பதிப்புகளில்

உத்வேக 'வெள்ளி'த்திரை | 'உஸ்தாத் ஓட்டல்' பகிரும் 'பக்குவ' பிரியாணி!

4th Feb 2016
Add to
Shares
154
Comments
Share This
Add to
Shares
154
Comments
Share

"அண்ணே... ஒரு ப்ளாக் டீ கிடைக்குமா?"

"பாத்திரத்தையே கழுவி வெச்சுட்டேனே சார்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, உங்களுக்காக போட்டுத் தர்றேன்."

சென்னையில் ஜனவரி இரவின் இதமான குளிரில் ப்ளாக் டீ குடிக்க வேண்டும்போல் இருந்தது. கடையை மூடிய நிலையில், நான் கேட்டுவிட்டேன் என்பதற்காக அடுப்பைப் பற்றவைத்தார் அந்த வீதியோர டீக்கடைக்காரர். தினமும் ஒரு தேநீர் மூலம் உருவான பந்தம் அது.

"இந்தாங்க சார்..."

அவர் நீட்டிய ப்ளாக் டீயை வாங்கிப் பருகத் தொடங்கினேன்.

"அண்ணா, செமயா இருக்குண்ணா" என்றேன்.

"கொஞ்சம் இஞ்சி தட்டி போட்டு, ஒரு மூணு ட்ராப்ஸ் லைம் பிழிஞ்சிருந்தா, இன்னும் சூப்பரா இருக்கும் சார்" என்றார் அந்த அண்ணன்.

அவர் அப்படி விவரிக்கும்பொதே நான் குடித்துக்கொண்டிருந்த ப்ளாக் டீயின் சுவை கூடியது. ஆம், மனதர்களின் பரிசுத்தமான அன்பு பரிமாறப்படும் இடங்களில், யாருக்கும் தெரியாமல் கூடிவிடுகிறது உணவில் சுவை!


எது இயல்பு மீறாத சினிமா?

ணவு... எல்லா உயிரினத்துக்குமே முதன்மைத் தேவை. உலகில் எந்த விதமான தொழிலுக்கும் முற்றிலுமான அழிவு நேரிட வாய்ப்பு உண்டு. ஆனால், உணவு சார்ந்த தொழில்கள் எப்போதும் அழியாது என்பது தெளிவு. இப்படிப் பல சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகக் கூடிய உணவு சார்ந்த பதிவுகளை நம் தமிழ் சினிமா எப்படிக் காட்டியிருக்கிறது? எப்படிக் காட்டிவருகிறது? என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?

இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஒரு படத்தில், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பது, ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பது, சாப்பாடு குறித்துப் பேசுவது முதலான காட்சிகள் ஒன்றிரெண்டு கூட இடம்பெறுவது அரிதாகவே இருக்கிறது. செல்வராகவன், ராம், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் முதலான சிலரது படங்களில்தான் உணவும், உண்ணுதலும் இயல்பான போக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்வோரும், உலக சினிமா ஆர்வம் உள்ளவர்களும் வெளிநாட்டுப் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் படங்களில் எல்லாம் உணவு என்பது ஒரு முக்கியக் கதாபாத்திரம் போலவே திரைக்கதை முழுவதும் நிரம்பியிருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் உணவுக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதால், அதைத் தவிர்த்துவிட்டு மனித வாழ்க்கையை இயல்பான பதிவாக சினிமாவில் அடைத்திட முடியாது என்பது பெரும்பாலான படைப்பாளிகளின் எண்ணம். அதுவே உண்மையும் கூட. ஆனால், இதுபோன்ற இயல்புப் போக்குகள் சரியாகப் பின்பற்றப்படாததால்தான் நம் தமிழ் சினிமாவில் மசாலாக்கள் மலிந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆறுதல்களில் ஒன்று 'காக்கா முட்டை'. உணவும் அதுசார்ந்த ஈர்ப்பும்தான் இந்தப் படத்தின் மையப்புள்ளி. படத்தின் முடிவில் எந்த உணவு சுவையானது என்பது சொல்லப்பட்ட விதம் நம்மில் பல சமூக அரசியல் சார்ந்த கேள்விகளை எழுப்பவல்லது.

*

சிறு வயதில் இருந்தே உணவின் மீது நாட்டம் இல்லாமல் வளர்ந்தவன் நான். காலியான இடங்களை நிரப்பும் ஒன்றாகவே எனக்கும் உணவுக்குமான தொடர்பு இருந்து வந்தது. சில அனுபவங்களும், நான் கண்டு ரசித்த சில திரைப்படங்களுமே உணவின் மீது கவனம் செலுத்த வழிவகுத்தது.

நான் சாப்பிட்ட உலகின் சுவை மிகுந்த உணவு எது தெரியுமா?

'சாம்பார் சாதம்.'

அப்போது எனக்கு வயது 19. சென்னையில் தனியாக வசிக்கத் தொடங்கிய நாட்கள். கையில் இருந்த காசு கரைந்து போனது. ஏதாவது வேலைக்குப் போய் ஆக வேண்டிய கட்டாயம். இரண்டு நாட்கள் சரியான உணவு இல்லை. மூன்றாவது நாள் கொடும் பசி. அன்றைய தினம் ஓர் இடத்தில் வேலை கிடைத்தது. மதியம் ஒரு மணிக்காக காத்திருந்தபடியே வேலை செய்தேன். அங்கு இலவச உணவு வழங்கும் கேன்டினில் ஒரு மணிக்குதான் லஞ்ச். முதல் ஆளாக நுழைந்தேன். சூடான சாம்பார் சாதம் கிடைத்தது. பரபரவென சாப்பிட்டு முடித்தேன். அந்த சூடான சாம்பார் சாதம் என் வயிற்றை குளிர்வித்தது.

ஆம்... அந்த சாம்பார் சாதம் நான் சாப்பிட்ட உணவுகளில் ஆகச் சிறந்த சுவை மிகுந்தது.

சரி, நீங்கள் சாப்பிட்ட சுவையான உணவு எது? எப்போது சாப்பீட்டீர்கள்?

image


உஸ்தாத் ஓட்டலும் மதுரை மனிதரும்!

தமிழில் வெளிவரும் வர்த்தக நோக்கம் மிகுதியான சினிமாவோடு ஒப்பிடும்போது, மலையாள சினிமா பெரும்பாலும் இயல்பு மீறாமல் இருப்பதை உணர முடிகிறது. உணவுப் பொருட்களும் தேநீர் முதலான பானங்களும், அவர்களது வாழ்க்கை முறையையும் சினிமா பார்த்தே எளிதில் தெரிந்துகொள்ள முடியும். அந்தத் துறையில் இருந்து 2012-ல் வெளிவந்த அற்புதமான படம் 'உஸ்தாத் ஓட்டல்'.

துல்கர் சல்மான், திலகன், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை இயக்கியவர் அன்வர் ரஷீத். மதுரையில் வசிக்கும் ஓர் உன்னத மனிதரின் தாக்கத்தில் உருவான கதை - திரைக்கதையை உணர்வுபூர்வமாக அமைத்திருப்பார் அஞ்சலி மேனன்.

துபாயில் செட்டில் ஆன தம்பதியரின் மகன் ஃபைஸி (துல்கர்) ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த இளைஞர். வெளிநாட்டு நட்சத்திர ஓட்டலில் நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் செட்டில் ஆகத் துடிப்பவர். பாஸ்போர்ட், விசா நடைமுறைகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழலில், தன் பூர்விகமான கேரளாவில் தன்னுடைய தாத்தா (திலகன்) உடன் சில காலம் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோழிக்கோடில் கடற்கரையை ஒட்டியுள்ள பழம்பெரும் உஸ்தாத் ஓட்டலை நடத்தி வரும் அந்தத் தாத்தாவுக்கும் பேரனுக்குமான உணர்வுப் போராட்டம் ஒரு பக்கம், ஷஹானா (நித்யா மேனன்) உடனான காதல் மறுபக்கம், ஓட்டல் துறை சார்ந்த தொழில் இன்னோரு பக்கம் என சுழலும் ஃபைஸின் வாழ்க்கையை உணர்வுபூர்வ சினிமா மொழியில் ரசிகர்களிடம் கதை சொல்லப்படும்.

உஸ்தாத் ஓட்டலின் சிறப்பே பிரியாணிதான். அங்கிருந்து மலிவு விலையில் பிரியாணியை வாங்கி, அவற்றை அதிக விலையில் விற்று லாபத்துடன் நற்பெயரையும் ஒரு பெரிய ஸ்டார் ஓட்டல் பெற்று வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 'பணம் முக்கியம் அல்ல; மனம் தான் முக்கியம்' என்ற கொள்கையில் அதீதம் காட்டியதன் விளைவாக கடனில் மூழ்குகிறார் தாத்தா. வருவாயையும் சேவையையும் சரியான விகிதத்தின் சமன்படுத்த முடியாததன் விளைவு அது. அந்தச் சூழலில், ஓட்டலைப் புதுப்பிக்க முடிவு செய்கிறான் ஃபைஸி. அதிகம் செலவு செய்யாமல் பழைய ஓட்டலைப் புதுப்பிக்கிறான். புதுப்புது உத்திகளைக் கையாள்கிறான். மக்களின் கவனத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனத்தையும் ஈர்க்கிறது உஸ்தாத் ஓட்டல்.

மனிதர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் குறைத்துக் கொள்ளாமல், வருவாயையும் பெருக்கும் உத்திகளை மிகச் சிறப்பாகப் புகுத்தியதன் விளைவை உஸ்தாத் ஓட்டலில் நாம் காணலாம். ஒரு தொழில்முனைவர் சமூக அக்கறை சார்ந்து இயங்கும் பட்சத்தில், அவருக்கு நீண்ட கால பலன் நிச்சயம் என்பது தெளிவு. அதைக் குறிப்பால் சொல்லி நழுவுகிறது இந்த உஸ்தாத் ஓட்டல்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் படத்தின் முக்கியமான கடைசிப் பகுதிகள் சொல்லும் விஷயங்கள் மகத்துவமானவை. ஓர் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து, ஒரு சுவாரசியமான திரைக்கதையை எப்படிப் புனைவது என்பதை உஸ்தாத் ஓட்டல் பார்த்து இளம் படைப்பாளிகள், திரைப்பட மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற அற்புத மனிதரின் கதையின் தாக்கத்தை நிறுவிய விதம் பாராட்டத்தக்கது.

ஒரு கட்டத்தில், ஃபைஸி வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிடும். அப்போது, ஃபைஸியிடம் ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்து, "இதை மதுரையில் உள்ள என் நண்பரைச் சந்தித்து கொடுத்துவிட்டு வா" என்பார். அதன்படி, மதுரைக்கு கிளம்புவான் ஃபைஸி. நாராயணன் கிருஷ்ணனை சந்தித்து அந்தக் கடிதத்தைக் கொடுப்பான். அதைப் படிக்கும் அவர், ஃபைஸியை தன் அன்றாட பணிகளில் இணைத்துக்கொள்வார். காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் உணவு தயார் செய்து, அவற்றைப் பொட்டலங்களாக்கி வண்டி மூலம் மதுரை முழுவதும் உள்ள வீதியோரவாசிகள், பிச்சைக்காரர்கள், அனாதைகளுக்கு உணவு வழங்குவதுதான் நாராயணன் கிருஷ்ணனின் முக்கியப் பணி. அதில் ஒருநாள் அனுபவத்தை ஃபைஸிக்குக் கடத்துகிறார்.

தன்னைப் பற்றி ஃபைஸியிடம் விவரிக்கத் தொடங்கும் நாராயணன் கிருஷ்ணன், "நான் தாஜ்ல ஷெஃப்பா வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒரு தடவை என் சொந்த ஊர் மதுரைக்கு வரும்போது, நான் பார்த்த காட்சி என்னை மாத்திடுச்சி. இதோ இருக்காரே இந்தப் பெரியவர், இவரு பசி தாங்க முடியாம தன்னோட ஹ்யூமன் வேஸ்டை சாப்டுட்டு இருந்தாரு. என் மக்கள் இப்படி சாப்பாட்டுக்கு வழியில்லாம கஷ்டப்படும்போது நான் சொகுசான கெஸ்டுங்களுக்கு விதவிதமா சமைச்சுப் போடத் தோணல. அப்ப ஆரம்பிச்சதுதான் இதெல்லாம்" என்று சொல்லும்போதே ஃபைஸி நிலைகுலையத் தொடங்குவான்.

மறுநாள் காலை. மனநலம் குன்றிய குழந்தைகள் வசிக்கும் ஆசிரமத்துக்கு ஃபைஸியை அழைத்துச் செல்வார். "இன்று நீதான் சமைக்கப் போகிறாய். உஸ்தாத் ஓட்டல் பிரியாணிதான் இன்றைய சாப்பாடு" என்கிறார். நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்காக ஃபைஸி பிரியாணி செய்கிறான். அவர்கள் உணவு சாப்பிடுவதை நேரில் பார்க்கிறான். சிலருக்கு ஊட்டி விடவும் செய்கிறான். சாப்பிட்டு முடித்த அந்தச் சிறப்புக் குழந்தைகள் தங்கள் மொழியில் ஃபைஸியிடம் நன்றி சொல்லிவிட்டு நகர்கின்றனர். "உன்னோட வாழ்க்கையிலேயே இதுதான் பெஸ்டு பிரியாணி" என்று பாராட்டுப் பத்திரம் சமர்ப்பிக்கிறார் நாராயணன் கிருஷ்ணன்.

உரைந்து உட்காரும் ஃபைஸி ஊருக்கு கிளம்புகிறான். அந்த ரெண்டு நாள் அவன் எண்ணத்தைப் புரட்டிப் போடுகிறது. தாத்தா அடிக்கடி சொல்வாரே "வயறு நிறைய வைக்கிறது முக்கியமில்லை... சாப்பிடுறவங்க மனசை நிறைய வைக்கணும்..." அதெல்லாம் மனதில் மீண்டும் மீண்டும் மின்னிச் செல்கின்றன. ஃபைஸிக்கு பக்குவம் ஏற்படும்போது அது நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

சரி, அந்தக் கடிதத்தில் அந்தத் தாத்தா அப்படி என்னதான் எழுதி இருந்தார்?

"இந்தக் கடிதாசியை கொண்டு வர்ற ஃபைஸி என் பேரன். இவனுக்கு எப்படி சமைக்கணும்னு நான் சொல்லிக் கொடுத்துட்டேன். எதுக்கு சமைக்கணும்னு நீதான் சொல்லித் தரணும்."

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற ஊக்கம் அளிக்கக்கூடிய சினிமா கட்டுரைகள்

உங்களுக்காக நீங்களே போராடத் தயாராக வேண்டும்: சன்னி லியோன்' நமக்கு கற்று தந்த வாழ்க்கை தத்துவம்

நீங்களும் தலைவரே!- ஷாரூக்கான் அடுக்கிய 9 வாழ்க்கைப் பாடங்கள்!

Add to
Shares
154
Comments
Share This
Add to
Shares
154
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக