'புள்ளியில் தொடங்கிய கட்டிடக்கலை' நிஷாந்தி-செல்வம் ஜோடியின் தொழில்முனைவு பயணம்!
தற்போதைய காலத்தில் டிஸைன் என்ற ஒற்றை வார்த்தையின் கீழ், கலை, வடிவமைப்பு, தொழில்நுட்பம், போன்ற பல்வேறு துறைகள் அடங்கியிருக்கிறது. கட்டிடக்கலையில் டிசைன் மற்றும் வடிவமைப்பிற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தாலும், அதில் கால் ஊன்றி வெகு சிலரால் மட்டுமே நிலைத்து இருக்கமுடிகிறது. சரியான கட்டிடக்கலையும், துல்லியமான மேலாண்மை வல்லமையும் ஒன்று சேர்ந்தால், அது எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு சரியான விடையாக இருக்கிறார்கள் டாட் டிசைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் நிஷாந்தி மற்றும் செல்வம்.
தமிழ் யுவர்ஸ்டோரியில் இவர்களுடைய பயணம் இதோ...
பொறியியல் துறையில் நிஷாந்தி
சாதாரண பள்ளி முடித்த இளம் வயது பெண்ணாக இருந்த நிஷாந்தியை முதலில் அழைத்தது இன்ஜினியரிங் துறை. ‘’நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் போன்ற துறைகளில் மனதளவில் எனக்கு ஈடுபாடில்லை என்பதை உணர்ந்தேன். அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வின் போது தான் அங்கிருக்கும் கட்டிடக்கலைத் துறையைப் பற்றி எனக்கு தெரிந்தது. உடனே அதற்கான் நுழைவு தேர்வு எழுதி ஆர்கிடெக்ட் மாணவியாக அதே அண்ணா பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தேன்.”
"கல்லூரியில் கற்றுக்கொண்டது ஒரு புறம் இருந்தாலும், சீனியர்கள் மூலம் கற்றுக்கொண்டதே அதிகம். அவர்களுடைய ப்ராஜெக்டுகள் மற்றும் பல செமினார்களுக்கு உதவிசெய்து என்னுடைய கட்டிட வடிவமைப்புத் திறனை அதிகமாக வளர்த்துக்கொண்டேன்." அம்பத்தூரிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் சென்றுவர தினமும் இவர் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வரை பயணிக்க வேண்டியதாக இருந்தது. இதன்மூலம் நகரத்தின் கட்டமைப்பும் அதிலிருந்த சில அடிப்படைத் தவறுகளும் புலப்பட்டது என்றே சொல்லலாம்.
அப்போது இவருக்கு இருந்த வெளிப்பாடும் பக்குவமும் பல விஷயங்களை கற்றுத்தரவே செய்தது.
"எனக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை இருந்தது (சிரிக்கிறார்) காரணமில்லாமல் வந்த ஆசை அது, ஆனால் கல்லூரிக்காக நான் ஐந்தாண்டுகள் செய்த பயணத்தின் மூலம், நகரத்தின் கட்டிடங்கள் மற்றும் பிளானிங்கில் என்னென்ன தவறுகள் இருக்கிறது அதை எப்படி சரி செய்திருக்கலாம் என்ற விதத்தில் யோசனை செய்ய ஆரம்பித்தேன்," என்கிறார் நிஷாந்தி.
ஆர்கிடெக்டாக தொடங்கிய பயணம்
இன்டர்ன்ஷிப் போன்ற டிரெயினிங் முடிந்த கையோடு, தன்னுடைய அடுத்த கட்ட அடிகளை எடுத்து வைத்ததார் நிஷாந்தி.
கட்டிடக்கலையை பொறுத்தவரை பெண்கள் பொதுவாக வெளிப்புற தோற்றமான ஃபிஸிக்கல் மாடல்களை மட்டுமே வடிவமைப்பதுண்டு, முழு கட்டிட வடிவமைப்பு மற்றும் முடிவு வரை நின்று பணிசெய்யும் எண்ணிக்கை சற்றே குறைவு. குறிப்பாக, சென்னையில் இது போன்ற டிசைன் முதல் கட்டுமானம் வரை எடுத்து செய்யும் நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்நிலையில் 2013ம் ஆண்டில் படிப்பை முடித்த நிஷாந்தி, ஒரு சின்ன ப்ராஜெக்ட்டையும் கைப்பற்றினார். தன்னுடைய நண்பருடைய சின்ன அறையை மாற்றியமைக்கும் சீரமைப்பு வகையான ப்ராஜெக்ட் அது.
"180 சதுரடி அறை தான் என்னுடைய முதல் பணி. படங்கள் வரைந்து, அந்த இடத்திலும் வேலைகள் தொடங்கினேன். கிடைத்த வேலையை விட, நான் எடுத்து கொண்ட வேலைக்கான நியாயத்தை தர வேண்டும் என்பதற்காக முழு மூச்சாக அந்த பணியை செய்யது முடித்தேன்."
இனி தன் பணிகளைத் தொடர தனக்கென ஒரு நிறுவனம் தேவை என உணர்ந்த நிஷாந்தி, 200 சதுரடி இடத்தில் தன் அலுவலகத்தை அமைத்தார். டாட் டிசைன்ஸ் (Dot Designs) என்ற இவரது நிறுவனம் இவ்வாறு தொடங்கியது. ஒரு குடியிருப்பின் கிரிக்கெட் மைதானம், வின் டிவி அலுவலகத்தின் உட்புற வேலைப்பாடுகளான இண்டீரியர், போன்ற நெருங்கிய வட்டத்திலிருக்கும் கட்டிட வேலைகளை முதலில் செய்யத்தொடங்கினார் நிஷா.
டாட் டிசைன்ஸ் வளர்ச்சி
நிஷாந்தியின் கணவர் செல்வம் மெக்கானிக்கல் பட்டப்படிப்பை முடித்த ஒரு தொழில்முனைவர். சார்டட் அக்கவுண்டண்ட் அப்பாவின் நிறுவனத்தை நடத்தியதன் மூலம், தொழில் மேல் ஆர்வம் இவருக்கு அதிகரித்தது. சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் துறையில் இவருக்கு தனி ஆர்வம் பிறக்கக் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
''எந்தவொரு தொழிலிலுமே மார்கெட்டிங் மற்றும் அதை வளர்க்கத் தேவையான யுக்திகள் மற்றும் சிந்தனைகள் அவசியம் என்பதை நான் உணர்ந்தேன். கல்லூரி நாட்களில் பாடங்களுக்கான நோட்கள் மட்டுமல்லாது, என்னுடைய பிஸினஸ் மற்றும் அதற்கான திட்டங்களை குறித்துக்கொள்ளவும் ஒரு நோட் வைத்திருந்தேன்,"
என்று விளக்கும் செல்வத்தின் தொழில்முனைவர் பாதையின் ஒரு கிளை தான் டாட்ஸ் டிசைன்.
வருடத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 25 ஆண்டுகளில் 25 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செல்வம் இருந்து வருகிறார். "அப்படிதான் ஒரு முறை நிஷாவிடம் அவரது குறிக்கோளைப் பற்றி செல்வம் கேட்ட போது, கட்டிடக்கலை மேலிருக்கும் ஆர்வத்தையும், ஒரு தனி நிறுவனமாக தொடக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்த நிஷாவின் ஆசையை பூர்த்தி செய்ய முழு வீச்சாக செயல்பட்டு ஒரு நிறுவனமாக டாட் டிசைன்ஸை தொடங்கினர் இந்த ஜோடி.
நிஷாந்தியின் யோசனையைக் கொண்டு, செல்வம் தனது ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் திறனைக் ஈடுபடுத்தி இந்நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்கள்.
அப்பாவின் நிறுவனத்தை கவனித்தது மூலம், தொழிலையும், லாபத்தையும் எப்படி ஈட்டுவது என்ற யுக்தி புலப்பட்டது. ஒரு சின்ன கேம் போல ஒரு தொழிலை எப்படி விரிவுப்படுத்த வேண்டும் என்பதை திட்டமிட்டிருந்திருந்தேன். சரியான விதத்தில் அதை செயல்படுத்தினாலே போதுமானது, ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவிடலாம் என்ற கருத்தை பதிவிடுகிறார் செல்வம்.
முதல் விருதும் சவால்களும்
நிஷாவின் கட்டிடக் கலை மற்றும் டிசைன் அனுபவம் மற்றும் செல்வத்தின் திட்டமிட்ட செயல்பாடு என்ற காம்போவில் உருவான இந்த நிறுவனத்திற்கு அழகான அடியாக அமைந்தது நண்பர் சந்தோஷின் அலுவலக வடிவமைப்புப் பணி.
"அலுவலகத்தின் ஒரு பகுதியை புனரமைத்துத் தர வேண்டி அந்த ப்ராஜெக்ட் எங்களுக்கு அமைந்தது. 'டேக் ஆஃப்' என்று அவருடைய புது பகுதிக்கு பெயரிட்டது மட்டுமல்லாமல், தன்னுடைய அலுவலகத்தை பார்த்தவுடனேயே புத்துணர்வும், வித்தியாசமும் இருக்கும் விதம் அலுவலக டிசைன் இருக்கவேண்டுமென எங்களிடம் சந்தோஷ் கேட்டுக்கொண்டார். அதை மட்டும் மனதில் வைத்து கொண்டு மூன்றே நாட்களில் செய்தது தான் அந்த விமான டிசைன் அலுவலகம்," என்கிறார் நிஷாந்தி.
வெறும் மூன்று நாட்களில் முடித்துத் தர வேண்டியிருந்த நிலையில், அதற்கான வேலைகளை இவர்கள் எடுத்து செய்வதில் பல சவால்களும் இருக்கவே செய்தன. "ஒரு நாள் இரவு 2.30 மணிக்கு செல்வம் தொலைப்பேசியில் அழைத்து, டேக் ஆஃப் ப்ராஜெக்ட்டை பற்றி விவரித்தார். 3 நாட்களுக்குள் முடித்துத் தர வேண்டும் என்பதால், விறுவிறுவென வேலைகளை தொடங்கினேன். முதல் நாளிலேயே ஸ்கெட்ச், கடைசி டிஸைன் பார்ப்பதற்கு எப்படியிருக்கும் என்பதற்கான ரெண்டர் முடித்தாகிவிட்டது. திறப்புவிழாவின் 3மணி நேரத்துக்கு முன்புவரை நின்று வேலைபார்த்த அந்த அனுபவம் முற்றிலுமாக 'வேற லெவல்' தான்." என்கிறார் நிஷாந்தி.
வாடிக்கையாளர்கள் நம்மிடம் தரும் பட்ஜெட்டை விட சற்று குறைவாக, செய்து தர வேண்டும் என்பதே என்னுடைய திட்டம். வாடிக்கையாளர்கள் பெருகுவதற்கான வாய்ப்பாக தான் இது இருக்கும். அதே சமயத்தில் தரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அப்படி தான் ஒரு முறை, கார்பெட் சரியான தரத்தில் இல்லாததால், கடைசி நிமிடத்தில் அதை திருப்பி அனுப்பினேன். பின் ஒரு நாள் இரவு முழுவதும் தேடி, அலைந்து அதன் பின் நடுஇரவில் தேவையான பொருட்களும், ஆட்களையும் வரவழைத்து வேலையை கச்சிதமாக முடித்தோம் என்று தன் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் செல்வம்.
பிரைவேட் ஜெட் போன்று நாங்கள் வடிவமைத்த அந்த அலுவலகம், வடிவமைப்பு விருது பரிசீலனைக்கு அனுப்பினார் நிஷாந்தி. "அந்த குறிப்பிட்ட வடிவமைப்பு மனதுக்கு பிடித்த விதத்தில் அமைந்ததும், இணையத்தின் மூலம், பல விருது குழுக்களுக்கு அனுப்பினேன். பல போட்டிகள் இருக்கும் விருது பட்டியலில் என்னுடையது எந்த இடத்திலிருக்கும் என்று அறிந்தும், ஒரு அனுபவத்திற்காக அனுப்பினேன்." இவர் அனுப்பிய விருதுக்குழுக்களில் (FOIDA) என்ற குழுவினரால் சிறந்த இண்டீரியர் டிசைன் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதும் கிடைத்தது. பல நிறுவனங்களும் கட்டிட வடிவமைப்புகளும் போட்டியிட்ட அந்த தளத்தில் தங்களுடைய திறனுக்கு கிடைத்த பரிசாக நிஷாந்தி மற்றும் செல்வம் அளவில்லா மகிழ்ச்சியடைந்ததாக கூறினர்.
டேக் ஆஃபின் மொத்த பட்ஜெட் ஒன்றரை லட்சம். ஆனால், அங்கு தேர்வு செய்யப்பட்டிருந்த கட்டிட டிசைன்களின் பட்ஜெட் கோடிகளை தொட்டது. தவிர,பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களோடு சமமாக ஒரு மேடையில் நின்று விருது வாங்கியது பெருமை மட்டுமல்லாமல், இதே உழைப்பை அடுத்து வரும் பணிகளிலும் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன்".
விருது விழாவின் மூலம் ஏற்பட்ட தொடர்புகளை கொண்டு நிஷா தனது அடுத்தக் கட்ட வாடிக்கையாளர்களை எட்டியிருப்பது இங்கு கூடுதல் தகவல்.
குழு
2 பேரிலிருந்து 12 ஊழியர்கள் ஆன குழு, 200 சதுரடியிலிருந்து 2000 சதுரடிக்கு மாறிய அலுவலகம், சிறிய மூலதனத்தை வைத்து ஆரம்பித்த இந்த மூன்றாண்டுகால நிறுவனம், 6 கோடி ஆண்டு லாபத்தை தற்போது ஈட்டியிருப்பது டாட்ஸ் டிசைன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி பாதையை துல்லியமாக காட்டுகிறது. உடற்பயிற்சி மையங்கள், குடியிருப்பு, என்ற பல இண்டீரியர் கட்டுமான ப்ராஜெக்டுகளை கைவசத்தில் வைத்திருக்கும் நிஷாந்தி, இந்திய அளவில் ஒரு பெரிய அடியையும் எடுத்துவைத்திருக்கிறார்.
ஜோர்பா யோகா மையங்களுடைய 33 கிளைகளுடைய கட்டுமானம் மற்றும் இண்டீரியர் செய்யும் பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார். இந்தியா முழுவதிலும் 12 மாநிலங்களில், 33 இடங்களில் யோகா மையங்கள் வடிவமைப்பு என்ற பெரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார் நிஷாந்தி.
வெற்றிக்கான ரகசியம்
வாடிக்கையாளர்களின் வாழ்வுமுறை, அவர்களுடைய விருப்பம், ஒரு குறிப்பிட்ட டிசைனில் அவர்களுடைய எண்ணத்தை எப்படி விதைப்பது போன்ற கச்சிதமான அனுபவ வடிவமைப்பு (Experience Design) என்ற அடிப்படை யோசனையைக் கொண்டு நிஷா தன்னுடைய டிசைன்களை வடிவமைப்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக இவர்கள் எடுத்து கையாளும் இந்த தொழிலில் இவர்கள் தெரிந்துக்கொண்ட வெற்றிக்கான ரகசியங்கள் பற்றி கூறுகிறார்கள்.
சாதிக்க வேண்டும் என்ற வெறி எப்போதும் இருப்பது உங்களை சிறந்த தொழில்முனைவராக மாற்றும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஏற்ற இறக்கங்கள் பல முறை ஏற்படும், இதை விட்டுவிடலாமே என்ற எண்ணமும் எழும். அந்த எண்ணத்தையும் மீறி வெற்றி பெற வேண்டும்.
அடுத்தவர்களுக்கு கோபம் வரும் வகையில் நம்முடைய வளர்ச்சி இருக்க வேண்டும்.
ஒரு பெரிய குறிக்கோளை முன் வைத்து, அதை நோக்கி சின்ன சின்ன அடிகளை எடுத்து உங்கள் குறிக்கோளை அடையுங்கள்.
வாய்ப்புகள் என்றுமே வேறுபட்ட ரூபத்தில் தான் நம்மை அடைகிறது. அதனால், சரியான வாய்ப்புகளுக்காக காத்திராமால், வரும் வாய்ப்புகளை நமக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
இணையத்தள முகவரி
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
'சிரிப்பதும் கூட யோகா தான்'- யோகா ஸ்டுடியோ இளம் நிறுவனர் சர்வேஷ்
400 ரூபாய் வருமானத்தில் தொடங்கி இன்று கோடிகளை தொடும் நிறுவனத்தை நிறுவிய சந்தோஷ் பலவேஷ்!
'தோல்வியை கண்டு துவளாதீர்; அதுவே வெற்றியின் ரகசியம்': தொழில்முனைவர் ஹேமச்சந்திரன்