இந்திய நிறுவனமா? வெளிநாட்டு நிறுவனமா? விவாதத்தில் நீங்கள் எந்தப்பக்கம்?

  22nd Feb 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  சவுரவ் கங்குலி, 2002 நேட்வெஸ்ட் தொடர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்திய போது லார்ட்ஸ் மைதான பால்கனியில் இருந்து தனது டிஷர்ட்டை கழற்றி சுழற்றியது இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக அமைந்தது. இந்திய கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான யுகத்தின் துவக்கமாக அது கருதப்பட்டது. ரசிகர்களும் அதை விரும்பினர்.

  இந்த மாதம் பேடிஎம்மின் விஜய் சேகர் சர்மா; வாட்ஸ் அப் நிறுவனத்தை வெளிப்படையாக எதிர்கொண்ட போது அல்லது இதற்கு முன்னர் ஃபிளிப்கார்ட் மற்றும் ஓலா நிறுவனர்கள் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொண்ட போது இதே போன்ற வரவேற்பு கிடைத்திருக்கும் என நினைக்கலாம். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு, மோசமான எதிர்வினைகளையும் சந்தித்தனர். மிகச்சிலர் மட்டுமே இந்த நிறுவனர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

  image


  ஒரு முதலீட்டாளர் இப்படி கருத்து கூறினார்:

  இந்தியர்களாகிய நாம் எப்போதுமே இந்திய வாய்ப்பை விட, வெளிநாட்டு வாய்ப்பு சிறந்ததென கருதுகிறோம். இன்னொரு இந்தியர் வெற்றி பெறுவதையும் நாம் விரும்புவதில்லை. வாட்ஸ் அப் மற்றும் பேடிஎம் என வரும் போது, நாம் வெளிநாட்டு நிறுவனமே வெற்றி பெற வேண்டும் என நினைப்போம். பல ஆண்டுகளாக, நன்றாக படியுங்கள், நல்ல ஆங்கிலம் பேசுங்கள், ஐஐடி அல்லது ஐஐஎம்-ல் சேர்ந்து முன்னிலை பெறுங்கள், நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என நமக்கு சொல்லப்பட்டு வந்தது. இது தான் உச்சமாக கருதப்பட்டது. நீங்களும் இதையே செய்து கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கி, முதலீட்டாளர்களிடம் இருந்து பெரிய அளவில் நிதி திரட்டி, தனது வர்த்தகம் மூலம் பணம் சம்பாதித்து, தலைநகர் தில்லியில் பங்களா வாங்கினால், உங்களுக்கு பிடிப்பதில்லை. அவரை நீங்கள் கீழே தள்ளியாக வேண்டும். பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் வம்சாவளி இந்தியரை கொண்டாடுவீர்களே தவிர, வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கும் இந்திய தொழில்முனைவோரை அல்ல”.

  இந்த வாதத்தில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் இது ச்சீ இந்த பழம் புளிக்கும் என்பது போன்றதா?

  கொஞ்சம் அமைதியாக யோசித்துப்பாருங்கள். அப்போது இந்திய ஸ்டார்ட் அப் பரப்பின் குணாதிசயம் மற்றும் அதன் ஆன்மாவை உருவாக்குவதற்கான போராட்டம் நடந்து கொண்டிருப்பது புரியும். இந்த பரப்பு கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, பெரும்பாலான கதைகள் வெற்றிகரமான நிறுவனர்களின் நாயக பயணம் அல்லது நிறுவனங்கள் பெறும் நிதி மற்றும் மதிப்பீட்டின் அளவை சார்ந்தே அமைகின்றன.

  ஆனால் இந்திய ஸ்டார்ட் அப் பரப்பின் குணாதிசயம் என்ன என்று உங்களுக்குத்தெரியுமா? சிலிக்கான பள்ளத்தாக்கின் தன்மை பல ஆண்டுகளாக உருவாகி இருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் துவக்க காலத்தில், தற்போதைய 24 மணி நேர செய்தி யுகத்தில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனர்கள் இலக்காவது போல தீவிர விசாரணையை எதிர்கொண்டதில்லை. இன்று, சிலிக்கான் பள்ளத்தாக்கை, திறமை, தொழில்நுட்ப தன்மை, தீவிர மற்றும் போட்டித்தன்மையுடன் நாம் தொடர்பு படுத்திக்கொள்கிறோம். ஆனால் இந்த குணம் ஓரிரவில் வந்ததில்லை.

  இந்தியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் பரப்பு என்பது, பரம்பரிய தொழில் சூழலில் இருந்து வேறுபட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் சிலிக்கான பள்ளத்தாக்கில் இருந்து ஊக்கம் பெறுகின்றனர். ஆனால் பாரம்பரிய தொழில் சூழலும் ஓரளவு தாக்கம் செலுத்துகிறது. இதில் தொழிலின் போட்டித்தன்மையை பொதுவெளியில் காண்பிக்கப்படும் மென்மை மற்றும் நாகரீகம் மூடி மறைக்கிறது.

  ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் ஆக்ரோஷமான அணுகுமுறையை எதிர்கொள்ளும் போது, உண்டாகும் எதிர்வினைகளை இந்த பின்னணியில் தான் நாம் அணுக வேண்டும்.

  நம்முடைய ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், உலகாவிய போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என நாம் விரும்புகிறோம். அதே நேரத்தில் பரஸ்பரம் இணக்கமாக நடந்து கொண்டு, உதவிக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். (பணிபுரியும் பல பெண்கள் இதன் சிக்கலை புரிந்து கொள்வார்கள்).

  நேரடியாக விஷயத்திற்கு வருவோம். இந்த கட்டுரைக்காக யுவர்ஸ்டோரி பேசிய அனைவரும், வாட்ஸ் அப்/பேடிஎம் விஷயத்தில், சர்வதேச நிறுவனத்திற்கு விஷேச சலுகை அளிக்கக் கூடாது எனும் கருத்தில் பேடிஎம் பக்கமே இருக்கின்றனர்.

  ”வாட்ஸ் அப்பிற்கு என்.பி.சி.ஐ சிறப்பு சலுகை காண்பித்தது தவறு. மற்ற நிதி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், என்.பி.சி.ஐ வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இந்த அமைப்பு மேலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். நெறிமுறைகளை அனைத்தையும் அது இணையதளத்தில் வெளியிட வேண்டும். எந்த நிறுவனத்திற்கும் சிறப்பு சலுகை அளிக்கக் கூடாது. ஒரு தேசிய அமைப்பாக இவ்வாறு நடந்து கொள்ளவே முடியாது,”

  என்கிறார் ஆரின் கேபிடல் இணை நிறுவனரான மோகன்தாஸ் பை.

  பின் என்ன பிரச்சனை?

  பெரிய மீன் சின்ன மீனை முழுங்குவது...

  முதல் விஷயம் இது தான்: ஃபிளிப்கார்ட், பேடிஎம் மற்றும் ஓலா ஆகியவை நிறைய நிதி திரட்டி, அதிரடி தள்ளுபடி உத்திகளை பின்பற்றி இந்திய நிறுவனங்களின் போட்டியை கிட்டத்தட்ட இல்லாமல் செய்துவிட்டன. இப்போது உபெர், அமேசான, வாட்ஸ் அப் மற்றும் கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதே உத்தியை பயன்படுத்தும் போது அவை கூக்குரலிடுகின்றன.

  ”ஓலா, உபெர் அல்லது மின்வணிக நிறுவனங்களை பாருங்கள், அவற்றிடம் மூலதனம் இருக்கிறது, அதிரடி தள்ளுபடி அளித்து, விலையை குறைத்து, மற்ற நிறுவனங்களை அழிக்கின்றன,” என்கிறார் பை.

  இப்போது உபெர், அமேசான, வாட்ஸ் அப் மற்றும் கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சந்தை பங்கிற்கு நேரடி போட்டியாக அமைந்திருப்பதால் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

  இதற்கான பதில் இது தான் வர்த்தகம் என்பதாகும். இந்த நிறுவனங்கள் உலகின் மற்ற நிறுவனங்கள் போலவே தங்கள் செயல்பாடுகளை விரிவாக்கி போட்டியை விலக்கியாக வேண்டும். அமெரிக்காவில் மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், கூகுள் போன்றவை இதைத் தான் செய்தன. இந்த நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கு இலக்காகும் போது இதே போல எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அர்த்தமாகுமா?

  ‘ ஃபிளிப்கார்ட் அல்லது பேடிஎம் ஏன் தனியே முறையீடு அல்லது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? 

  ”இவை அடிப்படையில் வர்த்தகம் தானே. மேலும் இந்நிறுவனங்கள் துவங்கிய போது அவற்றுக்கு பாதுகாப்போ அல்லது ஆதரவு நிலையோ இல்லையே. அவை தங்கள் சொந்த பலத்தில் தானே வளர்ந்துள்ளன. சார்பு நிலை காரணமாக அவற்றுக்கு அதிக நிதி கிடைக்கவில்லை. அதை அவற்றிடம் இருந்து எடுக்கவும் முடியாது,” என்கிறார் ஏற்கனவே மேற்கோள் காட்டப்பட்ட முதலீட்டாளர்.

  உண்மை தான். ஆனால் இந்த கருத்துக்கு பதில் கருத்து என்னவென்றால் சில்லறை நிறுவனங்களை காக்க அரசு முயற்சிக்கும் போது இவை எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்பது தான்.

  பாதுகாப்பு குரல்கள்

  இரண்டாவது பிரச்சனை: இப்போது அவர்களுக்கு போதுமான மூலதனம் கிடைத்துவிட்டதால், வெளிநாட்டு போட்டிக்கு கதவை மூட விரும்புகின்றனர்.

  ஆனால், பேடிஎம்,- வாட்ஸ் அப் பிரச்சனையில், தான் திறந்தவெளி சந்தைக்கு எதிரானவன் அல்ல ஆனால் சிறப்பு சலுகைக்கு எதிரானவன் என்றே விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார். இருப்பினும், 2016-ல் ஃபிளிப்கார்ட் மற்றும் ஓலா நிறுவனர்கள் சச்சின் பன்சல் மற்றும் பவிஷ் அகர்வால், சீனாவைப்போல இந்தியாவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அரசை கேட்டுக்கொண்டனர். இந்த நிறுவனங்கள், மேக்மைடிரிப், ஹைக், குவிக்கர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உள்ளூர் நிறுவனங்களுக்காக வாதாட இந்தியாடெக்.ஆர்க் எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.

  ”நாம் சீனா அல்ல. அமெரிக்கா வழியிலும் செல்லாமல் இருப்போம். நம்முடைய பொருளாதாரம் திறந்தவெளி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அரசு அல்லது சூழல் எந்த ஒரு நிறுவனமும் இந்தியாவில் நுழைவதற்கு தடையாக இருக்கக் கூடாது. நாம் நம்முடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கொண்டாடலாம் என்றாலும், அது பாதுகாப்பு தன்மையுடன் இருக்கக் கூடாது,”

  என்கிறார் மின்வணிக முன்னோடி நிறுவனமான இந்தியாபிளாசா நிறுவனர் மற்றும் பைலிங் டூ சக்சீட்- தி ஸ்டோர் ஆப் இந்தியாஸ் பர்ஸ்ட் இகாமர்ஸ் கம்பெனி புத்தக ஆசிரியருமான கே.வைத்தீஸ்வரன்.

  இதற்கான பதில், ஏற்கனவே பார்த்தது போல, ஏன் இருந்தால் என்ன தவறு என்பதாக இருக்கிறது. ”முந்தைய தலைமுறையினர் பாதுகாப்பை கோரியும், நாயகர்களாக கொண்டாடப்பட்டனர். சச்சின் பன்சலையும் ஏன் கொண்டாடக்கூடாது. அவர்கள் ஏன் பாதுகாப்பு தன்மையை கோரக்கூடாது,” என கேட்கிறார் முன்னர் மேற்கோள் காட்டப்பட்ட முதலீட்டாளர்.

  இந்திய தன்மை

  இந்த கட்டத்தில் முக்கியமான கேள்வியை வந்தடைகிறோம். இந்த நிறுவனங்கள் உண்மையில் இந்திய நிறுவனங்கள் தானா?

  இந்திய நிறுவனம் என்றால் என்ன? இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களால் அல்லாமல், இங்குள்ளவர்களால் நிறுவனத்தின் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கப்படும் வகையில் நிர்வாக பணிகளில் இந்தியர்களை கொண்டுள்ளவையே இந்திய நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் எவையும் இந்த அம்சங்களை கொண்டிருக்கவில்லை. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் இடையிலான வேறுபாடு என்ன? இரண்டு நிறுவனங்கள் விஷயத்திலுமே வெளிநாட்டு முதலீட்டாளர்களே முடிவெடுக்கின்றனர். பின் எப்படி இது இந்தியா/ வெளிநாட்டு நிறுவன பிரச்சனையாகும்?, என்று கேட்கிறார் பை.

  இந்திய மூன்று முன்னணி நிறுவனங்களின் பங்கு அமைப்பை பார்க்கலாம். பேடிஎம் நிறுவனத்தில் சாப்ட்பேங் மற்றும் அலிபாபா குழுமம் அதன் தாய் நிறுவனத்தில் 60 சதவீத பங்கு கொண்டுள்ளன. நிறுவனர் விஜய் 16 சதவீத பங்கு வைத்துள்ளார். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில், சாப்ட்பேங், டைகர் குளோபல், நாஸ்பர்ஸ், டென்செண்ட் மற்றும் இபே ஆகிய முதலீட்டாளர்கள் 70 சதவீத பங்கு வைத்துள்ளன. நிறுவனர்கள் சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் 10 சதவீத பங்கு மட்டுமே வைத்துள்ளனர். ஓலா நிறுவனத்தை பொருத்தவரை சாப்ட்பேங், டிஎஸ்டி, மேட்ரிக்ஸ் 60 சதவீத பங்கு கொண்டுள்ளன. நிறுவனர்கள் பவிஷ் அகர்வால் மற்றும் அங்கித் பதி 13 சதவீத பங்கு வைத்துள்ளனர்.

  ஃபிளிப்கார்ட் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமை கொண்டிருப்பதோடு வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டது. பேடிஎம் வெளிநாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படுகிறது. அதிக நஷ்டத்தை சந்திக்கும் இந்நிறுவனங்களின் உத்திகள் வெளிநாட்டவர்களான தங்கள் முதலீட்டாளர்கள் நம்பிக்கைக்கு ஏற்பவே அமைகின்றன. இந்நிலையில் நாட்டுப்பற்று தொடர்பாக பேசுவது ஆபத்தானது. இந்த வகை நாட்டுப்பற்று என்பதே சீனாவிடம் இருந்து கடன் வாங்கியது,”

  என்கிறார் தொடர் தொழில்முனைவோர் மற்றும் கோல்டன் டேப்; தி இன்சைடு ஸ்டோர் ஆப் ஹைபர் பண்டட் இந்தியன் ஸ்டார்ட் அப்ஸ் புத்தக ஆசிரியருமான காஷ்யப் தியோரா.

  ஆனால் இது நிறுவனர்களின் தவறா? அவர்கள் ஒன்றும் இந்திய நிதியை மறுத்துவிட்டு வெளிநாட்டு நிதியை நாடிச்செல்லவில்லையே.

  ”நாட்டுப்பற்று வாதத்தை நான் ஏற்கவில்லை. அவர்கள் இந்தியவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை. போட்டியில் நிற்க பெரும் முதலீடு தேவை. அதற்கு வெளிநாட்டு முதலீடு தேவை,” என்கிறார் வைத்தீஸ்வரன்.

  இந்த பிரச்சனைகள் சிக்கலானவை. இவற்றுக்கு எளிதான பதில்கள் இல்லை. ஆனால் எல்லோரும் நிலைப்பாடு எடுக்கின்றனர். நீங்கள் எந்தப்பக்கம் என்றே முதலில் கேட்கின்றனர்.

  ஆங்கிலத்தில்: ராதிகா பி நாயர் | தமிழில்: சைபர்சிம்மன் 

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags

  Our Partner Events

  Hustle across India