பதிப்புகளில்

தமிழ் பத்திரிகையாளரின் தொழில் முயற்சி- 'இப்போது' செயலி!

மக்களின் பங்கு கொண்டு நல்லாட்சிக்கு வழிவகுக்கும் செயலி

SANDHYA RAJU
25th Nov 2015
Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share

ஊடகத் துறையில் பதினேழு வருட அனுபவம், அதில் பெற்ற தொடர்புகள் இவற்றை இணைத்து சமூக சிந்தனையுடன் தொழில் முனைவர் ஆகியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் பீர் முஹம்மத். தமிழ் செய்தி தொலைகாட்சியை காணும் எல்லாருக்கும் மிகவும் பரிச்சயமானவர் இவர்.

தமிழ் யுவர்ஸ்டோரி அவருடன் பிரத்தியேக நேர்காணல் நடத்தியது.

image


"நான் ஒவ்வொரு முறை ஏதாவது செய்தியை சேகரிக்க செல்லும் பொழுதும் மக்கள் மீண்டும் மீண்டும் முன்வைப்பது - நீங்கள் இந்த செய்தியை போடுவதால் மாற்றமோ முன்னேற்றமோ நிகழப் போவதில்லை என்பதே. இது என்னுள் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தியது" என்கிறார் பீர். 

ஒரு பத்திரிகையாளராக தனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்திருந்ததாக கூறும் பீர், மக்களின் பங்களிப்புடன் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே "இப்போது" (Ippodhu) செயலி செயல் வடிவம் பெறக் காரணம் என்கிறார். 

சமூக பங்கு

சமூகத்தை இணைக்கும் பாலமாக "இப்போது" செயலி திகழ்கிறது. ஆகஸ்ட் மாதம் செயல்பாட்டிற்கு வந்த இந்த செயலி எவ்வித விளம்பரமும் இல்லாமலேயே இந்த மூன்று மாதத்தில் ஆயிரம் பயனர்களை கண்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக பல்வேறு தீர்வுகள் மக்களுக்கு கிடைத்திருந்தாலும், இரண்டு சமீபத்திய நடவுகளை நம்மிடம் பீர் முஹம்மத் பகிர்ந்து கொண்டார்.

நம் நகரத்தின் முக்கிய சின்னமான, விவேகானந்தர் இல்லத்தை பெரிய பதாகை ஒன்று முற்றிலும் மறைத்ததை கண்ட சென்னை வாசி ஒருவர் "இப்போது" செயலியில் இந்த பிரச்சினையை படத்துடன் பகிர்ந்து கொண்டார். இரண்டு நாட்களில் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று இது அகற்றப்பட்டது.

நம் எல்லோருக்கும் நாம் அன்றாடம் சந்திக்கும், பொது சவால்களுக்கு தீர்வு காண விருப்பம் தான், பெரும்பாலும் யாரை எப்படி அணுகுவது என்பது தெரியாமல் இருக்கிறோம்.

"ஒரு பத்திரிகையாளனாக எனக்கிருந்த தவல்களை பொது பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது" எனக்கூறும் பீர் இது வரை நூற்றிமுப்பது காவல் நிலைய எண்களும், சென்னை மாநகராட்சி முதல் இங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் தகவல்களையும் செயலியில் சேர்த்துள்ளதாக கூறுகிறார். விரைவில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை தகவல்களையும் சேர்க்கவுள்ளதாக கூறுகிறார்.

மற்றுமொரு நிகழ்வாக இந்த செயலி சென்னை வாசிகளை மனிதநேயத்திற்கு வித்திட்டதை பற்றி கூறுகையில், "நந்தினி என்பவர், தன் கணவரின் பக்கவாத சிகிச்சைக்கு இருபது லட்சங்கள் செலவிட்ட நிலையில் மேலும் சிகிச்சையை தொடர "இப்போது" செயலி மூலம் உதவியை நாடினார். குறுகிய காலத்தில் சில நல்லுள்ளங்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்". இது இந்த செயலியின் தாக்கத்தை உணர்த்துவதோடு மனநிறைவையும் அளிக்கிறது என்கிறார்.

"இப்போது" செயலி செயல்பாடு

தன்னிடம் இருந்த தகவல்களை சமூக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற தனது எண்ணத்தை, ஐஐடி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி சந்திரசேகரிடம் வெளிப்படுத்தினார். அதேப்போல் இன்கூபெஷன் மையத்தின் தலைவர் அவினாஷ் மகாலிங்கத்துடனும் தன் முயற்சியை பற்றி பகிர்ந்து கொண்டார் பீர் முஹம்மத். அவர்கள் அளித்த உற்சாகம் இந்த எண்ணத்தை மேலும் வலுவடைய செய்தது என்கிறார் பீர். 

image


"எந்த சூழ்நிலை வந்தாலும் இந்த முயற்சியை முன்னெடுத்து செல்ல திடமாக எண்ணினேன்".

இதே சமயத்தில் தான் சென்னை அமெரிக்க தூதரகம் புதுமையான எண்ணத்திற்கான நிதி வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கு விண்ணப்பித்தார் பீர், உலகம் முழுவதும் எட்நூறு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இருநூறு விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்பட்டு அதிலிருந்து நாற்பத்தியெட்டு இறுதி போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தியாவிலிருந்து ஒரே திட்டமாக இவரின் "இப்போது" செயலி வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்றதற்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக கிடைத்தது மேலும் ஊக்கத்தை அளித்ததாக கூறுகிறார். "எங்கள் செயலி திட்டத்தை முழு மூச்சுடன் கொண்டு செல்ல இந்த அங்கீகாரம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் பதிவுகளை மேற்கொள்ளும் விதமாக, க்ரெளவுட் சோர்சிங் செயலியாக இதை உருவாக்கி, மார்ச் 2015 கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் "இப்போது" செயலியை பதிவு செய்தோம்" என்கிறார் பீர்.

மக்கள் பயன்பாட்டில் உள்ள பரிமாற்றம் தளம் என்பதால் செயலியில் பதிவுகள் நடுநிலை செய்யப்படுகின்றன. "இந்த செயலியின் மூலமாக பதினைந்து வெவ்வேறு பிரிவுகளில் மக்கள் தங்களின் பகிர்வை மேற்கொள்ளலாம். தகுதியற்ற சொற்களை ஏற்க தடை செய்யும் விதமாக செயலியை தானியக்க மயமாக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்" என்கிறார் பீர். 10 பேர் கொண்ட குழு செயலி செயல்பாடுகளில் பணிபுரிந்து வருவதாக மேலும் கூறினார்.

image


மீடியா நிறுவனம் தோற்றுவித்தது பற்றி

நம் எல்லோருக்குமே தனித்துவமாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது என்று கூறும் பீர் தான் பணியில் இருந்த சமயம் நடந்த ஒரு உரையாடலை நினைவு கூர்கிறார். "நீங்கள் வாங்கும் சம்பளம் நான் வாங்கும் பட்சத்தில், இந்நேரம் ஒரு கடை உரிமையாளராக முயற்சித்திருப்பேன் என்று என் அலுவலகத்தில் பணி புரிந்த உதவியாளர் ஒருவர் கூறியது என்றுமே மறக்க முடியாது". தொழில்முனை ஆர்வம் எனக்குள்ளும் இருந்தது, சரியான தருணம் அமையவே காத்திருந்தேன், புதுமையான திட்டத்தில் வென்றது மூலம் அதற்கான தருணத்தை அமைத்துக் கொண்டேன் என்கிறார்.

பதினெட்டு மாத சந்தை ஆய்விற்கு பின்னர் ஆகஸ்ட் 15 அன்று 'இப்போது.காம்' இணையத்தளம் அறிமுகம் செய்தோம். "டிஜிட்டல் பயன்பாடு, நாம் செய்தியை உள்வாங்கும் திறனை வெகுவாக மாற்றி வருகிறது, அதற்கேற்றார் போல் தரமான செய்திகளை எங்கள் குழு அலசி வேறுபட்ட கோணத்திலும் முன்னிறுத்துகிறது."

இரண்டு லட்சம் பேர் இந்த இணையதளத்தை பார்வையிடுவதாக கூறும் பீர், "இப்போது.காம்" ஸ்மார்ட் கைபேசிக்கு ஏற்ற தமிழின் முதல் டிஜிட்டல் செய்தித்தளம் என்பதில் பெருமிதம் கொள்கிறார்.

அடுத்த சில மாதங்களில் ஐந்து லட்சம் மக்களை சென்றடைய இலக்கு அமைத்துள்ள பீர், வரவிருக்கும் தேர்தலில் எங்களின் செய்தி பங்களிப்பு இதை நிச்சயம் சாத்தியப்படுத்தும் என்று ஆணித்தரமாக கூறுகிறார். செய்தி தளத்தை "அறிமுகம் செய்த சில வாரங்களிலேயே தமிகழமே பேசிய விஷ்ணு ப்ரியாவின் வழக்கை செய்திகளாக முன் வைத்த விதம் பலரையும் எங்களை நோக்கி பார்வையை செலுத்த வைத்தது. அதே போல் சென்னையில் பெய்த மழை குறித்த எங்களின் செய்திப் பார்வை எங்களை முன்னிறுத்த உதவியது" எனக் கூறும் பீர் ஒரு பத்திரிகையாளராக ஒவ்வொரு சம்பவமும் ஒரு வாய்ப்பு என்கிறார்.

சவால்கள்

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எவரும் தோல்வி பயத்தை மீறி தொழில் முனைவது என்பது பெரும் சவால் தான் என்கிறார். "பல வருட உழைப்பின் சேமிப்பை முதலீடாக கொண்டு 'இப்போது' செயலி தோற்றுவித்தேன், ஒன்றரை லட்சத்துடன் பயணம் தொடங்கியது. முதல் கட்டத்தில் நான் அணுகிய எந்த முதலீட்டாளரும் என் முயற்சியில் நம்பிக்கை வைக்க வில்லை." என்று கூறும் பீர் தனது தொழில் முனை நிறுவனத்தை சென்னை அல்லாது பிற மாநிலத்தில் நிறுவ வேண்டுமோ என்ற எண்ணம் கூட தோன்றியதாக கூறுகிறார். "பத்திரிக்கையாளராக, தொழில்முனை நிறுவனங்களை பற்றி இரண்டு வருடங்கள் செய்தியாக்கி உள்ளேன், அப்பொழுதும் கூட சென்னையில் தேவையான அளவு தொழில்முனை சூழல் அமைப்பு இல்லை என்றே தோன்றியது" என்கிறார். அமெரிக்க தூதரகம் மூலமாக வென்ற இருபதாயிரம் டாலர் நிதியுதவி, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கை இவையே தன்னை உந்தித் தள்ளியது என்கிறார் பீர்.

பின்னர் சிங்கப்பூரை சேர்ந்த ஆரிஃப் இவரது முயற்சியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார். ஆரிஃப் தொழில்நுட்ப வல்லுநர், இப்போது.காம் மீடியா நிறுவனத்தில் இணை நிறுவனராக இணைந்தார். செயலி தவிர இந்த மீடியா நிறுவனம் தனிப்பட்ட நிறுவனமாக செயல் படுகிறது. இருவரும் இணைந்து நாற்பது லட்ச ரூபாய் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

முதலில் தான் மிகுந்த ஊக்கமின்மையயே சந்தித்ததாக கூறுகிறார், இதை தவிர நடப்பு சவால்களும் நிறைந்தே இருக்கிறது. இது புதுமையான முயற்சி என்பதால் முற்றிலும் வருவாய் கொண்டதாக அமைப்பது தற்போதைய சவால் என்கிறார்.

"தொழில்முனை நிறுவனம் வெற்றியடைய புதுமை மட்டுமல்லாது செயல் திறன் மிக்கதாகவும் இருத்தல் வேண்டும். திறமையான குழு அமைவது முக்கியம், அதே போல் குழுவோடு இணைந்து செயல்படுதல், அவர்களுடன் அதிக நேரம் செலவிடுதல் வெற்றிக்கு வழி வகுக்கும்"

எதிர்காலம்

ஊடகவியல் என்பது மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பொறுப்புகளை உணர்த்தும் விதமாக அமைத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றம் இத்துறையை வெகுவாக மாற்றியுள்ளது. எங்களின் செயல்பாடு இதை முன்னிறுத்தியே இருக்கும். மாற்றத்தின் தருணத்தில் சரியான இடத்தில சரியான சமயத்தில் இருக்கிறோம் ஆகையால் எங்களின் வளர்ச்சி மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று புன்முறுவலுடன் விடைபெறுகிறார்.

செயலி தரவிறக்கம் செய்ய : Ippodhu

Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக