பதிப்புகளில்

மதியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி: 'சண்டக்காரி' என்னும் ரித்திகா சிங்!

13th Feb 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

“ரித்திகா சிங், துறுதுறுப்பான, குறும்புத் தனமான பெண். அதே சமயம் அவளுக்குப் பிடித்த விளையாட்டுப் போட்டிகள், அவளுக்கு ஆர்வம் இருக்கும் துறைகள் என வரும் போது, சமர்த்தாய் நடந்துக் கொள்வாள். மிக எளிமையானவள்.”- யார் சொன்னது?...... ரித்திகாவே சொன்னார்!

இன்றைய நிலவரப்படி, ‘சண்டக்காரி, பாக்சிங் பண்ற பொண்ணு’ என்றால், கண் முன் வந்து போவது, ரித்திகாவின் முகமாகத் தான் இருக்கும். ‘இறுதிச் சுற்று ' படத்தின் மூலமாக, நொச்சிக்குப்பம் மதியாக திரை அறிமுகம். அதற்குப் பின் நடந்தது எல்லாம்,வரலாறு !

'மதி' என நம் அனைவரது மனதையும் கொள்ளை அடித்த ரித்திகா மோஹன் சிங்குடன், தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய நேர்காணல்...

image


உங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கை..?

மும்பை கே.சி காந்திப் பள்ளியில் தான் பள்ளிப்படிப்பு. ஸ்கூலில் இருந்த போது, நன்றாகத் தான் படித்துக் கொண்டிருந்தேன். பெஸ்ட் ஸ்டூடண்ட், பெஸ்ட் இன் அகாடெமி, பெஸ்ட் ஆல் ரவுண்டர் போன்ற பரிசுகள் எல்லாம் ஒவ்வொரு வருடமும் வாங்குவேன் .

வளர வளர அது மாறிவிட்டது. ட்யூஷன் க்ளாஸ்களுக்கு எல்லாம் நான் போனதே இல்லை. அம்மா தான் எனக்குப் பாடம் சொல்லித் தருவார். அவர் என்னை கவனிப்பதை நிறுத்தியப் பிறகு நானும் என்னை கவனிப்பதை நிறுத்தி விட்டேன். பள்ளி முடித்தப் பிறகு என்னப் படிப்புத் தேர்வு செய்வதென்று ஒன்றுமே புரியவில்லை. ஃப்ரெண்டு ஒருத்திக் காமர்ஸ் தேர்வு செய்தாள் அதனால் நானும் அவளோடு சேர்ந்தேன். இந்தவருடம் தான் படிப்பு முடிந்தது.

வளரும் பருவத்தில் உங்கள் ஆர்வம் எதுவாக இருந்தது..?அதில் சந்தித்த சவால்கள் என்னென்ன?

மார்ஷியல் ஆர்ட்ஸ் தான் எப்போதுமே என் ஆர்வமாக இருந்தது. மூன்று வயதிலிருந்தே கற்றுக் கொண்டும், பயிற்சி செய்துக் கொண்டும் தான் இருக்கிறேன்.

image


நாங்கள் முதன்முதலாக பயிற்சி செய்தது, ஒரு இடுகாட்டில். அதன் பிறகு, ஒரு ஸ்கூலின் பேஸ்மண்டில் இடம் கிடைத்தது. கராத்தே, கிக் பாக்சிங்கிற்கு எல்லாம் பயிற்சி செய்யும் போது, இட வசதி போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கே எங்களைச் சுற்றி ஏழெட்டு தூண்கள் இருந்தது. பாக்சர்களுக்கு இடம் போதுமானதாக இல்லை. அதன் பிறகு, ஒரு மைதானத்தில் பயிற்சி செய்தோம். அங்கு, மழை வந்தால், சேறும் சகதியுமாகி, எதுவும் செய்ய முடியாது. கல்யாண மண்டபத்தில் பயிற்சி செய்தோம், விழாக் காலங்களில் இடம் கிடைக்காது.

ஏகப்பட்ட வழிகளில் போராடி, இறுதியாக இப்போது தான் ஒரு பயிற்சி மையத்தை வெற்றிகரமாக மைத்திருக்கிறோம். இங்கு, நாங்கள் தான் வாடகை கொடுக்கிறோம். அதுவும் சிரமம் தான். இருந்தாலும், விளையாட்டின் மேல் உள்ள ஆர்வத்தால் அப்படியே செய்கிறோம். சரியான பயிற்சி, சரியான டயட் முறை என எல்லாம் மிகச் சரியாக இருந்தால் மட்டுமே, ஒரு விளையாட்டு வீரர் சிறப்பாக செயல்படமுடியும். அதிர்ஷ்டவசமாக, எனக்கு அப்பா கூடவே இருந்து எல்லாவவற்றையும் கவனித்துக் கொண்டார். எல்லோருக்கும், இது கிடைக்காது.

இரானில் நடந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில், வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். மூன்று முறை, சர்வதேச அளவில் இந்தியா சார்பாக பங்கேற்றிருக்கிறார். எஸ்.எஃப்.எல் போட்டிகளில் வென்றிருக்கிறார். 

ஏறத்தாழ நூறு பாக்சர்களை ஆடிஷன் செய்து, எழுநூறு பாக்சிங் மேட்சுகளுக்கு சென்ற பிறகு தான், ரித்திகா சிங், மதி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

‘இறுதிச் சுற்று’ படப்பிடிப்புத் தொடங்கியதிலிருந்து, அது வெளியானது வரையிலான காத்திருப்பு எப்படி இருந்தது?

நான் முதல் முறையாக மாதவன் சாரை சந்திக்கும் போது எனக்கு பதினெட்டு வயது. இறுதிச் சுற்றின் படப்பிடிப்புத் தொடங்கிய போது எனக்கு இருபது வயது. கடந்த டிசம்பரில் எனக்கு இருபத்திரண்டு வயதானது. கொஞ்சம் நீண்டக் காத்திருப்பு தான். நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் இறுதிச் சுற்றின் வெளியீடாகத் தான் இருந்தது. அதற்கான காத்திருப்பு கஷ்டமாகத் தான் இருந்தது. படம் வெளியாகும் தருணம் எப்படி எல்லாம் இருக்கும் என நானே கற்பனை செய்துக் கொள்வேன். ஒருக் கட்டத்தில், நானே என்னை மன அளவில் பட வெளீயீட்டிற்காகத் தயாரித்துக் கொண்டேன். பல நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு, படம் வெளியான போது அதொரு அழகான அனுபவமாக இருந்தது. அதிர்ஷ்டசாலியாகத் உணர்ந்தேன்.

image


நடிப்பிற்கு எடுத்துக் கொண்ட பயிற்சிகள்?

‘நடிப்பிற்கு’ இல்லை. தமிழ் கற்கத் தான் ஹோம்வொர்க் செய்தேன். கேமரா முன் எப்படி யதார்த்தமாய் இருப்பது என பயிற்சி செய்தேன். சினிமாத் துறையில் அனுபவம் இல்லாத வெளி நபராய், ஒருத் திரைப்படத்தைப் பார்க்கும் போது, ஓவர் ஆக்ட் செய்ய வேண்டும், அப்போது தான் படம் சிறப்பாக இருக்கும் என நினைத்துக் கொள்வேன். ஆனால், அது அப்படியில்லை. இயக்குனர் எனக்கு சில சர்வதேச கிளாசிக் திரைப்படங்கள்.. ஃப்ரெஞ்சு, ஜெர்மன் படங்களைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அப்போது தான், கேமராவின் முன் நான் மிக இயல்பாக, யதார்த்தமாக ஒரு மீனவப் பெண் போலவே தெரிய வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டேன்.

நான் முதல் முறையாக சென்னை வந்த போது, மணி இரவு எட்டு. நேரடியாக, நான் ஸ்டுடியோவிற்குச் சென்று என் வசனங்களை பெற்றுக் கொண்டது நன்றாக நினைவிருக்கிறது. ரெஸ்ட் எல்லாம் இல்லாமல் அப்படியேப் போனேன். என் வசனங்களை எனக்குத் தெரிந்த மொழியில் எழுதிக் கொண்டேன். அதை வாட்ஸப்பில் ஆடியோவாக பதிந்து வைத்திருந்தேன். பயணிக்கும் போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைக் கேட்டுக் கொண்டே இருப்பேன். மீனவப் பெண்கள் போல பேசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டேன். நொச்சிக் குப்பத்திற்கு சென்று, அங்கிருக்கும் பெண்களுடன் அமர்ந்து, அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அவர்களது உடல் மொழியையும் கவனித்துக் கொண்டிருப்பேன்.

நொச்சிக்குப்பத்தில் எளிதாக புழங்க முடிந்ததா..?

உண்மையில், இல்லை. முதல் இரண்டு நாட்களில் உடல் முடியாமல் போனது. என் வாழ்க்கையில் அவ்வளவு சோர்வாய் உணர்ந்ததே இல்லை. என்னால் நகரக் கூட முடியவில்லை. மீனவர்களின் காலனியிலேயே தூங்கினேன். அட்ஜஸ்ட் செய்வதற்கு சிரமமாக இருந்தது. தென்னிந்திய உணவுகள் எனக்கு எப்போதும் பிடித்ததாக இருந்ததில்லை. 

ஆனால், சாம்பாரும், சாதமும் எனக்கு பிடித்துப் போனது.

சென்னை, தமிழ் கலாச்சாரம் பற்றி எந்த அளவுக்கு தெரிந்துக் கொண்டிருக்கிறீர்கள்?

சென்னை மக்கள் ரொம்ப ஸ்பெஷல். நன்றாக வரவேற்று, கவனிக்கிறார்கள். நொச்சிக் குப்பத்தில், உடல் முடியாமல் போனது இல்லையா? அப்போது, காரில் வாந்தி எடுத்து விட்டேன். கார் ஓட்டும் அண்ணா, என் தலை முடியை வாரிப் பிடித்துக் கொண்டு, என் முகத்தை எல்லாம் கழுவி விட்டார். காரையும் அவர் தான் சுத்தம் செய்தார். ‘அண்ணா.. இதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டாம்’ என்ற போதிலும் அவர் கேட்கவே இல்லை. எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. சென்னை மக்களில் விருந்தோம்பல் அற்புதமாக இருக்கிறது. மும்பையில் இப்படி இருக்காது. சென்னையில் இருக்கும் அக்காக்கள் எல்லாம், நாம் முறையாகப் பேசினால், அவர்களும் அன்பாக பேசுவார்கள்.

image


புரொஃபஷனல் நடிகர் என கொண்டாடப்படுவது எப்படி இருக்கிறது?

இதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஸ்கூலில் இருக்கும் போது, பேச்சுப் போட்டி, கவிதை வாசித்தல், நடனப்போட்டி என எல்லாவற்றிலும் பங்கேற்பேன். ஆனால், நாடகங்களுக்கு எல்லாம் போகவே மாட்டேன். என்னால் வசனங்கள் எல்லாம் மனப்பாடம் செய்து நடிக்கவே முடியாதென நினைத்திருந்தேன். இதற்கு முன் நடிப்பு அனுபவமே இல்லை. நடிக்கவே முடியாதென நினைத்திருந்தேன். நான் ஒரு வெளியாள்; நான் ஒரு மும்பைப் பெண்; எனக்குத் தமிழ் தெரியாது; என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நினைத்து பயந்திருந்தேன். இதைக் கேட்பது, உண்மையிலேயே எனக்கு நிம்மதியாக இருக்கிறது.

இறுதிச் சுற்று ரிலீஸுக்கு முந்தின ரித்திகாவுக்கும், இறுதிச்சுற்று ரிலீஸுக்கு பிந்தைய ரித்திகாவுக்கு வித்தியாசங்கள் இருக்கிறதா?

ஆமாம்.. இப்போதெல்லாம் நிறைய பேர் அழைத்து இனடர்வ்யூ கேட்கிறார்கள். என்னிடம் பேச நினைக்கிறார்கள். (சிரிக்கிறார்). என்னோடு ஃபோட்டோ எடுக்க ஆசைப்படுகிறார்கள். இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் எல்லாம் பங்கேற்ற போது, எனக்கு வயது மிகவும் குறைவானதாக இருந்தது. அதனால், எனக்கு இது பழக்கமானதாகத் தான் இருந்தது. ஆனால், நிச்சயம் இரண்டிற்கு வித்தியாசம் இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் வெளிச்சம், முன்னதை விட பல மடங்கு அதிகம்.

ஸ்போர்ட்ஸ், சினிமா... இந்த ரெண்டுலயும் ஃபேமிலி சப்போர்ட் எப்படி?

அம்மா, என் முகத்தில் காயம் ஏற்படும் எனக் கொஞ்சம் பயப்படுவார். ஆனால், எனக்கு மூன்று வயதிலிருந்தே, அப்பா தான் எனக்கு பயிற்சியாளராக இருக்கிறார். இப்போதும் கூட, எனக்கு பல வகைகளில் அப்பா உதவிக் கொண்டும், ஊகமளித்துக் கொண்டும் தான் இருக்கிறார். வீட்டின் சப்போர்ட் எனக்கு முழுக்க இருக்கும் வகையில், எனக்கு மகிழ்ச்சி தான்.

எல்லா பேட்டிகளிலும் தன்னைப் பற்றி பேசினதை விட மாதவன், உங்களைப் பத்தி தான் அதிகம் பேசுகிறார்? எப்படி இப்படிக் கவர முடிந்தது?

படத்தில் வருவது போன்றே, என் வாழ்க்கையில் அவர் தான் எனக்கு வழிகாட்டி. எந்த விஷயமாக இருந்தாலும், அவருக்கு அழைத்து, ‘என்ன செய்வது’ எனக் கேட்பேன். மாதவன் சார், அவ்வளவு பெரிய கலைஞர், என்னைப் போன்ற ஒரு புது முகத்தைப் பற்றி பேசும் போது, அது சாதாரணம் இல்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

விளையாட்டுத் துறையில், சினிமாவில் பெண்களின் முன்னேற்றம் பற்றிய உங்கள் பார்வை..

விளையாட்டுத் துறை, சினிமா இரண்டிலுமேயே, பெண்களின் பங்கேற்பும், சக்தியும் மாறிக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். பெண்களின் முன்னேற்றத்தை நாம் பார்க்கும் விதமே மாறியிருக்கிறது. அதை நினைத்தால், சந்தோஷமாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸிலும் கூட பபிதா ஜார்ஜ், சாய்னா நெய்வால், மேரி கோம் எல்லாம் சர்வதேச அளவில் பல போட்டிகளில் பதக்கங்கள் வெல்கிறார்கள்.

இதற்கு சினிமாவின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கிறது. மேரி கோம் போன்ற படங்கள் எல்லாம், பெண்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்கமாய் இருப்பது, அற்புதமாக, பிரமாதமான விஷயம். பெண்களை வலிமைபடுத்துவதில் சினிமாவிற்கு முக்கியமான பங்கு இருப்பதாக நினைக்கிறேன்.

இனி கேரியர் ப்ளான் என்ன?

நல்ல கருப்பொருளும், எனக்கு நல்ல கதாபாத்திரமும் இருக்கும் படங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு நல்ல இயக்குனர்களோடு வேலை செய்ய வேண்டும். அதிகமாக எதுவும் யோசித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால், இப்போதைய எண்ணம் அதுவாகத் தான் இருக்கிறது. விளையாட்டுத் துறையில், எப்போதும் பயிற்சி செய்துக் கொண்டு தான் இருப்பேன். பெரிய அளவிலான போட்டி எதாவது வந்தால், இரண்டு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டு, நிச்சயம் அதில் பங்கேற்பேன். ஏனென்றால், நான் பங்கேற்றால், நிறைய பேர் அதைப் பார்க்க நினைப்பார்கள். அதன் மூலமாக, அந்த விளையாட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும், அங்கீகாரம் கிடைக்கும்.


சோஷியல் நெட்வொர்க்ல தமிழ் பசங்க மத்தியில நீங்கதான் இன்னிக்கு நம்பர் ஒன் ஃபேவரிட் ட்ரீம் கேர்ள்? இது தெரியுமா? உங்களோட ரியாக்‌ஷன் என்ன?

(அழகாய் சிரிக்கிறார்)

ஆமாம். சொன்னார்கள். இதெல்லாம் நடக்குமென நினைவே இல்லை. கனவுப் போலத் தான் இருக்கிறது. மதி, படத்தில் அழகாக இருக்க மாட்டாள். அழுக்காக இருப்பாள், ரௌடித்தனமாக நடந்துக் கொள்வாள். அதை எல்லாம் கடந்து, என்னை ஏற்றுக் கொண்டது, மிகப் பெரிய ஆசீர்வாதம். மேலும், அவர்களுக்கு பிடித்தது மதியைத் தான், என்னை இல்லை. மதி எதுவாக இருந்தாலோ, அதுவாகவே அவளை ஏற்றுக் கொண்டதற்கும், அதற்காகவே அவளை நேசிப்பதற்கும் நன்றி.

அனைத்துத் தமிழக மதி ரசிகர்கள் சார்பாய், ‘நமக்குள்ள எதற்கு நன்றி எல்லாம்’ என நான் சொல்லிவிட்டேன்!

அழகான ஆளுமைக்கு, மனம் நிறைந்த வாழ்த்துக்களும், மலர்கொத்தும் !

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற பலரது கவனத்தை கவர்ந்த பெண்கள் தொடர்பு கட்டுரை

தன் குறையை மாற்றியமைத்து வெற்றி கண்ட மாதவி லதாவின் பயணம்!

வெறுங்காலுடன் ஓடி தங்கம் வென்ற செருப்பு தைப்பவரின் மகள் சயாலி!

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக