இத்திட்டம் அரசு-தனியார் இணைந்து செயல்படும்படியான ஒன்றாக இருப்பதால், ஆரம்பிப்பதுற்கு எவ்வளவு நாள் ஆகும் என்று கூறமுடியாது. எனவே நான் முழுநேரமாக இதனை தொடர்வது என்றும், மற்ற நண்பர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வது மற்றும் செயல்பாட்டிற்கான செலவினை வழங்குவது என்றும் முடிவு மேற்கொண்டோம். இப்போதுவரை, எங்க முயற்சி அப்படிதான் போயிட்டு இருக்கு’’ என்றார்.


தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் (ICT)

இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் செயல்படும். அதில் இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர். அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி, மற்றும் பள்ளிக்கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட குழு இருக்கும். வேளாண்மை சார்ந்த துல்லியமான தகவல்களை அவர்களிடம் விவசாயிகள் பெற்றுக்கொள்ளமுடியும்.

அதாவது அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருக்கிறது, என்கிற விபரம் தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சித் தடுப்பு பரிந்துரைகள் என்ற தவல்களைப் பெறலாம். விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி, தனது ஊரில், வேலை ஆட்கள் மட்டும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில் அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி மற்றும் முக்கியமாக அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை செய்துகொள்ள முடியும். இதனால விவசாயிகளுக்கு அலைச்சல், டென்ஷன் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கைத் தரம் முன்னேறும்.


இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்

• தேவையில்லாம நகர்ப்புறத்துக்கு இடம்பெயர வேண்டியதில்லை. 

• அன்றைய தினத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் நிலப்பரப்பு, தட்ப வெட்பம் போன்ற புள்ளி விபரங்கள் உடனுக்குடன் இணையத்தகவல்களாக பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டின் உணவுத் தரம், பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு போன்ற மிக முக்கிய விஷயங்களை சிறப்பாக நிர்வகிக்கலாம், பயிர்க் கடன் மற்றும் காப்பீட்டில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம். 

• பயிர்க் கடன்களை, காப்பீடுகளை விரிவாக்கம் செய்து சிறு குறு விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கமுடியும். 

• கிராமப் பொருளாதார மேம்பாடு மூலமாக நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்கலாம். தரமான இடுபொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதில் தங்கள் பொருள்களை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கலாம்.


‘‘ஐசிடி திட்டம் விவசாயிகளுக்கு ரொம்பவும் அத்தியாவசியமானது. விவசாயத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அரசோட ஒத்துழைப்புதான் இதற்கு முக்கியம். விவசாயப் பிரச்சனைகளை தீர்பதற்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வு தயாராகவே உள்ளது. இப்போதும்கூட சோர்ந்துபோகாமல் அரசிடம் இதுபற்றி தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். நல்லது நடக்கும் என்று காத்திருக்கிறோம்” என்கிறார் நம்பிக்கையுடன் திருச்செல்வம்.

ஆக்கம்: தருண் கார்த்தி 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'இளைஞர்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிப்போம்': ‘கமல் கிசான்’ நிறுவனர் தேவி மூர்த்தி

நிர்வாகப் பணியை உதரிவிட்டு இயற்கை விவசாய உணவு சந்தை பக்கம் திரும்பிய ஜிதேந்தர் சேங்வான்