பதிப்புகளில்

தொழிலில் வெற்றி பெற, இயங்கும் இடத்தை விட விடாமுயற்சியே முக்கியம்: மதுரை சிவகுமார் நம்பிக்கை

27th Oct 2015
Add to
Shares
100
Comments
Share This
Add to
Shares
100
Comments
Share

"தீதும் நன்றும் பிறர்தர வாரா" ஒருவருக்கு ஏற்படும் நல்லதும், கெட்டதும் பிறரால் ஏற்படுவது இல்லை, அவரவர் செயலே அதற்குக் காரணம் எனப்பொருள் படும் புறநானூறுப் பாடலை பின்பற்றி தொழில்முனைவில் சீரான வெற்றி கண்டுள்ள சிவகுமார், மதுரை போன்ற நகரத்திலும் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவு சாத்தியம் என காட்டியுள்ளார். "டிஐஎஃப்ஐடி" (TiFiT- Test it Fit) எனும் டெஸ்டிங், தர உத்திரவாதம் மற்றும் மென்பொருள் பாதுகாப்பு சேவைகளை அளிக்கும் நிறுவனத்தை இரண்டு வருடங்களாக வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் நடத்தி வருகிறார். அவரிடம் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய உரையாடல்...

image


உங்களை பற்றி சொல்லுங்கள்? உங்கள் பணி அனுபவங்கள் குறித்து சொல்லுங்கள்?

“2003 முதல் மென்பொருள் துறையில் நான் ஒரு டெஸ்டிங் வல்லுனர். டெஸ்டிங் மீது எனக்கு பேரார்வம் உண்டு. பத்து ஆண்டுகள் பன்னாட்டு நிறுவனத்தில் சிஸ்டெம்ஸ் இன்ஜியராக பணிபுரிந்து விட்டு பின்னர் என் சொந்த முயற்சியில் தொழில்முனைய முடிவு எடுத்தேன். என் சொந்த ஊரான மதுரையில் என் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கினேன்.

2000 ஆம் ஆண்டு நான் மின்னணு இயற்பியலில் பட்டம் பெற்றேன். பின்னர் 2003 இல் காந்திகிராம் பல்கலைகழகத்தில் எனது பட்ட மேற்படிப்பை முடித்தேன்.

நான் எப்போதும், நேர்மை, தரம், மற்றும் நேர்மறையான சிந்தனையுடன் பணிபுரிவதில் நம்பிக்கை உடையவன். அலுவலகம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்று கோணத்தில் யோசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதுவே என்னுடைய பணியில் எனக்கு சீரான வெற்றியை அளித்துள்ளது என்று நம்புகிறேன். நமது குறிக்கோள் மீதான தீர்க நோக்கு, தெளிவான சிந்தனை மற்றும் பேரார்வத்துடன் உத்வேகம் இவையெல்லாம் இதுவரை எனக்கு கிடைத்துள்ள வெற்றிக்கு பின்னால் இருந்துள்ளது.

நான் எம்சிஏ படிக்கும் போதே, தொழிற்பயிற்சியில் எம்ஐஎஸ் டெவலப் செய்யும் வாய்ப்பும் அனுபவமும் கிடைத்தது. அன்று ஆரம்பித்த எனது பயணம் ஐசாஃப்ட், எச்பி, இன்ஃபோசிஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்களில் தொடர்ந்தது. பிஸினஸ் அனாலிசிஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் பிரிவில் தர உத்தரவாதத்தில் பணிபுரிந்துள்ளேன்.

தொழில்முனையும் ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? எப்போது இந்த முடிவை எடுத்தீர்கள்?

டெஸ்டிங்கில் புதுயுக தொழில்நுட்பங்களை புகுத்துவதில் ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்தது. ஆனால் அதை பணியிடத்தில் செயல்படுத்துவது இயலாதது என அறிந்தேன். அதுவே தொழில்முனைய உந்துதலாக அமைந்து ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கும் முடிவை எடுக்க வைத்தது.

தொழில்முனையும் ஆர்வம் எனக்கு ஆரம்பத்திலிருந்த ஒன்று தான் ஏன் எனது கனவு என்று கூட சொல்லலாம். ஆனால் போதிய அனுபவம் பெற்ற பின்னரே தொடங்க வேண்டும் என முடிவு எடுத்திருந்தேன்.

உங்கள் நிறுவனத்தை பற்றி கூறுங்கள்?

வாங்குபவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப வடிவமைக்ககூடிய விற்பனையாளர்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் இந்த இடைவெளியை டெவலப்பர்கள் தீர்ப்பதில் முனைப்பு காட்டுவதில்லை. இந்த இடைவெளியை பூர்த்தி செய்து வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து நான் “டிஐஎஃப்ஐடி” (TiFiT) என்ற நிறுவனத்தை தொடங்கினேன். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப, நியாயமான பட்ஜெட்டில் இத்துறை வல்லுனராக அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் சேவையை புரிகிறோம்.

நாங்கள் எல்லாவிதமான மென்பொருள்களுக்கு ஏற்றவகையில் சுயமான டெஸ்டிங் முறை வல்லுனர்கள். கூடுதலாக பயனாளர்களின் பிசினசுக்கு ஏற்ப செயல்படுவது எங்கள் நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு அம்சம். முக்கியமாக இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் இந்த சேவை அளிப்போர் மிக குறைவு எனவே இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பல நிறுவனங்கள் இந்த சேவைகளை அவுட்சோர்ஸ் செய்வதால் எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. நாங்கள் மென்பொருள் பாதுகாப்பு, ஆட்டோமேஷன், மற்றும் ராப்பிட் சாஃப்ட்வேர் டெஸ்டிங்கில் வல்லுனர்களாக உள்ளோம்.

6 பேர் கொண்ட எங்கள் குழு, பல சிறந்த வல்லுனர்களை உலகெங்கும் ஆலோசகர்களாக கொண்டுள்ளது. இவர்களை கொண்டு 'டிஐஎஃப்ஐடி', நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்முனை நிறுவனங்களுக்கு இந்த சேவைகளை புரிந்து வருகிறது.

image


உங்கள் நிறுவனம் என்ன விதமான பிரச்சனைகளை கையாளுகிறது? உங்கள் சேவையை எப்படி சிறப்பாக்குகிறீர்கள்?

நாங்கள் ஒரு தொழில்முனைவு நிறுவனமாக, எங்கள் வாடிக்கையாளர்களின் சிறு சிறு பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம். மேலும் அவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கி எங்கள் மீதான நம்பிக்கையை பெருக்குகிறோம்.

பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் சேவை அளிப்பது டிஐஎஃப்ஐடி நிறுவனத்தின் தனிச்சிறப்பு. வாடிக்கையாளர் சார்பாக நின்று எல்லாம் சரியாக முடியும் வரை பொறுப்பேற்கும் எங்களது அணுகுமுறை எங்களது பலம். 

அண்மையில் துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் குழுமத்திற்கு சேவை புரிய வாய்ப்பு வந்தது. டெஸ்டிங் மற்றும் ஹேக்கிங்கிலிருந்து மென்பொருள் பாதுகாப்புக்கான தேவை அவர்களுக்கு இருந்தது. இதை முடித்ததோடு, அவர்களுக்கு இடைவெளி ஆராய்ச்சி அறிக்கை (Gap Analysis Report) ஒன்றையும் கூடுதலாக அனுப்பி வைத்தோம். சந்தையில் உள்ள இந்த இடைவெளி பற்றி நாங்கள் அனுப்பிய அறிக்கை அவர்களை வெகுவாக கவர்ந்தது, எங்கள் மீதான நம்பிக்கையும் பெருகியது. இதை அடுத்து, நிலவியல் செயல்பாடு மற்றும் மேலாண்மை சேவைகளையும் செய்து தரும்படி எங்களை அவர்கள் கேட்டுகொண்டனர்.

டெஸ்டிங்கை ஒரு தனி நபர் கூட செய்யலாம் ஆனால் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு அம்சங்களை சேர்த்து இறுதிவரை சரியாக செயல்படுவதை உறுதி செய்கிறோம். ஒரு ப்ராஜெக்ட்டில் எங்களுடைய ஈடுபாடும், தொலைநோக்கும் எங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தோம்.

'டிஐஎஃப்ஐடி' தொடங்க முதலீடு யார் செய்தார்கள்?

டிஐஎஃப்ஐடி தொடங்கியது நான், அதற்கு ஆரம்பத்திலிருந்து உறுதுணையாக இருந்ததோடு முதலீடும் செய்துள்ளார் என் மனைவி லட்சுமி. அவர் தான் என் நிறுவனத்தின் இணை நிறுவனர். அவர் நிறுவனத்தின் மனிதவள மேம்பாடு மற்றும் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். 16% வருடாந்திர வளர்ச்சியுடன் உள்ள எங்கள் நிறுவனத்தை மேலும் மேம்படுத்த பல முயற்சிகளை செய்து வருகிறோம்.

image


உங்கள் முன்மாதிரி யார்?

மறைந்த அப்துல் கலாம் நான் விரும்பும், முன்மாதிரியாக நினைக்கும் ஒரு மாமனிதர். அவரது எல்லா வாசகங்களும், பேச்சுக்களும் என்னை கவர்ந்தவை. குறிப்பாக, தொழில்முனைவோருக்கு ஏற்ற வகையில் அமைந்த வாசகங்களை நான் பின்பற்றுகிறேன். “வெற்றியின் அர்த்தத்தை நான் வலுவாக உணர்ந்தால், தோல்வி என்னை எப்போழுதும் வென்றுவிடமுடியாது”, இது எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.

“தொடர்ந்து முயற்சி செய், சோர்ந்துவிடாதே" இளைய தொழில்முனைவோர் இதை பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் சிவகுமார், மதுரை போன்ற நகரங்கள் மற்றும் சிறு ஊர்களிலிருந்து வரும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக மதுரையில் ஸ்டார்ட அப் சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சென்னை, பெங்களூர், மும்பை மட்டுமே தொழில்முனைவுக்கு சிறந்த இடம் என்பதை மாற்றி மதுரை போன்ற நகரங்களிலும் இளைஞர்கள் தொழில்முனைய ஆர்வம் காட்டவேண்டும் என்று கூறி உரையாடலை முடித்துக்கொள்கிறார்.

இணையதள முகவரி: TiFiT

Add to
Shares
100
Comments
Share This
Add to
Shares
100
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக