பதிப்புகளில்

சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மரச்சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்!

மார்க்சிஸ்ட் சிந்தனையாளரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான கோவையைச் சேர்ந்த முருகேசன் உருவாக்கிய மரசைக்கிள் அவருடைய ஸ்டார்ட் அப்பிற்கான விதையாக அமைந்துள்ளது. 

14th Jun 2018
Add to
Shares
893
Comments
Share This
Add to
Shares
893
Comments
Share

வாகனப் பயன்பாடுகளின் அதிகரிப்பால் உலகம் முழுவதிலும் மாசு என்பது பரவிட்டது. உலகின் 20 மாசுபட்ட நகரங்களில் 10 இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு சொல்கிறது. காற்று மாசு எந்த அளவிற்கு மக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு கேடு விளைவித்தது என்பதற்கான எச்சரிக்கை மணி தலைநகர் டெல்லியில் ஒலித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

போக்குவரத்துக்காக பயன்படுத்தும் வாகனங்கள் மூலமே இந்த மாசானது அதிகரித்து மனிதனுக்கு சுவாசம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துவதோடு, ஓசோன் படலத்தையும் தாக்குகிறது. அனைத்திலும் இயற்கைக்கு மாற முயற்சித்து வரும் இந்த தலைமுறையினர் போக்குவரத்திலும் சுற்றுச்சூழலுக்கு ஊறு ஏற்படுத்தாத பயணத்தை மேற்கொள்ளலாமே என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த இளைஞர் முருகேசன் மரச்சைக்கிளை உருவாக்கியுள்ளார்.

image


தனது சைக்கிளை மறுவேலைபாடு செய்யப்போய் அதுவே ஸ்டார்ட் அப்க்கான வழியை முருகேசனுக்கு அமைத்துள்ளது. மரசைக்கிள் உருவான கதை பற்றி முருகேசன் தமிழ் யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ:

முருகேசன் பிறந்து வளர்ந்தது கோவை மாவட்டம் ரத்தினபுரியில். இவரின் தந்தை காளிமுத்து மர வேலைபாடு செய்து வருகிறார். சாதாரண குடும்பம் என்பதால் பள்ளிப்படிப்பு முடித்த கையோடு குடும்பச் சூழல் காரணமாக அவர்களின் குடும்பத் தொழிலான மர வேலைபாடு செய்யும் பணிக்கே சென்றுள்ளார் முருகேசன். 

“என்னை அதிகம் படிக்க வைக்கும் அளவிற்கு குடும்பச் சூழல் இல்லாததால் 18 வயதிலேயே அப்பாவுடன் சேர்ந்து மர வேலை செய்யும் பணிக்கு சென்றுவிட்டேன். எனினும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தொலைதூரக்கல்வி மூலம் இளநிலை பொலிடிக்கல் சயின்ஸ் படித்தேன்,”

என்று தனது இளமைக்கால பருவத்தை நினைவுபடுத்திக் கூறினார் முருகேசன். கல்லூரி நாட்களில் சிபிஐஎம்மின் மாணவ அமைப்பில் முருகேசன் தீவிர செய்பாட்டாளராக செயல்பட்டுள்ளார். 

“கட்சியின் பயிற்சி பட்டறைகள் பலவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன், அங்கிருந்து தான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஏற்பட்டது”. 

அப்பா செய்து வந்த மர வேலைப்பாடு தொழிலை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீன அம்சங்களுடன் இன்டீரியர் டிசைனிங் வேலையாக சுமார் 15 ஆண்டுகளாக செய்து வருகிறேன். கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து குடியிருப்புகளுக்கு உள் அலங்கார அமைப்பு செய்து கொடுப்பதால் குடும்பத்திற்கு போதுமான வருமானம் கிடைக்கிறது என்கிறார் முருகேசன்.

இன்டீரியர் டிசைனிங் என்றாலும் அதில் புதுமைகளை முயற்சித்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இதே போன்று தான் நான் பயன்படுத்தி வந்த சைக்கிள் துரு பிடித்து கிடந்த நிலையில் அதனை மரத்தினால் டிசைன் செய்ய முடிவு செய்தேன். 

“பொதுவாவே எனக்கு சைக்கிள் ஓட்ட ரொம்ப பிடிக்கும். என்னுடைய அப்பா நான் 6வது படிக்கும் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். பணி நிமித்தமாக அருகில் எங்கு செல்வதாக இருந்தாலும் சைக்கிளில் தான் சென்று வருவேன்.”

சுற்றுச்சூழல் ஆர்வலராக பல கலந்துரையாடல்கள், புத்தகங்களை படிக்க நேர்ந்தது முதல் நண்பர்களிடம் காற்றிற்கு மாசு ஏற்படுத்தாத சைக்கிளை போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இந்த நிலையில் தான் கடந்த ஓராண்டாக நான் பயன்படுத்தாத சைக்கிள் ஒன்று மூலையில் முடங்கிக் கிடந்ததைப் பார்த்தேன். அதனை சரிசெய்ய கடைக்கு கொண்டு சென்ற போது அதற்கான ப்ரேம் கிடைக்கவில்லை எனவே மரத்தில் ஒரு ப்ரேமை உருவாக்கலாம் என்று முடிவு செய்தேன்.

image


நண்பர் தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து சைக்கிளுக்கான ப்ரேம்களை மரத்திலேயே உருவாக்கினோம். ப்ரேம் மட்டும் ஏன் மரத்தில் சக்கரத்தையும் மரத்தில் செய்யலாமே என்று அடுத்த முயற்சியில் இறங்கினோம், அதுவும் ஜெயத்தில் முடிந்தது. இந்த சைக்கிள் உருவாகிக் கொண்டிருந்த போதே பலரும் இதனை பார்த்து தங்களுக்கும் இதே போன்று சைக்கிள் வேண்டும் என்று என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள் என்று தனது உருவாக்கத்திற்கு கிடைத்த வரவேற்பை கூறி மகிழ்கிறார் முருகேசன்.

“செய்வதற்கு தலைக்கு மேல் வேலை இருக்கும் போது தேவையில்லாமல் இந்த சைக்கிளை உருவாக்குகிறேன் என்று நேரத்தை வீணடிப்பதாக அப்பா என்னை கடிந்து கொண்டார். எனினும் இதனை உருவாக்கி விட வேண்டும் என்ற தூண்டுதலால் மரச்சைக்கிளை உருவாக்கினேன்.” 

மர சைக்கிளை நான் முதன்முதலில் சாலையில் ஓட்டி வந்த போது அனைவரும் என்னையே அசந்து பார்த்தனர், அப்போது இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கான பலன் கிடைத்து விட்டது என்று பெருமிதம் அடைந்ததாக கூறுகிறார் முருகேசன்.

மூலதன பொருட்களான மரம் மற்றும் தயாரிக்கும் மெஷின்கள் என அனைத்தும் எங்களிடமே இருந்ததால் அதற்கு பெரிய அளவில் செலவாகவில்லை, எனினும் ஒவ்வொன்றாக பரிசோதித்து பார்த்ததால் இந்த மர சைக்கிளை உருவாக்க ரூ. 25 ஆயிரம் வரை செலவானது என்கிறார் முருகேசன். ரோட் பைக்கான இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருப்பதால் சிறிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான பணியை தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் தற்போது இதன் மூலம் தொழில்முனைவராக கால் எடுத்து வைத்துள்ளார் முருகேசன்.

இது வரை 10 சைக்கிள்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதால் முதலில் அதனை உருவாக்கி வருகிறோம். 

“தற்போது நாங்கள் உருவாக்கும் சைக்கிளின் எடை 15 கிலோ மட்டுமே, இந்த சைக்கிளில் 7 கியர்ஸ், பவர் பிரேக், க்விக் ரிலீஸ் அட்ஜெட்ஸ்மென்ட் என ஸ்போர்ட்ஸ் பைக்கில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும். 90 சதவீதம் மரத்தினாலேயே செய்யப்பட்டுள்ள இந்த சைக்கிளில் அலாய் கூட மரத்தில் தான் செய்திருக்கிறோம். கப்பலுக்கு பயன்படுத்தும் மரத்தினையும், தண்ணீர் மற்றும் சூரிய ஒளியால் பாதிக்காத அளவில் கோட்டிங்கும் கொடுப்பதால் பராமரிப்பும் எளிது. 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகு சைக்கிள் மீது ரீ கோட்டிங் கொடுத்தாலே போதும்,” என்கிறார் முருகேசன்.

image


முதல் தலைமுறை ஸ்டார்ட் அப் இளைஞராக களமிறங்கி இருக்கும் முருகேசன் இந்த சைக்கிளை சொந்த பிராண்டாக சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

“மர சைக்கிள் பற்றி சமூக வலைதளங்களில் வைரலான பிறகு பல நிறுவனங்கள் அவர்களின் பெயரில் விற்பனை செய்ய ஒப்பந்தம் கோரின. கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதியுதவி செய்து மார்க்கெட்டிங் செய்யவும் சிலர் ஆர்வம் காட்டினர், ஆனால் எங்களின் சொந்த பிராண்டாக இதனை அறிமுகம் செய்யவே நான் விரும்புகிறேன். இதற்காக சைக்கிளை லேப் டெஸ்ட், சேப்டி டெஸ்ட் அனுப்பவும், டிரேட் மார்க் பெறுவதற்கான வேலைகளும் நடந்து வருகிறது,” என கூறுகிறார் முருகேசன்.

மீடியாக்களில் மர சைக்கிள் பற்றி செய்திகள் வந்ததால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மர சைக்கிள் எல்லாம் சரிபட்டு வராது என்று கூறிய என்னுடைய நண்பர்கள் சிலரே சைக்கிளை வாங்கி ஓட்டிப்பார்த்துவிட்டு தங்களுக்கும் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்துள்ளனர் என்றார். சிறய அளவில் தற்போது தொடங்கி இருக்கும் உற்பத்திக்காக ரூ.15 முதல் ரூ. 20 லட்சம் வரை முதலீடு செய்துள்ளதாகவும், இதனையே பெரிய அளவிலான வர்த்தகமாக வங்கியில் கடன்பெற்றும் அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கான சலுகை பெற்றும் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார் முருகேசன்.

ஒரு பக்கம் ஸ்டார்ட் அப், மற்றொரு பக்கம் சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னால் முடிந்த முன்னெடுப்பை செய்துள்ளார் முருகேசன். எனினும் தான் முதலில் உருவாக்கிய சைக்கிள் ரோட் பைக் ரகம் என்பதால் அதன் மேம்படுத்தப்பட்ட சைக்கிள் உற்பத்தியில் களம் இறங்கியுள்ளார். 

“என்னுடைய சைக்கிள் ரோட் பைக் மாடல் அதனை அனைவராலும் ஓட்ட முடியாது, ஹேண்டில் பாருக்கு கீழே குனிந்து ஓட்ட வேண்டும். இதனால் அனைவரும் ஓட்டும் வகையிலான சிட்டி ரைடிங் சைக்கிளை தற்போது உருவாக்கி வருகிறோம். மேலும் கூடுதல் சிறப்பம்சமாக தங்களின் பெயரை சைக்கிளில் பதித்துக் கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு பெயரை என்கார்விங் செய்தும் கொடுக்கிறோம், இதனால் அவர்கள் தனித்துவமாக உணரலாம்,” என்று சில பிசினஸ் ட்ரிக்குகளையும் கூறுகிறார்.

ஐரோப்போ நாடுகளில் மரத்தினாலான சைக்கிள் ரூ. 1.5 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்திய சந்தையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்குபவர்கள் மிகவும் குறைவு, எனவே அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதால் ரூ.15 முதல் 20 ஆயிரம் வரையிலான விலையில் இந்த சைக்கிளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். டிரேட் மார்க் பணிகள் முடிந்த பின்னர் ஒரு மாதத்தில் இந்த மர சைக்கிள் சந்தையில் விற்பனைக்கு வரும் என நம்புவதாக தெரிவிக்கிறார் முருகேசன்.

image


தான் சார்ந்த துறையில் புதுமைகளை முயற்சித்து வருவதை வழக்கமாக வைத்துள்ள முருகேசன் மர சைக்கிளுக்கு முன்னர் மரத்தினாலே ஆன டின்னர் செட்டை உருவாக்கியுள்ளார். 

“மரசைக்கிள் போல எங்களின் ஐகானிக் ப்ராஜெக்ட் மரத்தினால் ஆன டின்னர் செட். அதாவது கப் அண்ட் சாசர், ட்ரே, பீர் மக் என அனைத்தையும் மரத்திலேயே அனைத்தையும் முயற்சித்து பார்த்துள்ளோம், இதனை பெரிய அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறுகிறார் இந்த சுற்றுச்சூழல் நாயகன் முருகேசன்.
Add to
Shares
893
Comments
Share This
Add to
Shares
893
Comments
Share
Report an issue
Authors

Related Tags